இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0685தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது

(அதிகாரம்:தூது குறள் எண்:685)

பொழிப்பு (மு வரதராசன்): பலவற்றைத் தொகுத்துச் சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.

மணக்குடவர் உரை: சுருங்கச்சொல்லி, விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லித் தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூதனாவான்.
இது சொல்லுமாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை: தொகச் சொல்லி - வேற்றரசர்க்குப் பல காரியங்களைச் சொல்லும்வழிக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும்; தூவாத நீக்கி நகச் சொல்லி - இன்னாத காரியங்களைச் சொல்லும்வழி வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூதுஆம் - தன்னரசனுக்கு நன்மையைப் பயப்பவனே தூதனாவான்.
(பல காரியங்கட்கு உடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாயது ஒன்றைச் சொல்ல அதனால் அவை விளையுமாறு உய்த்துணர அருமையானும் சுருக்கத்தானும் உடம்படுவர், இன்னாதவற்றிற்கு உடம்படாதார் தம் மனம் மகிழச் சொல்ல, அவ்வின்னாமை காணாது உடம்படுவராதலின், அவ்விருவாற்றானும் தன் காரியம் தவறாமல் முடிக்கவல்லான் என்பதாம். எண்ணும்மைகள், விகாரத்தால் தொக்கன.)

இரா இளங்குமரனார் உரை: சொல்ல வேண்டுவனவற்றையெல்லாம் தொகுத்துச் சொல்லிச் சொல்லக் கூடாதவற்றை விலக்கிக் கேட்டார் மகிழுமாறு கூறித் தம் நாட்டுக்கு நன்மை உண்டாக்குபவன் தூதனாவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது.

பதவுரை:
தொக-தொகுத்து; சொல்லி-உரைத்து; தூவாத-வேண்டாதவை, தூய்மை இல்லாத, வெய்ய சொற்கள்; நீக்கி-விலக்கி; நகச்சொல்லி-மகிழும்படி உரைத்து; நன்றி-நன்மை; பயப்பதாம்-விளைவிப்பதாம்; தூது-தூதன்.


தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சுருங்கச்சொல்லி, விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லி;
பரிப்பெருமாள்: சுருங்கச்சொல்லி, விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லி;
பரிதி: தொகுத்துச் சொல்லி நல்லவையுட் கொண்டு அரசன் மனமும் முகமும் மகிழச்சொல்லுவான்;
காலிங்கர்: இங்ஙனம் ஆராய்ந்து தகுவன சொல்லுமிடத்தும் பொருள் பொதிந்த சொல்லினைச் சுருங்கச்சொல்லி, அங்ஙனம் சுருங்கச் சொல்லுமிடத்தும் பயன்படாத சொல்லினை நீக்கி மற்று அச்சொல்லுவது தன்னையும் கேட்டவர் மகிழ்ந்து முகமலருமாறு சொல்லிப் பின்னும் இவ்வாறு சொல்லுதலே அன்றி;
காலிங்கர் குறிப்புரை: தூவாது நீக்கி என்பது பயன்படாத ஒழித்தல் என்றது. பரிமேலழகர்: வேற்றரசர்க்குப் பல காரியங்களைச் சொல்லும்வழிக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும் இன்னாத காரியங்களைச் சொல்லும்வழி வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச் சொல்லியும்; [வெய்ய சொற்களை-கொடுஞ் சொற்களை]
பரிமேலழகர் குறிப்புரை: பல காரியங்கட்கு உடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாயது ஒன்றைச் சொல்ல அதனால் அவை விளையுமாறு உய்த்துணர அருமையானும் சுருக்கத்தானும் உடம்படுவர், இன்னாதவற்றிற்கு உடம்படாதார் தம் மனம் மகிழச் சொல்ல, அவ்வின்னாமை காணாது உடம்படுவராதலின், அவ்விருவாற்றானும் தன் காரியம் தவறாமல் முடிக்கவல்லான் என்பதாம். எண்ணும்மைகள், விகாரத்தால் தொக்கன. [பரம்பரை- தொடர்ந்துவரும் மரபு]

'சுருங்கச்சொல்லி/தொகுத்துச் சொல்லிபல காரியங்களைச் சொல்லும்வழிக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும் விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லியும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விடாது சொல்லி, விடுவனவற்றை விட்டுச், சிரிக்கப்பேசி', 'செய்திகளைத் தொகுத்துச் சொல்லிப் பயன்படாதவற்றை விடுத்து இனிய சொற்களால் மனமகிழக் கூறி', 'வேற்றரசரிடம் சொல்ல வேண்டியதை ஒழுங்காகக் கோத்துச் சொல்லி, சொல்லத்தகாத குற்றமான செய்திகளைச் சொல்லிவிடாமல், கேட்கும் வேற்றரசனுக்கு மகிழ்ச்சி உண்டாகும்படி பேசி', 'சொல்லும் செய்திகளைக் காரண காரிய இயைபுபடத் தொகுத்துச் சொல்லி, ஏற்காத சொற்களை நீக்கி, வேற்று அரசர்க்கு விருப்பம் இல்லாதவற்றை அவர்கட்கு சிரிப்புண்டாகும்படி சொல்லி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தொகுத்துச் சொல்லி, பயன்படாதவற்றை விலக்கி, சிரிக்கப்பேசி என்பது இப்பகுதியின் பொருள்.

நன்றி பயப்பதாம் தூது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூதனாவான்.
மணக்குடவர் குறிப்புரை: இது சொல்லுமாறு கூறிற்று.
பரிப்பெருமாள்: தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூதனாவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சொல்லுமாறு கூறிற்று.
பரிதி: தூதன் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவரால் தன் அரசர்க்கு வேண்டும் நன்மையைத் தர வல்லதாம் தூதாவது என்றவாறு.
பரிமேலழகர்: தன்னரசனுக்கு நன்மையைப் பயப்பவனே தூதனாவான்.

'தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூதனாவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நலம் செய்பவனே தூதன்', 'தன் அரசனுக்கு நன்மை விளைவிப்பவனே தூதன்', 'நன்மை உண்டாக்குகிறவனே தூதன்', 'தன் அரசனுக்கு நன்மையானதை முடிப்பவன் தக்க தூதனாவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நன்மையை உண்டு பண்ணுபவன் தூதனாவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தொகுத்துச் சொல்லி, பயன்படாதவற்றை விலக்கி, சிரிக்கப்பேசி நன்மையை உண்டு பண்ணுபவன் தூதனாவான் என்பது பாடலின் பொருள்.
'நகச்சொல்லி' என்ற தொடரின் பொருள் என்ன?

தூதுவன் சிறந்த பேச்சு வல்லமை உள்ளவனாக இருக்க வேண்டும்.

சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், பயன்தரத்தகாததை நீக்கியும், கேட்போர் உள்ளம் மகிழுமாறு உரைத்தும் தன் நாட்டுக்கு நன்மை உண்டாக்குகின்றவனே சிறந்த தூதன் ஆவான்.
கேட்பவர்க்கு நன்றாக விளங்குமாறு எடுத்துரைத்தல் தேவையற்ற சொற்களைத் தவிர்த்தல், மனமகிழ்ச்சி கொள்ளுமாறு நகைச்சுவையுடன் சொல்லுதல் ஆகிய பேசும் திறங்கள் கொண்டவனாகத் தூதன் திகழவேண்டும்.
தொகச் சொல்லுதல்- தூதுவன் கூறவந்ததைத் தொகுத்துச் சுருக்கமாக, காரணகாரிய இயைபுபடச் சொல்லவேண்டும். வளவள என்று பேசும் நெடிய உரை அயர்வை உண்டாக்கும். கேட்பதில் அக்கறை உண்டாகாது. பலவற்றையும் விரிவுபடச் சொல்வதால் சொல்லவந்த கருத்து பிறழவும் வாய்சோர்ந்து மறை வெளிப்படவும் வாய்ப்புண்டு. அதையே தொகச்சொல்லுகின்றபோது கேட்பவர்களுக்கு அதில் விருப்பம் உண்டாகும். எனவே பேசப்போவது பற்றி முன்பே ஆராய்ந்து, சுருக்கமாகத் தொகுத்துச் சொல்ல வேண்டும்.
தூவாத நீக்கி நகச் சொல்லுதல்- பேசுகின்றபோது சொற்றூய்மையும் இனிமையும் வேண்டும்; பயன்படாத சொற்களைத் தவிர்க்க வேண்டும்; நயமில்லாத, வெறுப்புண்டாக்கும் வெம்மையான, சுடுகின்ற, கடுமையான சொற்களை தூதுவன் சொல்லவே கூடாது. வேற்றரசுக்கு ஒவ்வாதனவற்றை மகிழும்படியாக இனிமைப்படுத்திப் பேசுதல் தூதுவனுக்குரிய தன்மையாகும்.
தூதுவன் உரைப்பன அனைத்தும் தனது நாட்டுக்கு நன்மை பயப்பனவாகவும் இருத்தல் வேண்டும்.

'நகச்சொல்லி' என்ற தொடரின் பொருள் என்ன?

'நகச்சொல்லி' என்ற தொடர்க்கு மகிழுமாறு சொல்லி, மனமும் முகமும் மகிழச்சொல்லி, கேட்டவர் மகிழ்ந்து முகமலருமாறு சொல்லி, மனமகிழச் சொல்லி, மகிழுமாறு சொல்லி, மனம் மகிழுமாறு இனிதாகச் சொல்லி, மகிழ்ச்சி தரும் வகையில் சொல்லி, சிரிக்கப்பேசி, மனமகிழக் கூறி, மகிழ்ச்சி உண்டாகும்படி பேசி, சிரிப்புண்டாகும்படி சொல்லி, மன மகிழ உரைத்து, உள்ளம் மகிழுமாறு சொல்லி, நகைச் சுவையோடு சொல்லி, மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் சொல்லி என்றவாறு பொருள் கூறினர்.

தூதுரைக்கும்போது சில கைப்பான அல்லது வெறுப்பு உண்டாக்கும் செய்திகளையும் சொல்ல வேண்டியிருக்கும். அச்சமயங்களில் கேட்பவர் எதற்கும் உடன்படமாட்டார். எனவே நகைச்சுவையாகப் பேசி, கேட்டவர் மகிழ்ந்து முகம் மலருமாறு இனிமைப்படுத்திச் சொல்லலாம். வேற்றரசுக்கு ஒவ்வாதனவாக இருந்தாலும் அவற்றையே கலகலவென்ற சூழலில் தெரிவித்தால் செவிசாய்ப்பர். நகச்சொல்லும்போது கேட்பவர் மனமகிழ்ந்து சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.

'நகச்சொல்லி' என்றது சிரிக்கப்பேசி என்ற பொருள் தரும்.

தொகுத்துச் சொல்லி, பயன்படாதவற்றை விலக்கி, சிரிக்கப்பேசி நன்மையை உண்டு பண்ணுபவன் தூதனாவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தூதுரைக்கும் திறன் கூறுவது.

பொழிப்பு

தொகுத்துச் சொல்லி, விடுவனவற்றை விட்டுச், சிரிக்கப்பேசி, நன்மை விளைவிப்பவன் தூதன்.