இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0669துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை

(அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:669)

பொழிப்பு (மு வரதராசன்): (முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்தபோதிலும் துணிவு மேற் கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

மணக்குடவர் உரை: முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க, பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை.

பரிமேலழகர் உரை: துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க.
(துணிவு - கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாமஇன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச்செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.)

மயிலை சிவமுத்து உரை: முடிவில் இன்பம் தரத்தக்க ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் மிகுதியாக வருமாயினும் அத்துன்பம் நோக்கி உள்ளம் தளராது துணிவு மேற்கொண்டு செய்து முடித்தல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
துன்பம் உறவரினும் இன்பம் பயக்கும் வினை துணிவாற்றி செய்க .

பதவுரை:
துன்பம்-துயரம்; உற-மிக; வரினும் செய்க-செய்ய வேண்டும்; துணிவுஆற்றி-திட்பமுடையவராய்; இன்பம்-மகிழ்ச்சி; பயக்கும்-உண்டாக்கும்; வினை-செயல்.


துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க;
பரிப்பெருமாள்: முற்பாடு துன்பம் மிகவரினும் துணிந்து செய்க;
பரிதி: துன்பம் மேன்மேலே வந்தாலும் அதைப் பாராமல் இன்பமாக விசாரித்து அந்தக் காரியத்தைச் செய்வான்;
காலிங்கர்: வினைத்திட்பம் என்பது இத்துணை அருமை உடைத்து ஆகலான், அவ்விடுக்கண் மிகவரினும் அதற்கு அழியாது நின்று, நெஞ்சில் துணிவுடைமையை நடாத்தி, செய்து முடிக்க என்றவாறு. [அழியாது-துன்புறாது]
பரிமேலழகர்: முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; அது நோக்கித் தளராது திட்பமுடையராய்ச் செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: துணிவு - கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாமஇன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச்செய்க' என்றார்.

'முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பம் மேன்மேலும் வந்தாலும் துணிவோடு செய்க', 'மெய்ம் முயற்சியால் தமக்குத் துன்பம் மிகுதியாக வரினும் தளர்ச்சி அடையாமல் வினைத்திட்பத்துடன் செய்க', 'துன்பப்பட நேரிட்டாலும் (பின் வாங்காமல்) வைராக்யத்தோடு செய்ய வேண்டும்', 'முயல்வதற்கு இடையிலே துன்பங்கள் மிகுதியாக வந்தாலும் அவற்றால் அசையாமல், உறுதியொடு பொருந்தி அதனைச் செய்து முடிக்க வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

துன்பம் மிகுதியாக வரினும் உறுதியொடு பொருந்திச் செய்க என்பது இப்பகுதியின் பொருள்.

இன்பம் பயக்கும் வினை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை.
பரிப்பெருமாள்: பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இனி உற்றபின் ஒல்காமையின் பகுதி கூறுவார் முற்படத் துன்பம் உறவரினும் துணிந்து செய்க, பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை என்றார்.
பரிதி: அதன்பின்னே இன்பந்தரும் காரியத்தை என்றவாறு.
காலிங்கர்: மேல் இன்பம் விளைவிப்பதாகத் தாம் எடுத்துக்கொண்ட வினைகளையே என்றவாறு.
பரிமேலழகர்: முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையை.
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.

'பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இன்பந்தரும் காரியத்தை', 'முடிவில் இன்பந்தரும் செயல்களை', 'பல பேருக்கு நன்மையுண்டாக்கக்கூடிய காரியத்தை', 'முடிவாக இன்பத்தைத் தரும் முயற்சியை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

முடிவில் இன்பந்தரும் செயலை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துன்பம் மிகுதியாக வரினும் உறுதியொடு பொருந்திச் செய்க முடிவில் இன்பந்தரும் செயலை என்பது பாடலின் பொருள்.
'துணிவாற்றி' என்ற தொடரின் பொருள் என்ன?

இந்தவினையை முடித்தால் நன்மை பல உண்டு என அறிந்ததால் இடையில் வரும் துன்பத்துக்குக் கலங்கக்கூடாது.

பிற்பாடு பலருக்கும் இன்பத்தைத் தரும் செயலை மேற்கொண்டுள்ளபோது இடையிலே துன்பங்கள் மிகுதியாக வந்தாலும் அவற்றால் தளராமல், உறுதியாக நின்று அதனைச் செய்து முடிக்க.
ஒரு செயல் நன்மையளிக்கும் என்றால் அதைச் செய்யும்பொழுது பலவேறு வழிகளில் துன்பங்கள் வந்துற்றபொழுதும் உள்ள உறுதியுடன் அவற்றை எதிர்கொண்டு வினையைச் செய்து முடிக்க வேண்டும். ஏற்ற செயலை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுவது வினைத்திட்பம் உடையோர்க்கே இயலும். நன்மை தரும் இன்பத்தை எண்ணிச் செயலாற்றும்போது துன்பம் வந்து அழுத்தினும் மனத்திண்மையுடன் தாங்கிக் கொண்டு முன்னேறிச்சென்று செயல்முடித்து அதன் பயனை உடனிருந்து மற்றவர்களுடன் துய்ப்பர் என்பது கருத்து.

தேவநேயப்பாவாணர் 'துன்பம் வருங்காலம் குறிக்கப்படாமையின், வினையின் முதலிடை கடையில் மட்டுமன்றி முழுமையுந் துன்பம் வரினும் பொறுக்க வேண்டு மென்பதாம். பிள்ளை பெறுபவளின் துன்பம் பிள்ளை பெற்றபின் இன்பமாக மாறுவது போல், முயற்சித் துன்பமும் வெற்றிப்பேற்றால் இன்பமாக மாறு மென்பார்' என இக்குறட்கருத்தை விளக்குவார்.

'துணிவாற்றி' என்ற தொடரின் பொருள் என்ன?

'துணிவாற்றி' என்றதற்குத் துணிந்து, இன்பமாக விசாரித்து, நெஞ்சில் துணிவுடைமையை நடாத்தி, திட்பமுடையராய், துணிவு மேற் கொண்டு, துணிவுடன் உழைத்து, துணிவுடன், துணிவோடு, வினைத்திட்பத்துடன், வைராக்யத்தோடு, உறுதியோடு, உறுதியொடு பொருந்தி, தளராது துணிந்து, மனத்திண்மையுடன் என்றவாறு பொருள் கூறினர்.

பரிமேலழகர் 'முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் 'திட்பமுடையராய்'ச் செய்க' எனப் பொழிப்புரையில் கூறுகிறார். இவர் துணிவாற்றி என்பதற்கு நேராகவே திட்பமுடையராய் எனப் பொருள் கூறுகிறார். சிறப்புரையில் 'துணிவு என்பதற்குக் கலங்காமை எனப் பொருள் கூறி துணிவுடையார்க்கு கணப்பொழுதில் அழியும் முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய கடலலை போன்று தொடரிச்சியாய்த் தோன்றி வரும் இன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச்செய்க' என்றார் என விளக்குவார்.

'துணிவாற்றி' என்ற தொடர்க்கு உறுதியொடு பொருந்தி அல்லது வினைத்திட்பத்துடன் என்பது பொருள்.

துன்பம் மிகுதியாக வரினும் உறுதியொடு பொருந்திச் செய்க முடிவில் இன்பந்தரும் செயலை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வினைத்திட்பம் உடையோர் துன்பம் பொறுத்து இன்பம் விளைப்பர்.

பொழிப்பு

துன்பம் மிகுதியாக வந்தாலும் முடிவில் இன்பந்தரும் செயல்களை வினைத்திட்பத்துடன் செய்க.