இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0715



நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு

(அதிகாரம்:அவையறிதல் குறள் எண்:715)

பொழிப்பு (மு வரதராசன்): அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும் நல்லது.

மணக்குடவர் உரை: நன்றென்று சொல்லப்பட்ட எல்லாவற்றுள்ளும் மிக நன்று, தம்மின் முதிர்ந்தார்முன் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம்.
முதுவர்- தவத்தாலும் குலத்தாலும் கல்வியாலும் பிற யாதாலும் முதிர்ந்தார். இஃது இருந்த அவையின்கண் முந்துற்றுச் சொல்லல் ஆகா தென்றது.

பரிமேலழகர் உரை: நன்று என்றவற்றுள்ளும் நன்றே - ஒருவற்கு இது நன்று என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நன்றே; முதுவருள் முந்து கிளவாச் செறிவு - தம்மின் மிக்கார் அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம்.
(தம் குறைவும், அவர் மிகுதியும், முந்து கிளர்ந்தாற் படும் இழுக்கும், கிளவாக்கால் எய்தும் நன்மையும் அறிந்தே அடங்கினமையின், அவ்வடக்கத்தினை 'நன்று என்றவற்றுள்ளும் நன்று' என்றார். முன் கிளத்தலையே விலக்கினமையின், உடன் கிளத்தலும் பின் கிளத்தலும்ஆம் என்பது பெற்றாம். இதனான் மிக்கார் அவைக்கண்செய்யும் திறம் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தம்மின் மிக்கார் அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம் நல்லது என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நல்லதே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முதுவருள் முந்து கிளவாச் செறிவு நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே.

பதவுரை: நன்று- நன்மையுடையது; என்றவற்றுள்ளும்-என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டவற்றுள்ளும்; நன்றே-நல்லதே; முதுவருள்-முதிர்ந்தார்(அவைக்)கண்; முந்து-முற்பட்டு; கிளவா-சொல்லாத; செறிவு-அடக்கம்.


நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நன்றென்று சொல்லப்பட்ட எல்லாவற்றுள்ளும் மிக நன்று;
பரிப்பெருமாள்: நன்றென்று சொல்லப்பட்ட எல்லாவற்றுள்ளும் மிக நன்று;
பரிதி: நன்மை என்றதற்குள் நன்மையாவது;
காலிங்கர்: இது நன்று என்று சான்றோர் தெரிந்து கைக்கொண்டவற்றுள் எல்லாம் சாலநன்றே;
பரிமேலழகர்: ஒருவற்கு இது நன்று என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நன்றே;

'நன்றென்று சொல்லப்பட்ட எல்லாவற்றுள்ளும் மிக நன்று' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிக நல்ல குணம்', 'நல்லது எனக் கூறப்பட்ட எல்லாவற்றுள்ளும் நல்லது', 'நல்ல குணங்களுக்குள்ளும் நல்ல குணம்', 'நல்லனவென்று சொல்லப்படு மவற்றுளெல்லாம் மிகச் சிறந்தது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நல்லது எனக் கூறப்படுவனவற்றுள்ளெல்லாம் மிக நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

முதுவருள் முந்து கிளவாச் செறிவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மின் முதிர்ந்தார்முன் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம்.
மணக்குடவர் குறிப்புரை: முதுவர்- தவத்தாலும் குலத்தாலும் கல்வியாலும் பிற யாதாலும் முதிர்ந்தார். இஃது இருந்த அவையின்கண் முந்துற்றுச் சொல்லல் ஆகா தென்றது.
பரிப்பெருமாள்: தம்மின் முதிர்ந்தார் முந்துற்றுச் சொல்லாத அடக்கம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: முதுவர்- தவத்தாலும் குலத்தாலும் முதிர்ந்தார். இஃது இருந்த அவையின்கண் முந்துற்றுச் சொல்லல் ஆகா தென்றது. இவை மூன்றும் ஆராய்ந்து சொல்லுமாறு கூறின.
பரிதி: ஆஸ்தானத்துக்கு நடுவேயிருந்து தன்சொல் மேற்படச் சொல்லுதல் என்றவாறு.
காலிங்கர்: யாது எனின், தம்மினும் முதிர்ந்த அறிவினை உடைய மூதறிவாளர் அவர் குறிப்பை அறிந்தன்றி தாம் ஒன்றினை முந்துற்றுச் சொல்லாமையாகி நின்ற அரணிப்பு என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அரணிப்பு ஆவது, நாவை மிகவும் ஒடுக்கிக் கொண்டிருத்தல் என்பது.
பரிமேலழகர்: தம்மின் மிக்கார் அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம்.
பரிமேலழகர் குறிப்புரை: தம் குறைவும், அவர் மிகுதியும், முந்து கிளர்ந்தாற் படும் இழுக்கும், கிளவாக்கால் எய்தும் நன்மையும் அறிந்தே அடங்கினமையின், அவ்வடக்கத்தினை 'நன்று என்றவற்றுள்ளும் நன்று' என்றார். முன் கிளத்தலையே விலக்கினமையின், உடன் கிளத்தலும் பின் கிளத்தலும்ஆம் என்பது பெற்றாம். இதனான் மிக்கார் அவைக்கண்செய்யும் திறம் கூறப்பட்டது.

'தம்மின் முதிர்ந்தார் அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிஞர் குழுவில் முந்திக்கொண்டு எதனையும் சொல்லாத அடக்கம்', 'அறிவில் முதிர்ந்தார் கூடிய அவையில் அவரினும் முற்பட்டு ஒன்றினைச் சொல்லாத அடக்கமுடைமை', 'தன்னைவிட (அறிவிலும் அனுபவத்திலும்) முதிர்ந்தவர்கள் நிறைந்திருக்கிற சபையில், அவர்கள் விரும்புவதற்கு முன் பேச முற்படாமலிருக்கிற அடக்கம்', 'தன்னில் சிறந்த அறிஞர் கூட்டத்தில் தான் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கமானது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

முதிர்ந்தார் கூடிய அவையில் தான் முற்பட்டு எதனையும் சொல்லாத அடக்கம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முதிர்ந்தார் கூடிய அவையில் தான் முற்பட்டு எதனையும் சொல்லாத அடக்கம் நல்லது எனக் கூறப்படுவனவற்றுள்ளெல்லாம் சிறந்தது என்பது பாடலின் பொருள்.
'முந்து கிளவாச் செறிவு' குறிப்பது என்ன?

முதிர்ந்தவர் முன்னே சொல்வதில் மிகை ஆர்வம் காட்டுதலைத் தவிர்க.

தம்மினும் அறிவு முதிர்ந்தவர்கள் குழுமியுள்ள அவைக்களத்தில் முந்திக்கொண்டு சென்று உரைக்காமல் இருக்கும் அடக்கம் நன்மை என்று சொல்லப்பட்ட எல்லாவற்றுள்ளும் மிகவும் நல்லது.
மூதறிஞர்கள் உள்ள ஒரு அவையில் பேசும் வாய்ப்புக் கிடைப்பது பெருமைக்குரியது. அந்தப் பெருமை தரும் மகிழ்ச்சியில் தாமே முந்திக்கொண்டு கருத்துக்களைக் கூற முற்படுவது நல்லதல்ல. எந்த அவையிலும் ஒழுங்குமுறை காப்பாற்றப்படவேண்டும். மூத்தோர் உள்ள அவையில் இன்னும் மிகையாக அடக்கம் காட்டப்படவேண்டும். முதுவர்கள் என்போர் கல்வி கேள்விகளால் முதிர்ந்தவர்கள் ஆவர். ஓர் அவையில் முதுவர்கள் இருந்தால், ஓர் செய்தி நமக்குத் தெரிந்திருந்தாலும் அவர்கள் கேட்கும்போது மட்டுமே சொல்ல வேண்டும். நம்மைவிட முதிர்ந்தவர் இருக்குமிடத்தே அடக்கமுடைமை பேணுதல் ஒரு நல்ல பழகுமுறையாகும், எல்லாம் தெரிந்தவர் போல் முற்பட்டுச் செல்லாமல் அடங்கியிருப்பது நன்மையான இயல்புகள் என்று கூறப்பட்டவைகளுள் மிக நல்ல இயல்பாகும் என்கிறார் வள்ளுவர்.

முந்திக்கொண்டு கூறுவது பண்பாடன்று என்பதாலும் பொறுமை காத்து உரைப்பதால் நன்மைகள் பல உண்டு என்பதாலும் அவ்வடக்கத்தினை 'நன்று என்றவற்றுள்ளும் நன்று' என்று சொல்லப்பட்டது.
சிறந்த பொருள்களில் மிகச்சிறந்த பொருள் இவை என்று கூறுவது பெருநோக்குக் கொண்டது. அவ்விதம் காட்டப்பட்ட பிற இடங்கள்:
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்(பெரியாரைத் துணைக்கோடல் 443 பொருள்: அருமையான செய்திகள் யாவற்றினும் அருமையானதே பெரியோரை விரும்பித் தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்),
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல் (பேதைமை 832 பொருள்: ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தைச் செலுத்துதலாகும்)

பலராக இருந்து அவையில் உரையாடும்போது மட்டுமல்ல நம்மைவிட வயதிலும் அறிவிலும் மிக்கவரிடம் நேரடியாகப் பேசும்போதும், அவர் சொன்னபின்பு நாம் சொல்லவந்ததைப் பேசுவது நல்லதோர் பழகுமுறையாம்.

'முந்து கிளவாச் செறிவு' குறிப்பது என்ன?

'முந்து கிளவாச் செறிவு' என்றதற்கு முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம், முந்துற்றுச் சொல்லாத அடக்கம், தன்சொல் மேற்படச் சொல்லுதல், முந்துற்றுச் சொல்லாமையாகி நின்ற அரணிப்பு (நாவை மிகவும் ஒடுக்கிக் கொண்டிருத்தல்), முந்திச் சென்று பேசாத அடக்கம், முந்திக்கொண்டு எதனையும் பேசாதிருக்கும் அடக்கமுடைமை, முந்தி ஒன்றைச் சொல்லாதிருக்கும் அடக்கம், முந்திக்கொண்டு எதனையும் சொல்லாத அடக்கம், முற்பட்டு ஒன்றினைச் சொல்லாத அடக்கமுடைமை, அவர்கள் விரும்புவதற்கு முன் பேச முற்படாமலிருக்கிற அடக்கம், முந்திக் கொண்டு பேசுதல் இல்லாத அடக்கம், முன்னதாக ஒன்றும் பேசாமல் நாவடக்கத்துடன் இருத்தல், முந்திக்கொண்டு கருத்துச் சொல்லாத அடக்கம், பேச்சின் திறனைக்காட்ட முற்படாது, அடக்கமாக இருத்தல் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

முந்து கிளவாச் செறிவு என்றதன் நேர்பொருள் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம் என்பது. செறிவறிந்து சீர்மை பயக்கும்.... (அடக்கமுடைமை 123) என்னும் பாடலில் செறிவு என்ற சொல் அடக்கம் என்ற பொருளில் ஆளப்பெற்றது.
பரிதி 'அவை நடுவேயிருந்து தன்சொல் மேற்படச் சொல்லுதல்' என்று தான் கூறவந்தது நன்கு அறியப்படவேண்டும் என்ற கருத்துப்பொருளாக இத்தொடர்க்கு உரை கூறுகிறார்.
தண்டபாணி தேசிகர் 'முதுவர் முற்பட்டுப் பேசின் அவர்கள் விரும்பும் கருத்து எது? அவர்கள் பேச்சாற்றல் எத்தகைத்து என்பன அறியப்பெற்று அதற்குத்தக தாம் பேச இயலும். ஆதலின், முந்து கிளவாச் செறிவு நன்மையாயிற்று. முதியோர் அவையில் அவர் பண்பாடறிந்த பின்பே பேசவேண்டும் என்பது' என விளக்குவார்.
அறிவுடைய மூத்தோர் அவையில் புதிதாகத் தெரிந்து கொள்ள நிறைய செய்திகள் இருக்கும். நாம் பேச முந்தாமல் முதுவோர் சொல்வதைக் கேட்க முற்படவேண்டும்.

'முந்து கிளவாச் செறிவு' என்றது ஒளியார் முன் ஒள்ளியனாகப் பேசத் தெரிந்திருந்தாலும் தன்னுடைய சொற்றிறனைக் காட்டிக் கொள்ள முற்படாமல் இருக்கும் அடக்கமுடைமை குறித்தது-

முதிர்ந்தார் கூடிய அவையில் தான் முற்பட்டு எதனையும் சொல்லாத அடக்கம் நல்லது எனக் கூறப்படுவனவற்றுள்ளெல்லாம் சிறந்தது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மூதறிஞர் உள்ள அவையில் அடக்கி வாசிக்கவேண்டும் என்னும் அவையறிதல் பாடல்.

பொழிப்பு

முதிர்ந்தார் உள்ள அவைக்கண் தாம் முற்பட்டு ஒன்றினைச் சொல்லாத அடக்கம் நல்லது எனக் கூறப்படுவதில் எல்லாம் நல்லது.