இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0670



எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு

(அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:670)

பொழிப்பு (மு வரதராசன்): வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.

மணக்குடவர் உரை: கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்றவிடத்தும் வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார்.
பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை இது நமக்குச் சிறந்தது என்று கொள்ளாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர்.
(மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம், ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பது பற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: என்ன உறுதியிருந்தாலும் எடுத்துக்கொண்ட வினையில் உறுதியிலாரை உலகம் விட்டுவிடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வினைத்திட்பம் வேண்டாரை எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வேண்டாது உலகு.

பதவுரை:
எனைத்திட்பம்-(வேறு)எந்தத் திண்மை; எய்தியக் கண்ணும்-உடையராயவிடத்தும்; வினைத்திட்பம்-செயல் திண்மை; வேண்டாரை-கொள்ளாதாரை; வேண்டாது-விரும்பாது; உலகு-உலகத்தார்.


எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்றவிடத்தும்;
பரிப்பெருமாள்: கருவி முதலாயின எல்லாவாற்றானும் திண்மை பெற்றவிடத்தும்;
பரிதி: செல்வம் கல்வி உறவு இந்தத்திடம் பெற்றாலும்;
காலிங்கர்: மற்று எனைத்து வகைப்பட்ட திண்ணிமையும் அரசர்க்கு எய்திய இடத்தும்;
பரிமேலழகர்: ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்;

'கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்றவிடத்தும்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'செல்வம் கல்வி உறவு இந்தத்திடம் பெற்றாலும்' என்றார் பரிதி. 'எனைத்து வகைப்பட்ட திண்ணிமையும் அரசர்க்கு எய்திய இடத்தும்' என்று பிற திட்பங்களை அரசர் மேல் வைத்து உரைத்தார் காலிங்கர். 'ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்' என்கிறார் பரிமேலழகர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆள்பலம், பண பலம் முதலிய வேறு எத்துணைத் திட்பங்களை ஒருவன் பெற்றிருந்தாலும்', 'வேறு என்ன திறமைகள் கிடைத்தாலும்', 'வேறு எவ்வகையான திடம் உடையவராயிருந்தாலும்', 'எவ்வகை உறுதிப்பாடுகளைப் பெற்றிருந்தாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எவ்வகைத் திட்பங்களைப் பெற்றிருந்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார்.
மணக்குடவர் குறிப்புரை: பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது
பரிப்பெருமாள்: வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பலபொருளும் மிகுதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: வினைத்திட்பம் இல்லாதாரை உலகம் வேண்டாது என்றவாறு.
காலிங்கர்: அமைச்சர் துணிந்து உரைக்கும் வினையின் திண்ணிமையை விரும்பிக்கொள்ளாராயின் அவர்களை விரும்பார் உயர்ந்தோர் என்றவாறு.
பரிமேலழகர்: வினைத்திட்பத்தை இது நமக்குச் சிறந்தது என்று கொள்ளாத அமைச்சரை நன்கு மதியார் உயர்ந்தோர்.
பரிமேலழகர் குறிப்புரை: மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம், ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பது பற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.

'வினைத்திட்பம் இல்லாதாரை உலகம் வேண்டாது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'அமைச்சர் துணிந்து உரைக்கும் வினையின் திண்ணிமை' பற்றிப் பேசுகிறார். 'வினைத்திட்பத்தைக் கொள்ளாத அமைச்சரைக் குறிக்கிறார் பரிமேலழகர். உலகு என்பதற்கு மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் உலகத்தார்/உலகம் என்றுரைக்கக் காலிங்கரும் பரிமேலழகரும் உயர்ந்தோர் எனப் பொருள் தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வினைத்திட்பம் விரும்பாதாரை உலகம் மதித்துப் போற்றா', 'காரிய வைராக்யம் இல்லாதவர்களை உலகத்தார் மதிக்க மாட்டார்கள்', 'வேலையில் வலிமை விரும்பாதாரை உலகமானது நன்கு மதியாது; அல்லது ஏற்றுக் கொள்ளாது', 'வினையின் கண் உறுதிப்பாடு இல்லாதவரை உலகம் விரும்பாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செயலின் கண் உறுதிப்பாடு இல்லாதவரை உலகம் விரும்பாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எனைத்திட்பம் பெற்றிருந்தாலும் செயலின் கண் உறுதிப்பாடு இல்லாதவரை உலகம் விரும்பாது என்பது பாடலின் பொருள்.
'எனைத்திட்பம்' குறிப்பது என்ன?

செயலுறுதி இல்லாதவர் வேறு துறையில் எவ்வளவு உறுதி உடையவர்களாக இருந்தாலும் உலகம் ஏற்காது.

எத்தகைய உறுதிகளை ஒருவர் பெற்றிருப்பினும் தாம் செய்யும் தொழிலில் அவருக்கு உள்ள உறுதி இல்லாதிருக்குமேல் அவரை உலகம் விரும்பாது.
உள்ளத்து உரமும் உறுதியுமே ஒருவரை மனிதனாகக் காட்டும். செல்வம், ஆள், படைகளில் எவ்வளவு வலுத்திருந்தாலும், அவை நன்றாகா. செய்யும் செயல்களை திட்பமின்றிச் செய்வோர்க்கு, அவர்கள் மேற்கொண்ட செயல்களை முடிக்க இயலாது. வினை கெடுவதால் உலகம் அவரை இழிவாகவே நோக்கும்.

வினைத்திட்பம் அதிகாரம் அமைச்சியலில் பகுக்கப்பட்டுள்ளதால் அது அமைச்சர்க்கு இன்றியமையாத குணம் என உரையாசிரியர்கள் கூறுவர். காலிங்கர் 'மற்று எனைத்து வகைப்பட்ட திண்ணிமையும் அரசர்க்கு எய்திய இடத்தும், அமைச்சர் துணிந்து உரைக்கும் வினையின் திண்ணிமையை விரும்பிக்கொள்ளாராயின்' எனச் சொல்வதால் 'எனைத்திட்பம்' என்பதை அரசர்க் குரியதாகவும் ‘வினைத்திட்பம்’ என்பதை அமைச்சர்க் குரியதாகவும் கொள்கிறார் என்றாகிறது. பரிமேலழகர் இருவகைத் திட்பங்களையும் அமைச்சர்க்கே உரியவாகக் கொண்டார். வினையை ஏற்ற எல்லாருக்கும் வினைத்திட்பம் வேண்டும் எனப் பொதுமையிற் சொல்வதுவே சிறப்பானது.

'எனைத்திட்பம்' குறிப்பது என்ன?

'எனைத்திட்பம்' என்றதற்குக் கருவி முதலான எல்லாம், செல்வம் கல்வி உறவு, மற்று எனைத்து வகைப்பட்ட திண்ணிமை, ஒழிந்த திட்பங்கள் எல்லாம், வேறு எத்தகைய உறுதி உடையவர், மற்றைக் கெட்டியெல்லாம், மற்ற திட்பங்கள் எல்லாம், சிந்தனை வாய்ப்பேச்சு முதலாய பிறபல திட்பங்களெல்லாம், எந்த வகையான உறுதிகள், என்ன உறுதியிருந்தாலும், ஆள்பலம் பணபலம் முதலிய வேறு எத்துணைத் திட்பங்கள், வேறு என்ன திறமைகள், எத்தனை வகையான திண்மைகள், வேறு எவ்வகையான திடம் உடையவர், எவ்வகை உறுதிப்பாடுகள், எத்தகைய அரண்கள் (படை, அரண், நட்பு), வேறு எத்தகைய உறுதி யுடையர், எந்த விதமான திறமையும் பலமும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்' என்றதற்கு வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும் என்பது நேர்பொருள், பிற உறுதிகள் எவை? செல்வம், கல்வி, உறவு, சுற்றம், படை, அரண், நட்பு எனப் பலவற்றைக் கூறுவர்.
தேவநேயப் பாவாணர் மற்றத்திட்பங்களை அகம், புறம் என வகைப்படுத்திக் காட்டுகிறார். மனத்திண்மை, மதித்திண்மை, அறிவுத்திண்மை, உடல்திண்மை, வினைத்திண்மை ஆகியன அகத்திண்மை என்றும் கருவித்திண்மை, இடத்திண்மை, காலத்திண்மை, படைத்திண்மை முதலியன புறத்திண்மை என்றும் கூறுவார்.

'எனைத்திட்பம்' என்பதற்கு எனைத்து வகைப்பட்ட திண்ணிமை என்பது பொருள்.

எவ்வகைத் திட்பங்களைப் பெற்றிருந்தாலும் செயலின் கண் உறுதிப்பாடு இல்லாதவரை உலகம் விரும்பாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உலகோர் வேண்டுவது வினைத்திட்பம்தான்; வேறு உறுதிகளையல்ல.

பொழிப்பு

எத்துணைத் திட்பங்களை பெற்றிருந்தாலும், செயல்திட்பம் இல்லாதாரை உலகம் விரும்பாது.