உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று
(அதிகாரம்:அவையறிதல்
குறள் எண்:718)
பொழிப்பு (மு வரதராசன்): தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.
|
மணக்குடவர் உரை:
யாதாயினும் ஒன்றைச் சொல்லுங்கால் அதனைத் தெரிந்தறியும் அறிவுடையார்முன்பு சொல்லுவது, வளர்வதொன்று நின்ற பாத்தியின்கண்ணே நீர் சொரிந்தாற்போலும்.
பரிமேலழகர் உரை:
உணர்வது உடையார்முன் சொல்லல் - பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினை உடையவர் அவைக்கண் கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று - தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும்.
(தானேயும் வளர்தற்குரிய கல்வி மிக வளரும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், ஒத்தார் அவைக்கண் எவ்வழியும் சொல்லுக என்பது கூறப்பட்டது.)
சி இலக்குவனார் உரை:
அறியும் ஆற்றல் உடையார் அவையில் சொல்லுதல் பயிர் வளர்கின்ற பாத்தியில் நீர் விட்டதைப் போன்றது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
பதவுரை: உணர்வது-அறிவது; உடையார்முன்-உடையார்கண்; சொல்லல்-சொல்லுதல்; வளர்வதன்-வளர்ந்து வருகின்றதனுடைய; பாத்தியுள்-பகுத்த நிலத்தில்; நீர்-நீர்; சொரிந்து-பெய்தால்; அற்று-போன்றது.
|
உணர்வது உடையார்முன் சொல்லல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதாயினும் ஒன்றைச் சொல்லுங்கால் அதனைத் தெரிந்தறியும் அறிவுடையார்முன்பு சொல்லுவது;
பரிப்பெருமாள்: யாதானும் ஒன்றைச் சொல்லுங்கால் அதனைத் தெரிந்துணரும் அறிவுடையார்முன்பு சொல்லுக;
பரிப்பெருமாள் குறிப்புரை: உணர்வது -அறிவது.
பரிதி: அறிவுடையார்முன் சொல்லும் கல்வி;
காலிங்கர்: ஒள்ளிய அறிவினை உடையோர் அவை முன்னர்த் தாமும் தமது ஒள்ளிய அறிவு புலப்படச் சொல்லுதல் எத்தன்மைத்தோ எனின்;
பரிமேலழகர்: பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினை உடையவர் அவைக்கண் கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்;
'தெரிந்துணரும் அறிவுடையார் அவைக்கண் சொல்லுவது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உணரும் தன்மை உடையார்முன் கூறுவது', 'தாமே உணர்ந்து கொள்ளக்கூடிய அறிவுடையார் அவை முன் கற்றார் பேசுதல்', 'உணர்ந்து அனுபவிக்கும் தன்மையுள்ளவர்களுக்கு முன்னால் பிரசங்கம் செய்வது', 'பொருள்களைத் தாமே அறிய வல்லாரிடத்து ஒன்றைத் தெளிவாகச் சொல்லுதல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
செய்தியை உடன் புரிந்துகொள்ளும் திறனுடைய கூட்டத்தின் முன்னர் சொல்லுதல் என்பது இப்பகுதியின் பொருள்.
வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வளர்வதொன்று நின்ற பாத்தியின்கண்ணே நீர் சொரிந்தாற்போலும்.
பரிப்பெருமாள்: அது வளர்வதொன்று நின்ற பாத்தியின்கண்ணே நீர் சொரிந்தாற்போலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல்சொல் அறிவார் முன் சொல்லுக என்றார்; அப்பொருள் அறிவார் முன்னர்ச் சொல்லுக என்பதூஉம், அச்சொல்லினாலே தம் கல்வி வளரும் என்பதூஉம் கூறிற்று.
பரிதி: பூந்தோட்டப் பாத்திக்குத் தண்ணீஈர் சொரிதலாம் என்றவாறு.
காலிங்கர்: தானே இனிது வளர்வது ஓர் பயிருக்குக் கட்டிய பாத்தியில் பருவக்குறை வாராமல் நீர் கோலிச் சொரிந்த அத்தன்மைத்து என்றவாறு. [பருவக்குறை -பருவமழை; கோலி சொரிந்த - கோலி நீர் சொரிந்த, பாத்திகட்டி நீர் பாய்ச்சிய]
பரிமேலழகர்: தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: தானேயும் வளர்தற்குரிய கல்வி மிக வளரும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், ஒத்தார் அவைக்கண் எவ்வழியும் சொல்லுக என்பது கூறப்பட்டது.
'வளர்வதொன்று நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வளரும் பாத்தியில் நீர்பாய்ச்சியது போலும்', 'பயிர் வளர்கின்ற பாத்தியில் நீர் பாய்ச்சியது போலாம். (கேட்பவர் கல்வியறிவு மிகும் என்பது கருத்து)', 'வளரும் பயிருள்ள பாத்திக்கு நீர் பாய்ச்சுவதைப் போன்றது', 'தானே வளர்கின்ற பயிரின் பாத்தியில் நீரை ஊற்றியது போலாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
வளர்கின்ற பயிரின் பாத்தியில் நீரை ஊற்றியது போல என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
செய்தியை உடன் புரிந்துகொள்ளும் திறனுடைய கூட்டத்தின் முன்னர் சொல்லுதல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந்தற்று என்பது பாடலின் பொருள்.
'வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந்தற்று' குறிப்பது என்ன?
|
சொல்வதை அறிந்து ஏற்றுக்கொள்ளும் கூட்டத்தில் பேசுவது உவகை உண்டாக்கும்.
பொருள்களை உடனறியும் திறனுடையார் முன்பு ஒன்றைச் சொல்லுதல் வளர்ந்துகொண்டுவரும் பயிருள்ள பாத்தியில் நீரினை ஊற்றியது போலாகும்.
பாத்தியில் பயிர் வளரும்போது அதில் நீர் நீர் சொரியச் சொரிய இன்னும் தழைத்து விரைவாக வளரும். அதுபோல் தான் சொல்வதை உடன் புரிந்து கொள்ளும் கூட்டத்தினரால் சொற்பொழிவாளன் ஊட்டம் பெறுவான் என்கிறது பாடல். கேட்போர் பொருளை உணர்ந்து கொண்டனர் என்பது ஒரு உந்து ஆற்றலாக அமைந்து அடுத்த முறை இன்னும் நன்றாகப் பேச முயற்சி எடுப்பான். அது அவனது அறிவையும் விரிவடையச் செய்யும்.
'உணர்வது உடையார்' என்பது சொல்லப்பட்டதை உடனே ஏற்பவர் குறித்தது. இவர் உணர்த்துவோர் ஒருவர் இல்லாமல் தானே உணரும் தன்மையராய் இருப்பர். அப்படி அவர்கள் உணர்ந்து கொண்டதை முகமலர்ச்சியாலும், மகிழ்ச்சிக் குரலாலும், கைதட்டும் ஒலியாலும் பேசுபவர் அறிந்துகொள்வர்.
மாணவர்களும் ஆசிரியர்களும் கூடும் வகுப்பறையையும் ஒரு அவையாகக் கொண்டு இப்பாடலை விளக்குவர்.
பரிப்பெருமாள் 'பொருள் அறிவார் முன்னர்ச் சொல்லுக என்பதூஉம், அச்சொல்லினாலே தம் கல்வி வளரும் என்பதூஉம் கூறிற்று' என இக்குறட்கு உரை தந்துள்ளார்.
|
'வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந்தற்று' குறிப்பது என்ன?
பிறர் விளக்கிச் சொல்லத் தேவையில்லாமல், தாமாகவே, சொல்லப்பட்ட பொருளை அறிந்துகொள்ளும் ஆற்றலை உடையோரைக் கொண்ட அவையிலே பேசுவது வளர்கின்ற பயிர் நடப்பட்டிருக்கும் பாத்தியிலே நீர் பெய்தது போன்றது என்கிறது பாடல். வளரும் பயிர் நீரால் மேலும் வளரும் என்பது உவமப் பொருள்.
வேளாண்மை செய்யும் நிலத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் பயிர் நடுவர். அந்தப் பகுதி பாத்தி எனப்படும். பயிர் வளர்ந்து வந்து கொண்டிருக்கும்போது பாத்தியுள் அவ்வப்பொழுது நீர் பாய்ச்சிப் பயிரைச் செழிக்கச் செய்வர். இந்த உவமையில் பாத்தி என்பது உணர்வதுஉடையார் அவையையும் அவைக்குச் சென்று சொல்பவன் பயிரையும் நீரூற்றுவது என்பது உரைக்கப்படுவதற்குப் பேச்சைக் கேட்கும் அவையினர் தரும் வரவேற்பையும் குறிக்கும்.
|
செய்தியை உடன் புரிந்துகொள்ளும் திறனுடைய கூட்டத்தின் முன்னர் சொல்லுதல் வளர்கின்ற பயிரின் பாத்தியில் நீரை ஊற்றியது போல என்பது இக்குறட்கருத்து.
உடன் உணர்வார் அவையறிதல் இன்பம் பயக்கும்.
பொருளை உணர்ந்துகொள்வோர் அவை முன் கூறுவது வளர்கின்ற பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சியது போலாம்.
|