குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை
உறுப்போர் அனையரால் வேறு
(அதிகாரம்:குறிப்பறிதல்
குறள் எண்:704)
பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் மனத்தில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவர்.
|
மணக்குடவர் உரை:
நினைந்ததனைச் சொல்லாமைக் கொள்ளவல்லாரோடு மற்றையர் உறுப்பால் ஒருதன்மையர் அல்லது அறிவினான் வேற்றுமை யுடையார்.
இது குறிப்பறியாதார் அறிவில்லாதார் என்றது.
பரிமேலழகர் உரை:
குறித்தது கூறாமைக் கொள்வாரொடு - ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர் -மற்றை மாட்டாதார் உறுப்பால் ஒரு தன்மையராக ஒப்பாராயினும்; வேறு - அறிவான் வேறு.
('கொள்ளாதார்' என்பதூஉம், 'அறிவான்' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.)
தமிழண்ணல் உரை:
ஒருவர் தம் மனத்துக்குள் நினைத்த கருத்தை, அவர் வாய்விட்டுக் கூற வேண்டாமலே அறிந்து கொள்ளக் கூடியவர்களோடு, அங்ஙனம் அறியமாட்டாதார் உறுப்புக்களால் ஒரு தன்மையுடையவர்களாயினும் மதிநுட்பத்தால் வேறுபட்டவர் ஆவார்கள்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை உறுப்போர் அனையரால் வேறு.
பதவுரை: குறித்தது-கருதியது; கூறாமை-சொல்ல வேண்டாமல்; கொள்வாரோடு-அறியவல்லாரோடு; ஏனை-மற்ற; உறுப்போர்-உறுப்பு ஒன்றாகிய; அனையர்-ஒப்பர்; ஆல்-(அசைநிலை); வேறு-மாறுபட்டவர்.
|
குறித்தது கூறாமைக் கொள்வாரோடு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நினைந்ததனைச் சொல்லாமைக் கொள்ளவல்லாரோடு;
பரிப்பெருமாள்: நினைந்ததனைச் சொல்லாமைக் கொள்ளவல்லாரோடு;
பரிதி: நினைத்த நினைவைச் சொல்லுவதன் முன்னே பார்வையினாலே அறிவான்;
காலிங்கர்: ஒருவர் உள்ளம் குறித்தது ஒன்றினை அவர் உரைக்க வேண்டாமல் மற்று அவர் முகக் குறிப்பினால் கைக் கொள்வாருடன்;
பரிமேலழகர்: ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு;
'ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'குறிப்பைக் கூறாமலே அறிய வல்லவர்க்கும்', 'ஒருவன் தன் மனத்தில் கருதியதனை அவன் கூறாமலே குறிப்பினால் அறிபவரோடு', 'வாயால் சொல்லாமலேயே நோக்கமறிந்து நடந்து கொள்ளும் துணைவர்களுக்கு', 'ஒருவன் குறிப்பால் உணர்த்தியதைக் கூறாமலே அறிய வல்லவரோடு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஒருவன் தன் மனத்தில் கருதியதை அவன் சொல்லாமலே குறிப்பினால் அறிந்துகொள்ள வல்லவரோடு என்பது இப்பகுதியின் பொருள்.
ஏனைஉறுப்போர் அனையரால் வேறு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மற்றையர் உறுப்பால் ஒருதன்மையர் அல்லது அறிவினான் வேற்றுமை யுடையார்.
மணக்குடவர் குறிப்புரை: இது குறிப்பறியாதார் அறிவில்லாதார் என்றது.
பரிப்பெருமாள்: மற்றையார் உறுப்பு ஒருதன்மையர் அல்லது அறிவினான் வேற்றுமை யுடையர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது குறிப்பறியாதார் அறிவில்லாதார் என்றது.
பரிதி: அவன் தேவரோடு ஒப்பாவான்.
காலிங்கர்: மற்று ஏனை மாந்தர் முகம் கை கால் முதலிய மக்கள் உறுப்பின்கண் ஒரு தன்மையர் ஆதலே உள்ளது; மக்கட்கு அன்பாகிய உணர்வின் பெரிதும் வேறுபாடு உடையார். காலிங்கர் குறிப்புரை: என்னவே உறுப்பின் அவரோடு ஒருமை1 உணர்வில் விலங்கொடு மக்கள் அனையர் என்பது வெளிப்படுத்தியவாறாயிற்று என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: மற்றை மாட்டாதார் உறுப்பால் ஒரு தன்மையராக ஒப்பாராயினும் அறிவான் வேறு.
பரிமேலழகர் குறிப்புரை: 'கொள்ளாதார்' என்பதூஉம், 'அறிவான்' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.
'மற்றையர் உறுப்பால் ஒருதன்மையர் அல்லது அறிவினான் வேற்றுமை யுடையார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறியாதவர்க்கும் உடம்பளவில் ஒற்றுமை', 'மற்றையவர் உறுப்புக்களால் ஒத்தவராயினும் மதிநுட்பத்தால் வேறாவர்', 'மற்ற துணைவர்களும் சமம் ஆகி விடுவார்களா? ஆகமாட்டார்கள். அவர்கள் வேறு; இவர்கள் வேறு', 'அங்ஙனம் அறியமுடியாத மற்றவர்கள், உறுப்பால் ஒத்திருந்தாலும், அறிவால் அவரின் வேறாவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
மற்றையவர் உறுப்புக்களால் ஒத்தவரே; ஆயினும் வேறானவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
ஒருவன் தன் மனத்தில் கருதியதை அவன் சொல்லாமலே குறிப்பினால் அறிந்துகொள்ள வல்லவரோடு மற்றையவர் உறுப்புக்களால் ஒத்தவரே; ஆயினும் வேறானவர் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?
|
குறிப்பறியும் ஆற்றல் பெற்றவர் மற்ற மாந்தரிடமிருந்து வேறுபட்டவர்.
ஒருவர் மனத்தில் எண்ணியதை அவர் கூறாமலே உணர்ந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் வேறுபட்டவரே யாவர்.
அவர்கள் மற்றவர்களினும் கூடுதலான சிறந்த திறன் ஒன்று பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கூறவந்த பாடல் இது. இதனால், கூறாமலேயே அறிந்து கொள்ள இயலாதவர் மனிதரே அல்லர் என்றோ அறிவிற் குறைந்த விலங்கு அல்லது மரம் முதலியவைகட்குச் சமமானவர் என்றோ பொருளல்ல.
சிரிப்பதும் பேசுவதும் எழுதுவதும் உயிர்களுக்குள் மனிதர்களுக்கே உரிய பண்புகள். பேச்சின் வழிதான் மனிதன் தன் உள்ளக்கருத்தினை வெளிப்படுத்துகிறான். பேச்சு என்பது மனித இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுவது. ஒருவன் பேசாமலேயே அவன் உள்ளக் கருத்தை அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களும் இவ்வுலகில் உண்டு என்பது வள்ளுவர் கருத்து. கூறாமையை குறிப்பால் உணர்ந்து கொள்வதென்பது எளிய செயலல்ல. சொற்களின் உதவி இல்லாமலேயே பிறரது மற்றக் குறிப்புகளால் அவர் உளக்குறிப்பை அறிந்து கொள்ளும் தன்மை என்பது எல்லா மாந்தர்க்கும் உரியது அல்ல; மனித இனத்துள்ளும் சிலர்க்கு மட்டுமே கிட்டும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த திறன் என எண்ணுகிறார் அவர்.
குறிப்பறியுந்திறன் பெற்றவர், அத்திறனில்லாதவர் இந்த இருவகை மாந்தர்க்கும் உறுப்புகளால் வேறுபாடு ஒன்றும் இல்லை; ஆனாலும் அத்திறன் பற்றியே அவர்கள் இருவரும் வேறு வேறு தான் எனவும் அவர் கூறுகிறார்.
|
இக்குறள் கூறும் செய்தி என்ன?
குறிப்புணர்வான் குறிப்புணரமாட்டாதவன் இருவருக்கும் உறுப்புக்களில் ஒற்றுமை உண்டு; ஆனால் இருவரும் வேறு வேறு என்கிறது இப்பாடல்.
இப்பாடல்வழி என்ன கருத்து சொல்லப்படுகிறது? உறுப்பு என்ற சொல் ஆளப்பட்டுள்ளதால் அதைத் திறவாகக் கொள்ளலாம். ஐம்பொறிகள்வழி ஐம்புலன்கள் இயங்கி மனிதனைச் செயல்படச் செய்கின்றன. இவற்றை ஐந்தறிவு எனக்கொண்டால் மனிதனுக்கு ஆறாம் அறிவு -பகுத்தறியும் அறிவு- என்ற ஒன்றும் உண்டு. அதுவே மற்ற உயிர்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. அதுபோல் குறிப்பறியும் திறன் கொண்டோர் அதாவது ஒருவர் மனத்திலிருப்பதை அவர் கூறாமலே தெரிந்துகொள்ளும் தன்மையர், பகுத்தறியும் மாந்தரை விட வேறுபட்டு அவரைவிட மேலானவர் ஆகிறார் என்பது இக்குறள் கூறும் கருத்து. மேலானவர் என்பது இவ்வதிகார்த்து முந்தைய குறள்களில் சொல்லப்பட்டவனவற்றில் இருந்து கொள்ளப்படுகிறது.
இனி, விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் (கல்லாமை 410 பொருள்: விலங்கொடு நோக்க மக்கள் எவ்வளவு ஒப்பர், அவ்வளவு கல்லாதவர் நல்ல நூல்களைக் கற்றவரோடு) என்ற மற்றொரு செய்யுள் இக்குறள் நடையோடு ஒத்துள்ளது என்பர்.
'விலங்குகளைக் காட்டிலும் மனிதர் எத்தனை அளவு மேன்மையாக உள்ளனரோ, அத்தனையளவு தாழ்ந்தவர் கல்வியறிவுடையவரோடு நோக்கும் பொழுது கல்லாதவர்' என்பது கல்லாமைச் செய்யுளின் கருத்து. இப்பாடலில் உறுப்புகளால் மட்டுமே குறிப்புணர்வாரும் அத்திறன் இல்லாரும் ஒற்றுமையுடையவர். மற்றப்படி குறிப்பறி திறன் பெற்றார் வேறு இனம். குறிப்பறிய மாட்டாதார் வேறு வகை. அங்கு கல்விஅறிவு வேறுபடுத்துகிறது. இங்கு குறிப்பறிதிறன் வேறுபடுத்துகிறது. அங்கு விலங்கு என்ற சொல்லாட்சியால் இழிவு கூறப்பட்டது; இங்கு அந்த இழிவைச் சொல்ல இடமில்லை.
|
ஒருவன் தன் மனத்தில் கருதியதை அவன் சொல்லாமலே குறிப்பினால் அறிந்துகொள்ள வல்லவரோடு மற்றையவர் உறுப்புக்களால் ஒத்தவரே; ஆயினும் வேறானவர் என்பது இக்குறட்கருத்து.
குறிப்பறிதல் திறன் கொண்டவர் மற்ற மாந்தர்களிடமிருந்து வேறுபட்டவர்.
ஒருவன் தன் மனத்தில் எண்ணியதை அவன் சொல்லாமலே குறிப்பினால் அறிந்துகொள்ள வல்லாரோடு மற்றையவர் உறுப்புக்களால் ஒத்தவர்; ஆனாலும் வேறானவர்.
|