இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0660



சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று

(அதிகாரம்:வினைத்தூய்மை குறள் எண்:660)

பொழிப்பு (மு வரதராசன்): வஞ்சனையான வழியால் பொருளைச் சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்துள் நீரைவிட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

மணக்குடவர் உரை: வஞ்சத்தாலே பொருள்தேடி மகிழ்ந்திருத்தல், பசுமட்கலத்திலே நீரை முகந்துவைத்த தன்மைத்து என்றவாறு.
இது, தானும் பொருளுங் கூடிக் கெடும் என்றது.

பரிமேலழகர் உரை: சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் - அமைச்சன் தீய வினைகளாற் பொருள் படைத்து, அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல்; பசுமட்கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று - பசிய மட்கலத்துள்ளே நீரைப் பெய்து அதற்கு ஏமஞ்செய்ததனோடு ஒக்கும்.
(முன் ஆக்கம் பயப்பன போல் தோன்றிப் பின் அழிவே பயத்தலால், அவை 'சலம்' எனப்பட்டன. 'ஏமமார்த்தல்' என்பது 'ஏமார்த்தல்' என்றாயிற்று, ஏமத்தை அடையப் பண்ணுதல் என்றவாறு, இருத்துதல் - நெடுங்காலம் இருப்பச் செய்தல். அரசனும் பொருளும் சேரப் போம் என்பதாம். பிறரெல்லாம், 'ஏமார்த்தல்' என்று பாடமோதி, அதற்கு மகிழ்தல் என்றும், 'இரீஇயற்று' என்பதற்கு வைத்தாற்போலும் என்றும் உரைத்தார், அவர் அவை தன்வினையும் பிறிதின் வினையுமாய் உவமையிலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர். இவை நான்கு பாட்டானும் அதற்குக் காரணம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: ஒருவன் வஞ்சனையால் பொருளீட்டி மகிழ்ந்திருத்தல் பசுமண்ணால் செய்த (சூளையிற் சுடாத) குடத்தில் நீரைப் பெய்து சேமித்து வைத்துவிட்டோம் என்று ஒருவன் மகிழ்ந்திருந்தாற் போலும். (உவமையால் பொருளும் பொருளுடையவனும் அழிதல் பெறப்படும்).


பொருள்கோள் வரிஅமைப்பு:
சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண் கலத்துள் நீர்பெய்து இரீஇயற்று.

பதவுரை:
சலத்தால்-வஞ்சனையால்; பொருள்-உடைமை; செய்து-இயற்றி; ஏமார்த்தல்-மகிழ்தல் என்றும் பாதுகாத்தல் என்றும் பொருள் கொள்வர்; பசுமண்-பச்சை மண்; கலத்துள்-பாண்டத்துள்; நீர்-நீர்; பெய்து-சொரிந்து; இரீஇ-இருக்கும்படி செய்து; அற்று-அத்தன்மைத்து.


சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வஞ்சத்தாலே பொருள்தேடி மகிழ்ந்திருத்தல்;
பரிப்பெருமாள்: வஞ்சத்தாலே பொருள்தேடி மகிழ்ந்திருத்தல்;
பரிதி: அநீதியினால் தேடும்பொருள் தன்னையும் கெடுத்துத் தானும் போம்;
காலிங்கர்: இது நமக்கு உறுதி அன்று என்று கருதாது பிறரொடு சலம் பற்றிக்கொண்டு மற்று அதனால் பொருளினைச் செய்து யாம் உடையம் என்று இறுமாந்திருத்தல் எத்தன்மைத்தோ எனின்;
பரிமேலழகர்: அமைச்சன் தீய வினைகளாற் பொருள் படைத்து, அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல்;
பரிமேலழகர் குறிப்புரை: முன் ஆக்கம் பயப்பன போல் தோன்றிப் பின் அழிவே பயத்தலால், அவை 'சலம்' எனப்பட்டன. 'ஏமமார்த்தல்' என்பது 'ஏமார்த்தல்' என்றாயிற்று, ஏமத்தை அடையப் பண்ணுதல் என்றவாறு,

இப்பகுதியிலுள்ள சலத்தால் பொருள்செய்து என்ற தொடர்க்கு 'வஞ்சத்தாலே பொருள்தேடி' என்ற பொருளிலே அனைத்துப் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ஆனால் ஏமார்த்தல் என்றதற்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'மகிழ்ந்திருத்தல்' என்றும் காலிங்கர் 'இறுமாந்திருத்தல்' என்றும் உரை செய்தனர். பரிமேலழகர் மாறுபாடாக 'ஏமஞ்செய்தல்' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏமாற்றிக் கொண்ட பொருள் நிலைக்காது', 'பழிதரும் காரியங்களைச் செய்து பணம் சம்பாதித்துப் பூட்டி வைத்துச் சேமிப்பது', 'தீவினையால் பொருள் சேர்த்து அதற்குக் காப்பமைத்தல்', 'தீய வினைகளால் பொருளை உண்டாக்கிப் பாதுகாத்து வைத்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஏமாற்றிப் பொருளீட்டி மகிழ்ந்திருத்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

பசுமண் கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பசுமட்கலத்திலே நீரை முகந்துவைத்த தன்மைத்து என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது, தானும் பொருளுங் கூடிக் கெடும் என்றது.
பரிப்பெருமாள்: பசுமட்கலத்திலே நீரை முகந்துவைத்த தன்மைத்து என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, தானும் பொருளுங் கூடிக் கெடும் என்றது.
பரிதி: எப்படி என்றால் பச்சை மண் பாத்திரத்தில் வார்த்த தண்ணீரும் பாத்திரமும் கெட்டாற்போலே என்றவாறு.
காலிங்கர்: மண்ணான் வனைத்துளவாகிய பசுங்கலத்தினகத்து நீரினைப் பெய்து இருத்திய அத்தன்மைத்து என்றவாறு.
பரிமேலழகர்: பசிய மட்கலத்துள்ளே நீரைப் பெய்து அதற்கு ஏமஞ்செய்ததனோடு ஒக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இருத்துதல் - நெடுங்காலம் இருப்பச் செய்தல். அரசனும் பொருளும் சேரப் போம் என்பதாம். பிறரெல்லாம், 'ஏமார்த்தல்' என்று பாடமோதி, அதற்கு மகிழ்தல் என்றும், 'இரீஇயற்று' என்பதற்கு வைத்தாற்போலும் என்றும் உரைத்தார், அவர் அவை தன்வினையும் பிறிதின் வினையுமாய் உவமையிலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர். இவை நான்கு பாட்டானும் அதற்குக் காரணம் கூறப்பட்டது.

'பசுமட்கலத்திலே நீரை முகந்துவைத்த தன்மைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சுடாத மண்பானையில் நீர் தங்குமா?', 'வேக வைக்காத பச்சை மண்பாண்டத்தில் தண்ணீரை ஊற்றி மூடி வைப்பதைப் போன்றது', 'பச்சை மண்கலத்தில் தண்ணீரை ஊற்றி அதனைக் காப்பது போலாம்', 'சுடாத பசிய மண் குடத்துள் நீரை ஊற்றி வைத்ததை ஒக்கும். ('பசு மண் குட நீர் ஒழுகி ஓடிவிடுவது போல் தீவினையால் ஈட்டிய பொருளும் அழிந்துவிடும்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சுடாத பச்சை மண்பானையில் நீரை ஊற்றி வைப்பதைப் போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஏமாற்றிப் பொருளீட்டி ஏமார்த்தல் சுடாத பச்சை மண்பானையில் நீரை ஊற்றி வைப்பதைப் போன்றது என்பது பாடலின் பொருள்.
'ஏமார்த்தல்' என்ற சொல்லின் பொருள் என்ன?

வஞ்சனையால் பொருள்சேர்த்த மகிழ்ச்சி நீண்ட காலம் நிலைக்காது.

ஏமாற்றிப் பொருள் தேடி மகிழ்ந்திருத்தல் பச்சைமண்ணால் செய்யப் பெற்ற கலயத்துள் நீரைப் பெய்து வைத்தது போன்றது.
மண்ணினால் கலங்கள் புனைந்து அவற்றை தீயிலிட்டு திடமாக்கி உறுதிப்படுத்துவர். இவ்விதம் சுட்ட கலத்தில் நீர் தேக்கினால் நிலைத்து நிற்கும். சுடாத ஈரமண்கலத்தில் இட்ட நீர் கலத்தையும் கரைத்து ஓடிப் போகும்; அதில் நீர் சேர்த்து வைக்க முடியாது. அதுபோல் வஞ்சனையான வழிகளில் சேர்த்த செல்வம், நில்லாது விரைந்து மறைந்துவிடும். பொருள் செய்தலுக்கு நீர்பெய்தலும், மகிழ்ந்திருத்தலுக்கு நீரை இருத்துதலும் உவமையாக வந்தன.
சலம் என்றது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதலை அதாவது வஞ்சனையைக் குறிக்கும்.
சலத்தால் பொருள் செய்தல் என்பதற்குக் குன்றக்குடி அடிகளார் 'பிறருடைய உழைப்புக்குரிய பொருளை மறைவாகச் (வஞ்சகமாக) சாத்திரம், பட்டம், ஆதிக்கம் இவைகளைப் பயன்படுத்தியும் உழைப்பாளரின் அறியாமையை, வறுமையைப் பயன்படுத்தியும் பொருளைச் செய்து கொள்ளுதல்' என விளக்கம் தருவார்.

இக்குறளை பொதுநிலையில் கொள்ளமுடியும் என்றாலும், அமைச்சு அதிகாரத்துள் வருவதால் சிறப்பாக அமைச்சரை நோக்கிக் கூறப்பட்டதாகக் கொள்வர். வரிப்பணம் அல்லாது மற்ற தூய்மையற்ற செயல்களால் அரசு பெறுவது சலத்தால் பெறும் பொருளாகும். தானும் வஞ்சக நெறியால் பொருள் சேர்த்து அரசையும் மகிழ்விக்கும் அமைச்சரால் அப்பொருள்களைக் காக்கமுடியாது என்பதாக இப்பாடலுக்கு உரை கூறுவர்.
பரிமேலழகர் 'அமைச்சன் தீய வினைகளாற் பொருள் படைத்து, அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல்' எனக்கூறி 'அவ்விதம் தேடிய ஆக்கத்தைக் காக்கமுடியாது; அரசும் பொருளும் ஒருசேரப் போகும்' என விளக்கமும் கூறுவார். இதுவும் சிறந்ததே.
சலத்தால் சேகரிக்கப்படுவதை வள்ளுவரே அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் (பொருள்செயல்வகை 755 பொருள்: அருளோடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்) என்ற குறளில் அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் எனக் குறித்து அதை நீக்கிவிடவேண்டும் எனக் கூறுவார்.

'ஏமார்த்தல்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'ஏமார்த்தல்' என்றதற்கு மகிழ்ந்திருத்தல், இறுமாந்திருத்தல், ஏமஞ்செய்தல், காப்பாற்றுதல், சேமஞ் செய்தல், கட்டிக்காத்தல், பாதுகாத்தல், சேமித்தல், பாதுகாப்பாக வைத்தல், காப்பமைத்தல், பாதுகாத்து வைத்தல், காப்பாற்ற எண்ணுதல், (அரசனைப் பாதுகாத்துவிடுதல்) என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இச்சொல்லுக்கு ஏமாத்தல் என்றும் பாடம் கொண்டு மணக்குடவர் மகிழ்ந்திருத்தல் என்றும் காலிங்கர் இறுமாந்திருத்தல் என்றும் சொல்லி உரை செய்தனர்.
'ஏமமார்த்தல்' என்பது 'ஏமார்த்தல்' என்றாயிற்று (ஏமம்+ ஆர்த்தல் ஏமார்த்தல்), ஏமத்தையடையப் பண்ணுதல் எனக் கூறி ஏமத்தை அடையப் பண்ணுதல் என்று பொருள் எனவும் சொல்வார் பரிமேலழகர், மேலும் பரிமேலழகர் 'அவை தன்வினையும் பிறிதின் வினையுமாய் உவமை இலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர்” என்று மணக்குடவர், காலிங்கர் பாடங்களை மறுத்து எழுதுகின்றார். ஆனால் தண்டபாணி தேசிகர் 'பச்சைமண்கலத்துள் நீர் பெய்து (நீரைச்சேமித்து விட்டோம் என்று மகிழ்ந்திருந்தாற்போலும்' என உரை முடிபு காணின் தன்வினை பிறவினை முரணின்றாகிறது' என ‘ஏமாத்தல்’ என்ற பாடத்திற்கே, தன்வினை பிறிதின் வினை முரணின்றியே பொருள் செய்யலாம் எனக் கருத்துரைக்கிறார்.

'ஏமாத்தல் என்றதற்கு மகிழ்ந்திருத்தல் என்பது பொருள்.

ஏமாற்றிப் பொருளீட்டி மகிழ்ந்திருத்தல் சுடாத பச்சை மண்பானையில் நீரை ஊற்றி வைப்பதைப் போன்றது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வினைத்தூய்மையால் பெறும் மகிழ்ச்சி நெடிது தங்கும்.

பொழிப்பு

வஞ்சனையால் பொருளீட்டி மகிழ்ந்திருத்தல் சுடாத பசுமண் பானையில் நீரைச் சேமித்து வைத்துவிட்டோம் என்பது போன்றது.