விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்
(அதிகாரம்:தூது
குறள் எண்:689)
பொழிப்பு (மு வரதராசன்): குற்றமான சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.
|
மணக்குடவர் உரை:
தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகை யரசர்க்குச் சொல்லுமவன் தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத அஞ்சாமையையுடைய தூதனாவான்.
பரிமேலழகர் உரை:
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்ல உரியான்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத திண்மையை உடையான்.
(தாழ்வு சாதி தருமமன்மையின், 'வடு' என்றார். 'வாய்சோரா' எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை:
தன் அரசன் சொல்லிவிட்ட செய்தியை வேற்றரசர்க்கு உரைக்கும் தூதன், தனக்குச் செய்யும் துன்பத்திற்கு அஞ்சித் தன் அரசனுக்குக் குற்றம் வரும் சொல்லை வாய்சோர்ந்தும் சொல்லாத உறுதியை உடையவனாவான்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன்.
பதவுரை:
விடு-சொல்லிவிட்ட; மாற்றம்-சொல்; வேந்தர்க்கு-ஆட்சியாளர்க்கு; உரைப்பான்-சொல்லுபவன்; வடு-தாழ்வு, குற்றம்; மாற்றம்-மாறுபட்டநிலை, எதிர்உரை, செய்தி; வாய்-வாய்; சோரா-தவறியும்; வன்கண் அவன்-உள்ள உறுதியுடையவன்.
|
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகை யரசர்க்குச் சொல்லுமவன்; .
பரிப்பெருமாள்: தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகை யரசர்க்குச் சொல்லுமவன்;
இது முதலாகச் சொல்லும் திறன் கூறுகின்றது. ஆகலின் முற்படச் சொல் சொல்லவேண்டும் என்றது.
பரிதி: பரராச்சியத்தில் காரியம் கொள்ளப்போகிற தானாபதி; [பரராச்சியத்தில்-வேற்றுநாட்டில்]
காலிங்கர்: ஒரு வேந்தன் சொல்லிவிடும் மாற்றத்தை வேறு வேந்தர்க்குச் சென்று உரைப்போனானவன் யாவன் எனின்; .
பரிமேலழகர்: தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்ல உரியான்;
'தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகை யரசர்க்குச் சொல்லுமவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர்முன்சென்று செய்திகூறத் தக்கவன்', '(சந்தர்ப்பங்களையொட்டி அரசன் சொல்லி விட்டதற்கு மேல் தான் ஏதேனும் சொல்ல வேண்டி நேரிட்டால்) வேற்றரசரிடம் தூது போகத் தகுதியுள்ளவன்', 'தன் அரசன் சொல்லி விடுத்ததை வேற்று அரசர்க்குச் சொல்லத் தக்கவன் எவனெனில்', 'சொல்லி விடுத்த விடையை அரசர்க்குச் சொல்பவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சொல்லி விடுத்த செய்தியை வேற்று அரசுக்குச் உரைப்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.
வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத அஞ்சாமையையுடைய தூதனாவான்.
பரிப்பெருமாள்: தன்னரசன் சொல்லும் சொற்களுக்கு வடுவான சொற்களை மறந்துஞ் சொல்லாத அஞ்சாமையையுடையவன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முதலாகச் சொல்லும் திறன் கூறுகின்றது. ஆகலின் முற்படச் சொல் சொல்லவேண்டும் என்றது.
பரிதி: குற்றமில்லாத சொல்லை வாய் தடுமாறாமல் சொல்ல வல்லான்; தூது அவனே என்றவாறு.
காலிங்கர்: தன் அரசன் வேற்றரசனுக்குச் சொல்லிவிடும் மாற்றமாயினும் இனி வேற்றரசன் தன் அரசர்க்குச் சொல்லிவிடும் மாற்றாமாயினும் தனித்தனி இராசபாவனைக்கு உரிய மாற்றமாம் அத்துணையல்லது எளிமைப்பட நிகழாமை இயல்பு அன்றே! அதனின் இவை முழுதும் இவர் இவர்க்குச் சென்று இசைப்பின் தனது இராச காரியம் கெடும். ஆகலான் இருபாலும் சென்றால் வாய்ப்பன கூறி, வடு அடுப்பன வழுவியும் புறப்படாமல் செறியப்பிடிக்கும் திறப்பாடு உடையவன் தூது ஆவது என்றவாறு. [இராசபாவனை - அரசனாகப் பாவித்துக் கொள்ளுதற்கேற்ற உரைகள்; இசைப்பின் -சொன்னால்]
பரிமேலழகர்: தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத திண்மையை உடையான்.
பரிமேலழகர் குறிப்புரை: தாழ்வு சாதி தருமமன்மையின், 'வடு' என்றார். 'வாய்சோரா' எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.
'தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத அஞ்சாமையையுடைய தூதனாவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பழிச் செய்தியை வாய்விடா உறுதியாளனே', 'குற்றமானவற்றை வாய் தவறிக்கூட சொல்லிவிடாதிருக்கும் உறுதியுடையவனே', 'அச்சத்தாலே தம் அரசனுக்குத் தாழ்வான சொல்லை வாய்தவறியுஞ் சொல்லாத உறுதியுடையவனே', 'குற்ற உரையை வாயினின்றும் மறந்தும் சொல்லாத திண்மையுடையனாதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தன் அரசுக்குக் குற்றம் உண்டாகும்படி வாய் தவறியும் மாற்றுரை சொல்லாத உறுதியை உடையவனாவான் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
சொல்லி விடுத்த செய்தியை வேற்று அரசுக்கு உரைப்பவன் தன் அரசுக்கு வடுமாற்றம் வாய்சோரா உறுதியை உடையவனாவான் என்பது பாடலின் பொருள்.
'வடுமாற்றம் வாய்சோரா' என்பதன் பொருள் என்ன?
|
எந்த நிலையிலும் வாய்தவறி சொற்களை விடாதவனே தூதுக்கு ஏற்றவன்.
குற்றமான உரையாக வாய்தவறியும் சொல்லாத காப்புறுதி கொண்டவனே தன் அரசு சொல்லி விடும் செய்தியை வேற்றுநாட்டில் உரைக்கத் தக்கவன்.
ஓர் நாட்டினர் பிறிதோர் நாட்டரசுக்குச் சொல்லி அனுப்பும் செய்தியை மொழியும்போது அச்சத்தினாலோ பிற காரணங்களினாலோ வாய்தவறியும் பழி, குற்றம், சிறுமை, வரக்கூடிய சொற்களைச் சொல்லாத உள்ள உறுதியுள்ளவன் தூதுரைக்கத் தக்கவன். தான் சொல்லவேண்டியது தவிர்த்து வேறு ஏதேனும் கூற வேண்டி நேரிட்டாலும் குற்றமானவற்றைச் சொல்லாது அவன் காத்துக் கொள்வான். எந்த ஒரு சூழ்நிலையிலும் குற்றமான சொற்கள் தன் வாயில் வந்துவிடாதபடி உறுதியுடன் சொற்காத்துத் தூதுரைக்க வேண்டும் என்பது கருத்து..
|
'வடுமாற்றம் வாய்சோரா' என்பதன் பொருள் என்ன?
'வடுமாற்றம் வாய்சோரா' என்றதற்குத் தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத, தன்னரசன் சொல்லும் சொற்களுக்கு வடுவான சொற்களை மறந்துஞ் சொல்லாத, குற்றமில்லாத சொல்லை வாய் தடுமாறாமல் சொல்ல வல்லான், வடு அடுப்பன வழுவியும் புறப்படாமல் செறியப்பிடிக்கும் திறப்பாடு உடையவன், தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத, தன் அரசனுக்குத் தாழ்வான வார்த்தைகளை வாய்தவறிச் சொல்லாதபடிக்கும், வடுவையுண்டாக்கக் கூடிய சொற்களை வாய்தவறியும் பேசிவிடாத, தனது அரசன் சோர்ந்தும் வெகுண்டும் சில சொல்லியிருக்கலாம். அந்தச் சொற்களை அப்படியே சோர்ந்து சொல்லாது, பழிச் செய்தியை வாய்விடா, தனக்குச் செய்யும் துன்பத்திற்கு அஞ்சித் தன் அரசனுக்குக் குற்றம் வரும் சொல்லை வாய்சோர்ந்தும் சொல்லாத, குற்றமான பேச்சை வாய் தவறியும் பேசாத, குற்றமான சொற்களை மறந்தும் கூடக் கூறாத, அச்சத்தாலே தம் அரசனுக்குத் தாழ்வான சொல்லை வாய்தவறியுஞ் சொல்லாத, குற்ற உரையை வாயினின்றும் மறந்தும் சொல்லாத, குற்றமான செய்தியை வாய்தவறியும் சொல்லாத, தனக்கு நேரக்கூடிய தீங்கிற்கு அஞ்சி வாய்தவறியும் தாழ்வான சொற்களைச் சொல்லாத, தனக்கு வரும் துன்பத்துக்கு அஞ்சாது சத்தியத்தினின்றும் தவறாமல், என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
வாய்சோர்தலால் ஆகிய வடுமாற்றத்தை தவிர்ப்பான் தூதன் எனச் சொல்லப்பட்டது. வடுமாற்றம் என்றதற்கு குற்றமான சொல், தாழ்வான மொழி எனப் பொருள் கொள்வர்.
வாய் சோர்தல் வாய் குளறுதலைக் குறிக்கும். வாய் தடுமாற்றத்திற்குக் காரணம் தனக்கு நேரக்கூடிய தீங்கிற்கு அஞ்சுவதாம்.
வாய்சோர்தல் என்பதற்குத் தான் தப்பத் தன் கடமையை மறந்து மந்தணத்தை (இரகசியத்தை) வெளியிடல் எனவும் பொருள் கூறுவர்.
பழி உண்டாக்கும் மொழியை வாய்விடாத உறுதியாளனே பகைநாட்டின் முன் சென்று செய்தி கூறத்தக்கவன் என்பது பாடலின் செய்தி.
'வடுமாற்றம் வாய்சோரா' என்ற தொடர் 'வடுவாகும் அதாவது குற்றமாகும் சொல்லை வாய்தவறியும் சொல்லாத என்ற பொருள் தரும்.
காலிங்கர் 'தூதுவிடும் நாடு கேட்டு மறுமொழியளிக்கும் நாடு என இவை இரண்டுக்கும் தத்தம் தகுதி உண்டு. எனவே ஒன்றை ஒன்று இழித்துரைக்க விழையார். வேற்றுநாட்டிற்குச் செல்கின்ற தூதன், அப்படியே நிகழ்ந்ததை சொல்லி பின் திரும்ப வந்து தன் நாட்டில் நடந்ததை அப்படியே சொல்வானாயின் தான்மேற்கொண்ட அரச செயல் கெடும். ஆதலால் வாய்ப்பன கூறி வடுப்பன வழுவியும் வெளிப்படாமற் சொல்லுதல் தூதன்பண்பு' என இக்குறட்கருத்தை விளக்கியுள்ளார்.
'வடுமாற்றம் வாய்சோரா' என்றது குற்றமாகும் சொல்லை வாய்தவறி மொழியாத எனப் பொருள்படும்.
|
சொல்லி விடுத்த செய்தியை வேற்று அரசுக்குச் உரைப்பவன் தன் அரசுக்குக் குற்றம் உண்டாகும்படி வாய்தவறியும் மாற்றுரை சொல்லாத உறுதியை உடையவனாவான் என்பது இக்குறட்கருத்து.
தூதுவன் சொற்காப்பவனாய் இருப்பான்.
சொல்லிவிட்ட செய்தியை வேற்றரசுக்கு உரைக்கும் தூதன், தன் அரசுக்குக் குற்றம் வரும் சொல்லை வாய்சோர்ந்தும் சொல்லாத உறுதியை உடையவனாவான்
|