இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0708முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:708)

பொழிப்பு (மு வரதராசன்): உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவருடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

மணக்குடவர் உரை: முகத்தை நோக்கி நிற்க அமையும்; தன் மனத்தை நோக்கி அறியலுற்றதனை அறியவல்லாரைப் பெறின்.
இஃது அமாத்தியர் குறிப்பை அரசனும் அறியவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் - குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம்நோக்கி நிற்க அமையும் - அவர் தன் முகம் நோக்கும் வகை தானும் அவர் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும்.
('உணர்வார்' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து செல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இயல்பு கூறுவார் போன்று கருவி கூறியவாறு. இவைமூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: நிகழ்வதை உள்ளத்தால் உணர்வார்க்கு முன்னே முகம் பார்த்து நின்றால் போதுமே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் முகம்நோக்கி நிற்க அமையும்.

பதவுரை: முகம்-முகம்; நோக்கி-பார்த்து; நிற்க-நின்று கொண்டிருக்க; அமையும்-போதும்; அகம்-நெஞ்சம்; நோக்கி-குறிப்பால் அறிந்து; உற்றது-நேர்ந்தது; உணர்வார்-அறிவார்; பெறின்-நேர்ந்தால்.


முகம்நோக்கி நிற்க அமையும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முகத்தை நோக்கி நிற்க அமையும்;
பரிப்பெருமாள்: முகத்தை நோக்கி நிற்க, அமையும்;
பரிதி: அரசன் முகம் பார்க்கத் தெரியும் என்றவாறு.
காலிங்கர்: தம் கருத்தின் கொண்டது காணும் ஒள்ளியோர் தாம்வறிதே முகத்தை நோக்கி மற்று உட்கொண்டதை உரையாமல் நிற்க அமையும்; [ஒள்ளியோர்-கூரிய அறிவினையுடையார்]
பரிமேலழகர்: அவர் தன் முகம் நோக்கும் வகை தானும் அவர் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும்.

'தாம்வறிதே முகத்தை நோக்கி மற்று உட்கொண்டதை உரையாமல் நிற்க அமையும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர் முகம் நோக்கி நின்றாலே போதும். (வாய் திறந்து ஒன்றும் கூற வேண்டியதில்லை.)', 'அவனுடைய முகத்தைச் சிறிது நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கக் கிடைத்தால் அது போதும் (குறிப்பறிவதற்கு)', 'அவர் முகம் நோக்கி நிற்றலே இடர் ஒழித்தற்குப் போதுமானது', 'அவர் முகத்தைப் பார்த்து நிற்கப் போதுமானது (வாயால் சொல்ல வேண்டாம்)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முகத்தைப் பார்த்து நின்றாலே போதும் என்பது இப்பகுதியின் பொருள்.

அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன் மனத்தை நோக்கி அறியலுற்றதனை அறியவல்லாரைப் பெறின்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அமாத்தியர் குறிப்பை அரசனும் அறியவேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: தன் அகத்தை நோக்கி அதிலுற்றதனை அறியவல்லாரைப் பெறின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே, அமாத்தியர் குறிப்பை அரசனும் அறியவேண்டும் என்றவாறாயிற்று; நிற்கின்ற தொழில் அமாத்தியன் கண்ணது ஆகலான்.
பரிதி: மனத்தின் நினைவை அறியும் மந்திரிக்கு.
காலிங்கர்: யார்மாட்டு எனின், அப்பொழுதே நாம் உட்கொண்டதனை ஓர்ந்து மற்று இவர் உற்ற இன்பமும் துன்பமும் இதுபோலும் எனக் குறிப்பினான் அறிவாரைப்பெறின் அவர்மாட்டு என்றவாறு.
பரிமேலழகர்: குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்;
பரிமேலழகர் குறிப்புரை: 'உணர்வார்' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து செல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இயல்பு கூறுவார் போன்று கருவி கூறியவாறு. இவைமூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டது.

'தன் மனத்தை நோக்கி அறியலுற்றதனை அறியவல்லாரைப் பெறின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புறக்குறிப்புக் கொண்டு ஒருவனது உள்ளத்தை நோக்கி அதிலுள்ள கருத்தை அறியவல்லாரைப் பெற்றால்', 'ஒருவனுடைய மனதிலுள்ளதை உணர்ந்து அதிலுற்ற குறிப்பை அறியக் கூடியவர்களுக்கு', 'உள்ளத்தில் எண்ணுவதை அறிந்து நேர்ந்த இடுக்கணை நீக்குவாரைப் பெற்றால்', 'தன் மனக் கருத்தை அறிந்து தான் அடைந்த துன்பத்தைத் தீர்ப்பாரைப் பெற்றால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒருவனது உள்ளத்தை நோக்கி அதிலுற்றதனை அறியவல்லாரைப் பெற்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவனது உள்ளத்தை நோக்கி அதிலுற்றதனை அறியவல்லாரைப் பெற்றால், அவர் முகத்தைப் பார்த்து நின்றாலே அமையும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

குடிகளின் உள்ளக்குறிப்பை அறியும் திறன் பெற்ற ஆட்சியாளர் முன் தோன்றி நின்றாலே அவர்களது குறை தீர்ந்துபோம்.

ஒருவனுடைய முகம் பார்த்து அகக் குறிப்பால் அவன் உற்றதை உணரவல்லாரைப் பெற்றால் அவர் முகம் நோக்கி நிற்றல் ஒன்றே போதும்.
ஆட்சித்தலைவர் அல்லது அமைச்சர் தன் குடிகளுக்கு நேர்ந்த குறைகள் இவைபோலும் எனக் குறிப்பினான் அவர்கள் அகத்தை அறியும் திறன் பெற்றவராயிருந்தால் தலைவர்/அமைச்சர் முகத்தை நோக்கி நின்றாலே போதும் என்கிறது இக்குறள். தலைவர் குடியின் முகம்பார்த்து உள்ளக்கிடக்கையை அறிகிறார். பின் குடி தலைவர் முகத்தை நோக்கி அவர் முன்நின்றால் அவரிடம் ஏதும் உரைத்துக்கூற வேண்டிய தேவை இல்லை. தலைவரே அவன் முகத்தை வாசித்து நோக்கங்களை உணர்ந்து குறைகளைத் தீர்த்து வைப்பார் என்பது கருத்து. குடிகளின் முகம் குறிப்பறிய உதவும் சிறந்த கருவி என்பதைச் சொல்லும் பாடல்.
இங்கு சொல்லப்பட்ட குடிகள் பொருள் இரந்து நிற்பவர் அல்லர்; குறையிரந்து நிற்பவர் ஆவர்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

இக்குறளில் நிற்பார் யார்? உணர்வார் யார்? என்பது சொல்லப்படவில்லை. எனவே நிற்பார்-உணர்வார் என்பதற்கு அமைச்சர்-தலைவர், குடிகள்-தலைவர் இவர்களைக் குறிப்பன என்று கூறினர்.
உணர்வார் தலைவர் என்றும் நிற்பார் அமைச்சர் என்று சிலர் உரைத்தனர். அமைச்சரைப் போல தலைவனும் முகநோக்கியுற்றதுணரும் வன்மையுடையனாதல் வேண்டும் என்றும் கருத்துரைத்தனர். குறிப்பறிதல் தலைவர், அமைச்சர் என்னும் இருவர்க்கும் வேண்டிய தெனினும் அமைச்சர்க்கே இன்றியமையாதது. தலைவன் முகத்தை நோக்கி உற்றுணரும் அமைச்சரைப் பெற்றால் தலைவன் அவர் முகத்தை நோக்கி நின்றாலே போதும்; அமைச்சர் குறிப்பறிந்து அனைத்தையும் செய்து முடிப்பார் எனவும் கூறினர், இது ஒருவகை விளக்கம்.
குறையுற்ற குடிகளே தலைவன் முகம் நோக்கி நிற்பர். தலைவன் முன்னால் அவனைச் சேர்ந்தொழுகுவோர் நிற்கவோ தலைவன் அவர்கள் முன் நிற்கவேண்டிய தேவையோ இல்லை. எனவே நிற்பார்-உணர்வார் என்பது குடி-தலைவன் இவர்களைச் சொல்வது என்று இன்னொரு வகையினர் கூறினர். முகம், நிற்க, உற்றது என்ற சொற்களின் ஆட்சியாலும் நிற்கின்ற தொழில் குடிகளுக்கு உரியது ஆதலாலும் 'நிற்பவர்' குடி என்பதும் ‘உணர்பவர்’ தலைவன் என்பதுவுமே பொருத்தமாகப் படுகிறது.

குறையிரக்கும் குடி உற்ற இன்பமும் துன்பமும் இதுபோலும் எனக் குறிப்பினான் அறியும் திறன் பெற்றவராயிருந்தால், அத்தலைவன் முகம் நோக்கி குறையுறுவான் நிற்க அவன் குறை ஆட்சியரால் தீர்க்கப்படும் என்பது இக்குறள் தரும் செய்தி.

ஒருவனது உள்ளத்தை நோக்கி அதிலுற்றதனை அறியவல்லாரைப் பெற்றால் முகத்தைப் பார்த்து நின்றாலே போதும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

குறையுற்ற குடிகளின் குறிப்பறிதல் தலைவருக்கு வேண்டுவது.

பொழிப்பு

ஒருவனது உள்ளத்தை நோக்கி அதிலுற்றதை உணரவல்லாரைப் பெற்றால், முகம் நோக்கி நின்றாலே போதும்.