இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0668கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்

(அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:668)

பொழிப்பு (மு வரதராசன்): மனம் கலங்காமல் ஆராய்ந்து துணிந்து ஏற்ற தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

மணக்குடவர் உரை: கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க.
இது விரைந்து செய்யவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க.
(கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின், தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை - திட்பம் உடைமை.)

இரா இளங்குமரனார் உரை: தெளிவாக ஆராய்ந்து துணிவுடன் மேற்கொண்ட செயலைச் சிறுதும் நடுக்கம் இல்லாமலும் சோர்வு இல்லாமலும் செய்தல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல்.

பதவுரை:
கலங்காது-மனந்தெளிந்து; கண்ட-துணிந்த; வினைக்கண்-செயலில்; துளங்காது-சோம்பலின்றி, திட்பத்துடன்; தூக்கம்-காலம் தாழ்த்தல்; கடிந்து-ஒழிந்து; செயல்-செய்க.


கலங்காது கண்ட வினைக்கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்து;
பரிப்பெருமாள்: கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்து;
பரிதி: திடபுத்தியாகிற காரியம், அழியுமாப் போலே வந்தாலும் கலங்காமல்;
காலிங்கர்: யாதானும் ஒருவினையும் அதன் தூய்மையும் கலங்காமல் ஆராய்ந்து, தெளியக்கண்ட வினையிடத்து;
பரிமேலழகர்: மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்;
பரிமேலழகர் குறிப்புரை: கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின், தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார்.

'மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கலங்காது கண்ட காரியத்தை', 'ஒருவன் மனந்தெளிந்து செய்யத் துணிந்த வேலையை', '(நல்ல காரியம் என்று) தெளிவாகத் தெரிந்த காரியத்தைப் பூர்த்தி செய்ய', 'மனக்கலக்கம் இல்லாமல் தெளிவாக நல்லதென்று அறிந்த முயற்சியைச் செய்யுங்கால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மனம் தெளிந்து மேற்கொண்ட செயலின்கண் என்பது இப்பகுதியின் பொருள்.

துளங்காது தூக்கம் கடிந்து செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க.
மணக்குடவர் குறிப்புரை: இது விரைந்து செய்யவேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது விரைந்து செய்யவேண்டு மென்றது.
பரிதி: விரையும் கருமம் தூங்காமல் செய்வான் என்றவாறு.
காலிங்கர்: பின்னை இதனைச் செய்வோம்கொல் என்று அசைவது செய்யாது, காலத் தாழ்ப்பினையும் கடிந்து கடிதின் செய்க என்றவாறு, [கடிந்து-விலக்கி]
பரிமேலழகர்: பின் அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: துளங்காமை - திட்பம் உடைமை.

'அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தளராது காலம் தாழ்த்தாது செய்க', 'சோர்வுறாமல் கால நீட்டிப்பின்றி விரைந்து செய்க', 'உறுதியுடன் ஓய்வின்றி உழைக்க வேண்டும்', 'சஞ்சலமில்லாமல், காலநீட்டித்தலை யொழித்து அதனை விரைந்து செய்க' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தளர்ச்சியின்றிக் காலத்தாழ்வை நீக்கிச் செய்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனம் தெளிந்து செய்வதாக மேற்கொண்ட செயலின்கண் தளர்ச்சியின்றிக் காலத்தாழ்வை நீக்கிச் செய்க என்பது பாடலின் பொருள்.
'கலங்காது கண்ட வினை' என்றால் என்ன?

ஆராய்ந்து தேர்ந்தெடுத்த செயலை விரைந்து முடித்திடுக; அதுதான் வினைத்திட்பம்.

மனத்தெளிவுடன் ஆராய்ந்து கண்டறிந்த செயலைச் சோர்வின்றிக் காலம் கடத்தாமல் செய்து முடிக்க.
எதைச் செய்யவேண்டும் என்பதை எந்தவித குழப்பமுமின்றித் தெளிவான பார்வையுடன் தேர்ந்தெடுத்தாகிவிட்டது. அடுத்து, தளர்ச்சியின்றியும் காலத் தாழ்ச்சி இல்லாமலும் அதை வினைத்திட்பமுடன் முடிக்க வேண்டும். திட்பமுடைமைக்கு ஊறு செய்யக்கூடிய சோர்வும் நீட்டித்துச் செய்தலும் தம்மிடம் அணுகாமல் காத்து வினையை முடித்துக் கொடுப்பர் செயலுறுதி உடையவர்.

ஒரு தொழிலை ஏற்பதிலும் உறுதி வேண்டும். அத்தொழில் பற்றிய அனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்து தெளிந்த மனத்துடன் அதை ஏற்கத் துணிய வேண்டும். அந்த உறுதி பின்வரும் செயலுருவாக்கத்திலும் காட்டப்படவேண்டும். சோர்வின்றிச் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும்; தூக்கமும் அதாவது சோம்பலால் செயலைக் காலம் தாழ்த்து செய்தலும் செயலுக்கு தீங்கு விளைவிக்கும். சோர்வின்மையும் தாமதித்துச் செய்யாமையும் வினைத்திட்பத்தின் கூறுகளாம்.

'கலங்காது கண்ட வினை' என்றால் என்ன?

'கலங்காது கண்ட வினை' என்றதற்கு கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினை, கலங்காமல் விரையும் கருமம், யாதானும் ஒருவினையும் அதன் தூய்மையும் கலங்காமல் ஆராய்ந்து தெளியக்கண்ட வினை, மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினை, மனம் கலங்காமல் ஆராய்ந்து துணிந்து ஏற்ற தொழில், இதுவா அதுவா என்று கலங்காது, இவ்வினையே செய்யத்தகுவது எனத் துணிந்த செயல், தெளிந்த அறிவினால் தேர்ந்தெடுத்த பணி, கலங்காது கண்ட காரியம், ஒருவன் மனந்தெளிந்து செய்யத் துணிந்த வேலை, (குற்றமற்றது என்று) தெளிவாகக் கண்ட காரியம், தெளிவாக ஆராய்ந்து துணிவுடன் மேற்கொண்ட செயல், மனக்கலக்கம் இல்லாமல் தெளிவாக நல்லதென்று அறிந்த முயற்சி, மனம் தெளிந்து செய்வதாகத் துணிந்த செயல், மனத்தெளிவுடன் ஆராய்ந்து கண்டறிந்த ஒரு தொழில், தெளிவாக எண்ணித்துணிந்த வினை முயற்சி என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'கலங்காது கண்ட வினை' என்பதை கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின், தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார்' எனப் பரிமேலழகர் தெளிவாக்குவார். செய்யக்கூடாத வினையும் செய்யலாம் என்று தோன்றும்; அதனால் பலமுறை ஆராய்ந்து தெளிக என்பது இவர் உரையின் கருத்து.
மேற்கொள்ளப் போகும் வினையைத் தேர்ந்தெடுப்பதிலும் உறுதி காட்டவேண்டும்; செய்யாலாமென உறுதி செய்த தொழிலைச் செய்யும் போது செய்யாது சோர்ந்திருத்தலும் தூங்கலும் கூடாது என்பதை விளக்க கலங்காது கண்ட வினை எனச் சொல்லப்பட்டது.
'கண்டவினைக்கண் கலங்காது துளங்காது தூக்கங் கடிந்து செயல்' எனக்கூட்டிப் பொருள் கொள்வர் சிலர். 'கலங்காது' என்பதைக் 'கண்ட வினை' என்பதனோடு இயைத்துப் பொருள் கொள்வதே சிறக்கும்.

'கலங்காது கண்ட வினை' என்ற தொடர்க்கு மனத்தெளிவுடன் ஏற்றுக்கொண்ட செயல் என்பது பொருள்.

மனம் தெளிந்து செய்வதாக மேற்கொண்ட செயலின்கண் தளர்ச்சியின்றிக் காலத்தாழ்வை நீக்கிச் செய்க என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஆராய்ந்து தெளிந்த செயல் வினைத்திட்பத்துடன் விரைந்து முடிவுறும்.

பொழிப்பு

மனந்தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தளராது காலம் தாழ்த்தாது செய்க.