இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0701கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:701)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஓர் அணிகலன் ஆவான்.

மணக்குடவர் உரை: அரசன் மனநிகழ்ச்சியை அவன் கூறுவதன்முன்னே நோக்கி அறியுமவன், எல்லா நாளும் மாறாநீர் சூழ்ந்த வையத்துக்கு அணிகலனாவான்.
இது மக்களிற் சிறப்புடையனா மென்றது.

பரிமேலழகர் உரை: குறிப்பு கூறாமை நோக்கி அறிவான் - அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.
(ஒட்பமுடையனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான், 'வையக்கு அணி' என்றார். குறிப்பும் வையமும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.)

தமிழண்ணல் உரை: ஒருவர் தம் கருத்தை வாய்விட்டுக் கூறுவதன் முன்பே அவர்தம் உள்ளக்குறிப்பை, முகத்தையும் கண்ணையும் உற்றுநோக்கியே, அறியக்கூடியவன் எக்காலத்திலும் வற்றாத நீரால் சூழப்பட்ட உலகிற்குச் சிறந்த அணிகலன் போன்றவன் ஆவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி.

பதவுரை: கூறாமை-சொல்ல வேண்டாமல்; நோக்கி-பார்த்து; குறிப்பு-கருதியதை; அறிவான்-தெரிபவன்; எஞ்ஞான்றும்-எப்போதும்; மாறா-மாறுபடாத; நீர்-நீர்; வையக்கு-நில உலகத்திற்கு; அணி-அணிகலம், நகை.


கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் மனநிகழ்ச்சியை அவன் கூறுவதன்முன்னே நோக்கி அறியுமவன்;
பரிப்பெருமாள்: அரசன் கூறுவதன்முன்னே அவன் மனநிகழ்ச்சியை நோக்கி அறியுமவன்;
பரிதி: அரசன் மனத்திலே எண்ணியதைச் சொல்லாமல் அறிவான்;
காலிங்கர்: அரசன் சொல்ல வேண்டாமல் அவன் உள்ளம் அறிந்ததனை முன்னம் குறிப்பினான் அறிந்து கொள்வான் யாவனோர் அமைச்சன்;
பரிமேலழகர்: அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்;

'அரசன் கூறுவதன்முன்னே அவன் மனநிகழ்ச்சியை நோக்கி அறியுமவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூறாமலே முகம்பார்த்துக் குறிப்பு அறிபவன்', 'ஒருவன் கூறாமலே அவன் முகக்குறிப்பை நோக்கி மனத்திலுள்ளதை அறிபவன்', 'வாயால் சொல்ல முடியாத நிலைமையிலிருக்கிற இன்னொருவனுடைய மனக் குறிப்பை அறிந்து அதன்படி நடக்கக்கூடியவன்', 'ஒருவன் முகத்தை நோக்கிய அளவிலேயே அவன் யாதுங் கூறாமலே அவனது உள்ளக் கருத்தை அறிய வல்லவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவன் ஏதும் கூறாமலே அவனை உற்று நோக்கி உள்ளத்திலுள்ளதை அறிபவன் என்பது இப்பகுதியின் பொருள்.

எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா நாளும் மாறாநீர் சூழ்ந்த வையத்துக்கு அணிகலனாவான்.
மணக்குடவர் குறிப்புரை: இது மக்களிற் சிறப்புடையனா மென்றது.
பரிப்பெருமாள்: எல்லா நாளும் மாறாநீர் சூழ்ந்த வையத்துக்கு அணிகலனாவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மக்களிற் சிறப்புடையனா மென்றது.
பரிதி: சமுத்திரம் சூழ்ந்த உலகத்திற்கு ஆபரணம் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவன் எஞ்ஞான்றும் வற்றா நீராகிய கடல் சூழ்ந்த வைப்பிற்கு ஓர் அணிகலம். எனவே வையத்து வாழ்வோர்க்குப் பெரிதும் ஒளி(யுடை அணிகலத்தனை)யன் என்பது பொருளாயிற்று என்றவாறு,
பரிமேலழகர்: எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.
பரிமேலழகர் குறிப்புரை: ஒட்பமுடையனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான், 'வையக்கு அணி' என்றார். குறிப்பும் வையமும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.

'எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்துக்கு என்றும் ஓர் அணியாவான்', 'எக்காலத்தும் வற்றாத கடல் நீரால் சூழப்பட்ட உலகத்தார்க்கு அணியாவான்', 'வற்றாத கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் எப்போதும் ஒரு விலையுயர்ந்த பொருளாக மதிக்கத் தகுந்தவன்', 'எக்காலத்தும் கடல் சூழ்ந்த உலகத்திற்கோர் அணி ஆவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எப்பொழுதும் வற்றாத நீரால் சூழப்பட்ட உலகத்தார்க்கு ஓர் அணிகலன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவன் ஏதும் கூறாமலே அவனை உற்று நோக்கி உள்ளத்திலுள்ளதை அறிபவன், எப்பொழுதும் மாறாநீர் வையக்கு அணி என்பது பாடலின் பொருள்.
'மாறாநீர் வையக்கு அணி' குறிப்பது என்ன?

ஒருவனைப் பார்த்தவுடன் அவனது எண்ணஓட்டங்களை உணரவல்லவனை உலகம் விரும்பும்.

ஒருவர்தம் உள்ளத்தில் கொண்டுள்ள கருத்தை அவர் கூறாமலேயே அறியக்கூடியவன் எக்காலத்தும் மாறாத நீர் சூழ்ந்த உலகத்துக்கு ஓர் அணிகலன் ஆவான்.
ஒருவன் வாய் திறந்து சொல்லும் முன்னரே அவனைக் கூர்ந்து பார்த்து அவன் கருதிய பொருளை ஒரு சிலரால் அறியமுடியும். இப்படிப் பார்வையைச் செலுத்துவதற்குத் தனி ஆற்றல் வேண்டும். உள்ளத்தை ஊடுருவும் உரனுடைய பார்வையைத்தான் இப்பாடலிலுள்ள நோக்கு என்ற சொல் குறிக்கிறது. இங்கு நோக்கு என்பது மனப்பார்வை எனப்பொருள்படும். பிறர் உள்ளம் எவ்வாறு இருக்கின்றது என்பதை ஆராய்ந்து உணர்வதில் குறியாய் இருந்து அவர்கள் வெற்றி காண்கின்றனர். உலகமும் அப்படிப்பட்டவர்களை அணியாக ஏற்று மகிழும்.

சொற்களைப் பயன்படுத்தாத சூழலில் ஒருவர் மனதில் கருதிய குறிப்பை அறிந்து கொள்ளுதல் குறிப்பறிதல் எனப்படும். உள்ளத்தைக் காட்டும் கண்ணாடிகளாக உள்ள முகம் கண்கள் இவற்றைக் கொண்டும் உடல்மொழி வாயிலாகவும் ஒருவர் உள்ளக் கிடக்கையை அறியும் ஆற்றல் கைவரப் பெறுவது எல்லாராலும் இயலக்கூடியதன்று. அச்சிறப்பான இயல்பு. உடையவர்களை மாறாத நீர் நிறைந்த உலகம் அணியாக எண்ணும்.
கூறாமையை நோக்கிக் குறிப்பு அறிவான் என்பதற்கு தலைவன் வாயாற் சொல்லமுடியாதிருத்தலைக் குறிப்பாற் கண்டு தெளிந்து அச்செயலைச் செய்து முடிக்க வல்ல அமைச்சன் உலகத்திற்கே அணிபோல்வான் எனவும் இக்குறளுக்குப் பொருள் கூறுவர்.

'மாறாநீர் வையக்கு அணி' குறிப்பது என்ன?

'மாறாநீர் வையக்கு அணி' என்றதற்கு மாறாநீர் சூழ்ந்த வையத்துக்கு அணிகலன், சமுத்திரம் சூழ்ந்த உலகத்திற்கு ஆபரணம், வற்றா நீராகிய கடல் சூழ்ந்த வைப்பிற்கு ஓர் அணிகலம், வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம், உலகத்திற்கு ஓர் அணிகலன், வற்றாத நீரால் சூழப்பட்ட உலகிற்குச் சிறந்த அணிகலன் போன்றவன், இந்த வற்றாத கடல் சூழ்ந்த உலகத்திற்கு அணி, உலகத்துக்கு ஓர் அணி, வற்றாத கடல் நீரால் சூழப்பட்ட உலகத்தார்க்கு அணி, வற்றாத கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் ஒரு விலையுயர்ந்த பொருளாக மதிக்கத் தகுந்தவன், வற்றாத நீர்சூழ்ந்த உலகுக்கு அணிகலம் போல்வான், கடல் சூழ்ந்த உலகத்திற்கோர் அணி, வற்றாத நீரால் சூழப்பட்ட உலகத்திற்கு அணிகலன் போன்றவன், கடல்சூழ் உலகுக்கு ஓர் அணிகலன், வற்றாத கடலைத் தன்னுட்கொண்ட ஞாலத்தில் வாழ்வார்க்கு ஓர் அணிகலமாம், தண்ணீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு என்றும் ஆபரணம் போல் இருப்பான் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அணி ஒருவர்க்குப் பெருமை சேர்ப்பது. மக்களுக்கு நடுவில் குறிப்புணர்வான் தனித்துத் தெரிவான் என்பதற்காக அவன் ஒளிவீசும் அணி போல்வான் எனச் சொல்லப்பட்டது.
வையத்திற்கு என்பது விகாரப்பட்டு வையக்கு என்று நின்றது; உலகிற்கு அல்லது உலகில் உள்ளார்க்கு எனப் பொருள்படுவது.
மாறாநீர் என்பதற்கு வற்றாநீர் அல்லது அளவு மாறுபடா நீர் அதாவது கடல்நீர் எனப் பொருள் கண்டு உலகம் உள்ளளவும் அவனழியினும் அவன் புகழ் வையத்திற்கு அணியாம் என உரைத்தனர். வையக்கு மாறாநீர் அணி எனக் கூட்டி உலகத்திற்கு அழியாத்தன்மையுடைய அணி எனவும் உரை கூறினர். வையத்திற்கு அணியெனவே வையத்திலுள்ளார்க்கு அவ்வணியாலாய ஒளி எனப் பொருள் கண்டார் காலிங்கர்.
தேவநேயப்பாவாணர் 'ஞாலம் நீராற் சூழப்படாமல் அதைத் தன்னுள் ஒரு கூறாகக் கொண்டிருப்பதாலும், நீராற் சூழ்ப்பட்டநிலப்பகுதி பலவாதலாலும் மாறாநீரைத் தன்னுட் கொண்ட ஞாலம்' என்றார். இதன் கருத்து 'உலக முழுதிற்கும் இவன் அணியாவன் என்பதாம்' என்பது. ஜி வரதராசன். 'நீர் உலகமக்களுக்கு மிகமிக இன்றியமையாதது அதுபோல அரசனுக்கு அமைச்சன் இன்றியமையாதவன்' என்றும் அணிகள் ஒருவனுடைய தகுதியையும் தோற்றத்தையும் மிகைப்படுத்திக் காட்டும். அதுபோல அரசனுடைய தகுதியையும் பெருமையையும் ஆற்றலையும் உலகறியச்செய்தலின் அணி என்றார்' என்றும் விளக்கினார். 'குறிப்பறியும் அமைச்சனை அரசர்க்கு அணியென்னாது வையக்கு என்றது, அமைச்சனாற் பயன் கொள்வது நாடேயாகலான் என்க' என்பது தண்டபாணி தேசிகர் கருத்துரை

'மாறாநீர் வையக்கு அணி' என்பது வற்றாத நீரால் சூழப்பட்ட உலகிற்கு அணிகலன் என்ற பொருள் தரும்.

ஒருவன் ஏதும் கூறாமலே அவனை உற்று நோக்கி உள்ளத்திலுள்ளதை அறிபவன், எப்பொழுதும் வற்றாத நீரால் சூழப்பட்ட உலகத்தார்க்கு ஓர் அணிகலன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

சொற்கள் பயன்படாத சூழலில் ஒருவரின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளுதல் குறிப்புஅறிதல்.

பொழிப்பு

ஒருவன் எதுவுங் கூறாமலே அவனை நோக்கிக் குறிப்பு அறிபவன் எக்காலத்தும் வற்றாத நீரால் சூழப்பட்ட உலகத்துக்கு ஓர் அணியாவான்.