இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0661வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றவை எல்லாம் பிற

(அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:661)

பொழிப்பு (மு வரதராசன்): ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின் திட்பமே (உறுதியே) ஆகும்; மற்றவை எல்லாம் வேறானவை.

மணக்குடவர் உரை: வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா.
மற்றவையென்றது கருவியும் உபாயமும்.

பரிமேலழகர் உரை: வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா.
(ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.)

மயிலை சிவமுத்து உரை: ஒரு தொழிலினிடத்துத் திண்மை என்பது ஒருவன் உள்ளத்தின் உறுதியேயாகும். மற்றவையெல்லாம் இதற்கு அடுத்தவையாகவே கொள்ளுதல் வேண்டும். மற்றவை -கருவி, உபாயம் முதலியன; படை, அரண், நட்பு முதலியவைகளையும் கொள்ளலாம். வினைத்திட்பம் செயலின்கண் உறுதியாய் இருத்தல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.

பதவுரை:
வினைத்திட்பம்-செயல்உறுதி; என்பது-என்று சொல்லப்படுவது; ஒருவன்-ஒருவன்; மனத்திட்பம்-மனத்தினது திண்மை; மற்றைய-ஒழிந்தவை; எல்லாம்-அனைத்தும்; பிற-மற்றவை.


வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை;
பரிப்பெருமாள்: வினைத்திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவன் மனத்தின் உண்டான திண்மை;
பரிதி: எடுத்துக்கொண்ட காரியம் முடிவது எப்படி என்றால் திடபுத்தியினாலே முடியும் அல்லது;
காலிங்கர்: வினையின் திட்பமாவது அவ்வினை முடியும் அளவும் உரம் செய்து நிற்றல் ஆகலான், அதனை அங்ஙனம் கோலிக்கொண்ட அமைச்சனது மனத்தின் திட்பமே திட்பம் ஆவது; [கோலிக்கொண்ட-சூழல் அமைத்துக்கொண்ட]
பரிமேலழகர்: வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை;

'வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வினையுறுதி என்பது நம் நெஞ்சுறுதி', 'செயலுறுதி எனப்படுவது ஒருவனது மன உறுதிப்பாடே', 'காரிய வலிமை என்பது ஒருவனுடைய மனவலிமைதான்', 'வேலைத்திட மென்பது அதனைச் செய்யும் ஒருவனுடைய மன உறுதியே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வினையுறுதி எனப்படுவது ஒருவனது மனத்திண்மை என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றைய எல்லாம் பிற:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா.
மணக்குடவர் குறிப்புரை: மற்றவையென்றது கருவியும் உபாயமும்.
பரிப்பெருமாள்: அதனையொழிய மற்றைய எல்லாம் திட்பம் என்று சொல்லப்படா.
பரிப்பெருமாள் குறிப்புரை: மற்றவையென்றது கருவியும் உபாயம் முடித்தலும். வினைத்திட்பமாவது யாது என்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: மற்றைத்திடமான சதுரங்கபெலம் திடமல்ல என்றவாறு. [சதுரங்கம்- யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்ற நால்வகையான அங்கங்கள்]
காலிங்கர்: மற்று ஏனையவெல்லாம் பிறவால் ஒழியும்; செய்வன எல்லாம் வழியழிந்து கெட்டுவிடும்.
பரிமேலழகர்: அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா.
பரிமேலழகர் குறிப்புரை: ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.

'அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மற்றையவை உறுதியாகா', 'அதனை ஒழிந்த ஆள்பலம், பணபலம் முதலியவற்றால் வரும் உறுதிப்பாடெல்லாம் உறுதிப்பாடாகா', 'மற்ற வலிமைகளெல்லாம் அதற்குப் பிற்பட்டனவேயாகும்', 'மற்றக் கருவிகளின் உறுதியெல்லாம் திடமென்று சிறப்பித்துச் சொல்லத் தக்கதன்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதனை ஒழிந்தவையெல்லாம் வேறு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வினையுறுதி எனப்படுவது ஒருவனது மனத்திண்மை; அதனை ஒழிந்த மற்றவை எல்லாம் பிற என்பது பாடலின் பொருள்.
'மற்றவை எல்லாம் பிற' என்றது குறிப்பது என்ன?

வினைத்திட்பம் என்பது உள்ள உறுதிதான்; மற்றவையெல்லாம் வேறு.

ஒரு செயலினிடத்துத் திண்மை என்பது அதைச் செய்பவனது உள்ளத்தின் உறுதியேயாகும். மற்றவையெல்லாம் அதற்கு அடுத்துத்தான்.
உள்ள உறுதி என்பது தொடங்கிய செயல் முடியும் அளவும் உள்ள உரத்தோடு நிற்றலாம். எண்ணம் செயலுருவாக்கம் பெற்று அதனைச் செம்மையாக முடிக்க உள்ளத் திண்மை வேண்டும். உள்ளம் உறுதியாக இருந்தால் செயற்திண்மை தானே வரும்.
ஒரு செயலைச் செய்து முடிக்க உறுதி என்ற ஒன்று மிகத்தேவை. மேற்கொண்ட செயலில் மனவுறுதியும் விட்டகலாப்பற்றும் ஒருவரிடம் திகழுமானால் தளர்ச்சியடையாதிருத்தலும், வரும் இடையுறுகளைத் தாங்கும் திறன்களும் அவருக்கு எளிதில் கைவரப்பெறும். மன உறுதி இருக்குமாயின் எதையும் சாதிக்கலாம். மனத்திட்பமும், மெய்ம் முயற்சியும் உடையார்க்கு வாய்க்காதது எதுவுமில்லை. மனத்திட்பம் என்ற கண்ணுக்குப் புலப்படாத நிலைதான் உணரவல்ல வினைத்திட்பம் என்ற நிலையை எய்துகிறது. அங்கிருந்து செயலின் முடிப்பு நிலையை எட்டும். மனத்திட்பம் இல்லாமல் வினைத்திட்பம் இல்லை. மனவலி படைத்தவர் வினைவலி பெற்று செயல் நிறைவேற்றுவர் என்பது கருத்து.

'மற்றவை எல்லாம் பிற' என்றது குறிப்பது என்ன?

'மற்றவை எல்லாம் பிற' என்றதற்கு அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா, அதனையொழிய மற்றைய எல்லாம் திட்பம் என்று சொல்லப்படா, மற்றைத்திடமான சதுரங்கபெலம் திடமல்ல, மற்று ஏனையவெல்லாம் பிறவால் ஒழியும், அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா, மற்றைய எல்லாம் கெட்டியல்ல, அஃதொழிந்தனவெல்லாம் அதற்குத் திண்மையாயினுந் திண்மை அல்ல, மற்றவை எல்லாம் வேறானவை, அதைத் தவிர்த்த பிற யாவும் திட்பமெனக் கூறத்தக்கன அல்ல, மனத்திட்பத்தை ஒழித்த பிறவெல்லாம் இருந்தாலும் பயனில்லை, மற்றையவை உறுதியாகா, தனை ஒழிந்த ஆள்பலம், பணபலம் முதலியவற்றால் வரும் உறுதிப்பாடெல்லாம் உறுதிப்பாடாகா, மற்ற வலிமைகளெல்லாம் அதற்குப் பிற்பட்டனவேயாகும், மற்றை உறுதிகள் எல்லாம் உறுதிகள் ஆகா, மற்றக் கருவிகளின் உறுதியெல்லாம் திடமென்று சிறப்பித்துச் சொல்லத் தக்கதன்று, அதனைத் தவிர்த்த பிறவெல்லாம் வலிமை என்று சொல்லப்படா, அதனைத் தவிர்த்த பிறவெல்லாம் வலிமை என்று சொல்லப்படா, மற்றவையெல்லாம் இதற்கு அடுத்தவையாகவே கொள்ளுதல் வேண்டும், அஃதல்லாத பிறவெல்லாம் அதைப்போன்ற திண்மையாகா என்றவாறு உரையாசிரியர்கள் விளக்கினர்.

ஒரு செயலைச் செய்து முடிக்கப் பெரிதும் துணை புரிவது சதுரங்கபெலம், படை, அரண், நட்பு, ஆள்பலம், பணபலம், கருவிகள், அரசாங்கத்தின் உதவி, நண்பர்களின் துணை, உறவினர்களின் ஒத்துழைப்பு, என்பன போன்றிவைகள் அல்ல. அவையும் வேண்டுமாயினும், செய்வானின் மனத்திண்மை யில்லாவிடத்து அவை பயன்படா. வேண்டியது மன உறுதி; மற்றவை எல்லாம் அது போன்ற திண்மையாகா என்பது இப்பகுதி குறிப்பது.

வினையுறுதி எனப்படுவது ஒருவனது மனத்திண்மை; அதனை ஒழிந்தவையெல்லாம் வேறு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வினைத்திட்பம் என்பது மனஉறுதியே.

பொழிப்பு

செயலுறுதி எனப்படுவது ஒருவனது உள்ளத் திண்மையே; அதனை ஒழிந்தவையெல்லாம் வேறு.