செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
(அதிகாரம்:நட்பு
குறள் எண்:781)
பொழிப்பு (மு வரதராசன்): நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?
|
மணக்குடவர் உரை:
நட்புப்போல உண்டாக்குதற்கு அரியவான பொருள்கள் யாவையுள? அவ்வாறு உண்டாக்கப்பட்ட நட்புப்போலப் பிற நல்வினை செய்தற்கு அரியவாகக் காக்கும் காவல்கள் யாவையுள?
இது நட்புத் தேடலரிது என்றது.
பரிமேலழகர் உரை:
நட்பின் செயற்கு அரிய யா உள - நட்புப்போலச் செய்து கோடற்கு அரிய பொருள்கள் யாவை உள? அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள - செய்துகொண்டால் அது போலப் பகைவர் செய்யும் வினைக்குப் புகற்கு அரிய காவலாவன யாவை உள?
(நட்புச்செய்தற்கு ஆவாரைப் பெறுதலும், பெற்றால்செய்யும் உபாயமும், செய்தால் திரிபின்றி நிற்றலும்முதலிய அரிய ஆகலின். 'நட்பிற் செயற்கு அரியன இல்லை' என்றும், செய்தால் பகைவரஞ்சி வினை தொடங்காராகலின், 'அதுபோல வினைவாராமைக்கு அரிய காவல் இல்லை' என்றும் கூறினார். நட்புத்தான் இயற்கை செயற்கை என இருவகைப்படும்: அவற்றுள் இயற்கை, பிறப்பு முறையானாயதூஉம், தேய முறையானாயதூஉம் என இருவகைப்படும். அவற்றுள் முன்னையது சுற்றமாகலின், அது 'சுற்றந்தழாலின'அடங்கிற்று. ஏனையது பகையிடையிட்ட தேயத்ததாகலின், அதுதுணைவலி என 'வலியறிதலுள' அடங்கிற்று. இனி ஈண்டுச்சொல்லப்படுவது முன்செய்த உதவி பற்றி வருஞ் செயற்கையேயாகலின், அதன் சிறப்பு இதனாற் கூறப்பட்டது.)
தமிழண்ணல் உரை:
நட்பினை உண்டாக்கிக் கொள்ளுதல் போலச் செய்தற்கரியன உலகில் யாவை உள? ஒரு காரியத்தைச் செய்யுமிடத்து, அதற்குத் துணையாக நின்று காக்க கூடியவை, அந் நட்புப்போல வேறு யாவை உள?
செவ்வி பார்த்து நட்புக்கொள்ளுதல் எளிதன்று; பலர்க்கு வாய்ப்பதில்லை; வாய்த்தால் அதைப்போன்று காரியமாற்றுதலில் கைகொடுத்துக் காப்பது பிறிதில்லை.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
நட்பின் செயற்கரிய யாவுள அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு.
பதவுரை: செயற்கு-செய்து கொள்ளற்கு (இங்கு (நட்பை) உண்டாக்கிக் கொள்வதற்கு); அரிய-அருமையானவை, எளியவன்று; யா-எவை; உள-இருக்கின்றன; நட்பின்-நட்புப் போல; அதுபோல்-அது போன்று; வினைக்கு-செயலுக்கு; அரிய-சிறப்புடன்கூடியன; யாவுள-எவை இருக்கின்றன; காப்பு-காவல்.
|
செயற்கரிய யாவுள நட்பின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்புப்போல உண்டாக்குதற்கு அரியவான பொருள்கள் யாவையுள?
பரிப்பெருமாள்: நட்புப்போல உண்டாக்குதற்கு அரியன பொருள்கள் யாவையுள?
பரிதி: அரிய காரியத்தில் அரியது நட்புப்போல இல்லை;
காலிங்கர்: நட்பினைப்போல ஒருவரால் செய்து கோடற்கு அரியன மற்று யா உள, எனவே யாவும் இல்லை;
பரிமேலழகர்: நட்புப்போலச் செய்து கோடற்கு அரிய பொருள்கள் யாவை உள?
'நட்புப்போல உண்டாக்குதற்கு அரியவான பொருள்கள் யாவையுள?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நட்புப்போல் செய்தற்கு அரியதும் இல்லை', 'நட்புப்போலச் செய்து கொள்ளுவதற்கு அரிய செயல்கள் எவை உள்ளன?', 'சினேகத்தைப் போல, தேடிச் செய்து கொள்ள வேண்டிய சிறப்புடையது வேறு என்ன இருக்கிறது?', 'நட்பினைப் போலச் செய்து கொள்ளற்கு அரிய பொருள்கள் யாவை உள?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நட்புறவுகள்போல உருவாக்கிக் கொள்வதற்கு அரியசெயல்கள் எவை உள்ளன? என்பது இப்பகுதியின் பொருள்.
அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வாறு உண்டாக்கப்பட்ட நட்புப்போலப் பிற நல்வினை செய்தற்கு அரியவாகக் காக்கும் காவல்கள் யாவையுள?
மணக்குடவர் குறிப்புரை: இது நட்புத் தேடலரிது என்றது.
பரிப்பெருமாள்: அவ்வாறு உண்டாக்கப்பட்ட நட்புப்போலப் பிறர் நல்வினை செய்தற்கு அரிதாகக் காக்கும் காவல்கள் யாவையுள?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நட்புத் தேடலரிது என்றது. [
பரிதி: நட்புப்போலே உதவியும் இல்லை என்றவாறு.
காலிங்கர்: இனி நட்பினது போல வினைக்கு அரிய யா உள காப்பு; எனவே தாம் செய்து கொண்ட பொருள் முதலிய வர்க்கங்களைப் புரைபடாமல் காக்கின்ற காப்பு மற்று இந்நட்புக்குப் பழுதுபடாமல் காப்பது ஓர் காவல் வினைபோல வினைக்கு அரியன யாவும் இல்லை என்றவாறு. [வர்க்கங்களைப் புரைபடாமல்- வகைகளைக் குற்றப்படாமல்]
பரிமேலழகர்: செய்துகொண்டால் அது போலப் பகைவர் செய்யும் வினைக்குப் புகற்கு அரிய காவலாவன யாவை உள?
பரிமேலழகர் குறிப்புரை: நட்புச்செய்தற்கு ஆவாரைப் பெறுதலும், பெற்றால்செய்யும் உபாயமும், செய்தால் திரிபின்றி நிற்றலும்முதலிய அரிய ஆகலின். 'நட்பிற் செயற்கு அரியன இல்லை' என்றும், செய்தால் பகைவரஞ்சி வினை தொடங்காராகலின், 'அதுபோல வினைவாராமைக்கு அரிய காவல் இல்லை' என்றும் கூறினார். நட்புத்தான் இயற்கை செயற்கை என இருவகைப்படும்: அவற்றுள் இயற்கை, பிறப்பு முறையானாயதூஉம், தேய முறையானாயதூஉம் என இருவகைப்படும். அவற்றுள் முன்னையது சுற்றமாகலின், அது 'சுற்றந்தழாலின'அடங்கிற்று. ஏனையது பகையிடையிட்ட தேயத்ததாகலின், அதுதுணைவலி என 'வலியறிதலுள' அடங்கிற்று. இனி ஈண்டுச்சொல்லப்படுவது முன்செய்த உதவி பற்றி வருஞ் செயற்கையேயாகலின், அதன் சிறப்பு இதனாற் கூறப்பட்டது. [சுற்றந்தழாலின் - சுற்றந்தழால் என்னும் அதிகாரத்தில்]
'அவ்வாறு உண்டாக்கப்பட்ட நட்புப்போலப் பிறர் நல்வினை செய்தற்கு அரியவாகக் காக்கும் காவல்கள் யாவையுள?' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் வேறுபாடாக 'செய்துகொண்டால் அது போலப் பகைவர் செய்யும் வினைக்குப் புகற்கு அரிய காவலாவன யாவை உள?' என உரை தந்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அதுபோல் காரியத்துக்குத் துணையும் வேறில்லை', 'அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?', 'அதைப் போலக் காரியத்துக்குப் பாதுகாப்பளிக்கக் கூடியதும் வேறு என்ன இருக்கிறது?', 'செய்துகொண்டால் அதுபோல வினைக்கு அரிய காவலாவன யாவையுள?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
நட்பைப் போல செயலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள? என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நட்புறவுகள்போல உருவாக்கிக் கொள்வதற்கு அரியசெயல்கள் எவை உள்ளன? நட்பைப் போல வினைக்கரிய காப்பு எவை உள? என்பது பாடலின் பொருள்.
'வினைக்கரிய காப்பு' என்ற தொடர் குறிப்பது என்ன?
|
நல்ல காப்புத் துணை ஆகும் நட்பை உண்டாக்குவது எளிதன்று.
நட்பை ஏற்படுத்திக்கொள்ளுதல் எளிதன்று; ஒருவர் செய்யும் செயல்களுக்கு நட்புபோல் அரிய காவல் வேறில்லை.
மனித வாழ்க்கையே செயல் வாழ்வுதான். ஒரு செயலைத் தனியாகச் செய்தலைவிட துணையுடன் செய்தால் அது நல்ல பயனை உண்டாக்கும். நட்புத் துணை ஒருவரது வாழ்க்கையை வளப்படுத்திச் சிறப்புடையதாக்கத் துணையாய் அமையும். நட்பு கொள்ள வேண்டியவர்களைப் பெறுவது எளிதான செயல் அல்ல. அவ்வாறே நட்பு பெற்றபின் அவர்களோடு நட்பாக இருப்பது, நட்பாக இருக்கும் போது நட்பைப் பிணித்து நீங்கவிடாமல் உடன் வைத்துக்கொள்வது ஆகியனவும் அரிய செயல்களாம். அதனால்தான் வள்ளுவர் செயற்கரிய யாவுள? என்று வினாக் கேட்டு, விடையாக நட்பு என்று கூறுகிறார்.
நட்பு அமைவதுதான் கடினம். ஆனால் அந்த நட்பு ஏற்பட்டபின்பு, அதைப்போல் காப்பு அளிப்பது வேறில்லை என்பதும் சொல்லப்பட்டது.
மேற்சொன்னவை தனிமனித நட்புறவுக்கு மட்டுமன்றி நாடுகளுக்கிடையேயான நட்புக்கும் பொருந்துவனவே.
துணை உதவி வேண்டியும், பகை தணிக்கவும் வேண்டப்படும் காரணங்கருதிய நட்புநாடுகளுடனான பிணைப்பு பற்றிய பாடல் இது என்பர்.
நட்பினால் நாடுகளிடையே எதிர்ப்பின்மை என்னும் அரணும் கிடைக்கிறது. நட்பு உண்டானபின் அந்நாடு தம் நாட்டின் மீது கொண்டிருந்த பகை தணியும். அதுவே ஒரு சிறந்த காப்பு தருவதுதான். மேலும் நட்பு நாட்டினர் மீது வேறு பகைவர் படையெடுத்து வந்தால் நண்பரைக் காப்பதற்காகப் போரில் ஈடுபடவும் அவர் முன்வருவர்.
|
'வினைக்கரிய காப்பு' என்ற தொடர் குறிப்பது என்ன?
'வினைக்கரிய காப்பு' என்றதற்குப் பிற நல்வினை செய்தற்கு அரியவாகக் காக்கும் காவல்கள், பிறர் நல்வினை செய்தற்கு அரிதாகக் காக்கும் காவல்கள், உதவியும், தாம் செய்து கொண்ட பொருள் முதலியவர்க்கங்களைப் புரைபடாமல் காக்கின்ற காப்பு, பகைவர் செய்யும் வினைக்குப் புகற்கு அரிய காவல், பகைவர் செய்யும் வினைக்குத் தடுக்கவரிய காவல், தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை, ஒரு காரியத்தைச் செய்யுமிடத்து, அதற்குத் துணையாக நின்று காக்க கூடியவை, ஒருவர் செய்யும் பணிகளுக்குப் பாதுகாப்பு தருபவர்கள், காரியத்துக்குத் துணை, தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை, காரியத்துக்குப் பாதுகாப்பளிக்கக் கூடியது, செயலாற்றும் போதும் அரிய பாதுகாப்பாக இருப்பவை, எதிரிகள் செயலைத் தடுப்பதற்கு அருமையான பாதுகாப்புக்கள், வினைக்கு அரிய காவல், தொழிலுக்கு அரிய காவலாய் இருப்பவை, ஒரு செயலைச் செய்து முடிக்கப் பாதுகாப்பாவது, பகைவர் செய்யும் வினை நம்மை அணுகாமல் காக்கும் அரிய காவல், எடுத்துக்கொண்ட வினைமுயற்சிக்குப் பகைவரால் கேடுவராமற் காத்தற்கு அதைப்போல் அருமையான காவல்கள், செயலைத் தன் செயலாகக் காக்கக் கூடியவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'வினைக்கு' என்பதற்கு மணக்குடவர் பிற நல்வினை செய்தற்கு எனக் கொள்ள, 'பகைவர் செய்யும் வினைக்கு' எனப் பரிமேலழகர் பொருள் கொள்கிறார்
'நட்புச்செய்யப்பட்டதால் பகைவர் அஞ்சி வினை தொடங்காராகலின், 'அதுபோல வினைவாராமைக்கு அரிய காவல் இல்லை' என்றும் கூறினார்' எனவும் பரிமேலழகர் சிறப்புரையில் மொழிகிறார். இவ்வாறாக, நமது செயலுக்கு காவல் என்றும் பகைவர் சூழ்ழ்ச்சியினின்றும் காக்கும் காவல் என்றும் உரைகள் உள. தமது வினைகளுக்குப் பொதுவாக நண்பர் காவலை யாரும் வேண்டமாட்டார்கள். ஆனால் பகைவர் நம்மீது போர் தொடுக்கும் வேளை காப்பதற்கு நட்பு மிகவும் தேவைப்படும். எனவே பகைவர் சூட்சியினின்று காக்கும் காவல் என்பது பொருத்தமாகலாம்.
|
நட்புறவுகள்போல உருவாக்கிக் கொள்வதற்கு அரியசெயல்கள் எவை உள்ளன? நட்பைப் போல செயலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள? என்பது இக்குறட்கருத்து.
நல்ல நட்பு கிடைப்பது அரிது.
நட்புறவுகளை உண்டாக்கிக் கொள்வது போல் அரிய செயல்கள் இல்லை; நட்புபோல் செயலுக்குத் துணையும் வேறில்லை.
|