இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0659அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை

(அதிகாரம்:வினைத்தூய்மை குறள் எண்:659)

பொழிப்பு (மு வரதராசன்): பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும்; நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.

மணக்குடவர் உரை: பிறர் அழக்கொண்ட பொருள்களெல்லாம் தாமும் அழப்போம்: அவ்வாறன்றி அறப்பகுதியில் கொண்ட பொருள்கள் இழந்தாராயினும் பின்பு பயன்படும்.
இது தேடினபொருள் போமென்றது.

பரிமேலழகர் உரை: அழக்கொண்ட எல்லாம் அழப்போம் - ஒருவன், தீயவினைகளைச் செய்து பிறர் இரங்கக் கொண்ட பொருளெல்லாம் இம்மையிலே அவன் தான் இரங்கப் போகாநிற்கும்; நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும் - மற்றைத்தூய வினையான் வந்த பொருள்கள் முன் இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும்.
(பின் எனவே, மறுமையும் அடங்கிற்று. பொருள்களான் அவற்றிற்குக் காரணமாய வினைகளது இயல்பு கூறியவாறு.)

சி இலக்குவனார் உரை: பிறர் அழுமாறு கொடிய செயல்களைச் செய்து ஈட்டிய பொருள்கள் எல்லாம் நாம் அழுமாறு போய்விடும். தூய வினைகள் செய்வதனால் பொருளை இழக்கும்படி நேரிட்டாலும், பின்னர் வந்து பயன் கொடுக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும்.

பதவுரை:
அழக்கொண்ட-(பிறர்)அழுமாறு கொண்டவை; எல்லாம்-அனைத்தும்; அழ-(தாம்)அழுமாறு; போம்-தொலையும்; இழப்பினும்-தொலைந்தாலும்; பின்-பிறகு; பயக்கும்-உண்டாக்கும்; நற்பாலவை-நல்ல பகுதிகளாலானவை அல்லது நற்கூறுகளாலானவை (தூயவை).


அழக்கொண்ட எல்லாம் அழப்போம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் அழக்கொண்ட பொருள்களெல்லாம் தாமும் அழப்போம்:
மணக்குடவர் குறிப்புரை: இது தேடினபொருள் போமென்றது.
பரிப்பெருமாள்: பிறர்கொண்ட பொருள்களெல்லாம் தாமும் அழப்போம்:
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தேடினபொருள் கெடும் என்றது.
பரிதி: பிறர் அழக்கொண்ட பொருள் தன்னையும் அழப்பண்ணிப்போம்;
காலிங்கர்: தாம் பிறரைச் செறுத்தும் ஒறுத்தும் அவர் நெஞ்சு புழுங்கி அழுமாறு வலியினால் வவ்விக்கொண்ட பொருள் அனைத்தும் தாமும் அவ்வாறு அழும்படி போய்விடும்
பரிமேலழகர்: ஒருவன், தீயவினைகளைச் செய்து பிறர் இரங்கக் கொண்ட பொருளெல்லாம் இம்மையிலே அவன் தான் இரங்கப் போகாநிற்கும்; மற்றைத்தூய வினையான் வந்த பொருள்கள் முன் இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும்.

'பிறர் அழக்கொண்ட பொருள்களெல்லாம் தாமும் அழப்போம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் அழக்கொண்டவை நாம் அழப்போகும்', 'ஒருவன் பிறரை அழச்செய்து கைப்பற்றிய பொருள்களெல்லாம் பின் அவன் அழ அப்பொருள்கள் பறிபோய் விடும்', 'பிறரைத் துன்பப்படுத்தி அவர்கள் அழ அழ அவர்களிடமிருந்து பறித்த செல்வமெல்லாம் (அதை போலவே) தம்மைப் பிறர் துன்பப்படுத்தி தாம் அழப் போயொழிந்துவிடும்', 'பிறர் அழுது வருந்தும்படி அவரிடம் ஒருவன் கைப்பற்றிய பொருள்கள் எல்லாம் அவனும் அவ்வாறே அழுது கவலைப்படும்படி அவனைவிட்டு நீங்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறரை அழவைத்துக் கைப்பற்றிய பொருள்களெல்லாம் அவனும் அழுமாறு போய்விடும் என்பது இப்பகுதியின் பொருள்.

இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வாறன்றி அறப்பகுதியில் கொண்ட பொருள்கள் இழந்தாராயினும் பின்பு பயன்படும்.
பரிப்பெருமாள்: அவ்வாறன்றி நற்பகுதியால் கொண்ட பொருளை இழந்தாராயினும் பின்பு பயன்படும்.
பரிதி: இழந்தாலும் பின்னே வந்து கைகூடும் நீதியால்தேடும் பொருள்; என்பதனால் நல்வினையால் பொருள் தேடுவான் என்றவாறு.
காலிங்கர்: இனி இவ்வாறன்றி முன்னம், தமக்கு உளதாகிய பொருளினை ஒருவாற்றான் இழந்தாராயினும், பின்னும் உளதாய்ச் செல்லும் நற்கூறாகிய வினையினான் இயற்றும் பொருளானவை என்றவாறு.
பரிமேலழகர்: மற்றைத்தூய வினையான் வந்த பொருள்கள் முன் இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: பின் எனவே, மறுமையும் அடங்கிற்று. பொருள்களான் அவற்றிற்குக் காரணமாய வினைகளது இயல்பு கூறியவாறு.

'நற்பகுதியால் கொண்ட பொருளை இழந்தாராயினும் பின்பு பயன்படும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லவை முன் தொலையினும் பின் பயன்தரும்', 'ஆனால், தூய வினையால வந்த பொருள்களை ஒருவன் முன் இழந்தாலும், அவை பின் வந்து அவனுக்குப் பயன் கொடுக்கும்', '(ஆனால் யாரையும் துன்புறுத்தாமல்) நல்ல வழியில் சம்பாதித்த செல்வத்தை ஒருவன் இழந்துவிட்டாலும் மீண்டும் அவனிடம் அது வந்து சேர்ந்துவிடும்', 'நல்வழியில் பெற்ற பொருள்களை ஒருவன் இழந்தான் ஆயினும் அவை பின்வந்து அடையும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நல்லவழிகளில் பெற்ற பொருள்களை ஒருவன் இழக்கும்படி நேரிட்டாலும், பின்னர் பயன் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறரை அழவைத்துக் கைப்பற்றிய பொருள்களெல்லாம் அழுமாறே போய்விடும்; நல்லவழிகளில் பெற்ற பொருள்களை ஒருவன் இழக்கும்படி நேரிட்டாலும், பிற்பயக்கும் என்பது பாடலின் பொருள்.
'பிற்பயக்கும்' என்ற தொடர் குறிப்பதென்ன?

தூய்மையற்ற வழியில் சேர்த்த செல்வம் வந்தவழியே திரும்பிப்போகும்; நல்வழியில் ஈட்டிய பொருள் தொலைந்தாலும் பின்னொரு காலத்தில் பயனை அளித்தே தீரும்.

பிறர் கதறும்படி ஒருவன் கைப்பற்றிக்கொண்ட பொருள்கள் எல்லாம், அவனும் அதுபோல் அழும்படி, மறைந்து போகும்; தூயவழியில் பெற்ற பொருள்களை ஒருவன் இழந்தாலும் பின்னர் ஏதாவதொரு வகையில் அவை அவனுக்கு நன்மையைத் தரும்.
ஒருவன் பிறரை வருத்தியும் ஒறுத்தும் அவர் நெஞ்சு புழுங்கி அழுமாறு தம்வலிமையைப் பயன்படுத்தி வவ்விக்கொண்ட பொருள்களை வைத்திருக்கிறான். இன்னொருவன் பிறர் களிப்ப நன்மை செய்து தேடிய பொருள்களை வைத்திருக்கிறான். காலப்போக்கில் தீயவழியில் பெற்ற முதலில் சொல்லப்பட்டவனின் பொருள்கள் அவன் அழஅழ வன்முறையிலேயே போய்விடுகின்றன. அவை போனது போனதுதான். இரண்டாமவனும் நல்ல நெறியில் வந்த பொருள்களைப் பறிகொடுக்கிறான். அவன் இழந்துவிட்டாலும், வேறுவகையில் அவன் பயன் அடையவே செய்வான் என்று வள்ளுவர் நல்லுரையாகச் சொல்கிறார்.
இக்குறளில் சொல்லப்பட்டவை ஒரு அறவாணர் சொல்லும் நீதிக்கருத்துக்கள் என்று கூறுவதைவிட வள்ளுவர் அவர்தம் அனுபவத்தில் கண்ட உண்மைகள் எனல் அமையும்.

இப்பாடல் அமைச்சியலில் வருவதால் அமைச்சரை நோக்கிக் கூறப்பட்டதாகவும் கொள்ளலாம். மக்கள் துன்புற முறைகேடுகள் செய்து உடைமைகளைக் கைப்பற்றுதல் போன்றவற்றில் ஈடுபடும் அமைச்சர் தானும் உடைமைகள்/பதவி நீங்கி வருந்துவார் எனவும் அரசே முறைதவறி நடந்தால் ஆட்சியே பறிபோய்விடும் எனலாம். அறவழியில் அமைச்சர்/அரசு பொருள் சேர்த்தால் அவரது பொருள்களுக்குத் தீங்கில்லை எனக் கொள்ளலாம்.

'பிற்பயக்கும்' என்ற தொடர் குறிப்பதென்ன?

'பிற்பயக்கும்' என்றதற்குப் பின்பு பயன்படும், பின்னே வந்து கைகூடும், பின்னும் உளதாய்ச் செல்லும், பின்னர் வந்து பயன் கொடுக்கும், பிறகு பயன் தரும், திரும்பி வரும், பிற்பாடு அவை திரும்ப வந்து, உரிய நன்மையைப் பயக்கும், பின் பயன்தரும், பின் வந்து பயன் கொடுக்கும், மீண்டும் அது வந்து சேர்ந்துவிடும், பின்னே பெருகிவிடும், பின்வந்து அடையும், பின்னர் வந்து பயன் கொடுக்கும், பின்னர் வேறோர் வகையில் நன்மையைத் தரும், பிற்காலத்து நலமாகவே விளையும், பின்னே நல்ல பலனையே கொடுக்கும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

காலிங்கர் குறளின் பிற்பகுதிக்கு 'இனி இவ்வாறன்றி முன்னம், தமக்கு உளதாகிய பொருளினை ஒருவாற்றான் இழந்தாராயினும், பின்னும் உளதாய்ச் செல்லும் நற்கூறாகிய வினையினான் இயற்றும் பொருளானவை என்றவாறு' என உரை செய்தார்.
பரிமேலழகர் 'மற்றைத்தூய வினையான் வந்த பொருள்கள் முன் இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும்' என்றார். மேலும் விரிவுரையில் 'பின் எனவே, மறுமையும் அடங்கிற்று' என விளக்கினார். இவ்விளக்கத்திற்குப் 'பின் என்று கூறியமையின் நற்பாலவை (தூய வினையால் வந்த பொருள்கள்) புண்ணிய வடிவமாக வந்து இம்மையிலேயன்றி, மறுமையிலும் பயந்தரும் என்பதாம்' என இரா சாரங்கபாணி உரை கூறுவார்.
நாமக்கல் இராமலிங்கம் தரும் விளக்கம்: 'பிற்பயக்கும் என்பதற்குப் பின்னால் வந்து சேரும் என்றும் அல்லது பின்னால் வரக்கூடிய நன்மைகளைத் தரும் என்றும் பொருள் கொள்ளலாம். பின்னால் வரக்கூடிய நன்மை புண்ணியம். .....நல்வழியில் சம்பாதிக்கிறவன் செல்வத்தை இழந்துவிட்டாலும் வினைத்தூய்மையால் அவனுக்குத் துன்பம் வராது.'
ஜி வரதராஜன் 'இப்பொழுது துன்பமிருந்தபோதிலும் எதிர்கால இன்பத்தையே மனிதன் நாடவேண்டும். அவ்வாறு இன்பக் குறிக்கோள் உடையவன் பொருளை இழந்தபோதிலும் நன்மையான செயலையே செய்ய வேண்டுமென்பது கருத்து' என விளக்குவார்.
'நற்பாலவை இழப்பினும் பின்பயக்கும் (தனது) நற்பகுதியாகப் பெற்றவை தற்காலிகமாக இழக்க நேரிட்டாலும் பின்னால் நல்ல (சமுதாயம்) பயனை விளைவிக்கும்' என்பார் கு ச ஆனந்தன்.

'பிற்பயக்கும்' என்ற தொடர் வேறு எந்த விதத்திலாவது நன்மையே தரும் என்று பொருள்படும்.

பிறரை அழவைத்துக் கைப்பற்றிய பொருள்களெல்லாம் அழுமாறே போய்விடும்; நல்லவழிகளில் பெற்ற பொருள்களை ஒருவன் இழக்கும்படி நேரிட்டாலும், பின்னர் பயன் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வினைத்தூய்மையால் பெற்ற பொருளுக்கு இழப்பில்லை.

பொழிப்பு

பிறர் அழக்கொண்டவை எல்லாம் அவன் அழ தொலையும்; நல்லவை பறிபோயினும் பின் வந்து பயன் தரும்.