அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு
(அதிகாரம்:தூது
குறள் எண்:684)
பொழிப்பு (மு வரதராசன்): இயற்கை அறிவு, விரும்பத்தக்க தோற்றம், ஆராய்ச்சி உடைய கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்
|
மணக்குடவர் உரை:
அறிவும், வடிவும், தெரிந்த கல்வியுமாகிய இம் மூன்றினது அடக்கமுடையவன் வினைக்குச் செல்க.
அறிவு- இயற்கையறிவு.
பரிமேலழகர் உரை:
அறிவு - இயற்கையாகிய அறிவும்; உரு - கண்டார் விரும்பும் தோற்றப்பொலிவும்; ஆராய்ந்த கல்வி - பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என; இம்மூன்றன் செறிவு உடையான் - நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க-வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க.
(இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிது ஆகலின், 'செறிவுடையான்'என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.)
இரா இளங்குமரனார் உரை:
தேர்ந்த அறிவு, நல்ல தோற்றம், ஆராய்வொடு கூடிய கல்வி ஆகிய இம்மூன்றும் நிரம்பி அமைந்தவன் தூதுரைக்கும் கடமைக்குச் செல்வானாக.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் வினைக்கு செல்க .
பதவுரை:
அறிவு-இயற்கை அறிவு; உரு-தோற்றப் பொலிவு; ஆராய்ந்த-பொருந்த நாடிய; கல்வி-கல்வியறிவு; இம்மூன்றன்-இந்த மூன்றினுடைய; செறிவுடையான்-அடக்கமுடையவன்; செல்க-செல்லட்டும்; வினைக்கு-தொழிலுக்கு.
|
அறிவுரு ஆராய்ந்த கல்வி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவும், வடிவும், தெரிந்த கல்வியுமாகிய;
மணக்குடவர் குறிப்புரை: அறிவு- இயற்கையறிவு.
பரிப்பெருமாள்: அறிவும், வடிவும், தெளிந்த கல்வியும் ஆகிய;
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவு- இயற்கையறிவு. உருவு-வடிவழகு. ஆராய்ந்த கல்வி-கலைகளை அறிந்து ஆராய்ந்ததனால் ஆட்சியான கல்வி.
பரிதி: அறிவுடைமை, அழகு, கல்வி;
காலிங்கர்: முன்னமே தான் இயல்பாக அறிவுடையனாதலும் மன்னரும் பிறரும் மகிழ்ந்து அணைத்தற்குரிய வடிவுடையனாதலும், கீழ்ச்சொன்ன வரம்பின் அன்றி மற்றும் பல ஆராய்ந்த கல்வி உடையனாதலும் என்னும்;
பரிமேலழகர்: இயற்கையாகிய அறிவும் கண்டார் விரும்பும் தோற்றப்பொலிவும் பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என;
'அறிவும், வடிவும், தெளிந்த கல்வியும் ஆகிய' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறிவு, தோற்றம். தெளிந்த கல்வி', 'இயற்கை அறிவு, கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவு, ஆராய்ச்சியில் தேர்ந்த கல்வி என்னும்', 'தூது போகும் காரியத்துக்கு வேண்டிய சமயோசித அறிவு, யாரும் மதிக்கத் தகுந்த கம்பீரமான உருவம், ஆராய்ச்சியுள்ள படிப்பு', 'இயற்கை நல்லறிவும், தோற்றப் பொலிவும், தேர்ந்த படிப்பும் ஆகிய' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
இயற்கை அறிவு, தோற்றப் பொலிவு, ஆராய்ச்சியில் தேர்ந்த கல்வி என்னும் என்பது இப்பகுதியின் பொருள்.
இம்மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('மூன்றின்' என்பது பாடம்): இம் மூன்றினது அடக்கமுடையவன் வினைக்குச் செல்க.
பரிப்பெருமாள்: இம் மூன்றினது அடக்கம் உள்ளவன் வினைக்குச் செல்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவையிற்றினது அடக்கமாவது, இம்மூன்றினால் வரும் பெருமிதத்தை அடக்கி ஒழுகுதல்.
பரிதி: இம்மூன்றும் உள்ளான் தூது செல்வான் என்றவாறு.
காலிங்கர் ('மூன்றின்' என்பது பாடம்): இம்மூன்றினையும் உடையனாய் இருக்கின்றான் யாவன்; மற்று அவன் செல்வானாக அரசர் காரியத்துக்கு என்றவாறு.
பரிமேலழகர்: நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க-வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க.
பரிமேலழகர் குறிப்புரை: இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிது ஆகலின், 'செறிவுடையான்' என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.
'இம் மூன்றினது அடக்கமுடையவன்' வினைக்குச் செல்க என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். செறிவுடையான் என்றதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'அடக்கமுடையவன்/அடக்கம் உள்ளவன்' என்றும் பரிமேலழகர் 'கூட்டத்தை உடையான்' எனவும் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இவற்றில் நிறைந்தவன் தூது செல்வானாக', 'இம்மூன்றினிடத்தும் அடக்கமுடையவன் தூது வினைக்குச் செல்வானாக. (செறிவு-அடக்கம். 'செறிவறிந்து சீர்மை பயக்கும்'. 123)', 'இந்த மூன்றும் யாரிடத்தில் அதிகமாக இருக்கிறதோ அவன் தூது காரியத்திற்குப் போகட்டும்', 'மூன்றும் உடையவனே தூது போக வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
இம்மூன்றினது அடக்கமுடையவன் தூதுதொழிலுக்குச் செல்லட்டும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
இயற்கை அறிவு, தோற்றப் பொலிவு, ஆராய்ச்சியில் தேர்ந்த கல்வி என்னும் இம்மூன்றினது செறிவுடையான் தூது தொழிலுக்குச் செல்லட்டும் என்பது பாடலின் பொருள்.
'செறிவுடையான்' என்ற தொடர் குறிப்பது என்ன?
|
அறிவு நல்லதோற்றம் தெளிந்தகல்வி இவை தூது செல்வானுக்கு இருக்கவேண்டிய விரும்பத்தக்க தன்மைகள்.
இயற்கை அறிவு, நல்ல தோற்றம், பலரோடும் பலகாலம் ஆராய்ந்த கல்வி அறிவு, இம்மூன்றும் நிறையப் பெற்றிருப்பவன் தூதுரைக்கச் செல்லத்தக்கவன்.
அன்புடைமை ஆன்றகுடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை, அன்பு, அறிவு ஆராய்ந்தசொல்வன்மை, தூதுரைக்கும்போது நூல் வல்லவராதல் ஆகிய பண்புகள் குறள் எண் 681, 682, 6833 ஆகியவற்றில் கூறப்பட்டன. இப்பாடலில் அறிவு, உரு, ஆராய்ந்தகல்வி என இன்னும் மூன்று குணங்கள் தூதுவனுக்கு இருக்கவேண்டும் என வற்புறுத்தப்படுகிறது.
அறிவு - அறிவு என்று முன்குறளில்(682) வந்தது தொழிலறிவு எனக் கொள்ளப்பட்டது. இங்கு சொல்லப்படுவது இயற்கையான நுண்ணறிவு ஆகும். வேற்றுநாடுகளுக்குச் செல்லக்கூடிய தூதனுக்கு எந்தச் சூழலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறம் வேண்டும். நுண்ணறிவு கொண்டோருக்கே அது கைவரப்பெறும்.
உரு- உலக நிலையில், மாந்தர்க்குள்ள எடுப்பான தோற்றம் எப்பொழுதும் நன்மை தருவதுதான். தூது செல்பவனுக்கு கண்டார் விரும்பும் அல்லது மதிக்கத்தக்க தோற்றப்பொலிவு இருப்பது நல்லது. இச்சொல்லுக்கு மன்னரும் பிறரும் மகிழ்ந்து அணைத்தற்குரிய வடிவுடையனாதல் எனக் காலிங்கர் உரை கூறியுள்ளார்.
ஆராய்ந்த கல்வி - இது பலரோடும் பலகாலும் ஆராய்ந்த கல்வி அறிவைக் குறிக்கும்.
இவற்றைக் குறைவறப்பெற்றவனுக்குத் தூதுசொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் தானாக உண்டாகிவிடும். அறிவு, வடிவு, தெளிந்த கல்வி இவை ஒருங்கே அமைவது அரிது. அப்படி அமையப்பெற்றவனுக்கு உண்டாகும் ஒரு பெருமித எண்ணம் அவன் மேற்கொண்ட செயலை எளிதாக்கும்.
|
'செறிவுடையான்' என்ற தொடர் குறிப்பது என்ன?
'செறிவுடையான்' என்றதற்கு அடக்கமுடையவன், அடக்கம் உள்ளவன், உள்ளான், உடையனாய் இருக்கின்றான், கூட்டத்தை உடையான், பொருத்தம் உடையவன், முழுமைபெறப் பெற்றவன், வளமாகப் பெற்றவர், நிறைந்தவன், அடக்கமுடையவன், அதிகமாக இருப்பது(மிகுதியாக உடையவன்), நிரம்பி அமைந்தவன், உடையவன், நிறைவினையுடையவன், குறைவறப் பெற்றிருப்பவன், நிறைந்தவன், ஒருங்கே பெற்றிருப்பவன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.
‘செறிவுடையான்’ என்பதற்கு மிகுதியாக உடையவன் என்பது நல்ல பொருளாக இருந்தாலும் இவ்விடத்துப் பொருத்தமாக இல்லை.
மணக்குடவர் அடக்கமுடையவன் என இத்தொடர்க்கு உரை வரைந்தார். பரிப்பெருமாள், அவ்வுரைக்கு 'அடக்கமாவது, இம்மூன்றினால் (அறிவு உரு ஆராய்ந்தகல்வி) வரும் பெருமிதத்தை அடக்கி ஒழுகுதல் என நயமாக ஒரு விளக்கம் கூறினார்.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் (அடக்கமுடைமை 123 பொருள்: அறிவன அறிந்து முறையோடு அடங்கி நடப்பானாயின் அடக்கத்தின் தன்மை உணரப்பட்டு மேன்மை உண்டாகும்) என்ற குறளிலும் செறிவு என்ற சொல் அடக்கம் என்ற பொருளிலேயே பயின்று வந்தது. பரிமேலழகரும் அக்குறளுக்கு அப்பொருளே கூறியுள்ளார்.
அறிவு உரு ஆராய்ந்தகல்வி என்ற மூன்று உயர் தன்மைகளும் ஒருங்கே வாய்க்கப்பெற்றால் ஒருவர் பெருமிதம் கொள்வதும் அதனால் செருக்குடன் ஒழுகுவதும் இயல்பு. ஆனால் அப்பெருமிதத்தை அடக்கி நடந்து கொள்வது அவனுக்கு இன்னும் உயர் தோற்றம் தரும். அத்தகைய அடக்கமுடையவன் தூது செல்லட்டும் என்கிறது இப்பாடல்.
'செறிவுடையான்' என்றது அடக்கமுடையவன் என்ற பொருள் தருவது.
|
இயற்கை அறிவு, தோற்றப் பொலிவு, ஆராய்ச்சியில் தேர்ந்த கல்வி என்னும் இம்மூன்றினது அடக்கமுடையவன் தூது தொழிலுக்குச் செல்லட்டும் என்பது இக்குறட்கருத்து.
தூதுசெல்லத்தக்கவனின் ஒளிரும் பக்கங்கள்.
இயற்கை அறிவு, தோற்றம், ஆராய்ச்சியில் தேர்ந்த கல்வி என்னும் இம்மூன்றினது அடக்கமுடையவன் தூது தொழிலுக்குச் செல்லட்டும்.
|