கடன்அறிந்து காலங் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை
(அதிகாரம்:தூது
குறள் எண்:687)
பொழிப்பு (மு வரதராசன்): தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தை எதிர்நோக்கித் தக்க இடத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.
|
மணக்குடவர் உரை:
காரியம் நின்ற முறைமையை யறிந்து காலத்தையும் நினைத்து இடமும் அறிந்து தானேயெண்ணிச் சொல்லவல்லவன் தலையான தூதனாவான்.
இது தலையான தூதரிலக்கணம் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
கடன் அறிந்து - வேற்றரசரிடத்துத் தான் செய்யும் முறைமை யறிந்து; காலம் கருதி - அவர் செவ்வி பார்த்து; இடன் அறிந்து - சென்ற கருமஞ் சொல்லுதற்கு ஏற்ற இடம் அறிந்து; எண்ணி - சொல்லுமாற்றை முன்னே விசாரித்து; உரைப்பான் தலை - அவ்வாறு சொல்லுவான் தூதரின் மிக்கான்.
(செய்யும் முறையாவது: அவர் நிலையும் தன் அரசன் நிலையும் தன் நிலையும் தூக்கி, அவற்றிற்கு ஏற்பக் காணும் முறைமையும் சொல்லும் முறைமையும் முதலாயின. செவ்வி - தன் சொல்லை ஏற்றுக் கொள்ளும் மன நிகழ்ச்சி. அது காலவயத்ததாகலின் காலம் என்றார். இடம்: தனக்குத் துணையாவார் உடனாய இடம். எண்ணுதல்: தான் அது சொல்லுமாறும், அதற்கு அவர் சொல்லும் உத்தரமும், அதற்குப்பின் தான் சொல்லுவனவுமாக இவ்வாற்றான் மேன்மேல் தானே கற்பித்தல். வடநூலார் இவ்விரு வகையாருடன் ஓலை கொடுத்து நிற்பாரையும் கூட்டித் தூதரைத் தலை, இடை, கடை, என்று வகுத்துக் கூறினாராகலின், அவர் மதமும் தோன்றத் 'தலை' என்றார். தூது என்பது அதிகாரத்தான் வந்தது. இவை ஐந்து பாட்டானும் தான் வகுத்துக் கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.)
வ சுப மாணிக்கம் உரை:
கடமை காலம் இடம் இவற்றைப் பார்த்துச் சிந்தித்து உரைப்பவனே சிறந்த தூதன்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து எண்ணி உரைப்பான் தலை.
பதவுரை:
கடன்அறிந்து- பணியின் தன்மை உணர்ந்து; காலம்-செவ்வி; கருதி-பார்த்து; இடன்-இடம்; அறிந்து-தெரிந்து; எண்ணி-நாடி; உரைப்பான்-சொல்லுபவன்; தலை-முதன்மை.
|
கடன்அறிந்து காலங் கருதி இடன்அறிந்து எண்ணி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காரியம் நின்ற முறைமையை யறிந்து காலத்தையும் நினைத்து இடமும் அறிந்து தானேயெண்ணி;
பரிப்பெருமாள்: காரியம் நின்ற முறைமையை யறிந்து காலத்தையும் நினைத்து இடமும் அறிந்து தானேயெண்ணி;
பரிதி: செய்யும் முறைமை அறிந்து, காலம் இடம் அறிந்து, முன்பின் விசாரித்து;
காலிங்கர்: அரசர் சொல்லும் திறப்பாடுகள் யாவும் அறிந்து சொல்லுதற்கு உரிய காலத்தையும் (கருதிக்) கொண்டு மற்றுச் சொல்லுதற்கு அமைந்த இடத்தையும் இனிது உணர்ந்து பின்னும் மக்கள்பாட்டு, உரை தம்மினும் அப்பொழு(தைக்)கேற்பனவற்றை நெஞ்சகத்து ஓர்ந்து கொண்டு; [திறப்பாடுகள்-முறைமைகள்]
பரிமேலழகர்: வேற்றரசரிடத்துத் தான் செய்யும் முறைமை யறிந்து அவர் செவ்வி பார்த்து சென்ற கருமஞ் சொல்லுதற்கு ஏற்ற இடம் அறிந்து சொல்லுமாற்றை முன்னே விசாரித்து;
பரிமேலழகர் குறிப்புரை: செய்யும் முறையாவது: அவர் நிலையும் தன் அரசன் நிலையும் தன் நிலையும் தூக்கி, அவற்றிற்கு ஏற்பக் காணும் முறைமையும் சொல்லும் முறைமையும் முதலாயின. செவ்வி - தன் சொல்லை ஏற்றுக் கொள்ளும் மன நிகழ்ச்சி. அது காலவயத்ததாகலின் காலம் என்றார். இடம்: தனக்குத் துணையாவார் உடனாய இடம். எண்ணுதல்: தான் அது சொல்லுமாறும், அதற்கு அவர் சொல்லும் உத்தரமும், அதற்குப்பின் தான் சொல்லுவனவுமாக இவ்வாற்றான் மேன்மேல் தானே கற்பித்தல். [தூக்கி- ஆராய்ந்து; உத்தரம் -பதில்]
'முறைமையை யறிந்து காலத்தையும் நினைத்து இடமும் அறிந்து தானேயெண்ணி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். முறைமை என்பதற்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் காரியம் நின்ற முறைமை என்று கூற பரிமேலழகர் 'வேற்றரசரிடத்துத் தூதன் செய்யும் முறைமை' என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'வேற்றரசரிடத்துத் தான் செய்யும் முறைமையறிந்து காலம் பார்த்துச் சொல்லும் இடமறிந்து சொல்லுவனவற்றை எண்ணிப் பார்த்து', '(தான் மேற்கொண்டு வந்திருக்கும் காரியத்தில் தனக்குள்ள) கடமைகளையும் (விட்டுவிடாமல்), காலத்தையும் இடத்தையும் அறிந்து அவற்றிற்குத் தக்கபடி சிந்தித்து', 'தன் கடமையை நன்கறிந்து வேற்றரசர் காலம் பார்த்து, சொல்வதைச் சொல்லுதற்குரிய இடம் அறிந்து கருத்தாக', 'தனது கடனை உணர்ந்து, அதனை நிறைவேற்றதற்குரிய காலத்தைப் பார்த்து, ஏற்ற இடத்தினைத் தெரிந்து, ஆராய்ந்து' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சொல்லும் முறைமை தெரிந்து, காலம் பார்த்து, சொல்லுதற்குரிய இடம் அறிந்து, எண்ணிப் பார்த்து என்பது இப்பகுதியின் பொருள்.
உரைப்பான் தலை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொல்லவல்லவன் தலையான தூதனாவான்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலையான தூதரிலக்கணம் கூறிற்று.
பரிப்பெருமாள்: சொல்லவல்லவன் தலைவனாவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தலை, இடை, கடை என மூன்று வகையவருள் மேற்கூறின எல்லாம் இடையும் கடையும் ஆகிய தூதர் இயல்பு கூறினார்; இது தலையான தூதரிலக்கணம் கூறிற்று. தலையான தூதன் தானே காரியம் அறிந்து சொல்லும்; இடையான தூதன் சொன்ன மற்றத்தைச் சொல்லும்; கடையான தூதன் ஓலை காட்டும்.
பரிதி: சொல்பவனே தானாபதி என்றவாறு.
காலிங்கர்: இங்ஙனம் சொல்ல வல்லதாம் தூது என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வாறு சொல்லுவான் தூதரின் மிக்கான்.
பரிமேலழகர் குறிப்புரை: வடநூலார் இவ்விரு வகையாருடன் ஓலை கொடுத்து நிற்பாரையும் கூட்டித் தூதரைத் தலை, இடை, கடை, என்று வகுத்துக் கூறினாராகலின், அவர் மதமும் தோன்றத் 'தலை' என்றார். தூது என்பது அதிகாரத்தான் வந்தது. இவை ஐந்து பாட்டானும் தான் வகுத்துக் கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.
சொல்லவல்லவன் தலையான தூதனாவான்/ தானாபதி/தூது/ தூதரின் மிக்கான் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'முறைப்படிக் கூறுபவன் சிறந்த தூதன்', 'பேசுகின்றவனே தூதன்', 'சொல்பவனே முதலான தூதனாவான்', 'உரைப்பவனே தலையாயவன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
சொல்பவனே சிறந்த தூதன் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
சொல்லும் முறைமை தெரிந்து, காலம் பார்த்து, சொல்லுதற்குரிய இடம் அறிந்து, எண்ணிப் பார்த்துச் சொல்பவனே சிறந்த தூதன் என்பது பாடலின் பொருள்.
'தலை' என்ற சொல் இங்கு குறிப்பது என்ன?
|
தானாகச் சிந்தித்துச் செயல்படுபவன் சிறந்த தூதுவன்.
மேற்கொண்டுள்ள செயலைத் தெரிந்து, அதனை முடித்தற்கு ஏற்ற சமயத்தையும் உள்ளத்திற்கொண்டு, தக்க இடத்தையும் அறிந்துகொண்டு, தானே சிந்தித்துப் பார்த்துத் தான் கொண்டுசென்ற செய்தியைத் தெரிவிப்பவனே தூதர்களில் சிறந்தவனாவான்.
கடன் அறிந்து- இத்தொடர்க்கு முறைமையை யறிந்து, கடமை பார்த்து- சீர் தூக்கி அதாவது மாற்றான் நிலை, தன்னரசன் நிலை, தன்னிலை இவற்றை எண்ணி, எனப் பொருள் கூறினர். இங்கு வேற்றுநாட்டவையில் ஒரு தூதன் நடந்து கொள்ளவேண்டிய முறைமை (protocol) பேசப்படுகிறது. செல்லும் நாட்டு வழக்கம், தூதனின் நிலை இவற்றைப் பொறுத்து, காணும் முறைமை, சொல்லுந்திறங்கள் வேறுபடும்; இவ்வேறுபாடுகளை அறிந்து நடந்துகொள்வதே முறைமையாகும்.
காலம் கருதி- முற்குறளில் 'காலத்தால் தக்கதறிவது' என்று சமயம் அறிந்து செயல்முடிக்கும் வழி அறிவது சொல்லப்பட்டது. இங்குள்ள 'காலம் கருதி' என்பது தூதன் சொல்லப்போவதை வேற்றுநாட்டவர் ஏற்றுக்கொள்ளும் நல்ல மனநிலையில் இருக்கும் சமயம் அறிதலைக் குறிக்கும்; சினம் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் இருக்கும் நேரம், அந்நாட்டின் மற்ற முக்கியமான சிக்கல்களில் கவனம் முழுவதும் இல்லாமல் இருக்கும் நேரம் இவற்றைக் கருதுவதாகும்.
இடன் அறிந்து- இது தான் செய்தி சொல்லப்போகும் நாட்டவரன்றி வேறு நாட்டினர் இல்லாத இடம் போன்றவற்றை அறிதலைக் குறிக்கும்.
எண்ணி உரைப்பான்- என்பது சொல்லும் வழியை முன்னரே தனக்குள் ஆய்ந்து கொள்ளுபவனைக் கூறுவது. இதை இப்படிச் சொன்னால் இன்ன பயன் விளையும் என்பதைக் கருதிச் சொல்வதாம். அதிகாரம் நோக்கி கூறுபவன் தூதன் எனக் கொள்ளப்படும்.
தலை என்ற சொல் தலையாய தூதன் என்ற பொருள் தருவது.
|
'தலை' என்ற சொல் இங்கு குறிப்பது என்ன?
'தலை' என்ற சொல்லுக்குத் தலையான தூதன், தலைவன், தானாபதி, தூது, தூதரின் மிக்கான், தூதன், சிறந்த தூதுவன், தலைசிறந்த தூதுவன், சிறந்த தூதன், முதலான தூதன், தலையாயவன், தூதர்களில் சிறந்தவன், தூதருள் தலைமை சான்றவன், தலையாய தூதன், தூதருள் தலைசிறந்தவன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
அனைவரும் தூதருள் சிறந்தவன் என்ற பொருளிலேயே உரை செய்துள்ளனர்.
தூதர்களை தான் வகுத்துக் கூறுவான், கூறியது கூறுவான் என்று இருவகையாகப் பிரித்துச் சொல்வர். இங்கு சொல்லப்படுபவன் தான் வகுத்துக் கூறுவான் என்பவன். தலை என்று சொல்லப்பட்டதால் தூதருள் சிறந்தவன் என்பதே பொருத்தமானதாம்.
‘தலை’ என்ற சொல்லுக்குச் சிறந்த தூதுவன் என்பது பொருள்.
|
சொல்லும் முறைமை தெரிந்து, காலம் பார்த்து, சொல்லுதற்குரிய இடம் அறிந்து, எண்ணிப் பார்த்துச் சொல்பவனே சிறந்த தூதன் என்பது இக்குறட்கருத்து.
தூதுரைக்கும் திறன் கூறுவது.
கடமையை உணர்ந்து, காலம் பார்த்து, இடம் அறிந்து, எண்ணிப் பார்த்துச் சொல்பவனே சிறந்த தூதன்.
|