இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0681



அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு

(அதிகாரம்:தூது குறள் எண்:681)

பொழிப்பு (மு வரதராசன்): அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் ஆகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.

மணக்குடவர் உரை: அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம்.
வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை.

பரிமேலழகர் உரை: அன்பு உடைமை - தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் - அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை - அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு - தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம்.
(முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.)

சி இலக்குவனார் உரை: நாட்டினிடத்தில் அன்புடையராயிருத்தல், ஒழுக்கம் பொருந்திய குடியின்கண் பிறந்திருத்தல், அரசர் விரும்பும் குணங்கள் பெற்றிருத்தல் ஆய இவைகள் தூதனாகச் செல்வானிடம் இருக்க வேண்டிய குணங்களாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

பதவுரை:
அன்புடைமை- நாட்டுப்பற்றுடைமை; ஆன்ற-அமைந்த; குடி-குடும்பம்; பிறத்தல்-தோன்றுதல்; வேந்து-அரசு, அரசர், ஆள்பவர்; அவாம்-அவாவும், விரும்பும்; பண்புடைமை-குணம்உடைமை; தூது-தூது; உரைப்பான்-சொல்லுபவன்; பண்பு-இலக்கணம்;.


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும்;
மணக்குடவர் குறிப்புரை: வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை.
பரிப்பெருமாள்: அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: வேந்தனால் விரும்பப்படும் குணமாவது அவன் விரும்புமவற்றைத் தான் விரும்பாமை.
பரிதி: அரசன்மேல் அன்புடைமையும் நற்குலத்தில் பிறத்தலும் அரசனது மனமகிழ்ச்சி உள்ளவனும்;
காலிங்கர்: தன் அரசர்மாட்டு அன்பு பெரிது உடையனுமாய்த் தான் நல்ல குடியில் பிறந்தானுமாய், வந்து பயிலுந்தொறும் வேந்தனானவன் விரும்பும் மரபு உடையனுமாய்;
பரிமேலழகர்: தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும், அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும், அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்;
பரிமேலழகர் குறிப்புரை: முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.

'அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் மட்டும் அன்புடைமை என்றதற்குத் 'தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்' என உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பும் குடிப்பிறப்பும் அரசர்கள் விரும்பும் பண்பும்', 'அன்புடைமையும் நற்குடியில் பிறத்தலும் அரசர் விரும்பும் பண்புடையனாதலும்', 'தன்னைத் தூதாக அனுப்புகிறவனுக்கு அன்புள்ளவனாகவும், குற்றமற்ற குடும்பத்தைச் சேர்ந்தவனாகவும், அரசர்கள் விரும்பத் தகுந்த பழக்க வழக்கங்கள் உள்ளவனாகவும் இருக்க வேண்டியது', 'தன்னைச் சார்ந்தார்மாட்டு அன்புடைமையும், உயர்ந்த குடிப்பிறப்பும், அரசன் விரும்பக்கூடிய குணநலமும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நாட்டுப் பற்றுடைமை நல்ல குடும்பத்தில் பிறந்திருத்தல் ஆள்வோர் விரும்பும் மரபு உடையனுமாய் இருத்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

தூதுரைப்பான் பண்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம்.
பரிப்பெருமாள்: தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம்.
பரிதி: தூதுவன் என்றவாறு.
காலிங்கர்: இம் மூன்று குணமும் உடையான் அரசர்க்குத் தூது உரைப்பான் என்றவாறு.
பரிமேலழகர்: தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம்.

'தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தூதுவனுக்கு உரிய தகுதிகள்', 'தூது செல்வானுக்குரிய இயல்புகள்', 'தூது சென்று வேற்றரசரிடம் பேச வேண்டியவனுடைய தகுதி', 'தூதுசொல்வான் தன்மைகளாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தூதுவனுக்கு உரிய இயல்புகள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்புடைமை நல்ல குடும்பத்தில் பிறந்திருத்தல் ஆள்வோர் விரும்பும் மரபு உடையனுமாய் இருத்தல் தூதுவனுக்கு உரிய இயல்புகள் என்பது பாடலின் பொருள்.
'அன்புடைமை' குறிப்பது என்ன?

நாட்டுப்பற்று, நல்லொழுக்கம், ஆட்சியர் விரும்பத்தக்க பழக்கவழக்கங்கள் ஒரு தூதனுக்கு வேண்டியன.

நாட்டுப்பற்று கொண்டவனாயிருத்தல், நல்லகுடும்பத்தில் பிறந்திருத்தல், அரசால் விரும்பப்படும் தன்மைகளையுடையவனாக இருத்தல் ஆகிய இவை தூதுரைப்பவனுக்குரிய இயல்புகளாகும்.
தன் நாடு வேண்டுவதை வேற்றரசுக்கு தகைமைப்பாட்டுடன் தெரிவிப்பதும், அந்த அரசின் குறிப்பைத் தன் ஆட்சியாளருக்குத் திரும்ப வந்து கொண்டு சேர்ப்பதும் தூது செல்வோனது தொழில். அக்கடமையாற்றுபவன் எப்படிப்பட்டவனாக இருப்பான்? அன்புடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், வேந்தவாம் பண்புடைமை ஆகிய பண்புகள் கொண்டவனாக இருக்க வேண்டும் என்கிறது இக்குறள்.
இக்குறளில் கூறப்பட்டுள்ள அன்புடைமை என்பது தன்நாட்டின் மீது கொண்ட அன்பை அதாவது நாட்டுப்பற்றைக் குறிக்கும், ஒரு தூதுவன் வெளிநாட்டிற்குச் செல்லும்போது தன் அரசின் மதிப்புக் குறையாமல் காத்துக்கொள்ளவேண்டும்; தன் நாட்டின் நலனே அவன் மனத்தில் மேலோங்கி நிற்க வேண்டும். நாட்டுப்பற்று உள்ளத்தில் வேரூன்றியவனிடமே மதிப்புக்கும் நலனுக்கும் கேடு வராமல் செயல் ஆற்றமுடியும்.
ஆன்றகுடிப் பிறத்தல் என்ற தொடர்க்கு அமைந்தகுடியில் பிறந்திருத்தல் என்பது நேர்பொருள். குடி என்ற சொல் குறளில் குடும்பம் என்ற பொருளில் பெரிதும் ஆளப்பட்டுள்ளது. இங்கும் குடும்பம் என்ற பொருளிலேயே ஆளப்படுகிறது. ஆன்ற குடிப்பிறத்தல் என்பது நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவனாய் இருக்க வேண்டும் என்ற பொருள் தரும். நல்ல குடும்பப் பின்னணியில் வளர்ந்தவன் நல்ல ஒழுக்கமுடையவனாக இருப்பான் என்பது பொதுவான கருத்து.
வேந்துஅவாவும் பண்புடைமை என்பதே வேந்தவாம் பண்புடைமை எனச் சொல்லப்பட்டது. அதாவது அரசு விரும்பும் நல்லியல்புகளை உடையவனாக இருப்பது என்பது இதன் பொருள். தூதிற்கு சென்றவிடத்து வேற்றரசனும் விரும்பத்தக்க பண்புடையவன் என்றும் வேந்தவாம் பண்புடைமை என்றதற்குப் பொருள் கூறுவர். பிற நாடுகளுக்கு அடிக்கடி சென்று உறவை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுபவன் தூதன் ஆதலால் அவன் நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பவனாதல் வேண்டும். பெருமை, சான்றாண்மைகளில் சிறந்து நின்று தாம் பழகநேரிடும் எல்லோரது இயல்புகளும் அறிந்து அவற்றிற்கு ஒத்து நடத்தலும் பண்புடைமையில் அடக்கம்.

'அன்புடைமை' குறிப்பது என்ன?

'அன்புடைமை' என்றதற்கு அரசன் மாட்டு அன்புடைமை, அரசன்மேல் அன்புடைமை, தன் அரசர்மாட்டு அன்பு பெரிது உடையன், தன் சுற்றத்தார் மாட்டு அன்புடையன், அன்புடையவனாதல், பொதுவாக அன்புள்ளவனாதல், அன்புடையராக இருத்தல், அன்புள்ளவன், (நாட்டின் மேல்) அன்புடைமை. தன்னைச் சார்ந்தார்மாட்டு அன்புடைமை, நாட்டினிடத்தில் அன்புடையராயிருத்தல், யாவரிடத்தும் அன்பாயிருத்தல், மக்களிடத்து அன்பாயிருத்தல், மனத்தில் அன்பு நிறைந்தவன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அன்புடைமை என இந்தக் குறளிலும், 'அன்பு அறிவு' என அடுத்த குறளிலும் (682) அன்பு கூறப்பெறுகின்றது. இவற்றிற்கிடையே வேறுபாடு காட்ட, இக்குறளில் வரும் ‘அன்புடைமைக்கு’ச் சுற்றத்தார் மாட்டு அன்புடையனாதல் என்றும் அடுத்த குறளில் வரும் ‘அன்புக்கு’ அரசன்மாட்டு அன்புடைமை என்றும் உரைகூறியுள்ளனர். அன்பு என்பதற்குத் தான் வேண்டப்பட்ட பொருளின்கண் அல்லது தொடர்புடையார் மாட்டுத் தோன்றும் உள்ள நெகிழ்ச்சி என்பது பொதுவான விளக்கம். தொடர்புடையாரிடம் அன்பாயிருத்தல் மாந்தர்தம் பொதுப்பண்பு. அதைத் தூதர் பண்பாக உரைப்பது சிறவாது.
அரசாட்சிச் செயலான தூது இங்கு பேசப்படுவதால் நாட்டிடத்து அன்புடையனாதல் என்ற பொருளே சிறந்தது.

'அன்புடைமை' என்றது நாட்டுப்பற்றுடைமையைக் குறிக்கும்.

நாட்டுப் பற்றுடைமை நல்ல குடும்பத்தில் பிறந்திருத்தல் ஆள்வோர் விரும்பும் மரபு உடையனுமாய் இருத்தல் தூதுவனுக்கு உரிய இயல்புகள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தூதுசெல்வோர்க்கு வேண்டப்படும் உடம்போடு ஒன்றிய குணங்கள் மூன்று சொல்வது.

பொழிப்பு

நாட்டுப்பற்று, நல்ல குடும்பப் பிறப்பு, ஆள்வோர் விரும்பும் பண்பு ஆகியன தூதுவர்க்கு உரிய தகுதிகள்.