ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
(அதிகாரம்:வினைத்துய்மை
குறள் எண்:656)
பொழிப்பு (மு வரதராசன்): பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது.
|
மணக்குடவர் உரை:
தன்னைப் பயந்தாள் பசிகண்டானாயினும் சான்றோரால் பழிக்கப்படும் வினையைச் செய்யாதொழிக.
இது நல்லோர் பழிக்கும் வினையைத் தவிர்க என்றது.
பரிமேலழகர் உரை:
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் - தன்னைப் பயந்தாளது பசியை வறுமையால் கண்டு இரங்கும் தன்மையினான் எனினும்; சான்றோர் பழிக்கும்
வினை செய்யற்க - அது சுட்டி அறிவுடையார் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யாதொழிக.
('இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ் செய்தாயினும்
புறந்தருக' என்னும் அறநூற்பொது விதி, பொருள்நூல் வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு உரியராதலும், நன்கு மதிக்கற்பாடும் உடைய
அமைச்சர்க்கு எய்தாமை பற்றி, இவ்வாறு கூறினார். இவை ஐந்து பாட்டானும், 'பாவமும் பழியும் பயக்கும் வினை செய்யற்க'
என்பது கூறப்பட்டது.)
வ சுப மாணிக்கம் உரை:
பெரியவர் பழிக்கும் தீயவினைகளை நின்தாய் பசித்துக் கிடந்தாலும் செய்யாதே.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும், சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க.
பதவுரை: ஈன்றாள்-பெற்றவள்; பசி-பசித்தல்; காண்பான்-பார்ப்பவன்; ஆயினும்-ஆனாலும்; செய்யற்க-செய்யாதொழிக; சான்றோர்-மேலானவர்; பழிக்கும்-தூற்றுதற்குக் காரணமாகிய; வினை-செயல்.
|
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னைப் பயந்தாள் பசிகண்டானாயினும்;
பரிப்பெருமாள்: தன்னைப் பயந்தாள் பசிகண்டானாயினும்;
பரிதி: மாதாவின் பசியைப் பார்த்தாலும்;
காலிங்கர்: ஈன்ற தாய் முதல் தெய்வம் என்று மறை மொழிதலானும், தன்னை ஈன்றாளை முன்னம் வணங்கி வழிபடுதல் யாவர்க்கும் கடன் ஆகலானும், மற்று இவள் பசி கண்டு இரங்கா நெஞ்சினன் ஆதல் மிகவும் தீ வினை; மற்று அது யாம் கண்டு பொறுத்திருப்பதும் அன்று;
பரிமேலழகர்: தன்னைப் பயந்தாளது பசியை வறுமையால் கண்டு இரங்கும் தன்மையினான் எனினும்;
'தன்னைப் பயந்தாள் பசிகண்டானாயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கரின் விளக்கம் சிறப்பாக உள்ளது.
இன்றைய ஆசிரியர்கள் 'தன்னைப் பெற்ற தாயின் பசியைக் காணும் வறிய நிலை இருப்பினும்', 'பெற்று வளர்த்த தாயானவள் உணவின்றிப் பசியால் வருந்துகின்றபோதும்கூட', 'தாயார் பசிக்கப் பார்த்தாலும்', 'பெற்ற தாய் வறுமையால் பசித்திருக்கக் கண்டான் ஆயினும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பெற்ற தாயின் பசி போக்க இயலாத வறிய நிலை இருப்பினும் என்பது இப்பகுதியின் பொருள்.
செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சான்றோரால் பழிக்கப்படும் வினையைச் செய்யாதொழிக.
மணக்குடவர் குறிப்புரை: இது நல்லோர் பழிக்கும் வினையைத் தவிர்க என்றது..
பரிப்பெருமாள்: சான்றோரால் பழிக்கப்படும் வினையைச் செய்யாதொழிக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நல்லோர் பழிக்கும் வினையைத் தவிர்க என்றது.
பரிதி: பெரியோர் பழிக்கும் காரியம் செய்வானல்லன் என்றவாறு.
காலிங்கர்: அதனால் முழுதும் உணர்ந்த சான்றோர் பழிக்கும் பழிதரு வினைகளைச் செய்தலே மிகவும் தீது என்றவாறு.
பரிமேலழகர்: அது சுட்டி அறிவுடையார் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யாதொழிக.
பரிமேலழகர் குறிப்புரை: 'இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ் செய்தாயினும்
புறந்தருக' என்னும் அறநூற்பொது விதி, பொருள்நூல் வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு உரியராதலும், நன்கு மதிக்கற்பாடும் உடைய
அமைச்சர்க்கு எய்தாமை பற்றி, இவ்வாறு கூறினார். இவை ஐந்து பாட்டானும், 'பாவமும் பழியும் பயக்கும் வினை செய்யற்க'
என்பது கூறப்பட்டது.
'சான்றோரால் பழிக்கப்படும் வினையைச் செய்யாதொழிக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அப்பசியைப் போக்குதற்காகச் சால்புடையார் பழிக்கும் தீய வினைகளை ஒருவன் செய்யாதொழிக', '(அவளுக்கு உணவு கொடுக்கவும்) பெரியோர்கள் பழி வரும் என்று சொல்லிய பாவகாரியத்தைச் செய்யக்கூடாது', 'நல்லோர் கடிந்த செயல்களை அப்பசி நீக்குதற் பொருட்டுஞ் செய்யக்கூடாது', 'குணங்களால் சிறந்த பெரியோர் பழிக்கும் செயல்களைச் செய்யாமல் இருப்பானாக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
சான்றோரால் பழிக்கப்படும் தீய வினைகளை ஒருவன் செய்யாமல் இருப்பானாக என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பெற்ற தாயின் பசி போக்க இயலாத வறிய நிலை இருப்பினும், சான்றோரால் பழிக்கப்படும் தீய வினைகளை ஒருவன் செய்யாமல் இருப்பானாக என்பது பாடலின் பொருள்.
நடைமுறைக்கு ஒவ்வாத அறவுரை இங்கு கூறப்படுகிறதா?
|
எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யக்கூடாது.
தன்னைப் பெற்றெடுத்த தாயின் பசித்துன்பத்தை நேரில் கண்டு வருந்தத்தக்க நிலையிலும் மேலோர் இகழ்ந்து கூறத்தக்க செயலினை ஒருவன் செய்யாதிருத்தல் வேண்டும்.
தாய்தான் முதலாகக் காக்கத்தக்கவள். எவ்வகையானும் பெற்றவளைப் பேணிக் காப்பது ஒவ்வொரு மனிதனும் இயல்பாகச் செய்வது. அவளுக்கு ஒரு இடர் நேர்ந்தால் அவன் விரைந்து சென்று துயர் துடைப்பான். அவளது பசி காண்டல் என்பது அவனுக்குத் தாங்க முடியாத துயரமாகும். ஈன்றவள் பசியால் வாடிக்கொண்டிருப்பதைக் காண்பது மகனுக்குப் பெரும் இழிவைத் தருவதாகும்.
மகனது கொடிய வறியநிலையே அவளது பசியாற்ற முடியாததற்குக் காரணம். ஈன்றவள் பசித்திருக்கக் கையறுநிலையாய் ஒருவன் இருக்க நேர்வது தனிவாழ்வில் ஒருவன் எதிர்கொள்ளும் பேரிடர்க்கு எல்லையாக அமையும். பசிபோக்கும் வழிமுறை எதுவும் அவனுக்குத் தென்படவில்லை. எனவே கையூட்டுப் பெறுதல், திருட்டு, பொய், ஏமாற்றுதல் போன்ற அழுக்கான செயல்கள் அவனது சிந்தனையில் தோன்றுகின்றன. அவை பசிக்கு உடனடி தீர்வு தரக்கூடியவையாகவும் எளிதானவையாகவும் அவனுக்குத் தோன்றுகின்றன. ஆனால் வள்ளுவர் அவனைத் தடுத்து நிறுத்துகிறார். எத்தகைய சூழ்நிலையிலும் தூய்மையற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்கிறார். தாயின் பசி போக்க என்பதற்காகவும் முறைகேடான, அறத்துக்குப் புறம்பான, தவறான செயல்களைச் செய்யக்கூடாது எனச் சொல்கிறார். நல்ல நோக்கமாய் இருப்பினும் அதை நிறைவேற்றும் வழிமுறைகளும் தூயனவாய் இருத்தல் வேண்டும் என்பது வள்ளுவர் அடிக்கடி அறிவுறுத்துவது.
தன்னைப் பெற்ற தாயும் தந்தையும், மனைவியும், அன்புக் குழந்தைகளும் பசியால் துடிக்கும்போது அறம் வழுவியேனும் அவர்களைக் காக்கலாம் என்று ஒருவனுக்கு உந்துதல் ஏற்படும். ஆனால் வள்ளுவர் எவரும் எந்தச் சூழ்நிலையிலும் சான்றோர் பழிக்கும் தீய செயல்களைச் செய்யக்கூடாது என்கிறார்.
'(மகாபாரதத்தில்) மரணப் படுக்கையில் இருந்துகொண்டு அறமிக்க பாண்டவர்களுக்குப் பீஷ்மாச்சாரியார் கூறும் ஆபத்தர்மாவோடு இது ஒத்துப் போவதில்லை. வள்ளுவர் இத்தகைய சிந்தனைகளுக்கு எதிராகச் சொல்கிறார். விளைவு வழிமுறைகளை நியாயப்படுத்தாது என்பதில் தெளிவாக உள்ள வள்ளுவர் ஆபத் தர்மத்திற்கு அதாவது 'ஆபத்துக்குப் பாவமில்லை' என்பதற்கு எதிராகச் செயல் தூய்மையை வலியுறுத்துகிறார்' என்பார் தெ பொ மீனாட்சிசுந்தரம்.
தன்னிடம் இல்லை என்று சொல்லி தீய செயல்களைச் செய்ய வேண்டாம் என்று வேறு இடங்களிலும் சொல்லியுள்ளார் வள்ளுவர். இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. (தீவினையச்சம் குறள் 205 பொருள்: யான் வறியவன்’ என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது; செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்) என்பது அவற்றுள் ஒன்று.
அதிகாரம் அமைச்சியலில் பகுப்பப்பட்டுள்ளது. எனவே இப்பாடலும் அமைச்சர் ஆற்றும் வினைத்தூய்மையைச் சொல்வது என்பர். 'அமைச்சுரிமை பூண்டார்க்கு ஒரு போதும் ஈன்றாள் பசி காணும் வறுமை வராது. அங்ஙனம் காண நேரினும் பழிக்கும் வினையைச் செய்யற்க என விதிக்கவே வந்தது' என விளக்குவார் தண்டபாணி தேசிகர்.
இக்குறளை அமைச்சர்க்குக் கூறிய அறம் என்று மட்டும் கொள்ளாது அனைவர் மேலதாகவும் கொள்ளல் ஏற்புடையது..
|
நடைமுறைக்கு ஒவ்வாத அறவுரை இங்கு கூறப்படுகிறதா?
வறுமைத் துன்பம் ஒருவனை வருத்துகிறது. பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த அவனது தாய் பசியால் வாடுகிறாள். ஈன்றாள் பசிகாண்பது எந்தத் தீவினையையும் செய்வதற்கு ஏற்ற ஒரு சூழல். அவள் பசி தீர்க்க வேறு வழிதோன்றாமல், பொய் சொல்லல், திருடுதல், கள்ளக்கணக்கு, கையூட்டுப் பெறுதல் வஞ்சனை, சூது போன்ற சான்றோர் பழிக்கும் தீச்செயல்களில் ஒன்றைச் செய்யத் துணிகிறான். தாயின் பசி தீர்த்தல் நல்ல நோக்கம்தானே. எச்செயல் புரிந்து அதை நிறைவேற்றினாலும் அதனால் நன்மை விளைகிறதே. பின் ஏன் அதைச் செய்யக்கூடாது என்று வள்ளுவர் தடுக்கிறார்?
நடைமுறைக்கு ஒவ்வாத அறவுரையைக் குறள் கூறுகிறதா? தாய் பசித்திருக்கும் சூழலில் ஒருவன் என்னதான் செய்ய வேண்டும்?
இக்குறள் பற்றிக் கருத்துரைக்கும்போது வ சுப மாணிக்கம், 'அறிவுடன் சிந்தித்துப் பழிக்கு அஞ்சி ஒரு சிறுகணம் பசி பொறுத்துக் கொள்ளலாம். அறவுரைகளால் பசியைத் தணிக்க முடியுமா? உயிர்த்துடிப்பை நிறுத்த இயலுமா? சோறுதான் பசி ஆற்றும் அல்லாமல் பெரியோர் சொல் ஆற்றுமா?' என்ற வினாக்களை எழுப்பி குறள் மூலமே ஒரு தீர்வும் கூறுகிறார். இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று.(இரவு 1051 பொருள்: இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரக்க வேண்டும்; அவர் இல்லையென்று ஒளிப்பாரானால் அது அவர்க்குப் பழி; தமக்குப் பழி அன்று.) என்ற குறளில் 'இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால் இரக்க' எனக்காட்டப்பட்டுள்ள ஒரு வழியைச் சுட்டுகிறார். இரந்து கேட்கலாம் என்பது ஒரு தீர்வு. ஆனால் சான்றோர் பழிக்கும் வினைகளில் இரத்தலும் ஒன்று அல்லவா? இப்பாடலில் இரத்தக்காரிடம் இரப்பவர்க்குப் பழி இல்லை என்றவாறும் கூறப்பட்டுள்ளதால், இன்னல்களின் எல்லையைத் தொட்ட சூழலிலும் துன்பம் தீர்க்கப் பழி நீங்கிய வழியும் குறளிலே உள்ளதாகிறது.
தூய செயல்கள் வழி தாயின் பசி தீர்ப்பதற்கு மாற்று வகைகளும் இருக்கின்றன. அவற்றை ஆர அமர்ந்து சிந்தித்து குற்றம் உண்டாகாமல் காத்துக் கொள்க என்பதே வள்ளுவர் கூறும் அறவுரை. எனவே இக்குறள் கூறுவது நடைமுறைக்கு ஒத்துவருவதே.
|
பெற்ற தாயின் பசி போக்க இயலாத வறிய நிலை இருப்பினும், சான்றோரால் பழிக்கப்படும் தீய வினைகளை ஒருவன் செய்யாமல் இருப்பானாக என்பது இக்குறட்கருத்து.
செயலின் வழிமுறைகள் பழிக்கத்தக்கதாக இல்லாமல் வினைத்தூய்மை காக்கப்பட வேண்டும்.
ஈன்றவள் பசியைத் தீர்ப்பதாக இருந்தாலும் சான்றோர் பழிக்கும் செயலைச் செய்யக் கூடாது.
|