இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0664சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

(அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:664)

பொழிப்பு (மு வரதராசன்): 'இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்' என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம்; சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.மணக்குடவர் உரை: ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம். அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.

பரிமேலழகர் உரை: சொல்லுதல் யார்க்கும் எளிய - யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம்.
(சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.)

நாமக்கல் கவிஞர் உரை: (வினைத்திட்பம் உள்ளவர்கள் வாயால் சொன்னபடி காரியமும் செய்வார்கள்) ஒரு காரியத்தைச் செய்வதாகச் சொல்லிவிடுவது எல்லோர்க்கும் சுலபம். ஆனால் சொன்னபடி முடிப்பதுதான் அரிது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
யார்க்கும் எளிய சொல்லுதல்; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம்.

பதவுரை:
சொல்லுதல்-சொல்லுதல்; யார்க்கும்-எவர்க்கும்; எளிய-கிட்டக் கூடியன; அரியவாம்-அரியவாயினவாம்; சொல்லிய-சொன்னபடி; வண்ணம்-வகை; செயல்-செய்தல்;


சொல்லுதல் யார்க்கும் எளிய:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம்;
பரிப்பெருமாள்: ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம்;
பரிதி: சொல்லுதல் யார்க்கும் எளிது;
காலிங்கர்: யாம் வினைத்திட்பம் உடையோம் என்று இங்ஙனம் சொல்லல் யாவர்க்கும் எளிய;
பரிமேலழகர்: யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய;

'இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் எனச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அழகாகச் சொல்லுதல் யார்க்கும் முடியும்', 'இதனை இப்படிச் செய்ய வேண்டும் எனப் பிறரிடம் வாயாற் சொல்லுதல் யாவர்க்கும் எளிய செயல்', 'இவ்வாறு இக்காரியத்தை முடிப்போம் என்று சொல்லுதல் யார்க்கும் எளிமையாம்', ''இச் செயலை இவ்வாறு செய்து முடிப்போம்' என்று ஒழுங்குப் படுத்தி அழகுறக் கூறுதல் யாவர்க்கும் எளிய' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்லுதல் எல்லோர்க்கும் எளியவாம் என்பது இப்பகுதியின் பொருள்.

அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.
பரிப்பெருமாள்: அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய இருவகையினும், ஊறு ஓராது செயலின் வகை கூறுவார் முற்படச் சொல்லியவாறு செய்ய வேண்டும் என்று கூறினார்.
பரிதி: அரியது சொன்னது போலவே காரியம் முடிப்பது என்றவாறு.
காலிங்கர்: மற்று அச்சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் அரிய ஆகும்;
காலிங்கர் குறிப்புரை: அதனால் அங்ஙனம் முறைவழி செய்யத் திட்பம் உடையோர் வானவருள் ஒருவர் என்றவாறு.
பரிமேலழகர்: அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம்.
பரிமேலழகர் குறிப்புரை: சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.

'அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சொன்னபடி செய்தலே முடியாது', 'சொல்லியவாறு செய்து முடித்தல் யாவர்க்கும் அரிய செயல்', 'சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் அருமையாகும்', 'ஆனால் சொல்லியவாறே செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம் (முடியாவாம்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் கடினம் ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்லுதல் எல்லோர்க்கும் எளியவாம்; சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் அரிய ஆகும் என்பது பாடலின் பொருள்.
யார்க்கு 'அரியவாகும்'?

வினைத்திட்பம் உள்ளவரே சொன்னதைச் சொல்லியபடி செய்து தருவர்.

தாம் வினைத்திட்பம் உடையோர் போல் சொல்லுதல் யாவர்க்கும் எளியது; வினைத்திட்பம் உள்ளோரே சொல்லியபடி செயல்களை முடிப்பர்.
செயலில் உறுதியுடையோரே செயல்பாட்டில் வெற்றி பெற இயலும். திடமான மனம் உள்ளவரே திட்டமிட்டபடி-சொன்னபடி வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் திறன் பெற்றவர். அரிய செயல்களை எண்ணி 'இவற்றைச் செய்வேன்; இவ்வாறு செய்வேன்' எனச் சொல்வது திட்பமில்லாதாருக்கும் எளிதுதான். ஆனால் அவர்களுக்கு அவற்றை நடைமுறையில் செயல்படுத்துவது கடினம். அங்கு சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு உண்டாகிறது. செய்ய முடிந்ததையே சொல்ல வேண்டும்; சொன்னபடியே செய்து முடிக்க வேண்டும். அதற்குரிய மன உறுதி வேண்டும் என்பது கூறப்படுகிறது.

'ஊருக்குத்தான் உபதேசம்' என்பவர்களைப் பற்றிச் சொல்லும் குறள் இது என்று சொல்பவர்களும் உண்டு. 'நீ இவ்வாறு செய் எனப் பிறர்க்கு அறிவுரை வாயினால் அறிவுரை சொல்வது எளிது; ஆனால் அப்படிச் சொல்பவர்களாலேயே அந்தச் சொல்லின்படி நடத்தல் மிகவும் கடினம்; உரைத்தலினும் ஒழுகல் சிறந்தது; ஒழுக்கம் சொல்லுதற்கு எளிதாயினும் கடைப்பிடித்தற்கு அரிது என்று இப்பாடலுக்கு இவர்கள் விளக்கம் அளிப்பர். ஆனால் இந்தக் குறள் வினைத்திட்பம் அதிகாரத்தின் கீழ் வருகிறது. இது சொல்லும் வண்ணம் செயல்திறன் காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்த வந்தது; அறிவுரை சொல்லுகிறபடி ஒழுக முடியாது என்பதைத் தெரிவிப்பது அல்ல. எனவே திட்டமிட்டு வினை செய்துமுடிக்கும் திட்பமுடையவர் பற்றிய பாடலாகவே இதைக் கருதவேண்டும்.

யார்க்கு 'அரியவாகும்'?

செயல் வீரத்தைப் பற்றிய குறட்பா இது. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இருத்தல் கூடாது; செய்ய முடிந்ததையே சொல்ல வேண்டும்; சொல்லிவிட்டால் சொன்ன வண்ணம் செய்து முடித்துக் காட்டுவதே வினைத்திட்பம் என்பதைச் சொல்லும் பாடல். சொல்லியவாறு செய்து முடித்தல் எல்லாராலும் இயலாது. வினைத்திட்பம் உடையோராலேயே சொல்லிய வண்ணம் செய்ய முடியும். அங்ஙனம் முறைவழி செய்யும் திட்பம் உடையோர் அரிதாக உள்ளனர் என்கிறது பாடல். வினைத்திட்பத்தினது அருமை கூறப்பட்டது.
'அரிது என்பது ஒரு சிலர் அரும்பாடு பட்டுச் செய்துமுடித்தலையும், பெரும்பாலார் எப்பாடு பட்டும் செய்ய முடியாமையையும் உணர்த்தும் என்று கொள்ளப் பெறும். இனி, எதிர் நிலை (அருத்தாபத்தி) யளவையால், ஒரோ ஒருவர்க்கு அது எளிதாக முடியும் என்பதும் அறியப்படும்' என்று தேவநேயப் பாவாணர் விளக்கம் தருவார்.

வினைத்திட்பம் இல்லாதவர்க்குச் சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் 'அரிய ஆகும்'.

ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்லுதல் எல்லோர்க்கும் எளியவாம்; சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் கடினம் ஆகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வினைத்திட்பம் இலர் பலர்.

பொழிப்பு

சொல்லுதல் எல்லோருக்கும் எளிது; ஆனால் சொன்னபடி செய்துமுடிப்பது கடினமாகும்.