இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0683நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு

(அதிகாரம்:தூது குறள் எண்:683)

பொழிப்பு (மு வரதராசன்): அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான செயலைப்பற்றித் தூது உரைப்பவன் திறம், நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

மணக்குடவர் உரை: எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.

பரிமேலழகர் உரை: வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல்.
('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.)

இரா சாரங்கபாணி உரை: எல்லா நூல்களையும் கற்றார் முன் தான் அந்நூல்களில் வல்லனாதல், வேலையுடைய வேற்றரசர் முன் நின்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்பவனுக்கு இயல்பாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்.

பதவுரை:
நூலாருள்-பல நூல்களையும் கற்றறிந்தவர்களிடை; நூல்-இலக்கியம்; வல்லன்-திறமையுடையவர்; ஆகுதல்-ஆதல்; வேலாருள்-வேல் முதலிய போர்க் கருவிகளையுடைய ஆட்சியாளாரிடை; வென்றி-வெற்றி; வினை-செயல்; உரைப்பான்-சொல்லுபவன்; பண்பு-இலக்கணம்.


நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('நூலார்முன்' பாடம்): எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல்;
பரிப்பெருமாள் ('நூலார்முன்' பாடம்): பல நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல்;
பரிதி: கல்வியுள்ளார் தான்கற்ற கல்வி விளங்குதல்;
காலிங்கர் ('நூலாரின்' பாடம்): பலவகைப்பட்ட நூல்களையும் கற்று வல்ல சான்றோரினும் சமையக் கற்றுவல்லனாய் இருக்கின்றது; [சமையக் கற்று-பொருந்தக் கற்று]
பரிமேலழகர்: நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல்.

'நூல்களைக் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'நூலார்முன்' எனவும் காலிங்கர் 'நூலாரின்' எனவும் பாடம் கொண்டனர். எனினும் பொருளில் வேறுபாடில்லை. மணக்குடவர், பரிப்பெருமள், காலிங்கர் ஆகியோர் பல நூல்கள் என்றனர்; பரிமேலழகர் நீதிநூல் என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கற்றவருள் கற்றவனாக விளங்க வேண்டும்', 'நீதிநூல்களைப் பற்றி (அவ்வேற்றரசனுடைய மந்திரிகளுடன்) விவாதிக்கும்போது (எதிர்வாதம் செய்ய) நீதிநூல்களிலும் நிபுணனாகப் பேசத் தெரிந்திருப்பது', 'அரச நீதிநூல் அறிந்தவருள் சிறந்த புலமையுடையவன் ஆகுதலாம்', 'அரசியல் நூலைக் கற்று வல்லோருள் தான் மிக்க வல்லோனாய் இருத்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பல நூல்களைக் கற்றார்முன் தான் மிக்க வல்லோனாய் இருத்தலாகுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('வேலார்முன்' பாடம்): வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.
பரிப்பெருமாள் ('வேலார்முன்' பாடம்): வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.
பரிதி: வெண்பா மாலையை1 வெல்லுதற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: யாது மற்று அது வேல்வேந்தர் மாட்டுச் சென்று தன் அரசர்க்கு வென்றி கருமம் சொல்லுவானது மரபு. என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எனவே அரசரும் யாவையும் மற்றுளோரும் அனைத்தும் அறிந்த தன்மையர் ஆகலான் அவர்மாட்டுச் சென்று உரைக்கும் இடத்துக் கல்வியும் திருத்தம் வேண்டும் என்பது கருதி இவர்க்கு நூல்வன்மை எடுத்து உரைத்தது என அறிக. சூழ்ச்சியாளரில் சூழ்ச்சி பெரிது உடையன் ஆதல் என்றும் ஆம்.
பரிமேலழகர்: வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது.
பரிமேலழகர் குறிப்புரை: 'கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல். [தூதுவினை இரண்டும்- பொருத்துதலும் பிரித்தலும் ஆகிய இரண்டும்]

'வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இயல்பாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர்முன் வெற்றித்தூது சொல்பவன்', 'வேற்றரசர்களிடம் தூது சென்று, வந்த காரியத்தை வெற்றிகரமாகப் பேசக்கூடியவனுக்கு இருக்க வேண்டிய திறமை', 'வேலினையுடைய வேற்று அரசரிடம் தன் அரசனுக்கு வெற்றி தருவதாய செய்தியை உரைப்பானுக்குரிய இலக்கணமாவது', 'வேற்படையையுடைய வேற்றரசரிடம் சென்று தம் நாட்டுக்கு வெற்றி தரும் வினையைப்பற்றிச் சொல்வான் இலக்கணம் ஆவது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பகைவர்முன் தம் நாட்டுக்கு வெற்றி தரும் செயலைச் சொல்வான் இயல்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பல நூல்களைக் கற்றார்முன் தான் மிக்க வல்லோனாய் இருத்தலாகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு இயல்பு என்பது பாடலின் பொருள்.
'வேலாருள் வென்றி வினையுரைப்பான்' என்பதன் பொருள் என்ன?

போர்த் தூதுசெல்பவன் பல நூலறிவு உடையவனாயிருப்பான்.

கொல்திறம் கொண்ட வேற்றுநாட்டு அரசவைக்குச் சென்று தன் அரசிற்கு வெற்றிதரும் செயல்உரைக்கச் செல்லும் தூதன், சிறந்த நூல்களை எல்லாம் கற்றுணர்ந்தவரிடை நூல்வல்லமை உடையவனாதல் வேண்டும்.
தூது செல்வானுக்கு இயற்கைப் பண்புகளான அன்புடைமை ஆன்றகுடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை அமைந்திருக்க வேண்டும் என குறள் 681-இல் கூறப்பட்டது. செயற்கைப் பண்புகளான அன்பு, அறிவு ஆராய்ந்தசொல்வன்மை ஆகியன இன்றியமையாதவனாக குறள் 682-இல் சொல்லப்பட்டது. தூதுரைப்பானுக்கான மற்றும் ஓர் பண்பு இங்கே குறிக்கப்படுகிறது. வேற்று நாடுகளிடையே தூதுரைக்கும்போது, நூல் வல்லவராதல் என்பது அப்பண்பு. அதாவது அவனது நூலறிவு புலப்படும் வகையில் தூதுசொல்ல வேண்டும். இது இப்பாடலில் சொல்லப்பட்ட வகுத்துக்கூறும் தூதன் இயல்பையும் நன்கு விளக்கும்.
தனது நாட்டிற்கு வெற்றிதரும் செயலைப் பேசும் தூதன் அறநூல்களையும், அரசியல் நூல்களையும் நன்கு கற்றறிந்து கற்றவருள் கற்றவராக இருக்கவேண்டும் என்று இப்பாடல் சொல்கிறது. அறநூல்கள், பொருள்நூல்கள் ஆகியன தூதுவர்க்கு உரியனவாதல் வேண்டும். இவற்றுடன் பிறநாட்டு அவையிடத்து மற்றவரது வினாக்கட்கு அஞ்சாது விளக்கமளிப்பதற்காக அளவை நூலையும் (logic) கற்றிருத்தல் வேண்டும் ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு (அவையஞ்சாமை 725 பொருள்: அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்) என்று பின்னர் குறள் கூறும். நூலாருள் நூலார் என்பது நூல்களை உணர்ந்த வேற்று நாட்டு அவையோரிடையே தூதனது வகுக்கும் ஆற்றலை உணர்த்துவதைக் குறிக்கும்.

'வேலாருள் வென்றி வினையுரைப்பான்' என்பதன் பொருள் என்ன?

வேலாருள் என்பதற்கு 'வேலுடையார் முன்னின்று' ('வேலார்முன்' எனப் பாடங்கொண்டோர்) என்றும் வேலையுடைய வேற்றரசரிடை என்றும் பொருள் கூறினர். இரண்டிற்கும் பொருளில் பெரிதும் வேறுபாடில்லை. வேலாருள் வென்றி வினை உரைப்பான் என்பது வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசுக்கு வெற்றியைத் தரும் செயலைச் சொல்லுவான் என்ற பொருள் தரும். அரசர்க்கு பிறபடைக்கலங்களும் உண்டெனினும் வேலை உடையார் என்றது சிறப்புப்பற்றி. வேலை உடையார் என்றது வேல் போன்ற போர்க்கருவிகள் உள்ள பகைவர் என்பதையும் தூது சென்றது போர் தொடர்பாக என்பதையும் குறிக்க. கொல்லுந் திறத்தினர் என்பது தோன்ற 'வேலார்' எனச் சொல்லப்பட்டது.
தண்டபாணி தேசிகர் 'மாற்றரசன் வேலுடையனாயினும் அவன் சீற்றத்தையும் மாற்றித் தன் வேந்தற்கு வென்றி தரும் சொற்களை அவன் கேட்க சொல்லும் சாதுரியத்தைத் தருவது நூல் வல்லமை என்பது' என நயம் உரைப்பார்.

'வேலாருள் வென்றி வினையுரைப்பான்' என்பது பகைவரது அரசவையில் தன்னரசுக்கு வெற்றிதரும் செயலை(அல்லது சொற்களை)ச் சொல்பவன் என்ற பொருள் தரும்.

பல நூல்களைக் கற்றார்முன் தான் மிக்க வல்லோனாய் இருத்தலாகுதல் பகைவர்முன் தம் நாட்டுக்கு வெற்றி தரும் செயலைச் சொல்வான் இயல்பு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தூதுவன் அவையஞ்சா நெஞ்சினன் ஆதல் வேண்டும்.

பொழிப்பு

பகைவர்முன் தம் நாட்டுக்கு வெற்றி தரும் செயலைச் சொல்வான் இயல்பு கற்றவருள் கற்றவனாக இருத்தலாகுதல்.