இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0713அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்

(அதிகாரம்:அவையறிதல் குறள் எண்:713)

பொழிப்பு (மு வரதராசன்): அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே; அவர் சொல்லவல்லதும் இல்லை.

மணக்குடவர் உரை: அவையினது அளவை அறியாது ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர், சொல்லின் வகையும் அறியார்; அவ்வாறன்றி வேறு வல்லதூஉம் இலராவார்.

பரிமேலழகர் உரை: அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகை அறியார் - அவையினது அளவையறியாது ஒன்று சொல்லுதலைத் தம் மேற்கொள்வார் அச்சொல்லுதலின் கூறுபாடும் அறியார்; வல்லதூஉம் இல் - கற்றுவல்ல கலையும் அவர்க்கு இல்லை.
(அம் மூவகைச் சொற்களால் வரும் சொல்லுதல் வகைமை, கேட்பாரது உணர்வு வகைமை பற்றி வருதலால், 'சொல்லின் வகையறியார்' என்றும், அஃது அறியார் என்று எல்லாரானும் இகழப்படுதலின் 'வல்லதூஉம்இல்' என்றும் கூறினார். இதனான் அவையறியாக்கால் வரும் குற்றம் கூறப்பட்டது.)

இரா இளங்குமரனார் உரை: அவையின் தன்மையை அறியாமல் சொல்லுதலை மேற்கொண்டவர் தாம் சொல்லுகின்ற சொல்லின் கூறுபாட்டினை அறியாதவர்; அவர் சொல்ல வல்ல பொருளும் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அவையறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகையறியார்; வல்லதூஉம் இல்.

பதவுரை: அவை-மன்றம்; அறியார்-தெரியமாட்டார்; சொல்லல்-சொல்லுதல்; மேற்கொள்பவர்-மேற்கொள்பவர்; சொல்லின்-சொல்லினது, பேச்சினது; வகை-கூறுபாடு; அறியார்-தெரியமாட்டார்; வல்லதூஉம்-திறமையுடையதும்; இல்-இல்லை.


அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவையினது அளவை அறியாது ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர், சொல்லின் வகையும் அறியார்;
பரிப்பெருமாள்: அவையினது அளவை அறியாது ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர், சொல்லின் வகையும் அறியார் ஆவார்;
பரிப்பெருமாள் குறிப்புரை: வகை-சில சொல்
பரிதி: ஆஸ்தானம் அறியாமல் தன்சொல் மேற்பட விசாரியாமல் பயனில் சொல் சொல்லுவான் சொல்லறியாதான் என்றவாறு.
காலிங்கர்: இவ்வாறு அவையினது மரபினை அறிந்து ஆராயாது வறிதே சொல்லுதலை ஒருப்பட்டு நடாத்துவார் யாவர் மற்று அவர் சொல்லின் தகுதியும் மற்று அல்லதும் ஆகிய கூறுபாட்டினையும் அறியார்;
பரிமேலழகர்: அவையினது அளவையறியாது ஒன்று சொல்லுதலைத் தம் மேற்கொள்வார் அச்சொல்லுதலின் கூறுபாடும் அறியார்;

'அவையினது அளவையறியாது ஒன்று சொல்லுதலைத் தம் மேற்கொள்வார் அச்சொல்லுதலின் கூறுபாடும் அறியார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூட்டம் அறியாது பேச முற்படுபவர் பேச்சு வகையறியார்', 'கூட்டத்தின் நிலையறியாதவராய்ப் பேச முற்படுபவர் பேசும் முறைமை அறியாதவராவர்', 'சபையை அறிந்து கொள்ளாமல் பிரசங்கம் செய்கிறவர்கள் பேசத் தெரிந்தவர்களும் அல்ல', 'அவையினது நிலையினை அறியாமல் சொல்லுதலைத் தொடங்குகின்றவர் சொல்லின் கூறுபாடும் அறியார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அவையின் தன்மையையறியாதவராய்ப் பேச முற்படுபவர் பேசும் முறைமை அறியாதவராவர் என்பது இப்பகுதியின் பொருள்.

வல்லதூஉம் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வாறன்றி வேறு வல்லதூஉம் இலராவார்.
பரிப்பெருமாள்: அன்றி வேறு வல்லதூஉம் இலராவார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறரான் மதிக்கப்படார் என்றது.
பரிதி: ..
காலிங்கர்: மற்று யாதானும் தாம் வல்லதும் இல்லையாய் விடும்; சொல்லின்கண் சோர்வுபடுதலான் என்றவாறு.
பரிமேலழகர்: கற்றுவல்ல கலையும் அவர்க்கு இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: அம் மூவகைச் சொற்களால் வரும் சொல்லுதல் வகைமை, கேட்பாரது உணர்வு வகைமை பற்றி வருதலால், 'சொல்லின் வகையறியார்' என்றும், இஃது அறியார் யாதும் அறியார் என்று எல்லாரானும் இகழப்படுதலின் 'வல்லதூஉம்இல்' என்றும் கூறினார். இதனான் அவையறியாக்கால் வரும் குற்றம் கூறப்பட்டது.

வேறு வல்லதூஉம் இலராவார்/ கற்றுவல்ல கலையும் அவர்க்கு இல்லை என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வல்லமையும் இல்லார்', 'மேலும், அவருக்குத் திறமையும் இல்லை', 'அது ஒரு சாமார்த்தியமும் அல்ல', 'அதில் வன்மையுடையவரும் அல்லர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வன்மையுடையவரும் அல்லர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அவையின் தன்மையையறியாதவராய்ப் பேச முற்படுபவர் பேசும் முறைமை அறியாதவராவர்; சொல்வன்மையுடையவரும் அல்லர் என்பது பாடலின் பொருள்.
'சொல்லின் வகையறியார்' என்ற தொடர் குறிப்பது என்ன?

அவையிலுள்ளோரின் பரும அளவு அறியமாட்டாதவர் பேசத் தெரியாதவராக இருப்பார்.

அவையினரின் கன அளவு தெரியாமல் பேச்சை மேற்கொள்பவர் சொல்லின் கூறுபாடும் அறியார்; பேச்சு வன்மையும் இல்லாதவராயிருப்பார்.
ஒருவர் அவையின் நிலையறியாது பேசுவாராயின் அவர் பேச்சுவகையறியும் திறனும் சொல்வன்மையும் இல்லாதவர் எனப் புரிந்துகொள்ளலாம். அவையறிந்து பேசத் துணிய வேண்டும். ஒருவர் தாம் பேசும் அவையின் இயல்பும் நோக்கமும் உணராமல் இருந்தால் அவர் அவைஅறியாதவர் என அறியப்படுவார். அவையின் அளவை அறிதல் என்பது அவையில் உள்ளவர்களது நோக்கம், மனநிலை இவற்றை அறிதல் குறித்தது.
அவையறியாது பேசத்துணிபவர் சொல்வகையறியார் அதாவது பேச்சின் வகை அறியமாட்டாதவர் என்கிறார் வள்ளுவர். சொல்லின் வகையறியாதார் என்பது சொல்லின் அல்லது பேச்சின் பயன்பாட்டை உணர்ந்து பேசாதவர் எனப் பொருள்படும்.
மேலும் அவையறியாதார்க்குப் பேசும் திறனும் இல்லை என்ற பொரும்படும்படி 'வல்லதூஉம் இல்' எனவும் சொல்லப்பட்டது.
அவையின் தன்மை அறியாது பேசுபவருக்கு, பேச்சு வகையும் தெரியாது, சொல்லும் திறமையும் கிடையாது.

தாம் இன்ன அவையில், இன்னார் முன்னிலையில் இவ்வாறு பேசவேண்டும் என்னும் அவையொழுக்கு இல்லாது, பேசுதலைச் செய்பவர், தாம் சொல்லும் சொற்கள் இன்ன வகையின என்னும் பாகுபாடுகளை உணராதவர், தவிர சொற்களைப்பயன்படுத்தும் திறமும் இல்லாதவர். ஒரு அவையில் பேசப்புகுவோர் சொல்லுதலின் முறைமை அறிந்து சொல் வன்மையும் கொண்டவராக இருக்க வேண்டும் என்பது இக்குறள் கூறும் செய்தி.

'சொல்லின் வகையறியார்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'சொல்லின் வகையறியார்' என்றதற்குப் பயனில் சொல் சொல்லுவான், சொல்லின் தகுதியும் மற்று அல்லதும் ஆகிய கூறுபாட்டினையும் அறியார், சொல்லுதலின் கூறுபாடும் அறியார், சொற்களின் வகை அறியாதவர், பேச்சின் முறைமையை அறியாதவர், பேச்சு வகையறியார், பேசும் விதத்தை அறியாதவர், சொல்லின் கூறுபாட்டினை அறியாதவர், சொல்லின் கூறுபாடு அறியாதவர், சொல்லின் கூறுபாடு அறியார், சொல்லுதலின் கூறுபாட்டை அறியாதவர், சொல்லின் திறமையை அறியாதவர் என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

‘சொல்லின் வகை’ என்பதற்குச் சொல்லின் கூறுபாடு எனவும் பேசும் முறைமை என்றும் பொருள் கூறினர். பரிமேலழகர் ‘சொல்லின் வகை’ என்பதற்குச் சொல்லின் கூறுபாடு எனக்கொள்வார், அதனைச் செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச்சொல், என்னும் மூவகைச் சொற்களால் வரும் சொல்லுதல் வகைமை என விளக்குவார். மு கோவிந்தசாமி நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சாந்தம் என்னும் ஒன்பது சுவைபட உண்டாக்கும் சொற்களின் வகை எனக் கூறுவார். திரிசொல், இயற்சொல், பிறசொல், திசைச் சொற்களின் வகையுமாம் எனவும் உரைப்பார். அவையின் போக்குக்கு ஏற்ப சுவைகள் மாறியமையப் பேசுதலைக் சொல்கிறார் இவர்.
'சொல்லின் வகை'யாவது, "உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளச்" சொல்லுதல்' என்பது தேவநேயப்பாவாணர் தரும் விளக்கம்.

'சொல்லின் வகையறியார்' என்ற தொடர்க்கு பேசும் முறைமை அறியாதவர் என்பது பொருள்.

அவையின் தன்மையையறியாதவராய்ப் பேச முற்படுபவர் பேசும் முறைமை அறியாதவராவர்; வன்மையுடையவரும் அல்லர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவையறிதல் இல்லாதாரது அதாவது அவையறியாதவரது இயல்புகள் கூறுவது.

பொழிப்பு

அவையின் தன்மையறியாதவராய்ப் பேச முற்படுபவர் பேசும் முறைமை அறியாதவராவர்; அவர் சொல்லுதல் வன்மையும் இல்லாதவராவர்