நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
(அதிகாரம்:நட்பு
குறள் எண்:783)
பொழிப்பு (மு வரதராசன்): பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
|
மணக்குடவர் உரை:
படிக்குந்தோறும் நூல்நயம்போல அறிவுதரும், பழகுந்தோறும் பண்புடையாளரது நட்பு.
இது குணவானோடு நட்புக்கொள்ளின் அறிவுண்டாமென்றது.
பரிமேலழகர் உரை:
பண்பு உடையாளர் தொடர்பு பயில்தொறும் - நற்குணமுடைய மக்கள் தம்முள் செய்த நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பஞ் செய்தல்; நூல் நவில்தொறும் நயம் போலும் - நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பஞ் செய்தலை ஒக்கும்.
(நயத்தினைச் செய்தலான் 'நயம்' எனப்பட்டது. இருமையினும் ஒருகாலைக் கொருகால் மிகும் என்பதாகும். இவை இரண்டு பாட்டானும் அச்சிறப்பிற்கு ஏது கூறப்பட்டது.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
நல்ல நூலின் நயமானது கற்குந்தோறும் மிகுந்து விளங்குதல் போல, நற்குணம் உடையவர் நட்பானது பழகுந்தோறும் மிக வளர்ந்து இனிமையைக் கொடுக்கும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு.
பதவுரை: நவில்தொறும்-படிக்கப் படிக்க, பயில்கின்ற போதெல்லாம், பயிலப் பயில; நூல்-நல்ல நூல், நூற்பொருள்; நயம்-இன்பஞ் செய்தல்; போலும்-போன்றது; பயில்தொறும்-பழகப் பழக; பண்புடையாளர்-குணமுடையவர்; தொடர்பு-நட்பு.
|
நவில்தொறும் நூல்நயம் போலும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: படிக்குந்தோறும் நூல்நயம்போல அறிவுதரும்;
பரிப்பெருமாள்: படிக்குந்தோறும் நூல்நயம்போல அறிவுதரும்;
பரிதி: கல்வியைப் பாராட்டப் பாராட்ட அறிவு ஊறும்;
காலிங்கர்: கற்குந்தொறும் கற்குந்தொறும் கற்பவர்க்கு நூல் நயம் செய்யும் இனிமை போலும்;
பரிமேலழகர்: நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பஞ் செய்தலை ஒக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: நயத்தினைச் செய்தலான் 'நயம்' எனப்பட்டது.
'படிக்குந்தோறும் நூல்நயம்போல அறிவு தரும்/இனிமை தரும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'படிக்கப் படிக்க நூலின்பம் போலும்', 'நூலினைக் கற்குந்தோறும் கற்பவர்க்கு அக்கல்வி இன்பம் தருதல் போலும்', '(எப்படிப் போல் என்றால்) படிக்கப் படிக்க ஒரு நயமான நூலின் சிறப்பு அதிகரிப்பது போல்', 'கற்கும் தோறும் இன்பம் பயக்கும் நூலின் நன்மைபோல' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
படிக்கப் படிக்க நூலினிமை போலும் என்பது இப்பகுதியின் பொருள்.
பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பழகுந்தோறும் பண்புடையாளரது நட்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது குணவானோடு நட்புக்கொள்ளின் அறிவுண்டாமென்றது.
பரிப்பெருமாள்: பழகுந்தோறும் பண்புடையாளரது நட்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் பொதுவாக நட்டோர் செய்யும் திறன் கூறினார். இது குணவானோடு நட்புக்கொள்ளின் அறிவு உண்டாம் என்று கூறியது.
பரிதி: அத்தன்மை போல நட்பும் பழகப் பழக மகிழ்ச்சி கொடுக்கும் என்றவாறு.
காலிங்கர்: பயிலுந்தொறும் பயிலுந்தொறும் பண்புடையாளர் நட்பு என்றவாறு.
பரிமேலழகர்: நற்குணமுடைய மக்கள் தம்முள் செய்த நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பஞ் செய்தல்;
பரிமேலழகர் குறிப்புரை: இருமையினும் ஒருகாலைக் கொருகால் மிகும் என்பதாகும். இவை இரண்டு பாட்டானும் அச்சிறப்பிற்கு ஏது கூறப்பட்டது.
'பழகுந்தோறும் பண்புடையாளரது நட்பு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பழகப் பழகப் பண்புடையவர் நட்பு', 'நல்ல குணமுடையவர்களோடு நட்புக் கொண்டு பழகுந்தோறும் அந்நட்பு இன்பம் செய்தல்', 'நல்ல குணமுடையவர்களுடைய நட்பு பழகப் பழக இன்பம் அதிகரிக்கும்', 'பழகும் தோறும் இன்பம் பயக்கும் நற்குண முடையோர் நட்பு, ' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பழகப் பழகப் பண்புடையவர் நட்பு என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நவில்தொறும் நூலினிமை போலும் பழகப் பழகப் பண்புடையவர் நட்பு என்பது பாடலின் பொருள்.
'நவில்தொறும்' என்பதன் பொருள் என்ன?
|
பண்புடையவருடான நட்பு இனிமை பயக்கும்.
நூலில் உள்ள நல்லன படிக்குந்தோறும் கற்போர் உள்ளத்தே இன்பந்தருதல் போன்று நற்குணமுடையார் நட்பானது பழகுந்தோறும் மேன்மேலும் இனிமை தரும்.
நல்ல இலக்கியமானது படிக்கப்படிக்க புதுப்புது எண்ணங்களைத் தன்னில் தோற்றுவிக்கும் ஆற்றல் கொண்டது. அதுபோல பண்புடையவரிடம் பழகப்பழக புத்துணர்ச்சி தோன்றிக்கொண்டே இருக்கும் எனச் சொல்கிறது பாடல்.
நூல்நயம்:
நூல் என்றது நல்ல நூல்களைக் குறிக்கும். தொடர்பு என்பதில் பண்புடையாளர் என்று அடை இருப்பதுபோல நூலுக்கு அடை இல்லையாயினும், அதன் ஆற்றலால் நூல் என்பதற்கு நல்ல நூல் என்றும் நூற்பொருள் என்றும் பொருள் கொள்வர். நயம் என்ற சொல் விருப்பம், உதவி, நற்பண்பு, நற்பொருள் என்னும் பொருள் உடையது. அச்சொல் இங்கு இன்பம் என்ற பொருள் தருகிறது. நல்ல நூலானது ஒவ்வொருமுறை கற்கும்போதும் புதுக் கருத்துக்களை வழங்கிச் சுவை அளிக்கும். அது முதல்முறை வாசிக்கும்போது தரும் இன்பத்தைவிட, திரும்பத்திரும்ப படிக்கும்போது சிறந்த இன்பம் தரும்.
படித்த நூல்தானே என்று தள்ளிவைக்க முடியாதவாறு படிக்குந்தொறும் புதிய புதிய பொருள் இன்பம் தரும். தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் (கல்வி 399) எனக் கற்றலினால் இலக்கிய இன்பம் காணப்படும் என வள்ளுவர் பிறிதொரு இடத்தில் கூறியுள்ளார்.
இயற்கை அறிவால் பெறமுடியாத நுண்ணறிவு நல்ல நூல் வாசித்தல் மூலம் தலைப்படும். இதுவே நூல் நயம்.
பயில்தொறும்:
இத்தொடர் பழகப்பழக எனப் பொருள்படும். பண்புள்ள மாந்தரிடம் பழகும்போது நம்மிடம் ஒரு புத்துணர்வு தோன்றும்; அவர்களிடம் ஊடாட வேண்டும் என்ற விருப்பம் ஊறிக்கொண்டே இருக்கும் என்கிறார் வள்ளுவர்.
பயில் என்றது நெருங்குதல், அடுத்தடுத்து வருதல், வாழ்தல் ஆகிய பொருள் தருவது; இங்குப் பழகுதல் என்ற பொருள் கொள்வர். அதாவது எட்டிநில்லாமல் நெருங்கிப் பழகி உறவு வைத்துக் கொள்ளுதல் என்று பொருள் (செ வை சண்முகம்). நல்ல நூல் செய்ய வல்லதை நல்ல நண்பர் செய்வர் என்ற கருத்து உணர்த்தப்படுவதால் உலகியல் முறையில் அவருடைய நடத்தையைக் கூர்ந்து கவனித்து மனிதர்களோடு பழகும் முறையை அறிந்து, தான் அதைக் கடைப்பிடித்தலும் அவருடைய உதவியால் நன்மை பெறுதலும் என்று கொள்ளலாம்.
இங்கு சொல்லப்பட்டுள்ள உவமை நட்பின் சிறப்பை விளக்குவதோடு அல்லாமால் இலக்கியக்கலையின் பெருமையையும் தெரிவிக்கின்றது.
கணக்கிலடங்கா நூல்கள் உலகில் தோன்றுகின்றன. சிலநூல்களே காலங்கள் கடந்தும் குன்றின் மேலிட்ட விளக்காக விளங்குகின்றன. அத்தகைய நூல்களே வாசிக்குந்தொறும் இனிமையை, நயத்தை, மென்மேலும் நல்குகின்றன. இதுகாறும் இத்தகைய நூல்கள் இருந்தமையை அறிந்திலமே என்று இரங்க வைக்கும் தன்மையன அவை. இதனை உவமையாகக் காட்டிப் பண்புடையாளர் நட்பு விளக்கப்படுகிறது.
நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இனிமை பயப்பதைப் போல, பழகப்பழகப் பண்புடையாளர் தொடர்பு இன்பம் செய்யும் எனச் சொல்லப்பட்டது.
தண்டபாணி தேசிகர் 'பலகாற் படித்தல், பலகாற் பாடஞ் சொல்லல், பேசுதல் முதலிய எல்லா வகையிலும் நூலறிவு ஒரு காலைக் கொருக்கால் நயமிக்குத் தோன்றும். அதுபோலப் பழகுந்தோறும் நட்பு வளரும் என்பதாம்' என உரை வரைந்துள்ளார்.
|
'நவில்தொறும்' என்பதன் பொருள் என்ன?
நவில்தொறும் என்றதற்குப் படிக்குந்தோறும், கல்வியைப் பாராட்டப் பாராட்ட, கற்குந்தொறும் கற்குந்தொறும், கற்குந்தோறும், கற்கக் கற்க, மற்றவர்க்கு எடுத்துக் கூறும் பொழுதெல்லாம், படிக்கப் படிக்க, படிக்குந்தோறும், படிக்குந்தோறும், பயிலப் பயில என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'நவில் என்ற வினை இந்தக் குறளில் மட்டுமே வந்துள்ளது. பொதுவாகச் சொல்லுதல், பயிலுதல், படித்தல் என்ற பொருளை உடையது. நூல் நவில் புலவர் என்பது தொல்காப்பியத் தொடர் (செய்,153.5) அறிதல் என்ற பொருளைக் கொண்டது. கற்றலுக்கும் நவில்தலுக்கும் உள்ள மாறுபாடு ஆராயத்தகுந்தது' என்பார் செ வை சண்முகம்
'ஒரு நூலின் ஆழ்ந்த பொருளை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு வாசிப்பதற்கு நவில்தல் என்று பெயர்' எனவும் விளக்குவர்.
ஒரு நல்ல நூலைப் பலமுறை படித்தாலும் மனத்துக்குச் சலிப்புத் தட்டுவதில்லை. அதன் பொருளைக் கற்கக் கற்க அதன் நயம் மேலும் மேலும் வெளிப்படும்.
'நவில்தொறும்' என்றதற்குப் படிக்கப் படிக்க என்பது பொருள்.
|
படிக்கப் படிக்க நூலினிமை போலும் பழகப் பழகப் பண்புடையவர் நட்பு என்பது இக்குறட்கருத்து.
நற்குணமுடையவர் நட்பு பலகால் பழகினும் அயர்ச்சி உண்டாக்குவதில்லை.
நூலினைப் படிக்கப் படிக்க இன்பம் தருதல் போன்றது பழகப் பழகப் பண்புடையவர் நட்பு.
|