அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
(அதிகாரம்:அவையறிதல்
குறள் எண்:711)
பொழிப்பு (மு வரதராசன்): சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
|
மணக்குடவர் உரை:
இருந்த அவை யறிந்தாரை யறிந்து அதற்குத்தக்க சொல்லின் திறத்தை ஆராய்ந்து சொல்லுக: சொல்லின் தொகுதியை அறிந்த தூய்மையையுடையவர்.
தொகையறிதல்- திறனறிதல். இது அவையறிந்து சொல்லல் வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் குழுவினை அறிந்த தூய்மையினையுடையார்; அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக - தாமொன்று சொல்லுங்கால் அப்பொழுதை அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுக.
(சொல்லின் குழுவெனவே, செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச் சொல் என்னும் மூவகைச் சொல்லும் அடங்கின. தூய்மை: அவற்றுள் தமக்காகாதன ஒழித்து ஆவன கோடல். அவை என்றது ஈண்டு அதன் அளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வு என மூவகைத்து. அறிதல். தம்மொடு தூக்கி அறிதல். ஆராய்தல்: இவ்வவைக்கண் சொல்லும் காரியம் இது, சொல்லுமாறு இது, சொன்னால் அதன் முடிவு இது என்று, இவை உள்ளிட்டன ஆராய்தல்.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
சொற்களைத் தொகுத்துரைப்பதின் பயனை அறிந்த தெளிவுடையவர்கள் கழகத்தின் நிலையைத் தெரிந்து அதற்கு ஏற்றவாறு ஆராய்ந்து பேச வேண்டும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக.
பதவுரை: அவை-மன்றம், கழகம்; அறிந்து-தெரிந்து; ஆராய்ந்து-பொருந்த நாடியறிந்து; சொல்லுக-சொல்வாராக; சொல்லின் தொகை-சொற்களின் வகைகள் பலவற்றையும் குறிப்பது, சொற்களின் வகைகள். அதாவது செஞ்சொல். இலக்கணைச் சொல், குறிப்புச் சொல் முதலியன பலவும், அடங்கிய சொற்குழு; அறிந்த-தெரிந்த; தூய்மையவர்-தெளிவினையுடையவர்கள்.
|
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இருந்த அவை யறிந்தாரை யறிந்து அதற்குத்தக்க சொல்லின் திறத்தை ஆராய்ந்து சொல்லுக;
பரிப்பெருமாள்: இருந்த அவையத்தாரை யறிந்து அதற்குத்தக்க சொல்லும் திறனை ஆராய்ந்து சொல்லுக;
பரிதி: ஆஸ்தானம் அறிந்து பிழைவாராத சொல்லைச் சொல்லுக;
காலிங்கர்: அரசர்மாட்டு இருக்கும் அவையினது மரபினை அறிந்து அவ்விடத்தில் சொல்லுதற்குத் தகுவனவற்றை ஆராய்ந்து பார்த்துச் சொல்லுக;
பரிமேலழகர்: தாமொன்று சொல்லுங்கால் அப்பொழுதை அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுக. [அப்பொழுதை-அச்சமயத்து
பரிமேலழகர் குறிப்புரை: அவை என்றது ஈண்டு அதன் அளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வு என மூவகைத்து. அறிதல். தம்மொடு தூக்கி அறிதல். ஆராய்தல்: இவ்வவைக்கண் சொல்லும் காரியம் இது, சொல்லுமாறு இது, சொன்னால் அதன் முடிவு இது என்று, இவை உள்ளிட்டன ஆராய்தல். [அது-அவையின் அளவு; தூக்கியறிதல்- ஆராய்ந்தறிதல்]
'அப்பொழுதை அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கூட்டத்தின் நிலையறிந்து ஆராய்ந்து பேசுக', 'தாம் பேசும் கூட்டத்தின் நிலையறிந்து ஆராய்ந்து பேசுக', 'சபையை அறிந்து கொண்டு (அதற்கேற்ற) ஆலோசனையோடு பேச வேண்டும்', 'தாம் ஒன்றைச் சொல்லுங்கால் அப்பொழுதைய அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அவையின் நிலையைத் தெரிந்து ஆராய்ந்து பேசுக என்பது இப்பகுதியின் பொருள்.
சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொல்லின் தொகுதியை அறிந்த தூய்மையையுடையவர்.
மணக்குடவர் குறிப்புரை: தொகையறிதல்- திறனறிதல். இது அவையறிந்து சொல்லல் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: சொல்லின் தொகையை அறிந்த தூய்மையையுடையவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தொகையறிதல்- திறனறிதல். இஃது ஆராய்ந்து சொல்லுமாறு கூறிற்று.
பரிதி: சொல்லறிந்தபேர் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின் (சொல்லினது தகுதி)க் குறையில்லாத் தொகுதிப்பாட்டினை அறிந்த தூய்மையினை உடைய அமைச்சர் என்றவாறு. [தகுதி குறையில்லாத் தொகுதி-அவையல் கிளவி, அவையில் சொல்ல வேண்டாத மறைச்சொற்கள்.]
பரிமேலழகர்: சொல்லின் குழுவினை அறிந்த தூய்மையினையுடையார்.
பரிமேலழகர் குறிப்புரை: சொல்லின் குழுவெனவே, செஞ்சொல், இலக்கணைச் சொல், குறிப்புச் சொல் என்னும் மூவகைச் சொல்லும் அடங்கின. தூய்மை: அவற்றுள் தமக்கு ஆகாதன ஒழித்து ஆவன கோடல். [செஞ்சொல் -நேராகப் பொருளைக் குறிக்கும் சொல்; இலக்கணைச் சொல்- உரிய பொருளைவிட்டு அப்பொருளோடு தொடர்புடைய பிறிதொரு பொருளை உணர்த்துவது. ஊர் என்பது ஊர்மக்களைக் குறிப்பது போன்றது; குறிப்புச் சொல் - வெளிப்படையாகக் கூறாது குறிப்பினால் பொருளுணர்த்துவது]
சொல்லின் திறனறிந்த/சொல்லறிந்த/சொல்லினது தகுதிக் குறையில்லாத் தொகுதிப்பாட்டினை உடைய) தூய்மையுடையவர் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சொற்பொழிவின் விளைவை அறிந்த நல்லவர்', 'சொற்களைத் தொகுத்துக் கூறுவதன் பயனறிந்த நல்லோர்', 'சொற்களை அடுக்கிப் பிரங்கம் செய்யத் தெரிந்தவர்கள் தாம் பேசுவது குற்றமில்லாமல் இருக்க விரும்பினால்', 'சொல்லின் கூறுபாடுகளை அறிந்த தூய்மையினை உடையார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
சொற்களைத் தொகுத்துக் கூறுவதன் பயனை அறிந்த தெளிவுடையவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
சொல்லின் தொகை அறிந்த தெளிவுடையவர்கள் அவையின் நிலையைத் தெரிந்து ஆராய்ந்து பேசுக என்பது பாடலின் பொருள்.
'சொல்லின் தொகை' என்ற தொடரின் பொருள் என்ன?
|
பேச்சில் தெளிவுடையவரும் அவையின் தன்மையை அறிந்துகொண்டுதான் உரைக்கவேண்டும்.
சொற்களின் வகைகள் பலவும் அறிந்த தெளிவுடையவர் அவையின் நிலையை அறிந்து அவ்விடம் சொல்லத் தகுவனவற்றை ஆராய்ந்து பார்த்துச் சொல்லுதல் வேண்டும்.
அவையறிந்து என்ற தொடர் அவையின் நிலையறிந்து எனப்பொருள்படும். அவையின் நிலை என்பது கூட்டத்தின் நோக்கம், பேசப்படும் பொருள் சென்றடைபவரது (target audience) தன்மை, உணர்வுகள், பழக்கங்கள், சூழல் போன்றவற்றைக் குறிக்கும். இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டுதான் ஒருவர் அவைக்குப் பேசச் செல்ல வேண்டும்.
தெளிந்த சிந்தனையுடன் சொற்களை வகைப்படுத்தித் தன் கருத்துக்களை எடுத்துரைக்க வல்லவர் ஆயினும் அவரும் ஒரு பொருளை எடுத்துச் சொல்வதானால் யாருக்குச் சொல்கின்றோம் என்று தெரியாமல் அதாவது கேட்பவர்களின் இயல்பு அறியாமல் பேசுவது கூடாது. அப்படிப் பேசினால் ஒரு பயனும் விளையாது. ஆகையால், சொல்லும் சொற்களின் தொகுதியை அறிந்தவர்கள், மன்றத்தில் உள்ளவர்களின் தன்மையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி பேசவேண்டும். அறிஞர் அவை, தொழில்சார் வல்லுநர் அவை, கலைஞர் அவை, பொதுமக்கள் அவை, புலவர் அவை, கருத்தாய்வுஅவை போன்று பல வகைப்பட்ட அவைகள் உண்டாதலால் அந்தந்த அவைக்கு ஏற்றவாறு பேசவேண்டும்.
'ஆராய்ந்து' என்றது இங்கு சொற்களின் திறனை அறிந்துகொண்டு என்ற பொருள் தரும்; எவ்விதம் உரைத்தால் அது அவ்வவையோர் உணரத்தக்க வகையில் சென்று சேரும் என்பதை அறிதலைக் குறிக்கும்.
பேச்சிலக்கணம் அறிந்தவர்கள் தாங்கள் சொல்ல விரும்புவதன் மொத்த விளைவுகளையும் நன்கு ஆராய்ந்து, அவையோரின் தன்மையை உணர்ந்து பொருத்தமான சொற்றொகுதியால் பேசுவார்கள். இவர்களைச் சொல்லின் தொகையறிந்த தூய்மையவர் என வள்ளுவர் குறிப்பிடுகிறார். சொற்களஞ்சியப் புலமையும் சொற்களின் வகையறிந்து ஆளும் திறனும் உடையவர்களாதலால் அவர்கள் அவையில் தெளிவாகப் பேசுவர்; குறிப்புச் சொல், வழூஉச் சொல் முதலியன கலவாது வெளிப்படையாகவும் விளக்கமாகவும் கோவைபடப் பேசுவர். மறதியாலோ வாய்சோர்ந்தோ, பொருத்தமற்றவற்றைச் சொல்லிவிடமாட்டார்; அவையில் உரைக்கத்தகாத சொல், அவையில் சொல்ல வேண்டாத மறைச்சொற்கள் இவற்றைப் பேசமாட்டார். இவர்களது பேச்சு கேட்போரிடம் வெற்றிகரமாகச் சென்றடையும்.
|
'சொல்லின் தொகை' என்ற தொடரின் பொருள் என்ன?
'சொல்லின் தொகை' என்ற தொடர்க்கு சொல்லின் திறன், சொல்லறிந்தபேர், தகுதி குறையில்லாத் தொகுதி, சொல்லின் குழு, சொற்களின் தொகுதி, சொல்லின் வகை தொகை, சொற்களின் வகைதொகை, சொற்பொழிவின் விளைவு, சொற்களைத் தொகுத்துக் கூறுவதன் பயன், சொற்களைத் தொகுத்துப் பேசுதல், சொல்லின் விரிவு, சொல்லின் கூறுபாடுகள், சொற்களின் வகைகள் பலவும், பல வேறு கருத்துகளைக் கொடுக்கக்கூடிய சொல்லின் திறங்கள் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.
சொல்லின் தொகை என்பது சொல்லின் வகை தொகையினை அதாவது சொற்களின் வகைகள் பலவற்றைக் குறிப்பது. சொல்லின் தொகையறிந்தவர்கள் என்போர் இவற்றை நன்கு அறிந்தவராயிருப்பர். பலவகைச் சொற்களை இவர்கள் அறிந்திருப்பதால் எவ்வெவ்வவைக்கு எவ்வெக்காலத்து எது எது தக்கது என்பதை ஆராய்ந்து சொல்வர்.
சொல்லின் தொகை என்பதற்குப் பரிமேலழகர் சொற்களின் வகைகள் அஃதாவது செஞ்சொல். இலக்கணைச் சொல், குறிப்புச் சொல் முதலியன பலவும் அடங்கிய சொற்குழு என்று உரை கூறினார். ஆனால் தேவநேயப்பாவாணர் செஞ்சொல் முதலியன சொல்லின் வகையேயன்றித் தொகையாகா எனப் பரிமேலழகர் உரையை மறுத்து, 'சொல்வார்க்கும் கேட்பவர் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய சொற்றொகுதி' என்றார்; சொல்லின் தொகை சொற்றொகுதியைக் (vocabulary) குறிக்கும் என்பது இவர் கூற்று. மேலும் இவர் 'தூய்மையென்றது, பிறமொழிச் சொல்லும் கொச்சைச் சொல்லும் வழூஉச் சொல்லும் இடக்கர்ச்(vulgar)சொல்லும் அவையல்(unparliamentary) கிளவியும் திசைச்(provincial) சொல்லுங் கலவாது, இயன்றவரை எல்லார்க்கும் விளங்குமாறு பேசும் தூய இலக்கண நடையை. அவையறிந்து சொல்லுதலாவது, அதன் திறத்திற்கேற்ப நடையை உயர்த்தியும் தாழ்த்தியும் இடைநிகர்த்தாகவும் பேசுதல். ஆராய்ந்து சொல்லுதலாவது, இரட்டுறலும் கவர்படலும் இடத்திற்கேற்காச் சொல்லும் குறிப்புச் சொல்லும் நீக்கி, வெளிப்படையாகவும் விளக்கமாகவும் கோவைபடச் சொல்லுதல். ஓரிடத்து நற்சொல் மற்றோரிடத்தில் இடக்கர்ச் சொல்லாக விலக்கப்படுதலால், இடத்திற்கேற்பவும் சொற்களை ஆளவேண்டிய நிலைமையுளதாம்' எனவும் விளக்கம் தருவார்.
சொல்லின் தொகை என்பதற்கு மு கோவிந்தசாமி 'அகராதியறிவு தமிழ்ச்சொல் பிற சொற்றொகை; பெயர், வினை, இயல், திரிசொற்களில் தொகையுமாம்' எனப்பொருள் உரைப்பார்.
சொல்லின்தொகை என்பது சொற்களின் வகைகள் பலவற்றையும் குறிப்பது; சொற்றொகுதி அறிந்தவர்கள் அவைக்குத் தக்கவாறு பேசவல்லவராயிருப்பர் என்பது கருத்து.
'சொல்லின் தொகை' என்ற தொடர் சொற்றொகுதி என்ற பொருள் தரும்.
|
சொற்களைத் தொகுத்துக் கூறுவதன் பயனை அறிந்த தெளிவுடையவர்கள் அவையின் நிலையைத் தெரிந்து ஆராய்ந்து பேசுக என்பது இக்குறட்கருத்து.
சொல்லுதல் விளைவை உண்டாக்க அவையறிதல் வேண்டும்.
சொற்களைத் தொகுத்துக் கூறும் தெளிவுடையார் அவையின் நிலையறிந்து ஆராய்ந்து பேசுக.
|