குறிப்பின் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்
(அதிகாரம்:குறிப்பறிதல்
குறள் எண்:705)
பொழிப்பு (மு வரதராசன்): (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புக்களுள் கண்கள் என்ன பயன்படும்?
|
மணக்குடவர் உரை:
ஒருவன் முகக்குறிப்பினானே அவனவன் மனக் குறிப்பையறிய மாட்டாவாயின் தன்னுறுப்புகளுடன் கண்கள் மற்றென்ன பயனைத் தருமோ?
இது குறிப்பறியாதார் குருடரோடு ஒப்பா ரென்றது.
பரிமேலழகர் உரை:
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் - குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ - ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வன?
(முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பு அறிதற்கண் துணையாதல் சிறப்புப்பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது: அக்கண்களால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.)
தமிழண்ணல் உரை:
தம் குறிப்புணரும் ஆற்றலைக் கொண்டு, பிறரது உள்ளக் குறிப்பை அறியமாட்டாவாயின், உறுப்பினுள் சிறந்தது எனப்படும் கண்கள் வேறு என்ன பயனைத் தரப் போகின்றன? கண்களின் இயல்பே குறிப்பறிதல்தானே என்பது கருத்து.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
குறிப்பின் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ.
பதவுரை: குறிப்பின்-புறக்குறிப்பால்; குறிப்பு-உள்ளக்கருத்து; உணரா-தெரியமாட்டா; ஆயின்-ஆனால்; உறுப்பினுள்-உறுப்புக்களுள்; என்ன-எத்தகைய; பயத்தவோ-பயனுடையனவோ; கண்-விழி.
|
குறிப்பின் குறிப்புணரா வாயின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் முகக்குறிப்பினானே அவனவன் மனக் குறிப்பையறிய மாட்டாவாயின்;
பரிப்பெருமாள்: ஒருவன் முகக்குறிப்பினானே அவன் மனக் குறிப்பையறிய மாட்டாவாயின்;
பரிதி: அரசன் நினைத்த நினைவைப் பார்வையால் அறியாத மந்திரி;
காலிங்கர்: தமது கண்கள் பிறர் நோக்கிய நோக்கிற்குப் பின் உளதாகிய குறிப்பினையே உணரமாட்டாவாயின்;
பரிமேலழகர்: குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்;
'முகக்குறிப்பினானே அவனவன் மனக் குறிப்பையறிய மாட்டாவாயின் என்ற பொருளில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'அரசன் நினைத்த நினைவைப் பார்வையால் அறியாத மந்திரி' என்றார் பரிதி. 'தமது கண்கள் பிறர் நோக்கிய நோக்கிற்குப் பின் உளதாகிய குறிப்பினையே உணரமாட்டாவாயின்' என்று காலிங்கரும் 'குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'முகங்கண்டு உள்ளம் காணவில்லை யாயின்', 'முகக்குறிப்பினால் அகக்குறிப்பை அறிய மாட்டாவாயின்', 'ஒருவனைக் குறிப்பாகப் பார்ப்பதனாலேயே அவனுடைய நோக்கத்தை உணர்ந்து கொள்ள முடியாவிட்டால்', 'குறித்ததைக் காணவல்ல கண்ணினால் பிறர் உள்ளக் குறிப்பை அறியாவிட்டால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
புறக்குறிப்பாலே ஒருவன் உள்ளக் கருத்தை அறியமுடியாவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.
உறுப்பினுள் என்ன பயத்தவோ கண்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னுறுப்புகளுடன் கண்கள் மற்றென்ன பயனைத் தருமோ?
மணக்குடவர் குறிப்புரை: இது குறிப்பறியாதார் குருடரோடு ஒப்பா ரென்றது.
பரிப்பெருமாள்: தன்னுறுப்புகளுள் கண்கள் மற்றென்ன பயனைத் தருமோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது குறிப்பறியாதார் குருடரோடு ஒப்பா ரென்றது.
பரிதி: தன் முகத்திலே கண் புண் என்றவாறு.
காலிங்கர்: உறுப்பினுள் என்ன பயத்தன கொல்லோதாம் என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வன?
பரிமேலழகர் குறிப்புரை: முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பு அறிதற்கண் துணையாதல் சிறப்புப்பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது: அக்கண்களால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.
'தன்னுறுப்புகளுள் கண்கள் மற்றென்ன பயனைத் தருமோ?' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கண் என்ற உறுப்பின் பயன் என்ன?', 'ஒருவன் உடலுறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறென்ன பயனைச் செய்யும்?', 'உடலின் உறுப்புகளுள் கண்கள் இருப்பதனால் பயன் என்னவோ தெரியவில்லை', 'உறுப்பினுள் சிறந்த அக்கண்ணினால் ஆம் பயன் என்ன?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
உறுப்புகளுள் கண்ணினால் ஆகும் பயன் என்னவோ? என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
குறிப்பின் குறிப்புணராவாயின், உறுப்புகளுள் கண்ணினால் ஆகும் பயன் என்னவோ? என்பது பாடலின் பொருள்.
'குறிப்பின் குறிப்புணராவாயின்' என்ற தொடர் குறிப்பது என்ன?
|
புறக்குறிப்புகளை நோக்க இயலாத கண்களால் வேறு என்ன நன்மை இருக்கப் போகிறது?
புறக்குறிப்பால் பிறர் உள்ளக் குறிப்பை அறிய இயலாவிட்டால் உறுப்புகளுள் அக்கண்களால் என்ன பயன்?
ஒருவரது கண்ணால் பிறரது நெஞ்சக்குறிப்பை அளந்தறிய இயலவேண்டும். அப்படிக் குறிப்பறிய மாட்டாதார் கண்ணிருந்தும் அவை பயனற்றனவே.
உள்ளக் குறிப்பை எவ்வாறு அறிவது? உள்ளக் குறிப்பு வெளிப்படும் இடங்கள் பல. முகம், கண், உடல்மொழி போன்றவை அவற்றுள் சில. ஆகையால் அவற்றை நோக்கி குறிப்பை உணர வேண்டும். உடற் பொறிகளில் கண் சிறப்பானது. அச்சிறப்புக் கருவியைப் பயன்படுத்தி பிறர் உள்ளக் குறிப்பை அறியலாம்.
பல்வேறு காட்சிகளைக் காணவும் எழுதவும் படிக்கவும் பயன்படும் ஒருவனுடைய கண் பிறரது உளக் கருத்தை அவரிடம் காணப்படும் புறக் குறிப்பின் மூலம் அறியவும்வல்லது.
சொற்களின் உதவி இல்லாமலே மனக்கருத்தை உணர்ந்து கொள்வது மேலான திறனாம். இக்குறிப்பறிதிறன் என்பது மனித இனத்துக்கே சிறப்பாக உரியது.
மனிதனுடைய நுண்ணிய உணர்ச்சிகள் அவனுடைய முகக் குறிப்பிலும் கண்களிலும் உடல்மொழிகளிலும் வெளிப்படும். அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள உதவுகிறது காண்பவனது கண். உடற்குறிப்பும் முகக்குறிப்பும் பார்வைக்குறிப்பும் பல வேறுபட்ட சூழ்நிலைகளில் பலதிறப்பட்ட செய்திகளைக் குறித்து நிற்கும்போது அவற்றையெல்லாம் உணர்ந்துகொள்ள வல்ல ஒருதிறன் கண்ணுக்கு உண்டு. அத்திறனை வெளிக்கொணர்ந்து கண்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
|
'குறிப்பின் குறிப்புணராவாயின்' என்ற தொடர் குறிப்பது என்ன?
'குறிப்பின் குறிப்புணராவாயின்' என்றதற்கு ஒருவன் முகக்குறிப்பினானே அவனவன் மனக் குறிப்பையறிய மாட்டாவாயின், அரசன் நினைத்த நினைவைப் பார்வையால் அறியா மந்திரி, தமது கண்கள் பிறர் நோக்கிய நோக்கிற்குப் பின் உளதாகிய குறிப்பினையே உணரமாட்டாவாயின், குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின், (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணராவிட்டால், தம் குறிப்புணரும் ஆற்றலைக் கொண்டு பிறரது உள்ளக் குறிப்பை அறியமாட்டாவாயின், ஒருவனது எண்ணத்தினைக் குறிப்பால் உணரமுடியாது போயின், முகங்கண்டு உள்ளம் காணவில்லை யாயின், முகக்குறிப்பினால் அகக்குறிப்பை அறிய மாட்டாவாயின், ஒருவனைக் குறிப்பாகப் பார்ப்பதனாலேயே அவனுடைய நோக்கத்தை உணர்ந்து கொள்ள முடியாவிட்டால், புறக்குறிகளால் அகக்குறிப்பை அறியமாட்டார் என்றால், குறித்ததைக் காணவல்ல கண்ணினால் பிறர் உள்ளக் குறிப்பை அறியாவிட்டால், முகக் குறிப்பினால் அகக் குறிப்பினை அறியமாட்டாவாயின், முகக்குறி வாயிலாக அகக்குறிப்பை உணரமுடியாவிட்டால், முகத்திலும் முகவுறுப்புகளிலுமுள்ள குறிப்புகளைக் கண்டும் அவற்றால் அவர் உள்ளக் குறிப்புக்களைக் காணமாட்டாதனவாயின், எண்ணத்தில் உள்ளதை முகத்தின் குறிப்பினால் தெரிந்துகொள்ள முடியவில்லையென்றால் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'குறிப்பின் குறிப்புணராவாயின்' என்றது ஒருவன் புறக்குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால் என்ற பொருள் தருவது.
முதலில் உள்ள குறிப்பு என்பது புறத்தே தெரியும் குறிப்புகளை நோக்குவது குறித்தது. அடுத்துவரும் குறிப்பு உள்ளக் கருத்தை அறிவது பற்றியது.
ஒவ்வொருவர் மனத்துள்ளும் எண்ண ஓட்டங்கள் இருந்துகொண்டு இருக்கும். அவரைப் பார்ப்பவர் எவரது கண்களுக்கும் அவரது அகக்குறிப்புகளையும் அறியும் ஆற்றல் உண்டு. அந்த ஆற்றலை வெளிக்கொணர்ந்து அவரது உள்ளங் காணவேண்டும். ஒருவரது உள்ளோட்டங்களை வாசிக்க பல வழிகள் உண்டு. இங்கு கண்ணைக்கொண்டு மனக் குறிப்பை நோக்குவது சொல்லப்படுகிறது.
'குறிப்பின் குறிப்புணராவாயின்' என்றதற்கு புறக்குறிப்பால் அகக்குறிப்பை உணரமுடியாவிட்டால் என்பது பொருள்.
|
புறக்குறிப்பாலே ஒருவன் உள்ளக் கருத்தை அறியமுடியாவிட்டால் உறுப்புகளுள் கண்ணினால் ஆகும் பயன் என்னவோ? என்பது இக்குறட்கருத்து.
ஒருவரது கண்களுக்கு அகக்குறிப்பறிதல் ஆற்றலும் வேண்டும்.
முகக்குறிப்பினால் உள்ளக்குறிப்பை அறிய மாட்டாவாயின் உறுப்புக்களுள் கண்கள் என்ன பயனைத் தருமோ?
|