இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0790இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு

(அதிகாரம்:நட்பு குறள் எண்:790)

பொழிப்பு (மு வரதராசன்): `இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம்` என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும்.

மணக்குடவர் உரை: இவர் நமக்கு இத்தன்மையர், யாமும் இவர்க்கு இத்தன்மையோம் என்று பேணிச் சொல்லினும் நட்புவாடும்.
ஆதலால் நட்பினைத் தன்னைத்தான் நினைக்குமாறுபோல நினைக்க.

பரிமேலழகர் உரை: இவர் எமக்கு இனையர் யாம் இன்னம் என்று புனையினும் - இவர் நமக்கு இத்துணை யன்பினர், யாம் இவர்க்கு இத்தன்மையம் என்று ஒருவரையொருவர் புனைந்து சொல்லினும்; நட்புப் புல்லென்னும் - நட்புப் புல்லிதாய்த் தோன்றும்.
('இவர்க்கு' என்பது வருவிக்கப்பட்டது. தாம் அவர் என்னும் வேற்றுமையின்றி வைத்துப் புனைந்துரைப்பினும் வேற்றுமையுண்டாம் ஆகலின், 'நட்புப் புல்லென்னும்' என்றார். இவை ஐந்து பாட்டானும் நட்பினது இலக்கணம் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: எமக்கு இவர் இப்படிப்பட்டவர்; யாம் இவர்க்கு இத்தன்மையாய் உள்ளோமென்று ஒருவரை யொருவர் புகழந்து பேசினாலும், நட்பானது சிறுமைப்பட்டதாய்த் தோன்றும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இவர் எமக்கு இனையர் யாம் இன்னம் என்று புனையினும் நட்புப் புல்லென்னும்.

பதவுரை: இனையர்-இத்துணையர்; இவர்-இங்கேயுள்ளவர்; எமக்கு-நமக்கு; இன்னம்- இத்தன்மையோம்; யாம்-நாங்கள்; என்று-என்பதாக; புனையினும்-சிறப்பித்துக் கூறினாலும்; புல்-கீழ்மை; என்னும்-தோன்றும்; நட்பு-நட்பு.


இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று புனையினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவர் நமக்கு இத்தன்மையர், யாமும் இவர்க்கு இத்தன்மையோம் என்று பேணிச் சொல்லினும்;
பரிப்பெருமாள்: இவர் நமக்கு இத்தன்மையர், யாமும் இவர்க்கு இத்தன்மையோம் என்று பேணிச் சொல்லினும்;
பரிதி: இவர் நமக்குச் சுற்றத்தினாலே இன்ன முறைமை யாவார் என்று சொல்லி நட்பு வைத்தது;
காலிங்கர்: வேறு ஒருவர் வந்து தம்மொடு இவர் நுமக்கு யாவர் என்று வினவினால், 'இவர் நமக்கு இன்ன தன்மையர்; யாம் இவர்க்கு இன்ன தன்மையேம்' என்று இங்ஙனம் தம் கெழுமுதல் புனைந்து உரைப்பினும்; [கெழுமுதல் புனைந்து - பொருந்துதலால் அழகு செய்து]
பரிமேலழகர்: இவர் நமக்கு இத்துணை யன்பினர், யாம் இவர்க்கு இத்தன்மையம் என்று ஒருவரையொருவர் புனைந்து சொல்லினும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'இவர்க்கு' என்பது வருவிக்கப்பட்டது.

'இவர் நமக்கு இத்துணை யன்பினர், யாம் இவர்க்கு இத்தன்மையம் என்று ஒருவரையொருவர் புனைந்து சொல்லினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவர் இன்னார், யான் இன்னவன் என்று பிரித்துக் கூறினும்', 'இவர் எமக்கு இத்தன்மையர், யாம் இவர்க்கு இத்தன்மையம் என்று பிரித்து ஒருவர்க்கொருவர் நட்பின் தன்மையைப் புனைந்து சொல்லினும்', '(நண்பர்கள் ஒருவரைப்பற்றியொருவர் பிறரிடத்தில்) இவர் எமக்கு இப்படிப்பட்ட அன்பர், இவருக்கு நாம் இத்தகைய அன்புடையோம் என்று அழகான முறையிற் சொல்லிக் கொண்டாலும்', 'இவர் நமக்கு இத்தகைய அன்பினர்; நாம் இவர்க்கு இத் தன்மையினர் என்று புனைந்து சொன்னாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இவர் எமக்கு இத்தகையவர்; யாம் இவர்க்கு இத்தன்மையினர் என்று புகழ்ந்து கூறினும் என்பது இப்பகுதியின் பொருள்.

புல்லென்னும் நட்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்புவாடும்: [வாடும் - சுருங்கும்]
மணக்குடவர் குறிப்புரை: ஆதலால் நட்பினைத் தன்னைத்தான் நினைக்குமாறுபோல நினைக்க.
பரிப்பெருமாள்: நட்புவாடும்:
பரிப்பெருமாள் குறிப்புரை: ஆகலான் தன்னை நினைக்குமாறு போல நினைக்குதல். இது, மேல் கூறியவாறு செய்தலே அன்றித் தான் அவன் என்னும் வேற்றுமை இன்றி ஒழுக வேண்டும் என்றது. இத்துணையும் நட்பின் இலக்கணம் கூறப்பட்டது.
பரிதி: நட்பல்ல என்றவாறு.
காலிங்கர்: பொலிவழியும் நட்பு;
காலிங்கர் குறிப்புரை: எனவே பேதையார் நட்பின் பிழையினைப் பெரிதும் கடிந்தவாறாயிற்று என்றவாறு. [நட்பின் பிழை - நட்பின் தவறு; கடிந்தவாறு - நீக்கியவாறு]
பரிமேலழகர்: நட்புப் புல்லிதாய்த் தோன்றும்.
பரிமேலழகர் குறிப்புரை: தாம் அவர் என்னும் வேற்றுமையின்றி வைத்துப் புனைந்துரைப்பினும் வேற்றுமையுண்டாம் ஆகலின், 'நட்புப் புல்லென்னும்' என்றார். இவை ஐந்து பாட்டானும் நட்பினது இலக்கணம் கூறப்பட்டது. [புனைந்துரைப்பின் - சிறப்பித்துக் கூறினால்; புல்லென்னும் - இழிந்ததாகக் காணப்பெறும்; பொலிவிழக்கும்]

நட்புவாடும்/நட்பல்ல/பொலிவழியும் நட்பு/நட்புப் புல்லிதாய்த் தோன்றும் எனப் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நட்பு பெருமை இழக்கும்', 'அந்நட்பு சிறப்பினை இழக்கும்', 'அது நட்பின் பெருமைக்குக் குற்றாமாகும்', 'நட்பு புல்லிதாய்த் தோன்றும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நட்பு சிறுமையுறும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இவர் எமக்கு இத்தகையவர்; யாம் இவர்க்கு இத்தன்மையினர் என்று புகழ்ந்து கூறினும் நட்பு சிறுமையுறும் என்பது பாடலின் பொருள்.
நட்பைப் பாராட்டிப் பேசுவதில் என்ன தவறு?

பண்புள்ள நட்பினர் தமது நட்புறவைப் பறைசாற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

‘இவர் எமக்கு இப்படிப்பட்டவர்’, 'யாம் இவர்க்கு இத்தன்மையுடையோம்' என்று சிறப்பித்துப் பேசிக் கொண்டாலும் நட்பானது சிறுமைப்பட்டுத் தோன்றும்.
அவர்கள் இருவரும் உண்மையான நண்பர்கள்தாம். ஆயினும், தங்கள் நட்பு பற்றிப் பிறரிடம் சொல்லிக் கொள்ளும்போது 'நாங்கள் இருவரும் நெடுங்காலமாக மிகவும் நெருக்கமானவர்கள். ஒரே தட்டில் உணவருந்துவோம்; எனக்காக அவன் உயிர்கொடுப்பான்; அவனுக்காக எதையும் நான் இழப்பேன்' என்று உயர்ந்தேத்திச் சொன்னால் நட்புக்கு இழுக்காகும் என்கிறார் வள்ளுவர். நட்புக்குப் புறத்தே புனைதல் இருக்கக் கூடாது என்பது அவர் கருத்து.
இத்துணை நெருக்கமானவர் இவர் எனக்கு என்றும் தாம் எவ்வளவு அவருக்கு வேண்டப்பட்டவன் நான் என்றும் தற்பெருமையில் மிகுதியாக நண்பர்கள் தங்கள் நட்பின் அளவை எடுத்துச் சொன்னால் நட்பு தன் அழகியலை இழந்துவிடும். நண்பன் இவற்றில் சிறந்தவன் நான் இதில் சிறந்தவன் என ஒப்புமைகாட்டியும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். ஏன் என்றால் அந்த நட்பு அவை எவற்றையும் எண்ணி ஏற்படுத்தப்பட்டதல்ல. அவ்வாறு சொன்னால் அது கீழ்மையான நட்பைக் குறிப்பதாகும்.

'புனைந்துரைப்பின்' என்ற தொடர் சிறப்பித்துக் கூறினால் எனப் பொருள் தரும். 'புல்லென்னும்' என்றது புல்லிதாய்த் தோன்றும் எனப் பொருள்படுவது. அதாவது இழிந்ததாகக் காணப்பெறும். நட்பின் நெருக்கத்தை உள்ளபடியே சொன்னாலும் அல்லது ஒருவர்மீது மற்றவர் கொண்ட அன்புநலன்களையே வெளிப்படுத்திச் சொல்லப்பட்டாலும் அது நட்பின் பெருமையைக் குறைத்துவிடும்.

நட்பைப் பாராட்டிப் பேசுவதில் என்ன தவறு?

நட்பின் தன்மையைப் பெருமைப்பட்டுச் சொல்லிக்கொள்வதில் என்ன சிறுமை ஏற்படும்?
உள்ளூற அமைந்தநட்பே சிறப்பானதென்று முன்பு சொன்ன வள்ளுவர், நண்பர்களுக்குள் ஒரு சிறிய வேறுபாடு கற்பித்துக் கொண்டாலும், அது நட்பிற்கு உரிய பெருமையைக் குலைத்து விடும் என்று இவ்விடத்து உரைக்கிறார்.
காலிங்கர் 'இவர் நமக்கு இன்ன தன்மையர்; யாம் இவர்க்கு இன்ன தன்மையேம்' என்று தம் நட்புறவை அழகு செய்து உரைத்தால் நட்பின் பொலிவு அழியும்' எனச் சொல்லி அந்த நட்பைப் பேதையார் நட்பு என்றும் இழிவுபடுத்துவார். பரிப்பெருமாள் 'இனையர் இன்னம் என்றல் நட்டார்க்குள் வேற்றுமை காட்டலாகும்; நட்பாளர்கள் தான் அவன் என்னும் வேற்றுமை இன்றி ஒழுக வேண்டும் என்பதற்காக இது சொல்லப்பட்டது' என உரைப்பார்.
சக்கரவர்த்தி நயினார் 'தன் நண்பனிடம் உள்ள நெருங்கிய தொடர்பைக் குறிப்பவன் தனக்குள்ள விருப்பத்தையும் தன் நண்பனுக்குள்ள விருப்பத்தையும் வேறுபடுத்தி உணர்பவன் ஆகிறான். உண்மை நட்பு எவ்வகை வேறுபாட்டினையும் அறியாததாகும். அவர்கள் நெஞ்சம் ஒன்றுபட்டு இருத்தலின் எண்ணங்களும் பொதுவாகவே இருக்கும். எனவே நான் அவன் என் நண்பனை வேறுபடுத்திக் கூறுவது உண்மை நட்புக்கு இலக்கணமாகாது' என்று விளக்குவார். உண்மையான உள்ளன்பு நட்புடையவர் அது பற்றி வீண்பெருமை பேசமாட்டார். பெரியோரிடம் கொண்ட நட்புறவை, சிலர் தனக்க்காக சில நன்மைகள் பெறும்பொருட்டு 'தாம் அவருக்கு மிக வேண்டப்பட்டவன்' என்றவாறு புனைந்து உரைப்பர். இப்படிப் பேசுவது நட்பைக் கீழ்மைப் படுத்தவே செய்யும்.
நட்பை இனையர், இத்தன்மையர் என்பன அளவுபடுத்தலின் நட்பு புல்லிதாயிற்று என்பது பொதுவான விளக்கம்.

இவர் எமக்கு இத்தகையவர்; யாம் இவர்க்கு இத்தன்மையினர் என்று புகழந்து கூறினும் நட்பு சிறுமையுறும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

விதந்துபேசியா நட்பு வளரவேண்டும்?

பொழிப்பு

இவர் எமக்கு இத்தன்மையர், யாம் இவர்க்கு இத்தன்மையம் என்று நட்பின் தன்மையைப் புகழ்ந்து சொல்லினும், நட்பு சிறுமைப்படுத்தப்படுவதாகிறது.