இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0717கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து

(அதிகாரம்:அவையறிதல் குறள் எண்:717)

பொழிப்பு (மு வரதராசன்): குற்றமறச் சொற்களை ஆராய்வதில் வல்ல அறிஞரிடத்தில், பல நூல்களையும் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தோன்றும்.

மணக்குடவர் உரை: நூல்களைக்கற்று அதன்பயனும் அறிந்துள்ளாரது கல்வி விளங்காநிற்கும்; குற்றமறச் சொற்களைச் சொல்லவல்லார் முன்னர்ச் சொல்லின்.
இது கல்வியின் விழுப்பம் கற்றார்க்கல்லது பிறர்க்கு அறிதலரிதென்றது.

பரிமேலழகர் உரை: கசடு அறச் சொல் தெரிதல் வல்லாரகத்து - வழுப்படாமல் சொற்களை ஆராய்தல் வல்லார் அவைக்கண் சொல்லின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் - பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும்.
('சொல்லின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஆண்டே சொல்லுக என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: தெளிவாகச் சொற்பொருள் அறிவார் அவையில் கற்றவர்தம் கல்வி மேம்பாடு அடையும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து கற்றறிந்தார் கல்வி விளங்கும்.

பதவுரை: கற்று-படித்து; அறிந்தார்-பயனைத் தெரிந்தவரது; கல்வி-கற்றல்; விளங்கும்-விளங்கித் தோன்றும்; கசடு-வழு; அற-நீங்க; சொல்-சொற்கள்; தெரிதல்- அறிதல்; ஆராய்தல்; விளக்கமாதல்; வல்லார்-வல்லவர்; அகத்து-இடையில்.


கற்றறிந்தார் கல்வி விளங்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நூல்களைக்கற்று அதன்பயனும் அறிந்துள்ளாரது கல்வி விளங்காநிற்கும்;
பரிப்பெருமாள்: நூல்களைக்கற்று அவற்றின் பயனும் அறிந்தவர்களது கல்வி விளங்காநிற்கும்;
பரிதி: பலநூல் கற்ற அறிவுடையார் கல்வி பிரகாசிக்கும்;
காலிங்கர்: பல நூல்களையும் திருந்தக் கற்று அமைந்த அமைச்சரது கல்வியானது விளங்காநிற்கும்;
பரிமேலழகர்: பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும்.

'நூல்களைக்கற்று அதன்பயனும் அறிந்துள்ளாரது கல்வி விளங்காநிற்கும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பல நூல் கற்று அவற்றின் பயன் அறிந்தவரது கல்வி விளங்கித் தோன்றும்', 'பேசுகின்றவனுடைய கல்வியறிவின் பெருமை பிரகாசமடையும்', 'தம்மினும் மிகுதியாகப் படித்தவரிடமிருந்து மிகுதியாகத் தெரிய வேண்டியவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்', 'பல நூல்களையும் கற்று அறிந்தவரின் கல்வி விளக்கமுறும். (சிறப்படையும்.)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கற்று அறிந்தவரின் கல்விப்பயன் விளங்கித் தோன்றும் என்பது இப்பகுதியின் பொருள்.

கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றமறச் சொற்களைச் சொல்லவல்லார் முன்னர்ச் சொல்லின்.
மணக்குடவர் குறிப்புரை: இது கல்வியின் விழுப்பம் கற்றார்க்கல்லது பிறர்க்கு அறிதலரிதென்றது.
பரிப்பெருமாள்: குற்றமறச் சொல்லை ஆராய வல்லார் முன்னர்ச் சொல்லின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: கல்வியின் விழுப்பம் கற்றோர்க்கல்லது பிறர்க்கு அறிதலரிது. ஆகலான் அவர் முன்பு சொல்லுக; அதனானே அக்கல்வி விளங்கும் என்றது.
பரிதி: பழுதற்ற மந்திரியினிடத்து என்றவாறு.
காலிங்கர்: எவ்விடத்து எனின், தமது சொல்லினை ஒருகா(லும் ஒரு குற்றம் அற இனிது உணர வல்லாரிடத்து) என்றவாறு.
பரிமேலழகர்: வழுப்படாமல் சொற்களை ஆராய்தல் வல்லார் அவைக்கண் சொல்லின். [வழுப்படாமல்-குற்றப்படாமல்]
பரிமேலழகர் குறிப்புரை: 'சொல்லின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஆண்டே சொல்லுக என்பதாம். [அவாய்நிலை-வேண்டிநிற்கும் சொல்; ஆண்டே - அவ்விடத்தே]

'குற்றமறச் சொற்களைச் சொல்லவல்லார் முன்னர்ச் சொல்லின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குற்றமறச் சொற்களை ஆராய்தல் வல்லவர் கூடிய அவையகத்துப் பேசினால்', 'பிரசங்கம் செய்கிறவர்கள் குற்றமில்லாமல் பேசுகிறார்களா என்பதைத் தெரிந்து அனுபவிக்கக் கூடியவர்களுடைய சபையில் பேசினால்தான்', 'கல்வியிற் சிறந்தாரிடத்தே தாங் கற்றனவற்றை அவர் மனங்கொள்ளும்படி சொல்லி', 'குற்றம் நீங்கச் சொற்களை ஆராயும் வன்மையுடையார் அவையின்கண்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

குற்றமற சொற்பொருள் அறியும் வன்மையுடையார் அவையின்கண் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குற்றமற சொற்பொருள் அறியும் வன்மையுடையார் அவையின்கண் கற்றவரின் கல்விப்பயன் விளங்கித் தோன்றும் என்பது பாடலின் பொருள்.
'சொல்தெரிதல் வல்லார்' யார்?

அறிவு மிக்க அவையினரின் பேச்சைத் தெளியப்பெற்ற கற்றவர் விளங்கித் தோன்றுவர்.

குற்றம் நீங்க சொற்பொருள் அறியவல்ல அறிஞர்கள் குழுமியுள்ள அவையின்கண் கற்றவரது கல்விப் பயன் விளக்கமுறும்.
மிகக் கற்றவர் அவைக்குச் சென்று அவர்களுடன் ஊடாடி அவர்கள் பேச்சின் ஆழமும் பொருளும் அறிந்து தன்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டால் ஒருவர் கற்ற கல்வி விளங்கித் தோன்றும். கற்றுத் தேர்ந்தவர்கள் சொல்லறிவு உடையவர்களின் கூட்டத்தில் உரையாடுவது மிகவும் பயனளிக்க வல்லது. அவர்களது அவையில் கலந்து எண்ணினால் அவர்கள் பெற்ற கல்வியும் விளக்கம் பெறும். அது தாம் பெற்ற கல்வி அறிவோடு பேச்சுத் திறமையை மிகுவிக்கவும் உதவும்.

'சொல்தெரிதல் வல்லார்' யார்?

'சொல்தெரிதல் வல்லார்' என்றதற்கு சொற்களைச் சொல்லவல்லார், குற்றமறச் சொல்லை ஆராய வல்லார், மந்திரி, தமது சொல்லினை உணர வல்லார், சொற்களை ஆராய்தல் வல்லார் அவை, சொற்களை ஆராய்வதில் வல்ல அறிஞர், சொற்பொழிவின் திறத்தை ஆராய்ந்தறிய வல்லார் கூடிய அவை, சொற்பொருள் ஆராய்ந்தறியும் அவை, சொற்பொருள் அறிவார் அவை, சொற்களை ஆராய்தல் வல்லவர் கூடிய அவை, பேசுவதைத் தெரிந்து கொள்ள வல்லவர்கள், சொல்லாய்வாளர் உள்ள அவை, சொற்களை ஆராயும் வன்மையுடையார் அவை, சொற்களை ஆராய்வதில் வல்ல அறிஞர்கள் குழுமியுள்ள அவை, சொற்பொழிவுகளை ஆராய வல்ல அறிஞரவை, பேச்சின் திறனைக் குற்றமின்றி அறியவல்ல அறிஞர்களின் அவை என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

'யார் சொல்வதைத் தெரிதல் வல்லார் என்பதில் உரைகாரர்களிடை மாறுபாடு உண்டாகிறது. அறிஞரது அவைக்கண் சொல்லின், சொல்பவரது கல்வி விளங்கித் தோன்றும் என்பது மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் கருத்து. மற்றும் சிலர் அவையிலுள்ளோர் சொல்வதை அறிந்து கொள்ள வல்லார் என உரைத்தனர். இவ்விதம் அறிஞர் கூடிய அவையில் சொல்லச் சென்றவர் என்றும் கேட்கச் சென்றவர் என்றும் வேறுபடக் கூறினர். சொல் தெரிதலை அமைச்சர் குணமாக்கி, சொல்லை ஆராய்ந்து பேசும் வன்மையுடையாரிடத்துள்ள கல்வி சிறக்கும் என உரைகண்டவர்கள் பரிதியும் காலிங்கரும்.
கா சுப்பிரமணியம் பிள்ளை 'கல்வியிற் சிறந்தாரிடத்தே தாங் கற்றனவற்றை அவர் மனங்கொள்ளும்படி சொல்லித் தம்மினும் மிகுதியாகப் படித்தவரிடமிருந்து மிகுதியாகத் தெரிய வேண்டியவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.
சொல்தெரிதல் வல்லார் என்பது பேச்சுக்கலையில் வல்லவர் உள்ள அவையினரைக் குறிக்கிறது. அவரே சொல்வோர் பொருளை அறிந்து பாராட்டக்கூடியவர்.

குற்றமற சொற்பொருள் அறியும் வன்மையுடையார் அவையின்கண் கற்றவரின் கல்விப்பயன் விளங்கித் தோன்றும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவையறிதல் மொழிப்பயிற்சிக்கு உதவும்.

பொழிப்பு

தெளிவாகச் சொற்களை அறிவார் அவையின்கண் கற்றவர் கல்விப்பயன் விளங்கித் தோன்றும்