இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0720அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்.

(அதிகாரம்:அவையறிதல் குறள் எண்:720)

பொழிப்பு (மு வரதராசன்):தம் இனத்தவர் அல்லாதவரின் கூட்டத்தின்முன் ஒரு பொருள் பற்றிப் பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.மணக்குடவர் உரை: அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல இகழப்படுவர்; தம்முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவாராயின்.
கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்கு இஃது இகழப்படுவரென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க அமிழ்தற்று - சொல்லின், அது தூயதல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும்.
('கொள்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல்விகுதியோடு கூடி 'மகன் எனல்' (குறள் 196) என்பது போல் நின்றது. 'சொல்லின்', 'அது' என்பன அவாய் நிலையான் வந்தன. பிறரெல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார், அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருள் உவமையோடு இயையாமை நோக்கிற்றிலர். சாவா மருந்தாதல் அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு இன்றிக் கெட்டவாறு தோன்ற 'உக்க அமிழ்து' என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண் ஒரு வழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது.

சி இலக்குவனார் உரை: தம் கருத்தோடொத்த கூட்டத்தார் அல்லாதார் முன்னிலையில் சொல்லுதல், சாக்கடையில் அமிழ்தத்தைக் கொட்டியதை ஒக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல், அங்கணத்துள் உக்க அமிழ்தற்று.

பதவுரை: அங்கணத்துள்-முற்றத்தில்; உக்க-கொட்டிய; அமிழ்து-அமுதம், பால்; அற்று (ஆல்)-அத்தன்மைத்து; தம்-தமது; கணத்தர்-இனத்தார்; அல்லார்முன்-அல்லாதவர் கண்; கோட்டி-அவை; கொளல்-பெறுதல்(கொள்+அல்), சொலல், கொள்ளற்க(எதிர்மறை), சொல்லற்க.


அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல இகழப்படுவர்;
பரிப்பெருமாள்: அங்கணத்தின்கண் உக்க அமிழ்தம் போல இகழப்படுவர்;
பரிதி: அங்ஙணமாகிய சேற்றுக்குள் அமிர்தத்தை ஊற்றினதற்கு ஒக்கும்;
காலிங்கர்: பொல்லாத நீர் உகுத்தற்கு உரியதோர் அங்ஙணத்துள் கொண்டு சென்று உகுத்த பாலும் தேனும் முதலிய அமுதம் எத்தன்மைத்து, மற்று அத்தன்மைத்து;
பரிமேலழகர்: சொல்லின், அது தூயதல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'சொல்லின்', 'அது' என்பன அவாய் நிலையான் வந்தன. சாவா மருந்தாதல் அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு இன்றிக் கெட்டவாறு தோன்ற 'உக்க அமிழ்து' என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று.

அங்ஙணத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். அங்கணம் என்பதற்கு பரிதி சேறு என்றும் பொல்லாத நீர் உகுத்தற்குரிய இடம் என்றும் பரிமேலழகர் துயதல்லாத முற்றம் என்றும் பொருள் கொண்டனர். அமிழ்து என்ற சொல்லுக்கு அமுதம், அமிழ்தம், பாலும் தேனும் முதலிய அமுதம் எனப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சாக்கடையிற் கொட்டிய அமிழ்தம் போலும்', 'உயர்ந்த அமிழ்தத்தைச் சாக்கடையில் இட்டது போலாம்', 'சாக்கடையில் அமிர்தத்தை ஊற்றுவதற்குச் சமானமாகும்', 'சாக்கடையில் அமிழ்தத்தைக் கொட்டியதை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சாக்கடையில் பாலைக் கொட்டியது போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

தம்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவாராயின்.
மணக்குடவர் குறிப்புரை: கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்கு இஃது இகழப்படுவரென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: தம்முடைய இனமல்லாதார் முன் சொல்லுவாராயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்கு இஃது இகழப்படுவர் என்றது.
பரிதி: புல்லறிவாளர் முன் வித்தை செய்தல் என்றவாறு.
காலிங்கர்: யாது எனின் தம்மோடு சிறந்த நல்லறிவினரல்லார் கூட்டத்து முன்னர்த் தமது கல்வி வினோதம் கொண்டு ஒழுகல் என்றவாறு.
பரிமேலழகர்: நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க;
('கொள்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல்விகுதியோடு கூடி 'மகன் எனல்' (குறள் 196) என்பது போல் நின்றது. பிறரெல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார், அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருள் உவமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இவை இரண்டு பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண் ஒரு வழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது.

'தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க' என்று மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் இப்பகுதிக்குப் பொருள் கூறினர். 'புல்லறிவாளர் முன் வித்தை செய்தல்' என்பது பரிதியின் உரை. 'தம்மோடு சிறந்த நல்லறிவினரல்லார் கூட்டத்து முன்னர்த் தமது கல்வி வினோதம் கொண்டு ஒழுகல்' என்றார் காலிங்கர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னிலைக்குத் தகாதவர் கூட்டத்தில் பேசுவது', 'நல்லவர் தம் இனத்தவரல்லாத புல்லர்முன் சொற்பழிவாற்றுதல்', 'உயர்ந்த கல்வியறிவுள்ள கருத்துகளை அவற்றை அனுபவிக்கக்கூடிய கல்வியறிவில்லாதவர்கள் முன்னால் பேசுவது. ஆனதால் தம்முடைய இனமான கற்றறிந்தார் அல்லாதவர்கள் கூட்டத்தில் (அவற்றைப்) பேசக் கூடாது', 'தம் கருத்தோடொத்த கூட்டத்தார் அல்லாதார் முன்னிலையில் சொல்லுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம்முடன் ஒத்த உணர்வுடையவர் அல்லாத அவையுடன் கூடியிருந்து அங்கு பேசுதல் என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
தம்கணத்தர் அல்லார் அவையுடன் கூடியிருந்து அங்கு பேசுதல் சாக்கடையில் பாலைக் கொட்டியது போன்றது என்பது பாடலின் பொருள்.
'தம்கணத்தர் அல்லார்' யார்?

தொடர்பில்லாத அவையில் போய்ச் சொல்லுதலால் யாருக்கு என்ன பயன்?

தம்முடன் ஒத்த உணர்வுடையவர் அல்லாத அவையுடன் கூடியிருந்து அங்கு பேசுதல் சாக்கடையில் பாலைக் கொட்டியது போலாகும்.
அங்கணத்துள் உக்க அமிழ்தம் போன்றது தம் இனத்தவர் அல்லார் அவையில் கோட்டி கொளல் என்கிறது பாடல். அங்கணம் என்பது கழிவுநீர் செல்லும் வாய்க்கால் (சாக்கடை). அதற்குச் சேறு நிறைந்த இடம், தூய்மையில்லாத முற்றம் என்றும் பொருள் கூறுவர். சேறு முற்றம் சாக்கடை என அங்ஙணத்திற்கு மூன்று பொருளுண்டு. வீட்டுப்பயன்பாட்டில் உள்ள கலன்கள் (பாத்திரங்கள்) கழுவுகின்ற முற்றம் பொதுவாக அங்கணம் எனப்படுகிறது. சங்கப் பாடல்களில் அங்கணம் என்ற சொல் இல்லை. ஆனால் இச்சொல் இன்றும் குமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளது; அங்கணம் என்பதன் இனச்சொல் கன்னடம், துளு, தெலுங்கு ஆகிய மொழிகளில் காணப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. உக்க என்ற சொல் கொட்டிய எனப் பொருள்படும். அமிழ்து என்றதற்குப் பாலும் தேனும் முதலிய அமுதம் எனவும் அமிழ்தம் எனவும் பொருள் கூறுவர். தேவருலகத்திலுள்ளதாகக் கருதப்படும் விழுமிய பொருளான அமிர்தம் என்பதைவிட இக்குறளுக்குப்கு பால் என்ற பொருள் பொருந்தும். கோட்டி என்ற சொல்லுக்கு நேர்பொருள் கூட்டம் அதாவது அவை. இங்கு அதை ஆகுபெயராக அவையிற்பேசும் பேச்சு எனக் கொள்வர். கோட்டி கொளல் என்ற தொடர்க்குக் கூட்டத்தில் கலந்து பேசுதல் என்பது பொருள்.
தூய்மையற்ற கழிவுநீர் வாய்க்காலில் பாலைக் கொட்டினால் அது வாய்க்காலுக்கும் பயன்படாது; அமுதமும் வீணாய்விடும். அதுபோல, தம் இனத்தார் அல்லார் கூட்டத்தில் பேசுவதும் பயனின்றிப் போகும்.

'தம் இனத்தாரல்லாதார் அவையில் சொல்வது (அங்ஙணக் குழியில் அமுதத்தைக் கொட்டுவதை ஒக்கும்)' என்று மற்றவர்கள் கூற, பரிமேலழகர் மட்டும் '(அங்ஙணக் குழியில் அமுதத்தைக் கொட்டுவதை ஒப்பதால்) நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க' என்பதாக உரை வரைகிறார். முதல் உரை 'சொல்வது' என்றும் இரண்டாவது 'சொல்லற்க' எனவும் சொல்கின்றன. ஆயினும் இவை இரண்டும் கருத்தால் வேறுபட்டனவல்ல. பின் ஏன் பரிமேலழகர் 'கொளல்' என்ற சொல்லுக்குக் 'கொள்ளற்க' எனப் பொருள் கொண்டார்? உவமையில் தொழிலுக்குத் தொழிலும் பொருளுக்குப் பொருளுமாக வருதல் வேண்டும் எனச் சொல்லி பரிமேலழகர் தனக்கு முந்தையோர் கூறிய உரைகளில் இலக்கண முரண் உள்ளது என்று கூறி தனது உரையில் 'கொள்ளற்க' எனப் பொருள் அமைத்துக்கொண்டார்.
ஆனால் சாரங்கபாணி 'உவமிக்குங்கால் தொழிலுக்குத் தொழிலும் பொருளுக்குப் பொருளுமாக வருதல் வேண்டும் எனக்கூறும் பரிமேலழகரின் இலக்கணக் கோட்பாடு யாண்டும் பொருந்தி வரவில்லை. 'பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று' (1000) என்ற குறளில் உவமேயம் பொருளாகவும் உவமை தொழிலாகவும் இருக்கக் காண்கிறோம். இன்னோரன்ன குறள்கள் (1007, 1008) மேலும் சில உள. 'கூத்தாட்டவைக்குழாத் தற்றே, பெருஞ்செல்வம் போக்கும் அது விளிந்தற்று' (332) என்ற குறளில் விளிந்தற்று என்னும்தொழிலுக்கு அவைக்குழாம் என்பது பொருளுவமையாக வந்திருத்தல் காண்க. ஆதலின், 'கோட்டி கொளல்' என்பதைத் தொழிற்பெயராகக் கொண்டு கூறிய உரைகள் ஏற்கத்தக்கவையே' எனப் பரிமேலழகருக்கு முன்னோர் உரைகளில் இலக்கண மீறல் இல்லை என்று நிறுவுவார். தண்டபாணி தேசிகரும் எவ்வகையில் நோக்கினாலும் பரிமேலழகர் மறுப்புரை தேவையில்லை என்றே கருதுகிறார்.

'தம்கணத்தர் அல்லார்' யார்?

'தம்கணத்தர் அல்லார்' என்றதற்கு தம்முடைய இனத்தாரல்லாதார், தம்முடைய இனமல்லாதார், தம்மோடு சிறந்த நல்லறிவினரல்லார், நல்லார் தம்மினத்தரல்லாதார், தம் இனத்தவர் அல்லாதவர், தம் கூட்டத்தவர் அல்லாத புல்லர்கள், கொள்கையால், கோட்பாட்டால் தம்மினமில்லாதார், தன்னிலைக்குத் தகாதவர், தம் இனத்தவரல்லாத புல்லர், தம்முடைய இனமான கற்றறிந்தார் அல்லாதவர்கள், தம் தகுதியொடு பொருந்தி வராதவர், அறிவாலே தம் இனத்தவர் அல்லாதவர், தம் கருத்தோடொத்த கூட்டத்தார் அல்லாதார், அறிவால் தம் இனத்தவரல்லாதார், தம்மோடு ஒத்த அறிவில்லாதார் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தங்கணம் என்ற சொல் தம் + கணம் என விரிந்து தம்முடைய கூட்டம் என்ற பொருள் தரும். தம்கணத்தார் என்பது தம் கூட்டத்தார் எனப் பொருள்படும். தம்கணத்தார் அல்லார் என்றதற்கு தம் கூட்டத்தார் அல்லாதவர் என்பது பொருள். தம் கூட்டத்தார் என்பதற்கு தம் இனத்தவர், தம்மைப்போல அறிவுள்ள கூட்டத்தார், தமக்குச் சமமானவர்கள், சிந்தனையால், கொள்கையால், கோட்பாட்டால் ஒத்தவர்கள், தம் கருத்தோடொத்த கூட்டத்தார், தம்முடன் ஒத்த உணர்வுடையவர் என்ற பொருள்களும் ஏற்கும்.
கல்வியுடையார்க்கு கல்வியற்றோரும் நல்லறிவினர்க்கு அறிவற்றோரும் நல்லார்க்கு பொல்லாதவரும் 'தம்கணத்தர் அல்லர்'. தம் கொள்கைக்கு/ கருத்துக்கு வேறுபட்டோரும், தம்நிலைக்கு அல்லது தகுதிக்குத் தகாதவரும் 'தம்கணத்தர் அல்லர்'.
ஒரு கப்பல் பொறியாளர், அறுவை சிகிச்சை தொடர்பான மருத்துவர்கள் கூடியுள்ள அரங்கத்தில் பேசச்செல்வதும், ஒரு நிதிநிலை நிறுவன மேலாளர், தகவல் தொழில்நுட்பக் கலைஞர்கள் கூடியுள்ள கருத்தரங்கில் உரைநிகழ்த்துவதும் சமயக் கணக்கர், கடவுள் மறுப்பாளர் கூட்டத்தில் பேசுவதும் பயனின்றிப் போகும். தவறான அவைகளில் பேசுவது 'தம் கணத்தார் அல்லார் முன் கோட்டி கொளல்' எனக் குறிக்கப்பெற்றது.

தம்கணத்தர் அல்லார் என்பதற்கு தம் இனத்தவர் அல்லாதவர் என்று பொருள்.

தம்முடன் ஒத்த உணர்வுடையவர் அல்லாத அவையுடன் கூடியிருந்து அங்கு பேசுதல் சாக்கடையில் பாலைக் கொட்டியது போன்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவையறிதல் இன்றி சொல்லுதல் வீணாகப் போகும்.

பொழிப்பு

தம் இனமல்லாதார் கூட்டத்தில் பேசுவது கழிவுநீர்க் குழியில் அமுதைக் கொட்டியது போன்றது.