இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0665



வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்

(அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:665)

பொழிப்பு (மு வரதராசன்): செயல் திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது, நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

மணக்குடவர் உரை: மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பமானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாராலும் நினைக்கப்படும்.
இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது.

பரிமேலழகர் உரை: வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் - எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன்கண் ஊறு எய்தி உள்ளப்படும் - வேந்தன்கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும்.
(வேந்தன்கண் ஊறு எய்தல் - எடுத்த வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல். 'எய்தலான்' என்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறைவாமை. இதனான் அதன் சிறப்புக் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: மற்றவர்க்கில்லாத பெருஞ்சிறப்பைப் பெற்று, மாட்சிமைப்பட்டவர் என்று கூறப்படும் அமைச்சர்களது செயல்திட்பம் எப்போது தெரியவரும் என்றால், தமது வேந்தர்களுக்கு ஓர் இடையூறு ஏற்பட்டபோது, அதை அவர்கள் தீர்க்கும் விதத்தைப் பார்த்து மதிக்கப்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்.

பதவுரை:
வீறு-வேறொன்றற்கு இல்லாத தனிச்சிறப்பு; எய்தி-பெற்று; மாண்டார்-மாட்சிமைப்பட்டார்; வினைத்திட்பம்-செயல்உறுதி; வேந்தன்கண்-ஆட்சித்தலைவனிடத்தில்; ஊறுஎய்தி-உறுதல், சென்று அடைதலால், (உள்ளத்தே) சென்று தங்குதல்; உள்ளப்படும்-உள்ள+படும்- கெட்டுவிடும் (காலிங்கர் உரை), மதிக்கப்படும்.


வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பமானது;.
பரிப்பெருமாள்: மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பமானது;
பரிதி: காரியத்தால் மேம்பாடுபெற்று நிலை நின்ற மந்திரி;
காலிங்கர்: அறிவு மாட்சிமை உடைய அமைச்சரானோர் கோலிக்கொண்ட வினைத்திட்பமானது, அதனை வெல்லும் உபாயத்தை விருப்புற்று விசாரிக்க;
பரிமேலழகர்: எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்;

'எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெருமிதம் மிக்கவரின் வினைத்திறத்தை', 'செயல் திறனால் பெருமை எய்தி உயர்ந்தவர்களின் வினைத் திட்பம்', 'கொண்ட கொள்கைக்காக அரசனையும் எதிர்த்து அவனால் பல துன்பங்களை அடைந்தும் சகித்துக் கொண்டும்', 'உயர்ந்த மன உறுதியால் சிறந்தவர்களது தொழில் வலிமை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தனிச்சிறப்பு பெற்ற மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பம் என்பது இப்பகுதியின் பொருள்.

வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாராலும் நினைக்கப்படும்.
மணக்குடவர் குறிப்புரை: இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது.
பரிப்பெருமாள்: அரசன்மாட்டு உறுதலை எய்தலான் எல்லாராலும் நினைக்கப்படும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: எய்த என்பது திரிந்தது. இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவர் என்றது.
பரிதி: நீதி மன்னருள்ளாரால் விரும்பப்படும் என்றவாறு.
காலிங்கர் ('ஊறெய்தின்' பாடம்): வேந்தன் பின்பு ஓர் இடையூறு வந்து எய்தின், மற்று அவ்விடையூறானது கெட்டுவிடும் என்றவாறு.[கோலிக்கொண்ட-வரையறுத்துக்கொண்ட]
பரிமேலழகர்: வேந்தன்கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: வேந்தன்கண் ஊறு எய்தல் - எடுத்த வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல். 'எய்தலான்' என்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறைவாமை. இதனான் அதன் சிறப்புக் கூறப்பட்டது.

'அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாராலும் நினைக்கப்படும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேந்தன் கேள்விப்பட்டு மதிப்பான்', 'அரசனாலும் அறியப் பெற்று மதிக்கப் பெறும்', 'கொள்கையில் வெற்றி பெற்றுக் கீர்த்தியடைந்தவர்களுடைய மன வைராக்யத்தைப் போற்ற வேண்டும்', 'அரசன் மனத்திற்கு உவப்பாகப் பொருந்தி எல்லாராலும் நன்கு மதிக்கப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அரசு ஊறுற்றபொழுது வெல்லும்வழி எண்ணி அழிக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வீறெய்தி மாண்டார் வினைத் திட்பம் அரசு ஊறுற்றபொழுது வெல்லும்வழி எண்ணி அழிக்கும் என்பது பாடலின் பொருள்.
'வீறெய்தி மாண்டார்' யார்?

அரசு பெரும்சிக்கல்களை எதிர்கொள்ளும்போது நேர்ந்தால் அமைச்சர் தன் வினைத்திட்பத்தால் அவற்றைத் தகர்ப்பார்.

அரசு இடையூறு எய்தும்பொழுது, தனிச் சிறப்பைப் பெற்ற மாட்சிமைப்பட்டாரது அதாவது அமைச்சரது வினைத்திட்பமானது அதை வெல்லும் வழிகண்டு செயல்பட்டு அழிக்கும்.
ஓர் அரசுக்கு நாளும் சிக்கல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அவற்றில் பலவற்றிற்கு நேரடித் தீர்வுகள் கிடைத்து எளிதான முறையில் முடிந்துவிடும். சிலவற்றைச் செயல்திட்பம் உடையோரால்தான் தீர்க்கமுடியும். இது போன்ற வேளைகளில், பொதுவாக, அமைச்சராக இருப்பவர் ஆட்சித்தலைவனுக்கு உறுதுணையாய் இருப்பர். அவர் தம் கல்வியறிவு, அனுபவ அறிவு, அதிகாரத்திற்கு நெருக்கமாக இருப்பது இவற்றையும் தாண்டி வினைத்திட்பம் உள்ளவராக இருந்தால்தான் நல்ல முறையில் இடையூறுகளுக்குத் தீர்வு காணமுடியும். இங்கு வினைத்திட்பத்தின் பங்கு பெரிது.

இக்குறளுக்கு காலிங்கர் ஒரு திறமாகவும் மற்ற தொல்லாசிரியர்கள் வேறு வகையாகவும் பொருள் கூறியுள்ளனர்.
'வேந்தன்கண் (எய்திய) வினைத்திட்பம் ஊறெய்தின் வீறெய்தி மாண்டார் உள்ள படும்' எனக் கொண்டு கூட்டி 'வேந்தன் கோலிக்கொண்ட வினைத்திட்பமானது பின்பு ஓர் இடையூறு வந்து எய்தின், அறிவு மாட்சிமை உடைய அமைச்சரானோர் அதனை வெல்லும் உபாயத்தை விருப்புற்று விசாரிக்க, மற்று அவ்விடையூறானது கெட்டுவிடும்' எனக் காலிங்கர் உரை செய்தார். 'மற்றவர்கள் செய்யும் செயல்களால் தனிச் சிறப்பைப் பெற்று உயர்ந்தவர்தம் வினைத்திட்பமானது அந்த நாட்டை ஆளும் அரசன் உள்ளத்திலும் பதிவதால் எல்லாராலும் நன்கு மதிக்கப்படும்' என உரை வகுத்தனர். இவற்றுள் காலிங்கர் உரை ஏற்கத்தக்கதாகப் படுகிறது.
காலிங்கர் உரை வலிந்து கொண்டு கூட்டப்பட்டதாக இருக்கிறது என்றும் 'நினைக்கப்படும்', ‘கூறப்படும்' ‘காணப்படும்’ என்பன போன்ற ‘உள்ளப்படும்’ என்னும் ஒரு சொன்னீர்மைத்தாய தொடரை உள்ள, படும் எனப் பிரித்துப் பொருள் கூறல் இயல்பில்லை என்றும் காலிங்கர் உரை பற்றி இரா சாரங்கபாணி கருத்துரைத்துள்ளார். மேலும் இவர் (இரா சாரங்கபாணி) 'வேந்தன்கண் நூறு எய்தி எனப்பிரித்து, வேறெய்தி மாண்டாரின் வினைத்திட்பம் வேந்தனிடத்து ஒன்று நூறாக எண்ணப் பெற்று மதிக்கப்படும் எனவும் பொருள் காணலாம் என மற்றவர்கள் உரையைத் தழுவிப் புது பொருள் ஒன்றும் உரைக்கிறார்.

'வீறெய்தி மாண்டார்' யார்?

'வீறு எய்தி மாண்டார்' என்ற தொடர்க்கு மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டார், மேம்பாடுபெற்று நிலை நின்ற மந்திரி, அறிவு மாட்சிமை உடைய அமைச்சர், எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சர், செயல் திறனால் பெருமை பெற்று உயர்ந்தவர், மற்றவர்க்கில்லாத பெருஞ்சிறப்பைப் பெற்று, மாட்சிமைப்பட்டவர் என்று கூறப்படும் அமைச்சர், எண்ணங்களாலும் பிற சிறப்புக்களாலும் பெருமை பெற்றவர், பெருமிதம் மிக்கவர், செயல் திறனால் பெருமை எய்தி உயர்ந்தவர், கொண்ட கொள்கைக்காக அரசனையும் எதிர்த்து அவனால் பல துன்பங்களை அடைந்தும் சகித்துக் கொண்டும் கொள்கையில் வெற்றி பெற்றுக் கீர்த்தியடைந்தவர், மனவலிமையால் சிறப்படைந்தவர், உயர்ந்த மன உறுதியால் சிறந்தவர், எண்ணத்தால் சிறப்படைந்து மாட்சிமைப்பட்டார், செய்யும் செயல்களால் தனிச் சிறப்பைப் பெற்று உயர்ந்தவர், சூழ்வினையால் மேம்பட்டுப் பிறவிலக்கணங்களாலும் மாட்சிமைப் பட்ட அமைச்சர், வீரத்தினால் சிறப்பமைந்த பெரியோர் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

இக்குறளில் வேந்தன் என்ற சொல் வந்துள்ளமையால் அவரது துணையான அமைச்சரின் வினைத்திட்பத்தின் சிறப்பு கூறப்பட்டது; இயல்இயைபும் (அமைச்சியல்), அதிகாரஇயைபும் (வினைத்திட்பம்) பெற்றது.
பரிமேலழகர் வீறு எய்தியதால் மாண்டாரானார் எனச் சொல்லாமல் 'வீறு எய்துதல் எண்ணத்தின் விளைவு' என்றும் 'மாண்டாராதல் பிற இலக்கணங்களால்' என்றும் பிரித்துச் சொல்கிறார். சாமி.சிதம்பரம் வீறு என்ற சொல்லுக்கு வெற்றி எனப் பொருள் கொள்வார். வ சுப மாணிக்கம் வீறெய்தி மாண்டார் என்றதற்கு பெருமிதம் மிக்கவர் எனப் பொருள் உரைத்தார். நாமக்கல் இராமலிங்கம் 'வேந்தன்கண் ஊறு எய்தி, வீறு எய்தி, மாண்டார் வினைத்திட்பம் உள்ளப்படும்' எனக்கூட்டி, 'வேந்தன் துன்புறுத்தினாலும் பொறுத்து எதிர்த்துநின்று வென்று புகழ் பெற்றாருடைய மனவலி போற்றத்தக்கது' எனப் புதுமையான பொருள் கூறுகிறார். தேவநேயப்பாவாணர் 'அமைச்சர் சூழ்வினையால் மேம்பட்டவர்' எனக் கூறி 'வினைசெய்தற்கட் படும் உழைப்பும் துன்பமும் பகையும் அமைச்சர் மாட்டாகப் பொருளும் புகழும் மட்டும் அரசனைச் சார்வன' என்றார்.

'வீறெய்தி மாண்டார்' என்ற தொடர் தனிசிறப்புப் பெற்று மாட்சிமைப்பட்டார் என்ற பொருள் தரும்.

தனிச்சிறப்பு பெற்ற மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பம் அரசு ஊறுற்றபொழுது வெல்லும்வழி எண்ணி அழிக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வினைத்திட்பம் உடையார் நெருக்கடி காலத்தில் பேருதவியாய் இருப்பர்.

பொழிப்பு

பெருமை பெற்றவரின் வினைத் திட்பம் அரசின் இடையூற்றை தகுந்த வழியில் எண்ணி அழிக்கும்.