இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0667உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

(அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:667)

பொழிப்பு (மு வரதராசன்): உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிபோன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது.

மணக்குடவர் உரை: யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்தல் வேண்டும். உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங்கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ்வுலகம் உடைத்து: ஆதலால்.

பரிமேலழகர் உரை: உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தலை யொழிக.
(சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம், அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து, அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர், அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: உருவத்தின் சிறுமை கண்டு இகழ்தலைத் தவிர்த்திடுக. உருண்டு ஓடும் தேருக்கு அதன் சிறிய அச்சாணி ஓட்டத்திற்கு துணை அதுபோலாரை உடையது உலகம். அச்சாணி தேரின் சக்கரம் கழன்று விடாமல் பாதுகாப்பதுடன் தேர்ச் சக்கரத்தின் உருளலுக்கும் துணை செய்கிறது. தேரின் அச்சாணி உருவத்தில் சிறியதாயினும் திண்மையுடையது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.

பதவுரை:
உருவு-வடிவு; கண்டு-நோக்கி; எள்ளாமை-இகழாதிருத்தல்; வேண்டும்-வேண்டும்; உருள்-சுழல்கின்ற; பெரும்-பெரிய; தேர்க்கு-வண்டிக்கு, தேர்க்கு; அச்சு-உருள்கோத்த மரம்; ஆணி-கடையாணி, இருப்பு முளை; அன்னார்-ஒத்தவர்; உடைத்து-உடையது.


உருவுகண்டு எள்ளாமை வேண்டும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்தல் வேண்டும்;
பரிப்பெருமாள்: யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்தல் வேண்டும்;
பரிதி: விசாரவான் பொல்லாதவனாயினும் இகழக்கடவான் அல்லன்; [விசாரவான் --ஆய்வறிவுடையவன்]
காலிங்கர்: தாம் கருதிய வினையைக் கைக்கொண்டு முடிவு செய்தற்கு உரிய கட்டாண்மையுடையோர் வேண்டுதலான்; அவரை உருவினை நோக்கி இகழாது கைக்கொள்ள வேண்டும்;
பரிமேலழகர்: அதனால் அவரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தலை யொழிக.

'யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்தல் வேண்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆளின் தோற்றம் பார்த்து இகழவேண்டாம்', 'அதனால் அவரது தோற்றத்தின் சிறுமை கண்டு இகழக்கூடாது', 'அவர்களை அவர்களுடைய உருவத்தைக் கண்டு இகழ்ந்துவிடக் கூடாது', 'அவர்கள் வடிவத்தால் சிறியவராயிருப்பின், அது காரணமாக அவரை இகழுதல் கூடாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவரது தோற்றம் கண்டு தாழ்வாக எண்ண வேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.

உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங்கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ்வுலகம் உடைத்து: ஆதலால்.
பரிப்பெருமாள்: உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நின்ற உருளைகளைக் கழலாமல் தாங்குகின்ற சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ்வுலகமுளதாகலான் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: திண்ணியாரை அறியுமாறு என்னை என்றார்க்கு, வடிவு கண்டு அறியல் ஆகாது என்பதூஉம் கூறிற்று.
பரிதி: அவன் தேர்க்கு அச்சாணி போலே இருப்பான் உண்டு ஆகையால் அவரவர் விசாரத்தால் கொள்க என்றவாறு. [விசாரத்தால் - ஆய்வால்]
காலிங்கர்: என்னை எனில், ஓடுகின்ற தேர்க்கு அச்சாணி போலும் திட்பம் உடையாரையும் உடைத்து இவ்வுலகம் என்றவாறு.
பரிமேலழகர்: உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்;
பரிமேலழகர் குறிப்புரை: சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம், அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து, அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர், அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.

'உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையும் உடைத்து உலகம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஓடும் வண்டி பெரிது; அச்சாணி சிறுது', 'ஓடுகின்ற பெரிய தேருக்குச் சிறிய அச்சாணி போல வினைத்திட்ப முடையாரை உடையது இவ்வுலகம்', 'உருளுகின்ற பெரிய தேருக்குக் கடையாணியைப் போன்ற (சிறிய உருவமும் மன உறுதியும் உள்ள) மகான்கள் இவ்வுலகத்தில் உண்டு', 'உருளுகின்ற தேர்க்கு அச்சிலுள்ள ஆணிபோலத் திண்மை உடையவர்களை உலகம் உடையது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சுழலும் பெரிய தேருக்குச் சிறிய அளவிலான அச்சாணி போன்ற வினைத்திட்பமுடையாரும் உள்ளனர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சுழலும் பெரிய தேர் இயங்குதற்குச் சிறிய அளவிலான அச்சாணி போல வினைத்திட்பமுடையாரும் உள்ளனர்; ஒருவரது தோற்றம் கண்டு தாழ்வாக எண்ண வேண்டாம் என்பது பாடலின் பொருள்.
'அச்சாணி அன்னார் உடைத்து' என்ற தொடர் குறிப்பதென்ன?

ஒருவரது உருவத் தோற்றத்திற்கும் வினைத்திட்பத்திற்கும் தொடர்பு இல்லை.

உருண்டு செல்லும் பெரிய தேருக்கு அதன் அச்சில் இருந்து அதனைத் தாங்கும் கடையாணியைப் போன்ற திண்ணியாரையும் இவ்வுலகம் பெற்றிருக்கிறது. ஆதலால், ஒருவரை அவர்தம் வடிவம் கண்டு எள்ளித் தள்ளாமை வேண்டாம்.
அச்சு என்பது தேரின் இரு உருளைகளும் கோக்கப்படும் மரம். அச்சாணி உருளை கழலாதவாறு அச்சு மரத்தின் இரு கோடிகளிலும் செறிக்கப்படும் ஆணியாகும். அது சிறிதாக இருப்பினும் பாரமான தேரைக் கொண்டு செலுத்தும் வலுமிக்கது. அச்சாணி நீங்கினால் பெரிய சக்கரம் கழன்று ஓடி விடும்; தேரே சாய்ந்து விழும். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்பது பழமொழி. பெருந்தேர் என்பது ஏழுதட்டுக்களைக் கொண்ட முழுத்தேர் (தேநேயப்பாவாணர்). அதுபோல் ஈர்க்கும்படியான உருவத்தோற்றம் இல்லாதவரிடத்து வினைத்திட்பம் இருக்காது என்ற முடிவுக்கு வரவேண்டாம் என்கிறது இப்பாடல். தம்முடைய வினைத்திண்மையால் அரிய செயல்களைச் செய்யும் திறனுள்ள உருவக் குறைபாடுடையவர்களையும் இவ்வுலகம் கொண்டிருக்கிறது. அவர்களை அடையாளம் கண்டு வினைமேற்கொள்ளச் செய்யவேண்டும்.

இக்குறளின் நடையை நோக்கும்போது எள்ளாமை வேண்டும் என்றதற்கு இகழாதீர் என்பதைவிட இகழ்ந்து விலக்காமை வேண்டும் என்ற பொருள் பொருந்தும். 'தாழ்வாக எண்ண வேண்டா' எனப் பொருள் தருவார் தேவநேயப்பாவாணர். எழில்நலத்தால் வருகிற பெருமை குறைவாய் இருப்பவராயிருந்தாலும் அவர் பொறுப்புப் பாரமெல்லாம் தாங்கி வினைநடத்தும் ஆற்றவல்லவராதலால் அவரை எள்ளி நீக்கலாகாது என்பது கருத்து.
பிற இடங்களில் வானுயர் தோற்றம் எவன்செய்யும்? ..... (கூடாஒழுக்கம் 272 ) என்று நெடிய உருவம் கொண்டு என்ன பயன்? எனவும் நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை அற்று (கல்லாமை, குறள் எண்:407 பொருள்: எடுப்பான தோற்றம் இருந்தும், ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்கள்) என்று அழகுநலம் பொருந்தியிருந்தும் பொம்மை போன்றவர் எனவும் நல்ல தோற்றம்மட்டும் கொண்டிருப்பது மட்டும் சிறப்பாகாது எனச் சொல்லியுள்ளார் வள்ளுவர்.

'அச்சாணி அன்னார் உடைத்து' என்ற தொடர் குறிப்பதென்ன?

எந்த ஒரு இடத்துக்கும் ஒருவரது தோற்றப்பொலிவு கூடுதல் நன்மை தருவதுதான். ஆனால் செயல் என்று வரும்பொழுது அவர் வினைமுடித்தற்குரிய கட்டாண்மை உடையவரா என்ற ஒன்றை மட்டும்தான் பார்க்கவேண்டும்.
ஒருவரது வடிவம் பிறப்பால் அமைவது; குறைப் பிறப்பை மாற்றுவது நம் ஆற்றலுக்கு உட்படாதது; உருவத்தோற்றம் இகழ்ந்து ஒதுக்கப்படுவதற்குக் காரணமாக இருக்கக்கூடாது; வெளிப்பட்ட உருவத்தைப் பார்த்து யாருடைய வினைத்திட்பத்தையும் மதிப்பீடு செய்ய முடியாது; வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து, குள்ளமாயிருக்கிறார், ஒல்லியாயிருக்கிறார் என்று அவர்களைத் தள்ளவேண்டாம்; உடலின் அளவும், நிறமும் அல்ல; உள்ளத்தின் திண்மையே செயல் முடித்தற்கு உதவும். ஓங்குதாங்கான உடலமைப்பு இல்லாமல், தேருக்குக் கடையாணி போன்ற, வினைத்திட்பம் மிகக் கொண்டவரும் இருக்கின்றனர். எனவே அரிய பெரிய செயல்களை முடிக்க, வடிவில் குறைவுபட்டவராயிருந்தாலும் செயல்உறுதியுடைய பெரியாரை அடையாளம் கண்டு, நாடி, தம்மிடம் அழைத்து வைத்துக் கொள்வர் வினைக்குரியவர்.
உருவிற் குறைந்தாரிலும் செயலுறுதி மிக்கவர் உலகில் உள்ளனர் என்பதை உணர்த்தவே ஓடுகின்ற 'தேருக்கு அச்சாணி அன்னார் உடைத்து' எனச் சொல்லப்பட்டது.

சுழலும் பெரிய தேருக்குச் சிறிய அளவிலான அச்சாணி போல வினைத்திட்பமுடையாரும் உள்ளனர்; ஒருவரது தோற்றம் கண்டு தாழ்வாக எண்ண வேண்டாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வினைத்திட்பம் மிகக்கொண்ட இளைத்த உருவம் கொண்டோரும் உலகில் உண்டு.

பொழிப்பு

சுழலும் பெரிய தேருக்கு அச்சாணி சிறிது; உலகத்துள்ள வினைத்திட்பமுடையாரை அவரது தோற்றம் கண்டு விலக்க வேண்டாம்.