இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0707முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:707)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் விருப்பம் கொண்டாலும் வெறுப்புக் கொண்டாலும், அவனுடைய முகம் முற்பட்டு அதைத் தெரிவிக்கும்; அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ?

மணக்குடவர் உரை: முகம்போல முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ? ஒருவனை உவப்பினும் வெறுப்பினும் தான் முற்பட்டுக் காட்டும்.
குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறிவிக்குமென்றது.

பரிமேலழகர் உரை: உவப்பினும் காயினும் தான் முந்துறும் - உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ - முகம் போல அறிவுமிக்கது பிறிது உண்டோ? இல்லை.
('உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான இயன்ற முகத்திற்கு இல்லை' என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருகியும் வரலான், 'உண்டு' என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.)

சி இலக்குவனார் உரை: உள்ளத்தில் மகிழ்ந்தாலும் வெறுத்தாலும் உரையால் வெளிப்படுத்துவதற்கு முன்பே தான் (முகம்) முற்பட்டு வெளிப்படுத்தும் முகத்தைவிட அறிவு மிக்கது வேறொன்றும் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும் .

பதவுரை: முகத்தின்-முகத்தைவிட; முதுக்குறைந்தது-அறிவுமிக்கது; உண்டோ-உளதோ; உவப்பினும்-மகிழ்ந்தாலும்; காயினும்-சினந்தாலும்; தான்-தான்; முந்துறும்.-முற்பட்டு நிற்கும்.


முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முகம்போல முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ?
பரிப்பெருமாள்: முகம்போல முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ?
பரிதி: முகத்திற் காணலாம் என்றவாறு.
காலிங்கர்: மக்களானோர்க்கு உறுப்பிற் சிறந்ததாகிய முகத்தினும் பொறி உடையது ஒன்று உண்டோ; இல்லை அன்றே;
பரிமேலழகர்: முகம் போல அறிவுமிக்கது பிறிது உண்டோ? இல்லை.

'முகம்போல முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முகம்போல் அறிவுத்திறம் பிறிதிற்கு இல்லை', 'ஆதலால், முகம் போல் அறிவுமிக்கது வேறுண்டோ? (இல்லை)', '(மனதில் கடுத்ததை) முகத்தைக் காட்டிலும் அறியக்கூடிய உறுப்பு வேறொன்று உண்டா? (இல்லை)', 'முகத்தைப் பார்க்கிலும் அறிவு மிக்கது வேறு யாதும் உண்டோ?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முகத்தைவிட அறிவுமிக்கது பிறிது இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

உவப்பினும் காயினும் தான்முந் துறும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனை உவப்பினும் வெறுப்பினும் தான் முற்பட்டுக் காட்டும்.
மணக்குடவர் குறிப்புரை: குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறிவிக்குமென்றது.
பரிப்பெருமாள்: உவப்பினும் வெறுப்பினும் தான் முற்படக் காட்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறிவிக்குமென்றது.
பரிதி: உவப்பினும் முனியினும்.
காலிங்கர்: என்னை எனின், ஒருவர் உள்ளத்தான் உவப்பினும் காயினும் மற்று அவர் சொல்லானும் செயலானும் வெளிப்படுவதன் முன்னமே குறிப்பினால் தான் முந்துற்று நிற்கும் என்றவாறு.
பரிமேலழகர்: உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்;
பரிமேலழகர் குறிப்புரை: 'உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான இயன்ற முகத்திற்கு இல்லை' என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருகியும் வரலான், 'உண்டு' என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.

'ஒருவர் உள்ளத்தான் உவப்பினும் காயினும் தான் முற்பட்டுக் காட்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மகிழ்வையும் வெறுப்பையும் முகம் முந்திக்காட்டும்', 'ஒருவன் மகிழ்வடைந்தாலும் வெறுப்படைந்தாலும் அவ்வுணர்வுகளைக் காட்ட முகம் முற்பட்டு நிற்கும்', 'மனம் மகிழ்ச்சியடைந்தாலும் வெறுப்படைந்தாலும் அதை முகந்தான் முதலில் அனுபவிக்கும்', 'உள்ளமானது ஒன்றை விரும்பினாலும் வெறுத்தாலும், அதனை எவர்க்கும் முற்பட்டு முகந் தெரிவித்தலால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மகிழ்வடைந்தாலும் வெறுப்படைந்தாலும் அவ்வுணர்வுகளைக் காட்ட முகம் முற்பட்டு நிற்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மகிழ்வடைந்தாலும் வெறுப்படைந்தாலும் அவ்வுணர்வுகளைக் காட்ட முகம் முற்பட்டு நிற்கும்; முகத்தைவிட முதுக்குறைந்தது பிறிது இல்லை என்பது பாடலின் பொருள்.
'முதுக்குறைந்தது' என்ற சொல்லின் பொருள் என்ன?

உள்ள உணர்ச்சிகளை முகம் முந்திக்கொண்டு காட்டும்.

ஒருவன் உள்ளமானது மகிழ்ந்தாலும் சினந்தாலும் அதனை அவனுடைய முகம் முற்படுத்தித் தெரிவித்துவிடுமாதலால், முகத்தைவிட அறிவுமிக்கது வேறொன்று உண்டோ? இல்லை.
உள்ளக் குறிப்பு வெளிப்படும் இடம் முகம். ஆகையால் முகத்தை நோக்கி ஒருவரது உள்ளக் குறிப்பை உணரலாம். அவர் மகிழ்வாக இருக்கிறாரா அல்லது சினம்கொண்டு உள்ளாரா என்பதை அவரது மற்ற உறுப்புகள் உணர்த்துவதன் முன்னே முகம் உணர்த்துவிடுகின்றது. மகிழ்ச்சியுற்றால் கை கால்களைத் தூக்கி ஆடத் தோன்றும்; அதுபோல் சினம் கொள்ளும்போது தனக்கு முன்னுள்ள பொருளைச் சிதைக்கக் கை நீளலாம்; அல்லது உதைக்கக் கால் வரலாம். ஆனால் கை,கால் போன்ற மற்ற எல்லா உறுப்புக்களையும்விட முகம் முந்திவந்து நிற்கும் என்கிறார் வள்ளுவர். உணர்ச்சிகளால் உண்டாகும் மாறுதல்கள் முகத்தில் உடனே தோன்றிவிடும். முகத்தைவிட விரைந்து உணர்வைக் காட்டக்கூடியது வேறொன்று உண்டோ? இல்லை. குறிப்பை உணர்வதற்கு முகமே சிறந்த இடம். அது உள்ளத்து உணர்ச்சிகளைப் பளிங்குபோலக் காட்டும்.

கருத்தைத் தெரிவிப்பதற்கு முன் கேட்பவர் மனக்குறிப்புகளைத் தெரிந்து கொள்வது நல்லது. ஒருவரின் மனநிலையை, அவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறாரா, வெகுட்சியுடன் இருக்கிறாரா என்பதைக் காட்டும் அளவுகோல் முகமே. முகம் என்று சொல்லும்போது, கண், புன்னகை, புருவத்தை வைத்திருக்கும் விதம், உதடுகளை மூடியிருக்கும் தன்மை இவை காட்டும் வெளிப்பாடுகளும் அடக்கம். இவற்றை உற்று நோக்கி அவரது மனநிலையை அறிந்துகொள்ளலாம். அவர் நகைக்கும் விதத்திலிருந்தும் அது மகிழ்ச்சியாலானதா, ஏளனத்தாலானதா என அடையாளம் காணலாம். புருவங்கள் நெறிவது சினத்தின் அடையாளமாகவும், புருவங்களை உயர்த்துவது வியப்பை உணர்த்துவதாகவும், முகம் சுளித்தல் அருவருப்பைக் காட்டுவதாகவும் அமையும். இவ்வாறு முகக்குறிப்புகளை வைத்து எதிரிலுள்ளோரின் மன நிலையை அறிந்து கொண்டபின் நாம் எண்ணுவதைத் தெரிவிக்கலாம். இதுவே கருத்துத் தெரிவிப்பில் வெற்றி பெறச் சிறந்த வழி. தகவல் தொடர்பில் வெற்றி பெறுபவர் வாழ்வில் மேம்பாடு காண்பதும் உறுதி. முக வெளிப்பாடு என்னும் உடல் மொழி பொதுவாக எல்லா மாந்தர்க்கும் பொதுவானது. கசப்பு, உவப்பு, வெறுப்பு, விருப்பு, பகை, நட்பு போன்றவற்றைக் காட்டும் முகக்குறிப்பால் அகக் கருத்தையறிந்து அதற்குத்தக ஒழுகினால் பயன் மிகுதியாகும்.

முகத்திற்கு அறிவுமிக இருப்பதால் அது முற்பட்டு உணர்ச்சிகளைக் காட்டுகிறது என்கின்றனர் உரையாளர்கள். முகத்திற்கு அறிவு உண்டா? இதற்கு விளக்கமாகப் பரிமேலழகர் 'உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான இயன்ற முகத்திற்கு இல்லை' என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருகியும் வரலான், 'உண்டு' என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு' என்றார். முகம் ஐம்பூதங்களான் ஆய அறிவற்ற பொருள். உயிர்தான் அறிவுடையது. அவ்வுயிர் மகிழ்ச்சியை அடைந்தால் உவந்தும் வெறுத்தால் சுருங்கியும் வருதலான் உணர்வுடையதாகும் என்பதறியப்படும் என்றதாம். முகம் உறுப்பாய் உடலின் ஒருபுடையாய் அறிவற்றதாயினும், பளிங்குபோல் நெஞ்சங்கடுத்ததைக் காட்டலின் அறிவுடைதுபோலக் கூறிய உபசார வழக்காம் (தண்டபாணி தேசிகர்), உயிர் கருதியது அறிதற்கு முகம் கருவியாய் இருக்கின்றது என்பது இதன் கருத்து.

'முதுக்குறைந்தது' என்ற சொல்லின் பொருள் என்ன?

'முதுக்குறைந்தது' என்றதற்கு முதிர்ந்த அறிவுடையது, பொறி உடையது, அறிவுமிக்கது, மிகுந்த அறிவுடையது, அறிவுத்திறம், அறிந்து அனுபவிப்பது, பேரறிவுடையது என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

முதுக்குறைவு என்பதற்கு முதிர்ந்த அறிவு அல்லது அறிவுமிக்கது என்ற பொருள் கிடைக்கிறது. அறிவுமிக்கது என்ற பொருளையே பலர் உரைத்துள்ளனர்,
முதுக்குறைந்தது என்பதை முதுக்கு + உறைந்தது எனவும் விரிப்பர். முதுக்கு என்பதற்கு அறிவு என்றும் உறைந்தது என்பதற்கு மிக்கது என்றும் பொருள் கூறி முதுக்குறைந்தது என்பது அறிவு மிக்கது என்ற பொருள் கொணர்வர். உறைந்தது என்பதற்குத் தங்குதல் எனப் பொருள் கொண்டு அறிவு தங்குதல் அதாவது அறி்வடைதல் எனவும் விளக்குவர்.
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் (சிலப்பதிகாரம் கொலைக்களக் காதை 68 பொருள்: சிறு பருவத்தில் பெரிய அறிவினையுடையளாய நினக்கும் தீமை செய்தேன்) என்னும் சிலம்பு வரி அறிவுமிக்கது என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது.
'முதுவர் என்பது அறிவாளரையும் முதுக்குறைவு என்பது அறிவு நிரம்புதலையும் குறிக்கும்' எனக்கூறி அது 'இளமையிலேயே பேரறிவு வாய்த்தல்' எனப்பொருள்படும் எனவும் விளக்குவார் இரா இளங்குமரன்.
வை மு கோபாலகிருஷ்ணமாச்சார்யார் 'முதுக்குறை-மூத்திருத்தல்-(சிறந்திருத்தல்) என்பது பொருள் எனக் காரணங் கூறுவர் ஒரு சாரர். மற்றொரு சாரர் முதுமை வன்மையாகிய அறியாமை அல்லது இயல்பிலுள்ளதான பேதைமை. குறை-நீங்குதல். இரண்டு சொல்லும் ஒரு சொல் தன்மைப்பட்டு அறியாமை நீங்குதல் என்ற எதிர்மறைப் பொருளால் கூரறிவுக்கு ஆயிற்று' என்பர்.

'முதுக்குறைந்தது' என்ற சொல்லுக்கு அறிவு மிக்கது என்பது பொருள்.

மகிழ்வடைந்தாலும் வெறுப்படைந்தாலும் அவ்வுணர்வுகளைக் காட்ட முகம் முற்பட்டு நிற்கும்; முகத்தைவிட அறிவுமிக்கது பிறிது இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

முகத்தில் தோன்றும் உணர்வுகளை வாசிப்பது குறிப்பறிதல் திறனாம்.

பொழிப்பு

மகிழ்ந்தாலும் வெறுப்படைந்தாலும் அவ்வுணர்வுகளைக் காட்ட முற்பட்டு நிற்குமாதலால், முகம் போல் அறிவுத்திறம் வேறெதற்கும் உண்டோ? (இல்லை)