நகுதற் பொருட்டன்று நட்டல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனோடு ஒருவன் நட்புப் பண்ணுதல் நகுதற்பொருட்டன்று;
பரிப்பெருமாள்: ஒருவனோடு ஒருவன் நட்புப் பண்ணுதல் நகுதற்பொருட்டன்று;
பரிதி: இடுக்கண் வந்தால் நிந்தித்துச் சிரிப்பனவும் நன்றான காலத்து மகிழ்ந்து சிரிக்கவும் அல்லது; [நிந்தித்து-இகழ்ந்து]
காலிங்கர்: ஒருவரோடு ஒருவர் நட்டலாவது புறமே நகை செய்தல் பொருட்டு அன்று;
பரிமேலழகர்: ஒருவனோடு ஒருவன் நட்புச் செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று;
'ஒருவனோடு ஒருவன் நட்புச் செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நட்புச் செய்தல் அரட்டை அடிப்பதற்கன்று', 'ஒருவனோடு நட்புச் செய்தல் கூடி மகிழ்வதற்காக மட்டுமன்று', 'ஒருவரோடொருவர் நட்பாக இருப்பது, தம்முன் இன்பமான விஷயங்களைப் பேசி மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருப்பதற்காக (மட்டும்) அல்ல', 'ஒருவனோடொருவன் நட்புச் செய்தல் சிரித்து விளையாடுவதற்காக அன்று' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது சிரித்துப்பேசி மகிழ்வதன் பொருட்டு அல்ல என்பது இப்பகுதியின் பொருள்.
மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகையாயின செய்யுமிடத்து முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. [கழறுதற் பொருட்டு- இடித்துரைத்தற் பொருட்டு]
மணக்குடவர் குறிப்புரை: இது மனமகிழ நட்புக்கோடலன்றித் தீக்கருமங்கண்டால் கழறவும்வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: மிகையாயின செய்யுமிடத்து கழறுதற் பொருட்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மனமகிழ நட்டலே அன்றித் தீக்கருமங்கண்டால் கழறவும்வேண்டுமென்றது.
பரிதி: துன்பம் வருமுன்னே பரிகாரம் பண்ணுவது நட்பு என்றவாறு. [பரிகாரம் - நீக்கும்வழிகள்]
காலிங்கர்: மற்று யாதிற்கோ எனின், அவர் நடக்கும் முறைமைக்கும் இங்கு அமையதாகியதோர் குற்றம் கண்டால் அப்பொழுதே அவர் தம்மைப் பெரிதும் அடர்த்துக் கழறுதல் பொருட்டு; [யாதிற்கோ - எதற்கு; கழறுதல் - இடித்துக் கூறுதல்]
காலிங்கர் குறிப்புரை: எனவே அவர் கேடு தம் கேடு என்றவாறு.
பரிமேலழகர்: அவர்க்கு வேண்டாத செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு.
பரிமேலழகர் குறிப்புரை: பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான் வேண்டப்படுவதன்மையின் அதனை 'மிகுதி' என்றும், அது செய்தற்கு முன்னே
மீட்டல் வேண்டுதலின், 'மேற்சென்று' என்றும், இன்சொற்கு மீளாமையின், 'இடித்தற்பொருட்டு' என்றும் கூறினார். இதனான் நட்பின் பயன் கூறப்பட்டது.
'மிகையாயின செய்யுமிடத்து முற்பட்டுக் கழறுதற் பொருட்டு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'மேற்சென்று' என்றற்கு மணக்குடவர், பரிமேலழகர் 'முற்பட்டு' என்றும் பரிதியார் 'துன்பம் வருமுன்னே' என்றும் உரை கூறினர்; காலிங்கர் 'அப்பொழுதே' எனக் கொண்டார்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிழை செய்யும்போது முன்வந்து இடித்தற்காம்', 'அவன் தவறு செய்தவழி முற்பட்டு இடித்து அறிவுரை கூறுவதற்கேயாம்', '(ஒருவர் ஒரு) குற்றம் செய்யும்போது (மற்றவர் அதை எடுத்துக் காட்டி) இடித்துக் கூறித் தீமையை விலக்குவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது', 'அளவுக்கு மிஞ்சிய செய்கை ஏற்படக் கூடியதானால், முற்பட்டு அதனைக் கடிந்துரைப்பதற்காகவேயாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
வரம்பிறந்த செயல் செய்வராயின், அவரை நண்பனாகத் தானே முன்வந்து கடிந்து திருத்தற்பொருட்டு என்பது இப்பகுதியின் பொருள்.
|