எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
(அதிகாரம்:வினைத்திட்பம்
குறள் எண்:666)
பொழிப்பு (மு வரதராசன்): எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
|
மணக்குடவர் உரை:
தாம் எண்ணிய பொருள்களை எண்ணியபடியே பெறுவர்: அவ்வாறு எண்ணினவர் அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின்.
இது வினையின்கண் திண்மை வேண்டு மென்றது.
பரிமேலழகர் உரை:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப - தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் - எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின்.
('எளிதின் எய்துப' என்பார், 'எண்ணியாங்கு எய்துப' என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும். அது முடிய அவை யாவையும்கைகூடும் என்பது கருத்து. இதனான் அஃதுடையார் எய்தும்பயன் கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை:
நினைத்தவர் இடையறாமல் வினைத்திட்பம் உடையவராக இருந்தால், தாம் நினைத்த பொருள்கள் எல்லாவற்றையும் நினைத்தபடியே பெறுவர்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் எண்ணிய எண்ணியாங்கு எய்துப.
பதவுரை:
எண்ணிய-கருதப்பட்டவை; எண்ணிய-நினைத்த; ஆங்கு-போல; எய்துப-அடைவர்; எண்ணியார்-நினைத்தவர்; திண்ணியர்-உறுதியுடையவர்; ஆக-ஆகியிருக்க; பெறின்நேர்ந்தால்.
|
எண்ணிய எண்ணியாங்கு எய்துப:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் எண்ணிய பொருள்களை எண்ணியபடியே பெறுவர்:
பரிப்பெருமாள்: தாம் எண்ணிய கருமங்களை எண்ணியபடியே பெறுவர்:
பரிதி: எண்ணிய எண்ணம்போலே காரியம் எடுத்துக்கொள்ளுகிறபோதே;
காலிங்கர்: இவ்வாறும் அன்றி மற்று இவ்வினையை இவ்வாறு செய்து முடிப்போம் என்று எண்ணியார், அதனை மற்று அக்கருதியாங்குப் பெறுவார்கள் என்றவாறு.
பரிமேலழகர்: தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்;
'தாம் எண்ணிய பொருள்களை எண்ணியபடியே பெறுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எண்ணியவற்றை எண்ணியபடியே எய்தலாம்', 'எண்ணிய காரியங்களை எண்ணியபடி செய்து முடிப்பார்கள்', 'நினைத்தவற்றை நினைத்தவாறே அடைவர்', 'எய்த நினைத்த பொருள்களையெல்லாம் எண்ணியவாறே அடைவ' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கருதிய பொருள்களை எண்ணியவாறே அடைவர் என்பது இப்பகுதியின் பொருள்.
எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது வினையின்கண் திண்மை வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வினையின்கண் திண்மை வேண்டு மென்றது.
பரிதி: திடம் பெற விசாரித்துச் செய்ம்மின் என்றவாறு.
காலிங்கர்: அவ்வினையானது மேல் வினையதாகத் தாம் கருதிய பயன் யாது, அதற்கு ஏற்பத் தாமும் திண்ணியர் ஆகப்பெறின்.
பரிமேலழகர்: எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'எளிதின் எய்துப' என்பார், 'எண்ணியாங்கு எய்துப' என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும். அது முடிய அவை யாவையும்கைகூடும் என்பது கருத்து. இதனான் அஃதுடையார் எய்தும்பயன் கூறப்பட்டது.
'அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எண்ணியவர் உறுதியாக எண்ணினால்', 'காரியத்தைச் செய்ய எண்ணுகிறவர்கள் வைராக்யமுடையவர்களாக இருந்தால்', 'ஒரு காரியத்தைச் செய்துமுடிக்க நினைப்பவர் அதிலே திண்ணிய உறுதி யுடையவரா ரெனின்', 'எண்ணியவர் எண்ணியவற்றை அடைவதற்குரிய செயலின் கண் உறுதியுடையவராக இருந்தால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
எண்ணியவர் கருதிய செயலின் கண் உறுதியுடையவராக இருந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
எண்ணியவர் கருதிய செயலின் கண் திண்ணியராக இருந்தால் கருதிய பொருள்களை எண்ணியவாறே அடைவர் என்பது பாடலின் பொருள்.
'திண்ணியர்' என்றதன் பொருள் என்ன?
|
செய்யும் வினையில் உறுதி இருந்தால் போதும்; தாம் எண்ணியது நிறைவேறும்.
எண்ணினவர் அவற்றைச் செய்து முடிக்கும் உள்ள உறுதியை உடையவராக இருக்கப் பெற்றால் தாம் எண்ணியவற்றை எண்ணியபடியே பெறுவர்.
ஒன்றைக் குறிவைத்து செயல் தொடங்கும்போது இடையூறுகள் அடுக்கடுக்காகவரினும் அஞ்சாது அவற்றை விலக்குவேன் என்ற நெஞ்சுறுதியுடன் அதில் ஈடுபட்டால், கருதியவாறே அதாவது அவர் எண்ணிய அளவிற் சிறுதும் குறையாதவாறு குறித்தபடி பயன் எய்துவர். இலக்கையும் வழிமுறைகளையும் உள்ளத்திறுத்தி களத்தில் போர்க்குணத்துடன் செயலாற்றி, தடைகளுக்கும் துன்பங்களுக்கும் அஞ்சி தயங்கிப் பின்னடைவாக நின்றுவிடாமல் எண்ணத்தில் உறுதியுடன் முன்னேறிச் செல்லும் செயல்திட்பம் உடையவர்கள் தங்கள் குறிக்கோள் நினைத்தவாறே செயல்வடிவம் பெறுவதைக் காண்பர். விடாமுயற்சி உடையவர் வினைத்திட்பம் பெற்று எளிதில் எண்ணியவாறு செயலை முடிப்பர்.
ஒருவர்க்கு செயல் ஊக்கம் தரும் பாடல் இது. படிக்கும்போதே உள்ளத்திற்கு உரம் ஊட்டி பெருமகிழ்ச்சியும் பேரூக்கமும் அளிப்பதாக இருக்கிறது.
இக்குறள் நடைப்போக்கில் அமைந்த உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின் (வெகுளாமை 309 பொருள்: ஒருவன் தன் மனத்தால் சினத்தை எண்ணாதிருப்பானானால், நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.), உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் (பொச்சாவாமை 540 பொருள்: எண்ணியதை எளிதாகவே எய்திவிடலாமே, அடைய நினைத்ததை மறவாது எண்ணிக்கொண்டே இருக்கக் கூடுமாயின்.) ஆகிய பிற குறள்களும் தொடக்கத்திலேயே பயனை உணர்த்தி ஊக்கமூட்டுபவையாம்.
|
'திண்ணியர்' என்றதன் பொருள் என்ன?
'திண்ணியர்' என்ற சொல்லுக்கு அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையார், திடம் பெற விசாரித்துச் செய்பவர், வினைக்கு ஏற்பத் தாமும் திண்ணியர் ஆகுபவர், வினைக்கண் திண்மையுடையராகுபவர், செயல் ஆற்றுவதில் உறுதியுடையவர், அசைவிலா மனத்திண்மை படைத்தவர், உறுதியுடன் கடைப்பிடியுடையவராக இருப்பவர், உறுதியாக எண்ணுபவர், இடையறாமல் வினைத்திட்பம் உடையவர், வைராக்யமுடையவர்களாக இருப்பவர், மனத்திண்மை உடையவர், காரியத்தில் திண்ணிய உறுதி யுடையவர், செயலின் கண் உறுதியுடையவராக இருப்பவர், செய்து முடிக்கும் உள்ள உறுதியை உடையவர், வினையில் திண்மையுள்ளவராக இருப்பார், இடைவிடாது செயலைப்பற்றிச் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவர் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
உறுதியாக எண்ணுபவர் அல்லது செயலின்கண் உறுதி உள்ளவராக இருப்பவரே திண்ணியர். இவர் மன உறுதியும் செயல் உறுதியும் பெற்றிருப்பார். இடையூறு கண்டு துவளமாட்டார். தொடக்கத்தில் எண்ணிபடியல்லாமல் இடையில் பிறிதொன்றாக எண்ணாதவர். விடாமுயற்சியும் வினைத்திட்பமும் உடையவர்.
'திண்ணியர்' என்றது உறுதிஉள்ளவர் என்ற பொருள் தருவது.
|
எண்ணியவர் கருதிய செயலின் கண் உறுதியுடையவராக இருந்தால் கருதிய பொருள்களை எண்ணியவாறே அடைவர் என்பது இக்குறட்கருத்து.
வினைத்திட்பம் எண்ணியது ஈடேற உதவும்.
கருதியவர் வினைத்திட்பம் உடையவராக இருந்தால், தாம் எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் கருதியபடியே பெறுவர்
|