இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0786



முகம்நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு

(அதிகாரம்:நட்பு குறள் எண்:786)

பொழிப்பு (மு வரதராசன்): முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.

மணக்குடவர் உரை: முகத்தோடு முகமகிழக் கொள்ளும் நட்பு நட்பன்று; மனத்தோடு மனமகிழக் கொள்ளும் நட்பே நட்பாவது.

பரிமேலழகர் உரை: முகம்நக நட்பது நட்பு அன்று - கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு - அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது.
(நெஞ்சின்கண் நிகழ்வதனை 'நெஞ்சு' என்றார். இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான் இரண்டும் ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம்.)

சி இலக்குவனார் உரை: கண்டபொழுது உள்ளத்தொடு பொருந்தாமல் முகத்தால் மட்டும் சிரிப்பதற்குரியது நட்பாகாது; அன்பால் உள்ளமும் மலர நட்புச் செய்வதே நட்பாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முகம்நக நட்பது நட்புஅன்று; நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு.

பதவுரை: முகம்-முகம்; நக-மலர; நட்பது-நண்பு கொள்ளல்; நட்பு-தோழமை; அன்று-இல்லை; நெஞ்சத்து-அன்பால்; அகம்-நெஞ்சம்; நக-மகிழுமாறு; நட்பது-நண்பு கொள்ளல்; நட்பு-தோழமை.


முகம்நக நட்பது நட்புஅன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முகத்தோடு முகமகிழக் கொள்ளும் நட்பு நட்பன்று;
பரிப்பெருமாள்: முகத்தோடு முகமகிழக் கொள்ளும் நட்பு நட்பன்று;
பரிதி: முகம் மலரவும் காரியம் கெடவும் செய்வது நட்பல்ல;
காலிங்கர்: புறத்துறுப்பு ஆகிய முகநகை மாத்திரம் செய்து நட்புக்கொள்ளும் நட்பது நட்பன்று;
பரிமேலழகர்: கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது;

'புறத்துறுப்பு ஆகிய முகநகை மாத்திரம் செய்து நட்புக்கொள்ளும் நட்பது நட்பன்று' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முகம் இனிக்கப் பழகுவது நட்பாகாது', 'மனத்தாலன்றி முகமட்டும் மலர நட்புக்கொள்வது உண்மையான நட்பாகாது', 'முகமும் முகமும் மகிழ்ந்து உறவு கொண்டாடுவது மட்டும் நட்பு ஆகிவிடாது', 'கண்டவிடத்து முகமலரும்படி சிநேகிப்பது நட்பாகாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முகம் மலரும்படியாக நட்புக்காட்டுவது நட்பாகாது என்பது இப்பகுதியின் பொருள்.

நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('நட்பதே நட்பு' பாடம்): மனத்தோடு மனமகிழக் கொள்ளும் நட்பே நட்பாவது.
பரிப்பெருமாள் ('நட்பதே நட்பு' பாடம்). : மனத்தோடு மனமகிழக் கொள்ளும் நட்பே நட்பாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல்நட்பு அரிது என்றார். உலகத்துப் பலரும் தம்மில் கலந்தது காணாநின்றோம்; அஃது அரிதாயினவாறு 'ஏன்' என்றார்க்குக் கூறப்பட்டது.
பரிதி: மனம் மகிழவும் காரியமாகவும் கூடுவது நட்பு என்றவாறு.
காலிங்கர்: இனி அகத்துறுப்பு ஆகிய நெஞ்சானது உள் மகிழ்வுற நிற்கும் நட்பே நட்பானது என்றவாறு.
பரிமேலழகர்: அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது.
பரிமேலழகர் குறிப்புரை: நெஞ்சின்கண் நிகழ்வதனை 'நெஞ்சு' என்றார். இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான் இரண்டும் ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம்.

'அகத்துறுப்பு ஆகிய நெஞ்சானது உள் மகிழ்வுற நிற்கும் நட்பே நட்பானது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனம் இனிக்கப் பழகுவதே நட்பு', 'உள்நெஞ்சமும் மலரும்படியாக மகிழ்ந்து நட்புக்கொள்வதே நல்ல நட்பாகும்', 'நெஞ்சிலுள்ள உள்ளமும் உள்ளமும் விரும்பி மகிழும்படி பொருந்துகின்ற உறவே நட்பாகும்', 'அன்பால் உள்ளம் மலரும்படி சிநேகிப்பதே நட்பாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மனம் உள்ளுக்குள் மகிழும்படியாகப் பழகி நட்புக்கொள்வதே நட்பாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முகம் மலரும்படியாக நட்புக்காட்டுவது நட்பாகாது; நெஞ்சத்து அகம்நக நட்புக்கொள்வதே நட்பாகும் என்பது பாடலின் பொருள்.
'நெஞ்சத்து அகம்நக' என்றால் என்ன?

அறிமுக நட்புநிலை கடந்தபின், நெஞ்சம் மகிழும்படி நட்பாளுதல் வேண்டும்.

முகத்தில் மலர்ச்சி காட்டி நட்புச் செய்வது மட்டும் நட்பாகாது; இருவரது மனங்களும் உள்ளுக்குள் மகிழும்படியாகப் பழகிக்கொள்வதே நட்பாகும்.
தொடக்கத்தில் முகத்தோடு முகம் மகிழும் உறவுதான் இருக்கும். ஆனால் அந்நட்பு முழுமையாக மலரவேண்டுமானால் முகத்துடன் நின்றுவிடாது உள்மனமும் மகிழும்படியாக நட்புறவு கொள்ளவேண்டும். உள்ளம் கலக்காமல், முகத்தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி தொடர்பைத் தொடர்வது நட்பாகாது; நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்பு செய்வதுதான் நட்பு. இதற்கு உள்ளங்கள் பொருந்தவேண்டும். நட்புச்செய்யும்போது நகைத்தல், மகிழ்தல் ஆகியன இருவரது மனத்தில் இருந்து வெளிப்படுதல் வேண்டும். மனத்தில் வெளிப்பட்ட பிறகு அவை முகத்தில் தோன்றும். மனத்தோடு தொடர்பு கொள்ளாமல், உள்ளுக்குள் வேறு எண்ணத்தை வைத்துக்கொண்டு முகத்தில் மட்டும் மலர்ச்சிக் குறியினைக் காட்டுவதை 'முகம் நக நட்பது' என வள்ளுவர் சொல்கிறார். அகம் மலராமல், முகத்தால் மட்டும் மலர்வதுபோல் நடித்து நண்பர்களாகக் காட்டிக் கொள்பவர்களும் உலகில் உண்டு. அது நட்பாகாது. நெஞ்சத்தால் ஒன்றி, அதன் காரணமாக முகமலர்ச்சி தோன்றுதல் வேண்டும். முகமும் அகமும் மகிழப் பழகுவதே நட்பு.

நக வேண்டும் என்பதற்காக மகிழ்ச்சியைக் காட்டினால் அது உண்மையான நட்பாய் இருக்காது. எனவே நட்புச்செய்யும்போது அகமும் முகமும் ஒரு சேர மகிழ்க எனச் சொல்லப்பட்டது.

'நெஞ்சத்து அகம்நக' என்றால் என்ன?

'நெஞ்சத்து அகம்நக' என்றதற்கு மனத்தோடு மனமகிழ, மனம் மகிழவும் காரியமாகவும், அகத்துறுப்பு ஆகிய நெஞ்சானது உள் மகிழ்வுற, அன்பால் அகமும் மலர, நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு, நெஞ்சின்கண் உள்ள அன்பால் அகமும் மலர, மனம் இனிக்க, உள்நெஞ்சமும் மலரும்படியாக மகிழ்ந்து, நெஞ்சிலுள்ள உள்ளமும் உள்ளமும் விரும்பி மகிழும்படி, நினைவின் உள்ளிடமாகிய மனமும் மலருமாறு, அன்பால் உள்ளம் மலரும்படி, அன்பால் உள்ளமும் மலர, உள்ளத்தோடு உள்ளம் கலந்து உறவாடி மகிழ்வதே, அன்பால் உள்ளமும் மலருமாறு, நெஞ்சில் நண்பனை நினைக்கும்பொழுதே மகிழ்ச்சியைத் தர என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'நெஞ்சத்து அகம்' என்பதற்கு உள்நெஞ்சம் என காலிங்கர் பொருள் தருவார். இவர் உரையின்படி 'நெஞ்சத்து அகம்நக' என்றது உள்நெஞ்சம் மகிழ்வு எய்த எனப்பொருள்படும். இது சிறப்பாக உள்ளது. 'நெஞ்சத்து என்றும், அகம் என்றும் இருசொல் கூறப்பட்டதால் உயிர்த் தொடர்பு வேண்டும்' என்பார் ஜி வரதராஜன்.
முகத்தில் மலர்ச்சி காட்டுவது மட்டும் நட்பல்ல; உள்ளூற மகிழ்ந்து மனம் இனிக்கப் பழகுவதே நட்பு ஆகும்.

'நெஞ்சத்து அகம்நக' என்றது நெஞ்சானது உள் மகிழ்வுற என்ற பொருள் தரும்.

முகம் மலரும்படியாக நட்புக்காட்டுவது நட்பாகாது; மனம் உள்ளுக்குள் மகிழும்படியாகப் பழகி நட்புக்கொள்வதே நட்பாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அகமகிழ்வோடு செய்யும் நட்பு வேண்டப்பெறுவது.

பொழிப்பு

முகமட்டும் மலர நட்புக்கொள்வது நட்பாகாது; உள்மனமும் மலரும்படியாகப் பழகி நட்புக்கொள்வதே நட்பாகும்.