இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0663கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்

(அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:663)

பொழிப்பு (மு வரதராசன்): செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாகச் செய்யும் தகுதியே ஆண்மையாகும்; இடையில் வெளிப்பட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது; இடையிலே மீள்வானாயின் அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும்.
சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது தொடங்கின வினையை முடியச் செய்யவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் - அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும்.
(மறைத்துச் செய்வதாவது: அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும், தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான் அவர் உய்த்துணராமலும் அடங்கிச் செய்தல். அத்திட்பம் ஆண் தன்மையான் வருதலின் 'ஆண்மை'எனப்பட்டது. எற்றா விழுமமாவன, பகைவர் முன் அறிந்து அவ்வினையை விலக்குதல், செய்வானை விலக்குதல் செய்வர்ஆகலின், அவற்றான் வருவன. விழுமம் : சாதிப்பெயர். இவைஇரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.)

மயிலை சிவமுத்து உரை: ஒருவன் ஒரு செயலைத் தொடங்கினால் அதை அதன் இறுதிவரையில் செய்து மீள்வதே அவனுக்கு ஆண்மையாகும். இடையிலேயே மீள்வானாயின் அஃது அவனுக்கு நீங்காத துன்பத்தையே விளைவிக்கும்.
வேறொரு பொருள்: ஒருவன் தான் செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாக மறைத்துச் செய்வதே வினைத்திட்பம் ஆகும். அங்ஙனமன்றி இடையில் அச்செயல் பிறருக்குப் புலப்படும்படி ஒருவன் செய்வான் ஆயின், அத்தொழிலைச் செய்வானுக்கு அது நீங்காத துன்பத்தைத் தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும்.

பதவுரை:
கடை-முடிவின்கண்; கொட்க-மீளல்; செய்தக்கது-செய்யத் தகுதி வாய்ந்தது; ஆண்மை-ஆளுந்தன்மை; இடை-நடுவில்; கொட்கின்-மீள்வானாயின்; எற்றா-நீங்காத; விழுமம்-துன்பம்; தரும்-கொடுக்கும்.


கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது;
மணக்குடவர் குறிப்புரை: சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று.
பரிப்பெருமாள்: ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே சென்று மீளச் செய்வது ஆண்மையாவது;
பரிப்பெருமாள் குறிப்புரை: சென்று மீளுதல் சுழல்தல் ஆயிற்று.
பரிதி: ஒரு காரியத்தை எடுத்துக்கொண்ட பிரியம் போலே காரியம் முடியுமட்டும் செய்வான்;
காலிங்கர்: அமைச்சரானோர் திண்ணிதாகத் தெரிந்து உரைத்த வினையினைக் கைக்கொண்ட அரசர் கடை போகச் செய்யத்தக்கதே ஆண்மைப்பாடாவது; [கடை போக - முடிவாக]
பரிமேலழகர்: செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது;
பரிமேலழகர் குறிப்புரை: மறைத்துச் செய்வதாவது: அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும், தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான் அவர் உய்த்துணராமலும் அடங்கிச் செய்தல். அத்திட்பம் ஆண் தன்மையான் வருதலின் 'ஆண்மை' எனப்பட்டது.

'ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது' என்ற பொருளில் பரிமேலழகர் ஒழிந்த பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது' என வேறுபாடான உரை தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'முடிந்தபின் வெளியாம்படி செய்வதே திறமை', 'மறைவாகச் செய்யக்கூடிய செயல்களை முடிவில் வெளிப்படுமாறு முன்னர் மறைத்துச் செய்வதே வினைத்திட்பமாம். (செயலுறுதியாம்)', 'மேற்கொண்ட காரியத்தை அது பூர்த்தியடைகிற வரை இடையில் விடாமல் செய்து முடிப்பதுதான் (வினைத்திட்பம் என்னும்) ஆற்றல்', 'செய்யும் வினையைச் செய்து முடித்த பின்னர் புலப்படுமாறு மறைத்துச் செய்வதே வலிமையாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செயலை இறுதிவரையில் முடித்து வெளிப்படுவதே திறமையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இடையிலே மீள்வானாயின் அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இது தொடங்கின வினையை முடியச் செய்யவேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: இடையிலே மீள்வானாயின் மிகுதியைக் கொடாது நோயைக் கொடுக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தொடங்கின வினையை முடியச் செய்யவேண்டுமென்றது.
பரிதி: இடையிலே விக்கினம் வருமாகில், உலகம் பேணாது, தனக்கும் புகழில்லையாய்த் துன்பம் வரும் என்றவாறு.
காலிங்கர் ('இடைக்கொட்பின்' என்பது பாடம்): இனி, இவ்வாறன்றி இடை புரிந்து விடின், நெஞ்சினான் எனைத்தொன்றும் கருதப்படாத துயரத்தைத் தரும் என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: எற்றா விழுமமாவன, பகைவர் முன் அறிந்து அவ்வினையை விலக்குதல், செய்வானை விலக்குதல் செய்வர்ஆகலின், அவற்றான் வருவன. விழுமம் : சாதிப்பெயர். இவைஇரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.

'இடையிலே மீள்வானாயின் அது மிகுதியைக் கொடாது நோயைக் கொடுக்கும்' என்ற பொருளில் பரிமேலழகர் தவிர்த்த மற்ற பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும்' எனக் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இடையே வெளிப்படின் பெருந்துன்பம் வரும்', 'அங்ஙனம் அன்றி இடையில் வெளிப்படுமாறு செய்தல் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்', 'இடையிடையே அதைவிட்டு மாறுபட்டால் தீராத துன்பங்கள் உண்டாகும்', 'அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின், அப் புலப்பாடு செய்வார்க்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இடையிலேயே மீள்வானாயின் அது எண்ணமுடியாத துன்பத்தைக் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செயலை இறுதிவரையில் முடித்து வெளிவருவதே திறமையாகும்; இடையிலேயே மீள்வானாயின் அது எண்ணமுடியாத துன்பத்தைக் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.
இக்குறளில் காணப்படும் கடைக்கொட்க - இடைக்கொட்கின் என்ற தொடர்களின் பொருள் என்ன?

ஒரு செயலை முழுமையாக முடித்துக் கொடுக்கவேண்டும்; அரைகுறையான நிலையில் அதிலிருந்து வெளியேறுவது ஆண்மையல்ல.

மேற்கொண்ட செயலின்கண் இறுதிவரை இருந்து விடாப்பிடியாகச் செய்து முடித்து வெளிவருவதுதான் வலிமை; இடையே அதைவிட்டு விலகுவானாயின் தீராத துன்பங்கள் உண்டாகும்.
ஒரு செயலைத் தொடங்கியபின் அதில் முழுமூச்சாக ஈடுபட்டு 'எப்படியேனும் இதைச் செம்மையாக நிறைவேற்றியே தீருவேன்' என்று விடாப்பிடியாக முடித்துத் தருவதே திறமையாகும். வினைத்திட்பம் கொண்டவரால்தான் கடைபோகச் செய்ய முடியும். பாதியிலேயே ஒரு வேலையை விட்டு நீங்கினால் அது அச் செயலுக்கும் நன்றாகாது; செய்பவனுக்கும் இழுக்கு தரும். தேரை இழுத்துத் தெருவில் விட்டு ஓடி விடுவார்களா? தேரை முழுதாக தேர்வீதிகளில் சுற்றி இழுத்துத் தேர் முட்டிக்கு(நிலைக்கு)க் கொண்டுவந்து நிறுத்துவதுதான் பெருமைக்குரியதாகும்.

கொட்க என்ற சொல்லுக்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று' எனவிளக்கம் தந்துள்ளனர். இது வட்டத்தை முழுவதும் சுற்றி நிறைவு செய்வதைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.
ஆண்மை என்னும் சொல்லினை அடிப்படையாகக் கொண்டு பல புதிய சொற்கள் குறளில் தோற்றம் பெற்றுள்ளன. ஆற்றல், ஆளுந்தன்மை, தளராமல் இருத்தல் முதலான பல்வேறு பொருள்களில் புதிய சொற்கள் உருவாகியுள்ளன. இங்கு வாளா ஆண்மை என வலிமை என்ற பொருளில் வந்துள்ளது.
விழுமம் என்பது 'சிறப்பு' என்றும் 'துன்பம்' என்றும் பொருள் தரக்கூடிய சொல். இங்கு துன்பம் என்ற பொருளில் உள்ளது.

இக்குறளில் காணப்படும் கடைக்கொட்க - இடைக்கொட்கின் என்ற தொடர்களின் பொருள் என்ன?

இத்தொடர்களில் உள்ள 'கொட்க' என்னும் சொல்லின் பொருள் தெளிவு படாமல் உள்ளது.
இச்சொல்லுக்கு பொருள்கொண்ட வகையால் இக்குறளுக்கு முதல் நான்கு தொல்லாசிரியர்களும் ஒரு திறமாகவும் பரிமேலழகர் அதனின் முற்றிலும் மாறுபாடானதாகவும் உரை கூறினர். முதல் வகையினர் கொட்க என்பதற்கு மீளல் எனப் பொருள் கண்டு ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது என விளக்கினர். பரிமேலழகரும் இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலோரும் 'கொட்க' என்றதற்கு புலப்படுதல் அதாவது வெளிப்படுதல் எனப் பொருள் கொண்டு கடைக்கொட்க என்ற தொடர்க்கு 'முடிவில் புலப்படும் வகை' எனவும் இடைக்கொட்கின் என்றதற்கு 'இடையிலே வெளிப்படுமாயின்' எனவும் பொருள் கொண்டு உரை செய்தனர். இதனால் இக்குறளுக்கு 'ஒரு செயலைத் தொடங்கினால் அதை அதன் இறுதிவரையில் செய்து மீள்வதே ஒருவனுக்கு ஆண்மையாகும். இடையிலேயே மீள்வானாயின் அஃது அவனுக்கு நீங்காத துன்பத்தையே விளைவிக்கும்' என்றும் 'ஒருவன் தான் செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாக மறைத்துச் செய்வதே வினைத்திட்பம் ஆகும். அங்ஙனமன்றி இடையில் அச்செயல் பிறருக்குப் புலப்படும்படி ஒருவன் செய்வான் ஆயின், அத்தொழிலைச் செய்வானுக்கு அது நீங்காத துன்பத்தைத் தரும்' என்றும் இரு வேறுபாடான உரைகள் உண்டாயின.

செயலின் மறை காப்பாற்றப்படவேண்டும் என்றவர்கள் கூறிய விளக்கங்கள்: 'ஒரு செயல் நிறைவுற்ற பிறகே அதைப்பற்றி வெளிப்படச் செய்யவேண்டும். அவ்வாறு செய்தலே அச்செயல் நிறைவுறுதலுக்கான வலிமையைத் தரும். அதுவே வினைத் திட்பம் எனப்படுவதுமாம். இடையிலேயே எடுத்துக்கொண்ட செயலைப் பற்றியச் செய்திகளை வெளியிடுவதோ, கசிய விடுவதோ, முடிவில்லாத தடைகளையும், செயல் நிறைவுறா நிலையையும் தந்துவிடும்; இது அரசின் செயல்களை நிருவகிக்கும் அமைச்சர்களுக்குத் தேவையான திறனாம்; ஒரு அரசு மேற்கொள்ளும் செயல்களுக்கு எத்துணையோ இடையூறுகள் பகை நிலையில் உள்ளவர்களால் வரலாம். இந்நிலையில் பிறர் அறியாவண்ணம், இரகசிங்களைப் போற்றிக் காப்பாற்றாவிட்டால், அதனால் பல தடைகளும், தடைகளால் கெடுவதும் செயலுக்கு வந்து சேரலாம்; முடிவாகக் கைகூடுமட்டும் நம் கருத்தை வெளிவிடக்கூடாது மனம் நாவடக்கிக் காரியக் கருத்துடனிருந்து முடிவில் வெற்றியால் வெளிவரச் செய்யவேண்டும். இடையில் வெளிப்படுத்தினால் பகைவரும் பொறாமைக்காரரும் காரியத்தைக் கெடுப்பர். நீக்கமுடியாத துன்பங்கள் உண்டாகும்'.

செயலின் இரகசியத்தன்மை காப்பாற்றப்படுவதுதான் இங்கு சொல்லப்படுகிறதா? இப்பாடல் அமைச்சியலில் பகுக்கப்பட்டுள்ளதால் பரிமேலழகரும் மற்றவர்களும் மறைவாகச்செய்வது சொல்லப்பட்டது எனக் கருதியிருக்கலாம்.
தண்டபாணி தேசிகர் 'மணக், பரிப்பெருமாள் இருவரும் 'கொட்டுதல்-சுழலுதல்' என வெளிப்படையாகப் பொருள் தந்தனர். பரிதி, காளிங்கர் இருவரும் 'சுழலுதலைக்' குறிப்பால் தந்தனர். ஏனையோர் அனைவரும் 'வெளிப்படுதல்' என உரை கண்டனர். 'கடைக்கொட்குதல்-கடைசியில் வெளிப்படுதல்' என்றனர். 'வெளிப்படுதல்' என்ற பொருள் பரிமேலழகரே கண்டதாதல் வேண்டும். இன்றுள்ள பழைய இலக்கியங்கள் அனைத்திலும் சுழலுதல் என்னும் பொருளிலே வந்துள்ளது. 'வெளிப்படுதல்' என்னும் பொருளுக்குரிய வினைப்பகுதி யாது என்பதும், வேறுஎங்கேனும் ஆட்சியுண்டா என்பது ஆய்ந்து கண்டு தெளியவேண்டும்' என இக்குறள் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளார். எனவே கடைக்கொட்குதல் என்றதற்கு 'கடைசியில் வெளிப்படுதல்' என்ற பொருள் பரிமேலழகரின் கண்டுபிடிப்புதான்; அதற்கு முன்பு அப்பொருளில் வேறு எங்கும் ஆட்சியில்லை என்பது தெரியவருகிறது.
இரா சாரங்கபாணியும் 'சங்கவிலக்கியங்களில் 'கொட்குதல்' என்பது சுழலுதல் என்னும் பொருளில் மிகுதியும் வருகிறது. கால் உணவாகச் சுடரொடு கொட்கும் அவிச்சடை முனிவரும் (புறம் 43:3) தோளே தொடி கொட்பு ஆனா (நற்றிணை 133:1) என்பன காண்க. அச்சொற்கு அப்பொருள் கண்டு 'ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மை' என மணக்குடவர் உரைப்பது தகும். அவர் சென்று மீள்தல், சுழல்தல் ஆயிற்று என விளக்கமும் தருவர்' எனச் சொல்கிறார்.
கடைசியாகப் புலப்படவேண்டும் என்றால் இப்பாடல் வினைசெயல்வகையில் வந்திருக்க வேண்டும். மறைவாக ஒரு செயலைச் செய்வதில் என்ன ஆண்மை இருக்கிறது? மறை காப்பது நல்லதோர் சூழ்ச்சி(strategy)தான் என்றாலும் வெளிப்படையான (transparent) செயல்களே எங்கும் பெரிதும் நடைபெறுகின்றன. சில செயல்களில் மறை காப்பாற்றப்படவேண்டும்தான். ஆனால் மறைவாகச் செய்யப்படும் செயல் என்பதற்கான குறிப்பு எதுவும் இக்குறளில் இல்லை. பரிமேலழகர் அணியினரது உரையை விட முந்தியவர்கள் கூறிய உரை வினைத்திட்பம் என்ற அதிகாரத் தலைப்புக்கு நன்கு பொருந்துகிறது.

கடைக்கொட்க - இடைக்கொட்கின் என்பவற்றிற்கு கடைபோக-இடையிலே மீள்வானாயின் என்பது பொருள்.

செயலை இறுதிவரையில் முடித்து வெளிவருவதே திறமையாகும்; இடையிலேயே மீள்வானாயின் அது எண்ணமுடியாத துன்பத்தைக் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

முற்ற முடிக்கத்தக்கதே வினைத்திட்பம்.

பொழிப்பு

செயலை மேற்கொண்டபின் அதனை முற்றாக முடித்தலே வினைத்திட்பம்; இடையிலேயே மீள்வனாயின் பெருந்துன்பம் வரும்