இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0788உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

(அதிகாரம்:நட்பு குறள் எண்:788)

பொழிப்பு (மு வரதராசன்): உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

மணக்குடவர் உரை: உடைசோரநின்றானுக்குக் கைசென்று உடைசோராமற் காத்தாற்போல, இடுக்கண்வந்தால் அப்பொழுதே அவ்விடுக்கணை நீக்குவது நட்பாவது.

பரிமேலழகர் உரை: உடுக்கை இழந்தவன் கைபோல - அவையிடை ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி அவ்விளிவரல் களையுமாறு போல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம் - நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி அப்பொழுதே சென்று உதவி அதனைக் களைவதே நட்பாவது.
(அற்றம் காத்தற்கண் கை தன் மனத்தினும் முற்படுதலின், அவ்விரைவு இடுக்கண் களைவுழியும் அதற்கு ஒத்த தொழில் உவமையினும் வருவிக்க. உடையவன் தொழில் நட்பின்மேல் ஏற்பட்டது.)

தமிழண்ணல் உரை: உடுத்தியிருக்கும் ஆடை குலைந்தவனது கை, அவன் மனக் குறிப்பின்றித் தானே விரைந்து சென்று மானத்தைக் காப்பதுபோல, நண்பனுக்கு ஓர் இடுக்கண் ஏற்பட்டபொழுது, உடனே சென்று உதவி அதனை நீக்குவதே நட்பாகும்.
உடுக்கை அவிழ்ந்த நிலையில், அறிவாராய்ச்சியின்றி, இயல்பூக்கமாய்க் கைஓடி உதவுவதுபோல், இன்பதுன்பம் பாராது உடனே உதவ முந்துவது உண்மை நட்பு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

பதவுரை: உடுக்கை-ஆடை; இழந்தவன்-நழுவினவன், குலைந்தவன், நெகிழ்ந்தவன்; கைபோல-கை போல; ஆங்கே-அப்போதே; இடுக்கண்-துன்பம்; களைவதாம்-அகற்றுவதாம்; நட்பு-தோழமை.


உடுக்கை இழந்தவன் கைபோல:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடைசோரநின்றானுக்குக் கைசென்று உடைசோராமற் காத்தாற்போல; [சோர- நழுவ]
பரிப்பெருமாள்: உடையிழந்தவன் கை குறிப்பின்றித் தானே சென்று மறைக்குமாறுபோல;
பரிதி: புடவை சோர்ந்தால் கை சென்று தாங்கும் முறைமைபோல;
காலிங்கர்: உடை நழுவினவன் தனது கை கடிது பற்றித் தாங்கிக் கொண்டாற்போல;
பரிமேலழகர்: அவையிடை ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி அவ்விளிவரல் களையுமாறு போல; [இளிவரல் களைதல் - அவமானத்தை நீக்குதல்]

'உடை நழுவினவன் தனது கை கடிது பற்றித் தாங்கிக் கொண்டாற்போல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உடைநெகிழின் உடனே உதவும் கைபோல', 'ஆடையை முழுதும் இழந்தவனுடைய கை தானே விரைந்து சென்று மறைத்தல் போல', 'இடையிற் கட்டிய ஆடை நழுவிவிட்ட ஒருவருடைய கை அவரறியாமலும் உடனே ஆடையை அணைத்து மானங்காப்பதைப் போல', 'உடுத்த ஆடை குலைந்தவிடத்து அதை நேரா வைத்ததற்குக் கை விரைந்து செல்லுமாறு போல' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உடை நழுவினவிடத்து விரைந்து உதவும் கைபோல என்பது இப்பகுதியின் பொருள்.

ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இடுக்கண்வந்தால் அப்பொழுதே அவ்விடுக்கணை நீக்குவது நட்பாவது.
பரிப்பெருமாள்: இடுக்கணுற்ற அப்பொழுதே அதனைப் போக்க வல்லது நட்பு என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, கழறுதலே அன்றித் துன்பம் துடைக்கவும் வேண்டும் என்றது.
பரிதி: நட்பாளர்க்கு இடுக்கண் வந்த தறுவாய்க்கு இடுக்கண் தீர்ப்பது நட்பு என்றவாறு.
காலிங்கர்: அப்பொழுதே அவ்விடுக்கண் களைவது யாது; மற்று அதுவே நட்பாவது என்றவாறு.
பரிமேலழகர்: நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி அப்பொழுதே சென்று உதவி அதனைக் களைவதே நட்பாவது.
பரிமேலழகர் குறிப்புரை: அற்றம் காத்தற்கண் கை தன் மனத்தினும் முற்படுதலின், அவ்விரைவு இடுக்கண் களைவுழியும் அதற்கு ஒத்த தொழில் உவமையினும் வருவிக்க. உடையவன் தொழில் நட்பின்மேல் ஏற்பட்டது. [அற்றம் - சோர்வு அல்லது மெலிவு]

'இடுக்கண்வந்தால் அப்பொழுதே அவ்விடுக்கணை நீக்குவது நட்பாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நண்பன் துயரை முந்திக்களைவதே நட்பு', 'தன் நண்பர்க்குத் துன்பம் வந்தால் வந்த அப்பொழுதே விரைந்து சென்று அதனைப் போக்குதலே நட்பாகும்', 'நண்பனுக்குத் துன்பம் வந்துவிட்டதை அறிந்து அக்கணமே (அவன் கேளாமலும் தானே ஓடி) துன்பத்தை நீக்குவதுதான் நட்பாகும்', 'நண்பனுக்குத் துன்பம் வந்தால், அப்பொழுதே விரைந்து அதனை நீக்குவதே நட்பாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நண்பரது துன்பத்தை வந்த அப்பொழுதே விரைந்து சென்று போக்குதலே நட்பாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உடுக்கை இழந்தவன் கைபோல, நண்பரது துன்பத்தை வந்த அப்பொழுதே விரைந்து சென்று போக்குதலே நட்பாகும் என்பது பாடலின் பொருள்.
'உடுக்கை இழந்தவன் கைபோல' என்றால் என்ன?

விரைந்து சென்று துன்பத்திலிருக்கும் நண்பனுக்கு உதவு; சிந்திக்கவே வேண்டாம்.

உடுத்தியிருந்திருந்த ஆடை ஒருவன் உடம்பினின்று நழுவியபோது மானத்தைக் காக்க அவனதுகை உடனே விரைந்து நெகிழ்ந்த ஆடையைத் தாங்கிக் கொள்வது போன்று நண்பனுக்கு நேர்ந்த துன்பத்தை உடனே சென்று நீக்குவதே நட்பாகும்.
ஆடை அணிவது மனிதனுக்கு இன்றியமையாதது. நாம் ஆடை அணிவதன் முதற்காரணம் மானம் காப்பதற்குத்தான். ஒருவர் அரையில் கட்டியிருக்கும் ஆடை நெகிழ்ந்து விடுமேயானால் அவ்வரைக்கு வரும் இழிவைத் தடுக்க எண்ணி, கையானது. இயல்பூக்கத்தால், தானாகவே விரைந்து சென்று ஆடையைச் சரிசெய்து பிடித்துக் கட்டி, மானம் காக்கும். அதுபோல, தன் நண்பனுக்குத் துன்பம் நேர்ந்தபோது காலத்தாழ்ச்சி இல்லாமல், அவன் தன்னிடம் கேட்கட்டும் என எண்ணிக்கொண்டிராமல், விரைந்து சென்று துயர் களைய உதவவேண்டும் என்கிறது இப்பாடல்.

ஆங்கே என்ற சொல் அப்பொழுதே அல்லது அவ்விடத்தே என்ற பொருள் தரும். இச்சொல் ஆளப்பட்ட மற்ற குறள்கள்: பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் அறிவுடையவர் (காலமறிதல் 487 பொருள்: பகைவர் தீங்கு செய்த அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்; காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்), நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது (கனவுநிலை உரைத்தல் 1215 பொருள்: நனவில் அவரைக் கண்டதும் எப்படி ஆயிற்றோ கனவிலும்தான் கண்டபொழுதே இனிது ஆயிற்று) என்பன. இச்சொல் குறளில் விரைவுப் பொருள் குறிக்க வந்தது.

'உடுக்கை இழந்தவன் கைபோல' என்றால் என்ன?

உடுக்கை என்பது மனிதர் அணியும் ஆடையைக் குறிப்பது. ஆடை அழகுக்காக மட்டும் உடுத்தப்படுவதன்று. அது மானம் காப்பதற்கும் தேவையாகிறது. வள்ளுவர் இதனைச் சீரிய நட்பிற்கு உவமையாக எடுத்தாள்கிறார். உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நட்பாளனின் துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் நட்பு எனச் சொல்கிறார்.
குறளில் காட்டப்படும் உவமைகளில் மிகவும் பாராட்டப்பட்டவற்றுள் இதுவும் ஒன்று. இக்குறளுக்கு இதை நீக்கி வேறு என்ன உவமை வைத்தாலும் பொருள் நன்றாகப் புலப்படாது; உவமப்பொருளின் இழிவை வேறுவழியாக உரைக்கவும் இயலாது.
ஆடையிழந்தவன் கைவிரைந்து சென்று அரையை மறைத்து மானம்குலையாது தடுப்பதுபோல என்றும் நெகிழ்ந்த ஆடையைக், கையானது உடனடியாகச் சரி செய்து மானம் காப்பது போல என்றும் உவமையை விளக்குவர்.

எந்தச் சூழ்நிலையில், என்னவகையான ஆடை நழுவுகின்றது, அது எப்படி காக்கப்படுகின்றது என்பதைப் பலவாறாக விளக்கினர். அவற்றிலிருந்து சில:

 • பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல.
 • அவையில் ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி இழிவு களையுமாறு போல.
 • ஒரு கூட்டத்தில் ஆடை இழந்தவனுக்குக் கை உதவுமாறு.
 • கை துன்பம் வரும்போதும் தடுக்கிறது. மானங்குலைய வரும்போதும் தடுக்கிறது. இரண்டும் ஒருங்கி வருமானால் மானத்தைக் காத்துத் துன்பத்தை ஏற்றுக் கொள்கிறதுபோல.
 • ஆடையை முழுதும் இழந்தவனுடைய கை தானே விரைந்து சென்று மறைத்தல் போல.
 • ஒரு சபையிலே வேட்டி அவிழ்ந்தால் எப்படி உடனே அதையெடுத்து உடுத்திக் கொள்ளக் கை பாயுமோ அதுபோல.
 • ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல.
 • புடவை சோர்ந்தால் கை சென்று தாங்கும் முறைமைபோல.
 • இடுப்பு உடை பறி கொடுத்தவனின் கை தானே போய் உடனே மறைத்து உதவுதல் போல்.
 • உடுத்திருந்திருந்த ஆடை ஒருவன் உடம்பினின்று நெகிழ்ந்தபோது அவன் கை உடனே விரைந்து அந்த நெகிழ்ந்த ஆடையைத் தாங்கிக் கொள்வது போன்று.
 • ஒருவன் அரையில் கட்டியிருக்கும் ஆடை அவிழ்ந்து விடுமேயானால் கையானது விரைந்து சென்று உடையை மறுபடியும் உடுத்து மானம் காப்பது போல.

உடைநெகிழ்ந்தவிடத்து விரைந்து உதவும் கைபோல, நண்பரது துன்பத்தை வந்த அப்பொழுதே விரைந்து சென்று போக்குதலே நட்பாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நட்புகொண்டவனுக்குத் துன்பம்வரின் காலம் தாழ்த்தாமல் சென்று நீக்குக.

பொழிப்பு

ஆடையை இழந்தவனுடைய கை தானே விரைந்து சென்று உதவுதல் போல நண்பனது துயரை வந்த அப்பொழுதே போக்குதலே நட்பாகும்.