இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0712இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்

(அதிகாரம்:அவையறிதல் குறள் எண்:712)

பொழிப்பு (மு வரதராசன்): சொற்களின் நடையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.

மணக்குடவர் உரை: சொன்னால் அதற்கு வருங்குற்றத்தை ஆராய்ந்து நன்மையாமவற்றை யறிந்து சொல்லுக: சொல்லினது வழக்காராய்ந்த நன்மையுடையார்.
இஃது ஆராய்ந்து சொல்லுமாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை: சொல்லின் நடை தெரிந்த நன்மையவர் - சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையினையுடையார்; இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக - அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அதன் செவ்வியை ஆராய்ந்து அறிந்து வழுப்படாமல் மிகவும் தெளிந்து சொல்லுக.
(சொற்களின் நடையாவது: அம்மூவகைச் சொல்லும் செம்பொருள், இலக்கணப்பொருள், குறிப்புப் பொருள் என்னும் பொருள்களைப் பயக்குமாறு. செவ்வி: கேட்டற்கண் விருப்புடைமை. வழு: சொல் வழுவும் பொருள் வழுவும். (இவை இரண்டு பாட்டானும் ஒன்று சொல்லுங்கால் அவையறிந்தே சொல்ல வேண்டும் என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: சொல்லின் நடையறிந்தவர் இடையிடையே கூட்டத்தின் போக்கை விளங்கிச் சொல்லுக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சொல்லின்நடை தெரிந்த நன்மையவர் இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக.

பதவுரை: இடை-செவ்வியை, கேட்டற்கண் விருப்புடைமையை; தெரிந்து-அறிந்து; நன்கு-நன்றாக; உணர்ந்து-தெரிந்து; சொல்லுக-சொல்வாராக; சொல்லின்-சொல்லினது; நடை-(சொல் பொருளைப் பயக்கும்) நடை; தெரிந்த-ஆராய்ந்த; நன்மையவர்-நலம் சொல்பவர்.


இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொன்னால் அதற்கு வருங்குற்றத்தை ஆராய்ந்து நன்மையாமவற்றை யறிந்து சொல்லுக;
பரிப்பெருமாள்: சொன்னால் அதற்கு வருங்குற்றத்தை ஆராய்ந்து நன்மை ஆம் அவற்றை அறிந்து சொல்லுக;
பரிதி: சொல்லின் இடையூறும் நன்மையும் அறிந்து சொல்லுக;
காலிங்கர்: எய்தியிருந்த அவையிடம் அறிந்தும், பெரிதும் நன்மையைக் குறிக்கொள்வது அறிந்தும், பின் ஒன்று சொல்லுக;
பரிமேலழகர்: அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அதன் செவ்வியை ஆராய்ந்து அறிந்து வழுப்படாமல் மிகவும் தெளிந்து சொல்லுக.
பரிமேலழகர் குறிப்புரை: செவ்வி: கேட்டற்கண் விருப்புடைமை. வழு: சொல் வழுவும் பொருள் வழுவும்.

'வருங்குற்றத்தை ஆராய்ந்து நன்மையாமவற்றை யறிந்து/ சொல்லின் இடையூறும் நன்மையும் அறிந்து/ அவையிடம் அறிந்தும்/ பெரிதும் நன்மையைக் குறிக்கொள்வது அறிந்தும்/ செவ்வியை ஆராய்ந்து அறிந்து வழுப்படாமல் மிகவும் தெளிந்து சொல்லுக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூட்டத்தின் செவ்வியை ஆராய்ந்து தெளிவாக அறிந்து பேசுக', 'பேச்சின் இடையிடையே சபையோரின் உற்சாகத்தை அறிந்து கொண்டு அதற்குத் தக்கபடி நன்றாக உணர்ந்து பேச வேண்டும்', 'ஒன்றைச் சொல்லுமிடத்து இடமறிந்து, சொல்லுவதை வழுவறத் தெரிந்து சொல்லவேண்டும்', 'அவையின் நிலையை அறிந்து வழுப்படாமல் மிகவும் தெளிந்து சொல்லுக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கூட்டத்தின் செவ்வி அறிந்து நன்றாய் உணர்ந்து சொல்லுக என்பது இப்பகுதியின் பொருள்.

சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொல்லினது வழக்காராய்ந்த நன்மையுடையார்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஆராய்ந்து சொல்லுமாறு கூறிற்று.
பரிப்பெருமாள்: சொல்லினது வழக்கு ஆராய்ந்த நன்மை உடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஆராய்ந்து சொல்லுமாறு கூறிற்று.
பரிதி: சொல்லும் சாதுரியம் அறிந்த மந்திரி என்றவாறு. [சாதுரியம் - வன்மை]
காலிங்கர்: யார் எனின், சொல் ஒழுங்கினை நூன் முறையான் அறிந்து நன்மையினை உடையவர் என்றவாறு,
பரிமேலழகர்: சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையினையுடையார்.
பரிமேலழகர் குறிப்புரை: சொற்களின் நடையாவது: அம்மூவகைச் சொல்லும் செம்பொருள், இலக்கணப்பொருள், குறிப்புப் பொருள் என்னும் பொருள்களைப் பயக்குமாறு. (இவை இரண்டு பாட்டானும் ஒன்று சொல்லுங்கால் அவையறிந்தே சொல்ல வேண்டும் என்பது கூறப்பட்டது.)

சொல்லினது வழக்காராய்ந்த/ சாதுரியம் அறிந்த /சொல் ஒழுங்கினை அறிந்த / சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையுடையார் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சொல்லின் வழக்கறிந்த நல்லவர்', 'பிரசங்கத்தைக் கொண்டு செலுத்தத் தெரிந்தவர்கள் தம்முடைய பேச்சினால் நல்ல பலன் உண்டாக வேண்டுமென்று விரும்பினால்', 'வெளிப்படை குறிப்பு முதலிய சொற்களின் போக்கினை அறிந்த நல்லறிவாளர்', 'சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையினை உடையார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பேச்சு நடையினைத் தெரிந்த நன்மை உடையார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பேச்சு நடையினை அறிந்த நன்மை உடையார் கூட்டத்தின் இடைதெரிந்து நன்றாய் உணர்ந்து சொல்லுக என்பது பாடலின் பொருள்.
'இடைதெரிந்து' என்றால் என்ன?

அவையினர்க்கு அயர்ச்சி உண்டாகாமல் நல்லவற்றைப் பேசுக.

சொற்களின் ஒழுங்கினை ஆராய்ந்து அறிந்த நன்மையினை உடையவர், சொற்பொழிவை விருப்புடன் ஏற்றுக்கொள்கின்றனரா என்று இடையிடை அறிந்து சொற்பொழியவேண்டும்.
ஒருவர் அவையில் பேசிக்கொண்டிருக்கிறார். கேட்போர்க்கு சில இடங்களில் சொல்லப்பட்ட பொருள்களில் ஐயம் உண்டாகி, புரிபடாமல், பேச்சில் தொடர்ந்து ஈடுபாடு குறைந்து விடலாம். பொழிவைக் கேட்கும்போதே கூட்டத்தினர்க்கு என்னென்ன ஐயம் எழக்கூடும் என்பனவற்றை உணரக்கூடியவர்களாகச் சொல்பவர் இருக்கவேண்டும். கூட்டத்தினர் மனநிலையை அவ்வப்போது உணர்ந்து அதற்கேற்ப சொல்நடையை மாற்றி மேற்செல்ல வேண்டும். இதை 'இடைதெரிந்து' எனக் குறள் சொல்கிறது. 'அவையின் செவ்வியறிந்து' என்பதும் இதுவே.
'நன்குணர்ந்து' என்பது என்ன பேசப் போகிறோம் என்பதில் நன்றாய்த் தெளிவுடையராய் இருப்பது குறித்தது.
சொல்லின் நடை என்பது சொற்களின் ஒழுங்கு எனப்பொருள்படும். இன்ன சொல் இன்ன இடத்திற்கு ஏற்ற சொல் என்பதை அளந்தறிந்து, சொற்குற்றம், பொருட்குற்றம் இல்லாமல், வழுவின்றி, சொல்லின் நயம் புலப்படுமாறு பேசுவதைக் குறிப்பது சொல்நடை. சொல்லின் நடை தெரிந்தவர் சுவைவிளையச் சொற்களையடுக்கிப் பேசுவர். மொழிப்பயிற்சியுடையாரின் பேச்சுநடை கேட்போர்க்கு ஆர்வமூட்டுவதாக அமைந்திருக்கும்.
எந்த நோக்கத்தோடு தம்மைப் பேசச் சொன்னார்கள் என்றறிந்து, அவையினர் எதிர்பார்க்கும் பொருளை நன்குணர்ந்து பேசுவதுவே சொல்நடை தெரிந்தவர்க்கு அழகு.

'இடைதெரிந்து' என்றால் என்ன?

'இடைதெரிந்து' என்ற தொடர்க்கு வருங்குற்றத்தை ஆராய்ந்து, சொல்லின் இடையூறு அறிந்து, எய்தியிருந்த அவையிடம் அறிந்து, செவ்வியை ஆராய்ந்து, அவையின் செவ்வியை ஆராய்ந்து, சொல்பவருக்கும் சொல்லப்படுபவருக்கும் இடைவெளி குறைவாக இருந்தால் இருவருக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கக் கூடிய சொற்களாகத் தெரிந்து, இடையிடையே கூட்டத்தின் போக்கை விளங்கி, கூட்டத்தின் செவ்வியை ஆராய்ந்து, பேச்சின் இடையிடையே சபையோரின் உற்சாகத்தை அறிந்து கொண்டு, அவையின் தகுதி தெரிந்து, இடமறிந்து, அவையின் நிலையை அறிந்து, சபையின் தன்மையினை எண்ணிப் பார்த்து, அவையிற் பேசுஞ் சமையத்தை நோக்கி என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

'இடைதெரிந்து' என்றதற்குச் சொற்குற்றங்கள் தடைப்படுத்தலில்லாததை அறிந்து எனவும் செவ்வியறிந்து அதாவது இடம், காலம் அறிந்து எனவும் பொருள் கூறுவர். 'இடைதெரிந்து' என்பதற்கு வருங்குற்றத்தை ஆராய்ந்து என்னும் உரை இடையூறு என்பதன் கடைக்குறையாகக் கருதப்பட்டது. பேச்சு இடையூறின்றி சீரான ஒழுங்குநடையில் அமைந்து கேட்போரை அயர்வுறாமல் செய்வது பற்றியது. 'இடையிடையே கூட்டத்தின் போக்கை விளங்கிச் சொல்லுக' என்பார் வ சுப மாணிக்கம். 'இடைதெரிதலாவது ஊண் வேளையும் உறக்க வேளையும் நீண்டநேரம் கேட்டுச் சலித்தவேளையும் வேறோர் இடத்திற்குச் செல்லும்வேளையும் அறிதலாம்' என்பது தேவநேயப்பாவாணர் விளக்கவுரை. ,
செவ்வியறிந்து என்பது, கேட்போர் உரையைக் கேட்க எந்த அளவு விருப்பமுள்ளவராக இருக்கிறார்கள் என்பதை உய்த்து உணர்வதைக் குறிப்பதாகும். நல்ல கருத்துடைய சொற்பொழிவாக இருந்தாலும் நீண்ட உரையை விரும்பாத கூட்டத்தினர் உள்ள அவையாக இருக்கலாம்; நமக்கு முன்னோ பின்னோ பேசப்போகிறவர் சொல்லைக் கேட்பதற்காகவோ அல்லது பின்னர் அரங்கேறப்போகும் நிகழ்ச்சியைக் காண்பதற்காக வந்திருக்கலாம். இவை போன்றவற்றை உணர்ந்து கொள்வதும் செவ்வி அறிதலாம். எனவே இடைதெரிந்தவர் பேசும் பொழுதே அவையிலுள்ளோர் எவ்வாறு தம் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு தம்முடைய கருத்தைச் சொல்வர்.

'இடைதெரிந்து' என்பதற்கு சொல்வோர்க்கும் அவைக்கும் இடைநிற்கும் இடைவெளியை உணர்ந்து என்பது பொருளாகலாம்.

பேச்சு நடையினை அறிந்த நன்மை உடையார் கூட்டத்தின் செவ்வி அறிந்து நன்மையாய் உள்ளவற்றை உணர்ந்து சொல்லுக என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கேட்க விருப்பமுடைய அவையறிதல் நன்மை பயக்கும்.

பொழிப்பு

சொல்லின் நடையறிந்தவர் குற்றங்கள் தடைப்படுத்தாதவாறு நன்றாக உணர்ந்து விளங்கச் சொல்லுக