இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0796கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

(அதிகாரம்:நட்பாராய்தல் குறள் எண்:796)

பொழிப்பு (மு வரதராசன்): கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.

மணக்குடவர் உரை: கேடுவந்தவிடத்தும் ஒரு பயனுண்டாம்; அக்கேடு நட்டாரது தன்மையை நீட்டி அளந்தறிதற்கு ஒரு கோலாமாதலால்.
மேல் கெடுங்காலைக் கைவிடுவாரை விடவேண்டு மென்றார் அவரை அறியுமாறென்னை யென்றார்க்கு, கேட்டாலல்லது அறிதல் அரிதென்றார்.

பரிமேலழகர் உரை: கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் - ஒருவனுக்குக் கேடு என்பது தன் நட்டாராகிய புலங்களை எஞ்சாமல் அளப்பதோர் கோல்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு - ஆகலின் அதன்கண்ணும் அவனால் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு.
(தத்தம் நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப் புறத்துத் தோன்றாமல் போந்தார், பின் கேடு வந்துழிச் செயல் வேறுபடுதலின், அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பதுபற்றிக் கேட்டினைக் கோலாக்கியும்,அதனால் அவரை அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின், அவ்வறிவை 'உறுதி' என்றும் கூறினார். கிளைஞர்: ஆகுபெயர், இஃது ஏகதேச உருவகம். இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன.)

சி இலக்குவனார் உரை: நமக்கு வரும் கெடுதியினும் ஓர் நன்மை உண்டு; அது நம் உறவினரை அளந்து பார்ப்பதற்குரிய கோலாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கேட்டினும் உண்டோர் உறுதி; கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.

பதவுரை: கேட்டினும்-கெடுதியின் கண்ணும்; உண்டு-உளது; ஓர்-ஒரு; உறுதி-நல்லறிவு; கிளைஞரை-நட்பாளரை; நீட்டி-எஞ்சாமல்; அளப்பது-அளக்கும் கருவியாவது; ஓர்-ஒரு; கோல்-அளவுகோல்.


கேட்டினும் உண்டோர் உறுதி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கேடுவந்தவிடத்தும் ஒரு பயனுண்டாம்;
பரிப்பெருமாள்: கேடுவந்தவிடத்தும் ஒரு பயனுண்டாம்;
பரிதி: தனக்கு வந்த விதனம்;
காலிங்கர்: ஒருவர்க்கு வறுமை முதலிய கேடு வந்துற்ற இடத்து தளர்ச்சி அல்லது ஓர் உறுதி இன்று அன்றே, மற்று அக்கேட்டின் (பெரியதோ)ருறுதிப்பாடு அஃது (யார்க்கோ) எனின்; [தளர்ச்சி - மனந்தளர்தல்; உறுதிப்பாடு - துணிவு]
பரிமேலழகர்: ஆகலின் அதன்கண்ணும் அவனால் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு;

'கேடுவந்தவிடத்தும் ஒரு பயனுண்டாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேடுகாலத்தும் ஒரு நன்மை உண்டு', 'ஒருவனுக்குக் கேடு வந்தவிடத்தும் ஒரு பயன் உண்டு', 'துன்ப காலத்தினாலும் ஒரு பலன் உண்டு', 'இக்கட்டுக் காலத்திலும் ஓர் உறுதியான நன்மை உண்டு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

துன்பம் வந்த காலத்தும் ஒரு நன்மை உண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அக்கேடு நட்டாரது தன்மையை நீட்டி அளந்தறிதற்கு ஒரு கோலாமாதலால்.
மணக்குடவர் குறிப்புரை: மேல் கெடுங்காலைக் கைவிடுவாரை விடவேண்டு மென்றார் அவரை அறியுமாறென்னை யென்றார்க்கு, கேட்டாலல்லது அறிதல் அரிதென்றார்.
பரிப்பெருமாள்: அக்கேடு நட்டாரது தன்மையை அளந்தறிதற்கு ஒரு கோலாமாதலால்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் கெடுங்காலைக் கைவிடுவாரை விடவேண்டு மென்றார் அவரை அறியுமாறென்னை யென்றார்க்கு, கேட்டாலல்லது அறிதல் அரிது என்று கூறிற்று.
பரிதி: தனக்கு ஆன மனிதரையும் ஆகாதவர்களையும் அறிவிக்க வந்த அளவுகோல் என்றவாறு.
காலிங்கர்: இவர் எமக்கு இனிய துணையாவர் என்று இங்ஙனம் தமக்குச் சிறந்த கிளைஞரைக் காலம் நெடுகவிட்டு அளப்பதோர் கோல் என்றவாறு. [கிளைஞர் - சுற்றத்தார்]
பரிமேலழகர்: ஒருவனுக்குக் கேடு என்பது தன் நட்டாராகிய புலங்களை எஞ்சாமல் அளப்பதோர் கோல்; [புலன்களை - நிலங்களை; எஞ்சாமல் - குறையாமல்]
பரிமேலழகர் குறிப்புரை: தத்தம் நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப் புறத்துத் தோன்றாமல் போந்தார், பின் கேடு வந்துழிச் செயல் வேறுபடுதலின், அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பதுபற்றிக் கேட்டினைக் கோலாக்கியும், அதனால் அவரை அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின், அவ்வறிவை 'உறுதி' என்றும் கூறினார். கிளைஞர்: ஆகுபெயர், இஃது ஏகதேச உருவகம். இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன.

'அக்கேடு நட்டாரது தன்மையை நீட்டி அளந்தறிதற்கு ஒரு கோலாமாதலால்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்று நண்பர் யார் என்று அளந்து கொள்ளலாம்', 'அக்கேடு நண்பரது இயல்பை நீட்டி அளந்தறிவதற்கு ஒரு கோல்போல் உதவுதலால்', '(அந்தப் பலன் என்னவென்றால்) நண்பர்களைச் சரியாக அளந்தறிய (அந்தத் துன்ப காலம்) தகுந்த கருவியாகும்', 'அது நட்டாரது தன்மையைச் செவ்வையாக ஆராய்ந்து அறியும் அளவு கோலாவதே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உறவினரது இயல்பை அளந்தறியும் கோலாக அமைவதால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உறவினரது இயல்பை அளந்தறியும் கோலாக அமைவதால் கேடு வந்த காலத்தும் ஒரு நன்மை உண்டு என்பது பாடலின் பொருள்.
கேடும் நன்மை தருமா?

கேடுவந்த நேரத்தில் நண்பர்களின் உள்ள இயல்பு தெரியவரும்.

ஒருவனுக்கு கெடுதல் உண்டாவதாலும் ஒருவகையில் நன்மை உண்டு; நட்பாக இருப்பவரின் உறவைச் சொல்லிவிடும் அளவுகோலாக அது அமையும்.
ஒருவனுக்கு கேடு பலவழிகளில் வரலாம்; வருவாய்நிலை அழிவதால் வறுமை நேரலாம்; செய்யாத குற்றத்திற்காகச் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டு கேட்டை எதிர்கொள்ளலாம். இவை போன்ற துன்ப காலத்து ஒரு நண்பன் கைகொடுக்க நிற்கிறானா அன்றி நமக்கு ஏன் தொல்லை என்று நட்புத்தொடர்பிலிருந்து நீங்கிவிடுகிறானா என்பது அவனது நட்பின் அளவைக் காட்டும் என்கிறது பாடல்.
கெட்டவழி காட்டி மறைந்து விடும் உடனிருந்தவன், மகிழ்ச்சியில் மட்டும் பங்கு கொண்டுவிட்டு துன்பகாலத்தில் உதவிபுரிய வாய்ப்பிருந்தும் செய்ய மனமில்லாமல் இருக்கும் உறவினன், செல்வம் இருந்தபோது எல்லா இன்பங்களையும் துய்த்துவிட்டு செல்வம் நீங்கியபின் அவனை உதறிச் சென்றுவிடும் நண்பன், துன்பகாலத்தில் உளநிலை ஆதரவு அதாவது அன்பு காட்டுதல், ஊக்குதல் செய்தல் கூடத் தராத நட்பினன் இவர்கள் போன்றோரைப் பற்றியெல்லாம் நமக்கு கேடு சூழ்ந்தநிலையில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
அக்கேடு நட்பில் உண்மையான உறவாளர் எவர் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஓர் அளவு கோல் போன்று பயன்படுவதால் அது ஓர் நன்மைதான்; நட்டவனது இயல்பு தெரிந்தமட்டும் நட்புச் செய்தவனுக்கு ஆதாயமே எனச் சொல்லப்பட்டது.

இப்பாடலிலுள்ள ‘உறுதி’ என்ற சொல்லுக்கு நன்மை, நல்லறிவு, பயன் என்று பொருள் கூறினர்.
கிளைஞர் என்பது சுற்றம் குறிக்கும் சொல். சுற்றமும் இங்கு நட்பினராகக் கொள்ளப்படுகிறது.
நீட்டல் அளவைக்குப் பயன்படும் கோல் 'நீட்டி அளப்பதோர் கோல்' ஆகும். இது நிலம் அளப்பதற்குப் பயன்பட்டதாகலாம். 'நீட்டி' என்ற சொல் நீட்டலளவை என்பதைக் குறிக்க வந்தமை 'கோல்' என்ற ஆட்சியானும் அறியப்படும். கேட்டினைக் 'கோல்' என உருவகம் செய்யப்பட்டதால் கிளைஞர் நிலம் குறிப்பதாகிறது.

கேடும் நன்மை தருமா?

அது எப்படி கேட்டினால் நன்மை உண்டாகும்?
கேடு நேர்வதை யார் விரும்புவார்? ஒருவருமே விரும்ப மாட்டார்; ஆனாலும், துன்பத்திலும் ஒரு நன்மை உண்டு என்று இங்கு முரண்நகையாகச் சொல்லப்படுகிறது. மென்மைநடையில் உள்ள இக்கூற்று மக்களின் பொதுவான இயல்பை எடுத்துக்காட்டுகிறது. கேடு காலத்தில் உண்மை நண்பரை உணரலாம் என்பது நன்மை என்று சொல்லப்பட்டது. ஒருவருக்குற்ற கேடு யார் நண்பர், யார் நண்பர் அல்லார் என்று அளந்து காட்டிவிடும் கோலாக அமைகிறது என்பதாகக் கூறப்படுகிறது.
ஒருவர் தன் செல்வத்தையும் செல்வாக்கையும் இழப்பின் நண்பரும் உறவினரும் முன்புபோல் நெருங்கி உறவாடாது விலகிக் கொள்வர். கேடு அடையும் காலம் ஒருவர் நட்புறவும் உரிமையும் உடையார் என்பதையும் அல்லது இவர் நட்புற்குரியர் அல்லர் என்பதையும் அடையாளம் காண்பதற்கு வாய்த்த வாய்ப்பாக அமைவதால் கேட்டினும் ஓர் உறுதி உண்டு என்று சொல்லப்பட்டது. இதைக் கேட்டையும் நலப்பாடாக நினைக்கும் மாறுதலான ஆக்கப் பார்வை என்பார் இளங்குமரனார்.

ஒருவனுக்குக் கேடுவந்த காலத்தில் அதிலிருந்து மீண்டுவர பலவழிகளை ஆராய்வர். அவற்றில் நண்பரின் உதவியை நாடுவது. ஆக்க காலத்தில் எல்லா கிளைஞரும் ஒரு சரியான அன்பராகத் தோன்றுவர். கேடுகாலத்தில்தான் மெய்யன்பர் ஒட்டியும் பொய்யன்பர் விலகியும் நிற்பர். கேடுற்றவன் கேட்டிலிருந்து நீங்கும் முயற்சியில்தான் குறியாய் இருப்பான். அந்த நேரத்தில் நண்பரின் உண்மைத்தன்மையை அளந்தறிய முற்படமாட்டான். ஆயினும் துன்பநேரத்தில் நண்பன் தோளோடு தோள் நின்று கேடு தரும் வலியில் பங்கு கொள்வான் என்று எதிர்பார்ப்பான். நட்பின் தன்மை -உதவும் நண்பனா உதறித்தள்ளும் நண்பனா என்பது - தானாக வெளிப்படும்.

கிளைஞரின் உள்ளங்களையும் செயல்களையும் அளந்து ஆராய்பவனுக்கு நல்லறிவும் கிளைஞர்க்கு அடக்கமும் வரும் என நன்மை கூறுவார் கவிராச பண்டிதர்.
மற்றவர்கள் 'தீமைகளிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியும்', 'தீமையைக் கண்டு கலங்க வேண்டாம். அச்சமயத்தில் அஞ்சாமலிருந்து உண்மையான நண்பர்கள் யார்; உண்மை உறவினர்கள் யார்? என்பதைக் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும்' என்றனர்.

உறவினரது இயல்பை அளந்தறியும் கோலாக அமைவதால் துன்பம் வந்த காலத்தும் ஒரு நன்மை உண்டு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கேடுகாலம் நட்பாராய்தலில் நுண்ணிதாகத் துணை செய்யும் ஓர் அளவுகோல்.

பொழிப்பு

கேடுகாலத்தும் ஒரு நன்மை உண்டு; அக்கேடு நண்பரது இயல்பை நீட்டி அளந்து கொள்வதற்கு ஒரு கோல்போல் அமைந்துதவுதலால்.