குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்
(அதிகாரம்:குறிப்பறிதல்
குறள் எண்:703)
பொழிப்பு (மு வரதராசன்): (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
|
மணக்குடவர் உரை:
முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை, உறுப்பினுள் அவர் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்து, துணையாகக் கூட்டிக் கொள்க.
உறுப்பினுள் என்பதற்குத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனவும் அமையும்.
பரிமேலழகர் உரை:
குறிப்பின் குறிப்பு உணர்வாரை - தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து அதனால் பிறர் குறிப்பறியும் தன்மையாரை; உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் - அரசர் தம் உறுப்புக்களுள் அவர் வேண்டுவதொன்றனைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்க.
(உள் நிகழும் நெறி யாவர்க்கும் ஒத்தலின், பிறர் குறிப்பறிதற்குத் தம் குறிப்புக் கருவியாயிற்று, உறுப்புக்களாவன: பொருளும், நாடும், யானை குதிரைகளும் முதலிய புறத்து உறுப்புக்கள். இதற்குப் 'பிறர் முகக்குறிப்பானே அவர் மனக்குறிப்பு உணர்வாரை' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் குறிப்பு அறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.)
வ சுப மாணிக்கம் உரை:
முகச்சாடையினால் உள்ளத்தை உணர்பவரை எது கொடுத்தும் அவையில் அமர்த்திக்கொள்க.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்.
பதவுரை: குறிப்பின்-மெய்ப்பாட்டினால்; குறிப்பு-(அகக்) கருத்து; உணர்வாரை-அறிவாரை; உறுப்பினுள்-அங்கத்துள், அவையுள்; யாது-எது; கொடுத்தும்-தந்தும்; கொளல்-பெறுக.
|
குறிப்பின் குறிப்புணர் வாரை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை;
பரிப்பெருமாள்: முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை;
பரிதி: அரசன் நினைத்த நினைவை அறிவானை;
காலிங்கர்: அரசரது முகங்கொண்ட குறிப்பினான் அவர் யாதானும் ஒரு கருமத்தை அவர் உள்ளம் கொண்ட குறிப்பினை அறிவார் யாவர்;
பரிமேலழகர்: தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து அதனால் பிறர் குறிப்பறியும் தன்மையாரை;
பரிமேலழகர் குறிப்புரை: உள் நிகழும் நெறி யாவர்க்கும் ஒத்தலின், பிறர் குறிப்பறிதற்குத் தம் குறிப்புக் கருவியாயிற்று,
'முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களான மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'அரசன் நினைத்த நினைவை அறிவானை' என்றார். பரிமேலழகர் 'தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து அதனால் பிறர் குறிப்பறியும் தன்மையாரை' என்று வேறுபாடான உரை தருகிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறரது முகக்குறிப்பினால் அகக்குறிப்பை அறிவாரை', 'ஒருவனுடைய குறிகளிலிருந்தே அவனுடைய கருத்தை அறியக் கூடியவர்களை', 'முகக்குறிப்பினாலே உள்ளக்குறிப்பை அறிய வல்லவரை', 'முகக் குறியினால் அகக் குறிப்பை அறிய வல்லவரை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பிறர் முகக் குறிப்பினாலே மற்றவர் உள்ளக்கருத்தை அறிய வல்லவரை என்பது இப்பகுதியின் பொருள்.
உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உறுப்பினுள் அவர் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்து, துணையாகக் கூட்டிக் கொள்க.
மணக்குடவர் குறிப்புரை: உறுப்பினுள் என்பதற்குத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனவும் அமையும்.
பரிப்பெருமாள்: தன் உறுப்பினுள் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்துத் துணையாகக் கூட்டிக் கொள்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: உறுப்பினுள் என்பதற்குத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனவும் அமையும். குறிப்பறிவாரை அறிதல் குறிப்பறிதலாயிற்று. குறிப்பறிவாரை அரசன் கடியப்படுமோ கூட்டப்படுமோ என்று ஐயமுற்றார்க்குக் கூறப்பட்டது. இவை இரண்டும் அரசன் மேலன.
பரிதி: கரணம் வேண்டினாலும் கொடுத்து உறவு கொள்வான் என்றவாறு. [கரணம்-உறுப்பு]
காலிங்கர்: மற்று அவர் தம்மை அவ்வரசரானோர் தாம் படைத்துளவான அவற்றுள் பெரிதும் உறுப்பு உடையவாகச் சிறந்தனவற்றால் யாதானும் கொடுத்துக் கைக்கொள்க என்றவாறு.
பரிமேலழகர்: அரசர் தம் உறுப்புக்களுள் அவர் வேண்டுவதொன்றனைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்க.
பரிமேலழகர் குறிப்புரை: உறுப்புக்களாவன: பொருளும், நாடும், யானை குதிரைகளும் முதலிய புறத்து உறுப்புக்கள். இதற்குப் 'பிறர் முகக்குறிப்பானே அவர் மனக்குறிப்பு உணர்வாரை' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் குறிப்பு அறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.
'அரசர் தம் உறுப்புக்களுள் அவர் வேண்டுவதொன்றனைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். உறுப்பு என்பதற்கு மெய்யுறுப்புகள் எனவும் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தன் உடலுறுப்புகளுள் எதுவும் கொடுத்து ஒருவன் துணையாகக் கொள்வானாக', 'என்ன வேண்டுமானாலும் கொடுத்துத் துணைவர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்', 'அரசன் தனக்கு உறுப்பான பொருள், படை முதலியவற்றுள் எதனை யாவது கொடுத்துத் தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்', 'அவர் விரும்பும் பொருள் எதையும் கொடுத்து அடைக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
எதைக் கொடுத்தும் தம் அவையில் இருத்திக் கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பிறர் முகக் குறிப்பினாலே மற்றவர் உள்ளக்கருத்தை அறிய வல்லவரை உறுப்பினுள் எதைக் கொடுத்தும் இருத்திக் கொள்க என்பது பாடலின் பொருள்.
'உறுப்பினுள்' என்பதன் பொருள் என்ன?
|
குறிப்பினாலே பிறர் உள்ளக் கருத்தை அறிபவனைத் தலைவர் தன் அருகில் வைத்துகொள்வது மிகுந்த நலம்பயக்கும்.
குறிப்பினாலே உள்ளக் கருத்தை அறியவல்லவரை அவர் வேண்டுவது யாதாயிருப்பினும் அதனைக் கொடுத்துத் தலைவர் தனக்குத் துணையாக அவையில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
வாயாற் சொல்லாமல் பிறர் குறிப்பறிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர் தனிச் சிறப்புடையவராவார். அவ்வாறு கண் முகம் இவற்றின் அல்லது மற்ற குறிப்புகளைப் பார்த்து உள்ளக் குறிப்பை உணருபவரை என்ன கொடுத்தாயினும் தலைவர் தமது அவையிற் கொள்ளவேண்டும் என்கிறது பாடல்.
ஒருவரின் உள்ள ஓட்டத்தைப் புரிந்து கொள்ளுதல் குறிப்பறிதல் எனப்படும். மனத்தில் உள்ள எல்லாவற்றையும் சொல்லால் விளக்கிப் பேசமுடியாத சூழலும் எழும். பேச முடிந்தாலும் சில சூழ்நிலைகள் அப்படிப் பேச இடந்தராது. இன்னும் சில நேரங்களில் நாம் சொல்லாமலே மற்றவர்கள் நம் மனக்குறிப்பை உணர்ந்து கொண்டால் நன்றாயிருக்குமே என நம் மனம் விழையும். அவ்விதம் நடக்கும்போது நாம் வலிமை பெற்றதாக உணர்வோம். தலைவனின் குறிப்பறிந்து நடக்கும் தொண்டர்களால் அவனது குறிக்கோள் எளிதில் நிறைவேறும்.
இக்கட்டான நேரங்களில் செய்திகளை எல்லோர் முன்னிலையிலும் எடுத்துரைக்க முடியாதபோது குறிப்புணர்ந்து செயல்படுபவர்கள் துணை தேவைப்படும். விரைவில் முடிக்கவேண்டிய செயலுக்குக்கும் குறிப்பறிதல் துணை செய்யும். இவைபோன்ற பல சூழ்நிலைகளில் குறிப்புணர்ந்து செயல்படுவது மிகுந்த பயனளிக்கும்.
அதனால்தான் குறிப்புணர்வார்களின் தேவையையும் அதற்காக என்ன விலையையும் கொடுக்கலாம் என்று குறள் கூறுகிறது.
குறிப்பிற் குறிப்புணர்வார் என்றதற்குப் 'பிறர் முகக்குறிப்பினால் பிறர் உளக்கருத்தினை அறியுமவர்' என்ற பொருளே சிறந்து நிற்கிறது. இது முதலிலுள்ள குறிப்பு என்பதற்கு முகக்குறிப்பு என்றும் அடுத்துவரும் குறிப்பு என்ற சொல்லுக்கு அகக்குறிப்பு எனவும் கொண்டு அமைந்தது.
இவ்வதிகாரப் பாடல்கள் தலைவரைச் சேர்ந்தொழுகுவாரைப் பற்றியதாகவே உள்ளன. தலைவரது மனக்கருத்தையறிதல் மட்டுமன்றி அவரைச் சுற்றியுள்ளவர்கள், குடிகள், அயலார், மாற்றார் போன்ற பிறர் மனக் கருத்துக்களையும் அறியக்கூடிய ஆற்றல் அமைந்திருத்தல் பெரிதும் நன்மை தரும்.
தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஓர் உரை உள்ளது.
'அனைவர் மனக்கருத்தையும் அவரவர்கள் முகக்குறிப்பாலும், கண்பார்வையாலும் அறிபவரே குறிப்பிற் குறிப்புணர்வார் ஆகிறார்.
'குறிப்பின் குறிப்பு உணர்தல்' என்ற திறன் கொண்டவரது துணை இன்றைய சூழலில் ஆட்சியாளர், பெரும்நிறுவனத்திலுள்ள மேலாண்மையாளர் போன்றோர்க்கும் மிகவும் பொருந்தி வரும்.
ஒருவர்தம் முகம், கண், உடல் ஆகியவற்றின் குறிப்பால் அவரது அகத்தில் உள்ளதை நன்கு அறிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவரை தமக்குத் துணையாகக் கொண்டால் அவரால் கிடைக்கும் பயன்கள் அளப்பறியதாக இருக்கும். எள் என்று நினைக்கும் முன்னே எண்ணெய்யுடன் நிற்கும் உதவியாளரைப் பெற்ற மேலாளர் தான் எண்ணியது விரைவில் நடந்தேறி நன்மை எய்தப் பெறுவார்.
|
'உறுப்பினுள்' என்பதன் பொருள் என்ன?
'உறுப்பு' என்பதற்கு மெய்யின் உறுப்புக்கள் என்றும் அரசனுறுப்பாகிய பொருளும், நாடும், யானை குதிரைகள் என்றும், அரசவையில் உறுப்பாக்குதல் என்றும் உரை கூறினர்.
இரா சாரங்கபாணி '....... ஏனை யுறுப்போ ரனையரால் வேறு (704) ................உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் (705) என இவ்வதிகாரத்து மக்களின் உறுப்பையே கூறுதனால், ஈண்டும் அதனையே கோடல் பொருந்தும். குறளகத்து ‘உறுப்பு’ வேறு பொருளைக் குறிப்பின் ..............வல்லரணும் நாட்டிற் குறுப்பு (737) நட்பிற்குறுப்புக் கெழுதகைமை........ (802) என ஆசிரியர் விதந்து கூறும் நெறியுடையர். ஆதலின், மெய்யுறுப்பு என்னும் பொருளே பொருந்துவதாகும். உடலுறுப்புகளுள் கண்ணையும் கொடுத்து நட்பாகக் கொள்ளலாம் என்னும் மு கோ உரை தகும்' என மெய்யுறுப்பு என்பதே வள்ளுவர் கருதியதாகலாம் என்பார். தண்டபாணி தேசிகரும் இக்கருத்தினரே. மெய்யுறுப்புகள் கொடுத்து ஒருவரைத் தெரிந்து தெளிதல் என்பதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. அப்படி ஒரு வழக்கம் முன்பு இருந்தது என்பதற்குச் சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
செல்வம், நாடு, தேர், யானை குதிரைகள் போன்ற மதிப்புமிக்க உடைமைகளைக் கொடுத்தாகிலும் குறிப்புணர்வானைக் கொள்ளலாம் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே.
செல்வம் முதலியவற்றுடன் பெண் கொடுத்தும் கொளல் வேண்டும் என்றும் ஓர் உரை சொல்கிறது.
இதனினும் வ சுப மாணிக்கம் கூறும் 'அவையில் அமர்த்திக்கொள்க' என்னும் பொருள் பொருத்தமாக உள்ளது. இவர் உறுப்பினுள் என்பதற்கு அவையினுள் எனக் கொள்கிறார். தலைவனுக்கு அணுக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இக்குறள் கூறவரும் கருத்து. எனவே அவையில் அமர்த்திக்கொள்க என்பது சிறக்கிறது.
'உறுப்பினுள்' என்பது அவையினுள் குறித்தது.
|
பிறர் முகக் குறிப்பினாலே மற்றவர் உள்ளக்கருத்தை அறிய வல்லவரை எதைக் கொடுத்தும் தம் அவையில் இருத்திக் கொள்க என்பது இக்குறட்கருத்து.
குறிப்பறிதல் ஆற்றல் பெற்றவர்க்கு பெரும் விலை கொடுக்கலாம்.
பிறரது முகக்குறிப்பினால் அவரது உள்ளத்தை உணர்பவரை எது கொடுத்தும் தம் அவையில் ஏற்றுக் கொள்க.
|