இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0706அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:706)

பொழிப்பு (மு வரதராசன்): தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சத்தில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.மணக்குடவர் உரை: தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும்.
இது முகம் நெஞ்சத்து வெகுட்சி யுண்டாயின் கருகியும் மகிழ்ச்சியுண்டாயின் மலர்ந்தும் காட்டுமென்றது.

பரிமேலழகர் உரை: அடுத்தது காட்டும் பளிங்கு போல் - தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் - ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும்.
('அடுத்தது' என்பது ஆகுபெயர். கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற் பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.)

வ சுப மாணிக்கம் உரை: முன்னுள்ள பொருளைக் கண்ணாடி காட்டும்; உள் மிக்க உணர்ச்சியை முகம் காட்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அடுத்தது காட்டும் பளிங்கு போல், நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும்.

பதவுரை: அடுத்தது-தனக்கு எதிரில் இருப்பது, நெருங்கிய பொருளது; காட்டும்-காட்டும்; பளிங்கு-பளிங்கு, கண்ணாடி, கண்ணாடி போன்ற ஒரு வகைக்கல்; போல்-போன்று; நெஞ்சம்-உள்ளம்; கடுத்தது-மிகுந்து தோன்றுவது, உள்ளதன் மிகுதி, வெறுப்பது, சினப்பது; காட்டும்-அறிவிக்கும்; முகம்-முகம்.


அடுத்தது காட்டும் பளிங்குபோல் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல;
பரிப்பெருமாள்: தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல;
பரிதி: சேர்ந்த வண்ணம் காட்டும் கண்ணாடி போல;
காலிங்கர்: தன்னை வந்து அடுக்கத் தோன்றின வண்ணத்தைத் தான் காட்டும் பளிங்கேபோல;
பரிமேலழகர்: தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்;
பரிமேலழகர் குறிப்புரை: 'அடுத்தது' என்பது ஆகுபெயர்.

'தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். தொல்லாசிரியர்கள் வண்ணத்தைக் காட்டும் பொருளாகப் பளிங்கைக் குறிக்கின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னையடுத்த பொருளைத் தானே காட்டும் பளிங்கினைப் போல்', 'அதன் எல்லைக்குள் அடுத்த பொருள்களின் வடிவத்தை ஒரு கண்ணாடி பிரதிபிம்பமாகக் காட்டுவது போல்', 'தனக்கு நேர் வைத்த பொருளின் வடிவத்தை நன்கு காட்டவல்ல பளிங்கு (கண்ணாடி) போல', 'தன்னை அடுத்துள்ளதை வெளிப்படுத்தும் கண்ணாடி போல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன்னை நெருங்கிய பொருளைக் காட்டும் பளிங்கினைப் போல் என்பது இப்பகுதியின் பொருள்.

நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும்.
மணக்குடவர் குறிப்புரை: இது முகம் நெஞ்சத்து வெகுட்சி யுண்டாயின் கருகியும் மகிழ்ச்சியுண்டாயின் மலர்ந்தும் காட்டுமென்றது.
பரிப்பெருமாள்: நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் முகம் அறிவிக்கும் என்றார்; அஃது அறிவிக்குமாறு என்னை என்றார்க்கு (முகம்) வெகுட்சியுண்டாயின் கருகியும் மகிழ்ச்சியுண்டாயின் மலர்ந்தும் காட்டும் என்றது.
பரிதி: மனத்தின் எண்ணம் முகம் காட்டும் ஆகலின், முகத்திலும் கண்ணாடி உண்டோ; மனத்தின் கோபமும் பிரியமும் முகத்திற் காட்டிக் கொடுக்கும் என்றவாறு.
காலிங்கர்: ஒருவன் நெஞ்சமானது குறித்த நீர்மையைக் கைக்கொண்டு நீளக் காட்டுவன முகம்;
காலிங்கர் குறிப்புரை: எனவே, ஒருவர் முன்னி அறிதற்குக் கருவி முகம் என்பது பொருளாயிற்று.
பரிமேலழகர்: ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும்.
பரிமேலழகர் குறிப்புரை: கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற் பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.

'நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் உள்ளத்தின் மிகுந்த உணர்வுகளை அவன் முகம் தானே காட்டும்', 'ஒருவனுடைய மனதில் மிகுந்துள்ள உணர்ச்சியை அவன் முகம் காட்டிவிடும்', 'நெஞ்சில் மிகுந்த குணத்தை முகமானது நன்கு காட்டும்', 'நெஞ்சம் வெறுத்ததை முகம் அறிவிக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உள்ளத்தில் உள்ள மிக்க உணர்ச்சிகளை வெளிக் காட்டும் முகம் என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
தன்னை நெருங்கிய பொருளைக் காட்டும் பளிங்கினைப் போல் உள்ளத்தில் உள்ள மிக்க உணர்ச்சிகளை வெளிக் காட்டும் முகம் என்பது பாடலின் பொருள்.
'அடுத்தது காட்டும் பளிங்கு' என்றால் என்ன?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

தன்னை நெருங்கியுள்ள பொருளைக் காட்டவல்ல பளிங்குபோல ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ள குணத்தை முகமானது வெளிப்படுத்திவிடும்.
எல்லா உணர்ச்சிகட்கும் நிலைக்களனான உள்ளத்தில் அன்பு, காதல், பயம், பிரிவு, துயரம், அருள், சினம், பொறாமை, வெறி போன்ற உணர்ச்சிகள் மிகுந்து பொங்கி எழும்போது அவற்றை அறவே வெளியில் தெரியாமல் மறைத்துவிட முடியாது. ஒருவர் உள்ளத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் மிகையாக வெளிப்படும்போது முகத்தில் தெரியும் மாற்றங்கள் அதைக் காட்டும். கை, கால் போன்ற மற்ற உடலுறுப்புகளும்கூட உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியன என்றாலும் முகம்தான் முதல் கண்ணாடியாகும். இன்னொருவகையில் சொல்வதானால், ஒருவரது முகத்தின் மூலம் அவரது மனதை வாசிக்கலாம். எனவே ஒருவர் முகக்குறிப்பு கொண்டு அவர் உள்ளத்திலுள்ளதை அளக்கலாம்.
குறிப்பறிதலை உணர்த்த வந்த வள்ளுவர் குறிப்பறிதலுக்கு உரிய ஒரு இடம் முகம் என்று உணர்த்துகிறார். குறிப்பறியுந்திறன் என்பது மொழி பயன்படாத இடங்களில் பயன்படுகிற ஒரு சிறப்பு ஆற்றல். நெஞ்சம் காட்டுவது முகமே என்றும், ஒருவன் முகத்தை நோக்கி, அச்சிறப்பு ஆற்றலைப் பயன்படுத்தி, அவன் உள்ள ஓட்டத்தை அறியலாம் என்கிறார் அவர்.

கண்ணாடி தன்னை நெருங்கி இருக்கும் பொருளைக் காட்டும், அதுபோல ஒருவனது உள்ளத்தில் படும் உணர்ச்சிகளை அவன் முகம் காட்டிவிடும். முகத்தைப் பார்த்தே ஒருவன் மனஓட்டத்தை அறிந்துகொள்ளலாம். பிறரது மனநிலையைக் குறிப்பால் உணர்ந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தம் கருத்துக்களைத் தலைவனிடம் தெரிவித்து அறிவுரையாளர்கள் தம் குறிக்கோளை நிறைவேற்றுவர். அகக்குறிப்பறிந்து செயல்படுவதின் மூலம் ஆக்கமான செயல்களைச் செய்யமுடியும் என்பதோடு கேடான நிகழ்வுகளையும் தடுக்க முடியும். இது இப்பாடல் தரும் செய்தி.

இப்பாடலிலுள்ள 'கடுத்தது' என்ற சொல்லுக்கு மிக்கது, குறித்த நீர்மை, மிகுந்துள்ளது, நினைத்த நினைவு, கோபம், உணர்ச்சி மிகுந்தெழுந்த கருத்து, கடுப்பு (கோபம்), மிக்க உணர்ச்சி, மிகுந்த உணர்வு, மிகுந்து தோன்றும் உணர்வு, மிகுந்த குணம், வெறுத்தது, ஐயப்பட்டது என் உரையாளர்கள் பொருள் கூறினர்.
கடுத்தல் என்பதற்குச் சினத்தல், வெறுத்தல் என்ற பொருள்களும் உண்டு என்றாலும் இங்கு மிக்கது என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. மணக்குடவர் இப்பொருளே கொள்கிறார். 'கடுத்தது' என்பது கடி என்னும் உரிச்சொல்லடியார்ப் பிறந்த தொழிற்பெயர் எனக்கொண்டு அது 'மிக்கது' என்ற பொருள் தருவது என விளக்கினார் பரிமேலழகர். கடி என்பதை இங்கு கொண்டுவரத் தேவையில்லையாமல், கடுமை என்பதே 'உள்ளதன் மிகுதி' என்னும் பொருளதாதல் கூடும் எனக் கருத்துரைப்பார் தண்டபாணி தேசிகர்.

'அடுத்தது காட்டும் பளிங்கு' என்றால் என்ன?

'அடுத்தது காட்டும் பளிங்கு' என்றதற்கு தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கு, சேர்ந்த வண்ணம் காட்டும் கண்ணாடி, தன்னை வந்து அடுக்கத் தோன்றின வண்ணத்தைத் தான் காட்டும் பளிங்கு, தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு, தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு. பளிங்கின் மறைவிலே இருக்கிற வஸ்துவினுடைய நிறத்தை காட்டும் பளிங்கு, தனக்குச் சமீபமாயிருகிற பொருளைக் காட்டும் கண்ணாடி, தன்னை அடுத்திருக்கும் பொருளினது வண்னத்தை அவ்வாறே தன்னுட் பெற்றுக் காட்டும் பளிங்கு, தன்னை அடைந்த பொருளினைக் காட்டும் பளிங்கு, முன்னுள்ள பொருளைக் காட்டும் கண்ணாடி, தன்னையடுத்த பொருளைத் தானே காட்டும் பளிங்கு, அதன் எல்லைக்குள் அடுத்த பொருள்களின் வடிவத்தை பிரதிபிம்பமாகக் காட்டும் கண்ணாடி, தன்னை நெருங்கியதன் வடிவையும் வண்ணத்தையும் தெளிவாகக் காட்டும் கண்ணாடி, தனக்கு நேர் வைத்த பொருளின் வடிவத்தை நன்கு காட்டவல்ல பளிங்கு (கண்ணாடி), தன்னை அடுத்துள்ளதை வெளிப்படுத்தும் கண்ணாடி, தன்னை அடுத்த பொருளின் வடிவத்தைக் காட்டவல்ல பளிங்கு, தன்னையடுத்த பொருளின் வடிவத்தையும் நிறத்தையும் தன்னுட்காட்டும் கண்ணாடி, தன்னிடத்தே சார்ந்துள்ள பொருளைக் காட்டும் கண்ணாடி என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தொல்லாசிரியர்களும் பின்வந்தவர்களும் பளிங்கு என்பதற்கு பளிங்கு என்று பொருள் கூறி அதை வண்ணத்தைக் காட்டும் பொருளாகக் குறிக்கின்றனர். பழைய ஆசிரியர்களில் பரிதி மட்டும் கண்ணாடி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். பளிங்கு என்றால் என்ன? கண்ணாடி என்றால் என்ன?
பளிங்குச் சொரிவு அன்ன பாய் சுனை என்று பத்துப்பாட்டு (குறிஞ்சிப்பாட்டு-57-58 பொருள்: பளிங்கைக் கரைத்துச் சொரிந்து வைத்தாற்போன்ற பரந்த சுனை அதாவது பளிங்கை உருக்கி ஊற்றியது போலப் பாய்ந்து வரும் சுனைநீர்) பாடுகிறது. தெளிவான நீரைக் குறிப்பதற்குப் பளிங்குச் சொரிவு எனச் சொல்லப்பட்டது. இன்று நாம் சலவைக்கல்லைப் பளிங்கு என்கிறோம். சலவைக்கல்லுக்கு ஒளி ஊடுருவும் தன்மை கிடையாது; ஆனால் பிரதிபலிக்கும் தன்மை உண்டு.
பளிங்கு எனப்படும் பொருளின் தன்மையாவன:
1. உள்ளே இருப்பதை வெளியே இருந்து பார்த்தால் தெரியாது; ஆனால் வெளியில் இருந்து பிரதிபலிப்பு தெரியும்; இப்படிக் கொண்டால் வண்ணம் சார்ந்த உரை பொருந்தும். பழைய உரை (2) ஒன்று 'பளிங்கின் மறைவிலே இருக்கிற வஸ்துவினுடைய நிறத்தை அந்தப் பளிங்கு காட்டுமாறுபோல...' எனப் பொருள் கூறுகிறது.
2. ஒளி ஊடுருவும் கண்ணாடி (ரசம் பூசாதது) என்பது வெளியில் இருந்து பார்க்கும் போது உள்ளிருப்பதைக் காட்டும்; இவ்வாறு கொண்டால் அடுத்தது அதாவது நெருங்கிய பொருள் காட்டும் என்ற உரை பொருந்தும்.
3. ரசம் பூசப்பட்ட கண்ணாடி- முகம் பார்க்கப் பயன்படுவது.
இக்குறளில் கூறப்பட்ட பளிங்கு என்பது மேலே கூறப்பட்டதில் முதலில் உள்ள இரண்டில் ஒன்றாகவே தொல்லாசிரியர்கள் கருதுகிறார்கள். அதாவது பிரதிபலிப்பு காட்டும் பளிங்கு அல்லது ஒளி ஊடுருவும் (பிரதிபலிப்பதன்று) கண்ணாடி இவற்றுள் ஒன்றாகக் காட்டுகிறார்கள்.
முகம் பார்க்கும் கண்ணாடியையும் பளிங்கு என அழைத்தனரா அல்லது பளிங்கை முகம் பார்க்கும் கண்ணாடியாகப் பயன்படுத்தினரா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒருவகை முகம் பார்க்கும் கண்ணாடிகள் அக்காலத்துப் பயன்பட்டமை பிற சங்கநூல்களிலும் குறிப்பிடப்படுவதிலிருந்து அறிய முடிகிறது.
'அடுத்தது' என்பதற்கு நெருங்கியிருப்பது என்று பொருள். 'அடுத்தது காட்டும்' என்பதற்கு மறுபுறமிருக்கும் பொருளைக் காட்டும் என்று பொருள் கொள்ளப்படும். பொருளில் நிறமும் அடங்குமாதலின் 'அடுத்தது காட்டும்' என்பதற்கு அடுத்த நிறத்தைக் காட்டும் என்பதினும் அடுத்த பொருளைக் காட்டும் என்பது பொருத்தமாகும் என்பார் இரா சாரங்கபாணி.

'அடுத்தது காட்டும் பளிங்கு' என்றதற்குத் தன்னை நெருங்கி இருக்கும் பொருளைக் காட்டும் பளிங்கு/கண்ணாடி என்பது பொருள்.

தன்னை நெருங்கிய பொருளைக் காட்டும் பளிங்கினைப் போல் உள்ளத்தில் உள்ள மிக்க உணர்ச்சிகளை வெளிக் காட்டும் முகம் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

அகத்தின் கண்ணாடியாம் முகம் குறிப்பறிதலுக்கு உதவுவது.

பொழிப்பு

நெருங்கிய பொருளைக் காட்டும் பளிங்கு போல நெஞ்சத்து மிகும் உணர்ச்சிகளை முகம் தெரிவிக்கும்.