இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0690இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

(அதிகாரம்:தூது குறள் எண்:690)

பொழிப்பு (மு வரதராசன்): தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.

மணக்குடவர் உரை: தனக்கு இறுதி வருமாயினும், ஒழியாது தன்னிறைவற்கு நன்மையைத் தருவது தூதாவது.

பரிமேலழகர் உரை: இறுதி பயப்பினும் எஞ்சாது - அவ்வார்த்தை தன் உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் - தன் அரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான்.
('இறுதி பயப்பினும்' என்றதனால், ஏனைய பயத்தல் சொல்ல வேண்டாவாயிற்று. இவை மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: தன் உயிர்க்கு முடிவு நேர்ந்தாலும் சொல்ல வந்த செய்திகளுள் ஒன்றையும் விடாமல் மன்னனுக்கு உறுதி பயக்கும் செய்தியைச் சொல்லுபவனே தூதன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது.

பதவுரை: இறுதி-முடிவு; பயப்பினும்-தருமாயினும்; எஞ்சாது-ஒழியாமல்; இறைவற்கு-மன்னவனுக்கு; உறுதி-மிகுதி; பயப்பதாம்-விளைவிப்பது; தூது-தூதன்.


இறுதி பயப்பினும் எஞ்சாது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு இறுதி வருமாயினும், ஒழியாது;
பரிப்பெருமாள்: தன் உயிர்க்கு இறுதி பயக்குமாயினும், சொல்லுதலை ஒழியாதே சொல்லுதலின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இறுதி பயப்பினும் என்றமையான் அரசன் சொன்ன மாற்றத்தையே சொல்லுக என்றது.
பரிதி: தனக்கு இறுதிவரினும் அஞ்சாமல்;
காலிங்கர்: தான் சென்று பகை வேந்தர் முன்னர்க் கருமம் சொல்லுங்கால் கண்ணஞ்சாது சொல்ல வேண்டுவனவும் சொல்லி மற்று அதனால் தன் உயிர்க்கு இறுதி அடுப்பினும் ஒழிய விடாது [அடுப்பினும் -வரினும்; ஒழியவிடாது-நீங்கவிடாமல்]
பரிமேலழகர்: அவ்வார்த்தை தன் உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது;
பரிமேலழகர் குறிப்புரை: 'இறுதி பயப்பினும்' என்றதனால், ஏனைய பயத்தல் சொல்ல வேண்டாவாயிற்று.

'தன் உயிர்க்கு இறுதி பயக்குமாயினும், சொல்லுதலை ஒழியாதே சொல்லுதலின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தனக்கு சாவு வரினும்', 'தன் உயிர்க்கு முடிவு நேர்ந்தாலும் சொல்ல வந்த செய்திகளுள் ஒன்றையும் விடாமல்', 'தனக்கு மரணம் வருவதானாலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும் மிச்சமில்லாமல் செய்து', 'தனக்கு முடிவு வருவதாய் இருந்தாலும், தான் சொல்ல வேண்டியதைக் குறைத்துக் கூறாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன் உயிர்க்கு இறுதி பயக்குமாயினும் சொல்லிவிட்டவைகளில் ஒன்றையும் விடாமல் என்பது இப்பகுதியின் பொருள்.

இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னிறைவற்கு நன்மையைத் தருவது தூதாவது
பரிப்பெருமாள்: தன் அரசனுக்கு உறுதி உண்டாம் சொற்களைக் கூறுமவன் தூதானவான் என்றவாறு.
பரிதி: அரசற்கு உறுதியான காரியம் பண்ணுவான் என்றவாறு.
காலிங்கர்: தன் இறைவனாகிய அரசனுக்கு வேண்டும் கரும உறுதியைப் பயக்க நிற்பது யாது மற்று அதுவே தூதாவது என்றவாறு.
பரிமேலழகர்: தன் அரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.

'தன் அரசனுக்கு உறுதி உண்டாம் சொற்களைக் கூறுமவன் தூதானவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். உறுதி என்றதற்கு மணக்குடவர் நன்மை என்றும் பரிப்பெருமாள், பரிதி, காலிங்கர் ஆகியோர் உறுதி என்றும் பரிமேலழகர் மிகுதி என்றும் பொருள் கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன் அரசனுக்குக் குறையாத நலம் செய்பவனே தூதன்', 'மன்னனுக்கு உறுதி பயக்கும் செய்தியைச் சொல்லுபவனே தூதன்', 'தன்னுடைய அரசனுடைய நன்மையை நாடுகின்றவன்தான் சரியான தூதன்', 'தம் அரசனுக்கு உறுதியானவற்றை வேற்று அரசரிடம் தெரிவிப்பவனே சிறந்த தூதனாவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தன் அரசுக்கு உறுதி தருவதாய் உரைப்பவன் தூதனாவான் என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
தன் உயிர்க்கு இறுதி பயக்குமாயினும் சொல்லிவிட்டவைகளில் ஒன்றையும் விடாமல், தன் அரசுக்கு உறுதி தருவதாய் உரைப்பவன் தூதனாவான் என்பது பாடலின் பொருள்.
'எஞ்சாது' என்ற சொல்லின் பொருள் என்ன?

தனக்கு அழிவே தருவதாயினும் தன் நாட்டிற்கு நன்மைதருமாறு உரைப்பவனே தூதன்.

தன் அரசு மாற்றரசுக்கு விடும் சொல்லை, தன் உயிருக்கே அழிவு தருவதாய் இருப்பினும், ஒன்றுவிடாமல் சொல்லித் தன் அரசுக்கு நன்மையைத் தேடித் தருபவன் தூதனாவான்.
தூதுவருக்கு அச்சமின்மை மிகத் தேவையான பண்பு என்றும் தான் கொண்டு செல்லும் செய்தியை அவர் முழுவதுமாகச் சொல்லிவிடவேண்டும் என்றும் கூறுகிறது இப்பாடல். தன் நாட்டிற்கு நன்மையைத் தருவதான செய்தியையே தூது எடுத்துச் செல்வான். அச்செய்தியில் வேற்று நாட்டவரை வெகுண்டெழச் செய்யும் சொற்கள் இருக்கலாம். சினத்தில் தூது வந்தவரைக் காவலில் வைத்தல், கையிற் கிட்டி போட்டடித்தல், கைகால்களைக் குறைத்தல், கண்ணைப் பிடுங்கல் முதலிய கொடிய துன்பத்துக்குள்ளாக்கலாம்; அவர் கொலை செய்யப்படவும் செய்யலாம். இவற்றையெல்லாம் உணர்ந்து செல்லும் தூதுவர் தனது நாட்டுக்கு உறுதிபயக்கும் சொற்களை அஞ்சாது, ஒழியாது, சொல்லிவிட்டுத்தான் திரும்ப வேண்டும் என்கிறது பாடல். தூதுவன் தனக்குத் தீங்கு நேராதவாறு தற்காத்துத் திரும்பிவர வேண்டும் என்று வள்ளுவர் எண்ணவில்லை. மாறாகக் கடமையை முழுவதுமாக ஆற்றுபவனாகத் தூதுவன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். கொல்லப்படும் நிலையிலும் தப்பித்துக்கொள்ள முயலாமல் தனது நாட்டிற்கு உண்மையாக இருப்பவன் தான் தூதுவன். தன் உயிர்க்கு முடிவு நேரிட்டாலும் தூதுரைத்துவிட்டு இறுதியை எய்துக எனச் சொல்லப்பட்டது.

உயிர்க்கேடு நிறைந்தது தூது தொழிலாகும். தூது செல்பவனது உயிர்க்கு எந்த நேரத்திலும் தீங்கு ஏற்படலாம். தூது கொண்டுவந்த செய்தி கசப்பாய் இருந்தால் வேற்றுநாட்டவர் சினந்து, எதையும் சிந்தித்துப் பாராமல், தூதுவன்மீது குற்றம் காண்பர். தூதாக வந்தவரைக் கொல்லுதல் பெருமை சேர்ப்பதல்ல என்றாலும் சொல்லப்பட்ட செய்தி ஏற்கத்தக்கதாக இல்லையாயின் தூதுச் செய்தி சுமந்து வந்தவரையே கொல்லுமளவுக்கு வேற்றுநாட்டினர் துணியக்கூடும். 'Shooting the messenger' என்பது ஆங்கில வழக்கு. இதுபோன்ற சூழ்நிலைகளிலும் தூதர்கள் தம் நாட்டிற்கு உறுதிபயப்பதாய சொற்களை முழுதாக உரைப்பர் என இக்குறள் கூறுகிறது.
உறுதி என்பதற்கு நன்மை என்றும், மிகுதி அதாவது மேன்மை என்றும் பொருள் கண்டனர்.
தன்னுயிர்போவது பற்றிநினையாமல், தன் நாட்டிற்கு நன்மை உண்டாகும் சொற்களை முற்ற உரைத்துக் கடமை ஆற்றுபவனே நல்ல தூதனாவான் என்பது கருத்து.

'எஞ்சாது' என்ற சொல்லின் பொருள் என்ன?

'எஞ்சாது' என்ற சொல்லுக்கு ஒழியாது, ஒழியாதே, ஒழியவிடாது, கூறாதுவிடாமல், குறையாத, ஒன்றையும் விடாமல், மிச்சமில்லாமல், குறைத்துக் கூறாது, கடமையில் தவறாது, சிறுதும் குறைக்காது, அஞ்சி விட்டுவிடாது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எஞ்சாது என்ற சொல் இங்கு, கொண்டு சென்ற செய்தியை அஞ்சாமல் 'ஒன்றையும் விடாது' உரைத்து வருவது என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. அதாவது தன் நாட்டினர் அனுப்பிய தூதுச் செய்தியை முழுக்க உரைத்துப் பதில் பெற்று வருவதைச் சொல்கிறது.
நாமக்கல் இராமலிங்கம் 'எஞ்சாது என்பதற்கு எந்த முயற்சியையும் மிச்சமாக விடாமல் என்பது பொருள்' எனக் கூறி ஏதாயினும் ஒரு வழியில் முயன்றால் தன் அரசனுக்கு நன்மை உண்டாகும் என்று அறிந்து, ஆனால் அந்த வழியில் தனக்கு அபாயம் வருமென்று அறிந்தாலும் அந்த வழியையும் மிச்சம் விடாமல் எல்லா வழிகளிலும் தன் அரசனுடைய நன்மையை நாடுகிறவனே நல்ல தூதன் என்பது கருத்து' எனக் குறளுக்கு விளக்கமும் தருவார்.

எஞ்சாது என்பதற்கு 'ஒன்றையும் விடாது' என்பது பொருள்.

தன் உயிர்க்கு இறுதி பயக்குமாயினும் சொல்லிவிட்டவைகளில் ஒன்றையும் விடாமல், தன் அரசுக்கு உறுதி தருவதாய் உரைப்பவன் தூதனாவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தூது முழுதுரைத்து தன்னாட்டிற்கு நன்மை தேடுவான்.

பொழிப்பு

தூதுவன் தனக்கு மரணம் நேரிடினும் அரசு சொல்லியனுப்பிய செய்தியை முழுமையாகக் கூறி நன்மை பயக்கும் வண்ணம் செயல் முடிப்பான்.