எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றுஅன்ன செய்யாமை நன்று
(அதிகாரம்:வினைத்தூய்மை
குறள் எண்:655)
பொழிப்பு (மு வரதராசன்): பிறகு நினைந்து வருந்துவதற்குக் காரணமான செயல்களைச் செய்யக்கூடாது. ஒருகால் தவறிச் செய்தாலும், மீண்டும் அத்தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
|
மணக்குடவர் உரை:
துணியப்பட்ட தென்று பின்னிரங்கப்படும் வினையைச் செய்யா தொழிக; வினைசெய்வானாயின் அவை போல்வனவுஞ் செய்யாமையே நல்லது.
இது பின்னிரங்கப்படும் வினையைச் செய்யலாகாதென்றது.
பரிமேலழகர் உரை:
எற்று என்று இரங்குவ செய்யற்க - யான் செய்தது எத்தன்மைத்து என்று பின் தானே இரங்கும் வினைகளை ஒருகாலும் செய்யாதொழிக; செய்வானேல் மற்று அன்ன செய்யாமை நன்று - அன்றி ஒருகால் மயங்கி அவற்றைச் செய்யும் தன்மையனாயினான் ஆயின், பின் இருந்து அவ்விரங்கல்களைச் செய்யாதொழிதல் நன்று.
('இரங்குவ' என முன் வந்தமையின், பின் 'அன்ன' வெனச் சுட்டி ஒழிந்தார். அவ்வினைகளது பன்மையான் இரக்கமும் பலவாயின. அச்செயற்குப் பின்னிருந்து இரங்குவனாயின், அது தீரும் வாயில் அறிந்திலன் எனவும், திட்பமிலன் எனவும் பயனல்லன செய்கின்றான் எனவும், தன்பழியைத் தானே தூற்றுகின்றான் எனவும் எல்லாரும் இகழ்தலின், 'பின் இரங்காமை நன்று' என்றார்.இதுவும் வினைத்தூயார் செயலாகலின்,உடன் கூறப்பட்டது. 'பின் தொடர்தற்குச் செய்வானாயின், அவை போல்வனவும் செய்யாமை நன்று' எனப் பிறரெல்லாம் இயைபு அற உரைத்தார்.)
மயிலை சிவமுத்து உரை:
நான் எத்தகைய தவறுகளைச் செய்துவிட்டேன் என்று பிறகு எண்ணி வருந்தக்கூடிய செயல்களை என்றென்றும் செய்யா தொழிக. அத்தகைய குற்றங்களை ஒரு முறை செய்ய நேர்ந்துவிட்டாலும் மீண்டும் அவற்றைப் புரியாதிருத்தலே நல்லது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று.
பதவுரை:
எற்று-என்செய்தோம்; என்று-என்பதாக; இரங்குவ-இரங்கத்தகும் செயல்கள்; செய்யற்க-செய்யாதொழிக; செய்வானேல்-செய்வானானால்; மற்று-(ஆனால்); அன்ன-அத்தன்மையான; செய்யாமை-செய்யாதிருத்தல்; நன்று-நன்மையுடையது.
|
எற்றுஎன்று இரங்குவ செய்யற்க:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துணியப்பட்ட தென்று பின்னிரங்கப்படும் வினையைச் செய்யா தொழிக;
மணக்குடவர் குறிப்புரை: இது பின்னிரங்கப்படும் வினையைச் செய்யலாகாதென்றது.
பரிப்பெருமாள்: வினைசெய்வானாகில் அது போல்வனவுஞ் செய்யாமையே நல்லது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பின்னிரங்கப்படும் வினை செய்யலாகாதென்றது.
பரிதி: என்ன காரியம் செய்தோம் என்று பின்பு விதனப்படாத காரியமே செய்வான்;
காலிங்கர்: இவை தகாது என்று அஞ்சாது நெஞ்சில் துணிவு கொண்டு பிறர் சோகிக்கத் தகுவனவாகிய தூயது அல்லாத கருமங்களைச் செய்யாது ஒழிக;
பரிமேலழகர்: யான் செய்தது எத்தன்மைத்து என்று பின் தானே இரங்கும் வினைகளை ஒருகாலும் செய்யாதொழிக;
'துணியப்பட்ட தென்று பின்னிரங்கப்படும் வினையைச் செய்யா தொழிக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'பிறர் சோகிக்கத் தகுவனவாகிய தூயது அல்லாத கருமங்களைச் செய்யாது ஒழிக' என்றார். 'யான் செய்தது எத்தன்மைத்து என்று பின் தானே இரங்கும் வினைகளை ஒருகாலும் செய்யாதொழிக' என்பது பரிமேலழகர் உரை.
இன்றைய ஆசிரியர்கள் 'என்செய்தேன் என்று பின்வருந்தும் செயலைச் செய்யாதே', 'தான் செய்தது எவ்வளவு இழிதன்மையது என்று பின் தானே இரங்குதற்குரிய தீய செயல்களை ஒருகாலும் செய்யக்கூடாது', ''ஐயோ இதை ஏன் செய்தாய்?' என்று யாரும் துன்பப்படும்படியான எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது', 'என்ன தவறு செய்துவிட்டோம் என்று கவலைப்படுதற்கு ஏதுவாகிய செயல்களைச் செய்யக்கூடாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
'என்செய்தோம்' என்று பின் தானே இரங்குதற்குரிய செயலைச் செய்யக்கூடாது என்பது இப்பகுதியின் பொருள்.
செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினைசெய்வானாயின் அவை போல்வனவுஞ் செய்யாமையே நல்லது.
பரிப்பெருமாள்: வினைசெய்வானாகில் அது போல்வனவுஞ் செய்யாமையே நல்லது.
பரிதி: மறுத்து நல்ல காரியம் செய்வான் என்றவாறு,
காலிங்கர்: இங்ஙனம் இதனைக் குறிக் கொண்டு செய்வான் ஆயினும், செய்யும் கருமம் செய்யும் இடத்தும் பிறர்க்கு இரக்கம் வருதல் செய்யாமையே நன்று என்றவாறு.
பரிமேலழகர்: அன்றி ஒருகால் மயங்கி அவற்றைச் செய்யும் தன்மையனாயினான் ஆயின், பின் இருந்து அவ்விரங்கல்களைச் செய்யாதொழிதல் நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: 'இரங்குவ' என முன் வந்தமையின், பின் 'அன்ன' வெனச் சுட்டி ஒழிந்தார். அவ்வினைகளது பன்மையான் இரக்கமும் பலவாயின. அச்செயற்குப் பின்னிருந்து இரங்குவனாயின், அது தீரும் வாயில் அறிந்திலன் எனவும், திட்பமிலன் எனவும் பயனல்லன செய்கின்றான் எனவும், தன்பழியைத் தானே தூற்றுகின்றான் எனவும் எல்லாரும் இகழ்தலின், 'பின் இரங்காமை நன்று' என்றார். இதுவும் வினைத்தூயார் செயலாகலின்,உடன் கூறப்பட்டது. 'பின் தொடர்தற்குச் செய்வானாயின், அவை போல்வனவும் செய்யாமை நன்று' எனப் பிறரெல்லாம் இயைபு அற உரைத்தார்.
'செய்வானாயின் அவை போல்வனவுஞ் செய்யாமையே நல்லது' என்ற பொருளில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'மறுத்து நல்ல காரியம் செய்வான்' என்றார். காலிங்கர் 'செய்வான் ஆயினும், செய்யும் கருமம் செய்யும் இடத்தும் பிறர்க்கு இரக்கம் வருதல் செய்யாமையே நன்று' எனப் பொருள் கூறினார். பரிமேலழகர் 'ஒருகால் மயங்கி அவற்றைச் செய்யும் தன்மையனாயினான் ஆயின், பின் இருந்து அவ்விரங்கல்களைச் செய்யாதொழிதல் நன்று' என உரை செய்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'செய்தால் திரும்பவும் செய்யாதே', 'ஒருகால் தவறிச் செய்வானாயினும் மீண்டும் அப்படிப்பட்ட செயல்களைச் செய்யாதிருத்தல் நல்லது', 'தவறிச் செய்துவிட்டாலும் மறுபடியும் அப்படிப்பட்டதைச் செய்யாமலிருக்க வேண்டும்', 'அத்தகைய செயல்களை ஒருமுறை ஒருவன் செய்வானாயின் அவற்றைப்பற்றிக் கழிவிரக்கம் கொள்ளாமை நல்லது. (ஒருகால் தவறிச் செய்யினும் மீட்டும் அத்தகைய செயல்களைச் செய்யாமை நல்லதென்றுங் கூறுப.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
ஒருகால் செய்வானாயினும் மீண்டும் அத்தகைய செயல்களைச் செய்யாதிருத்தல் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
'என்செய்தேன்' என்று பின் தானே இரங்குதற்குரிய செயலைச் செய்யக்கூடாது; ஒருகால் செய்வானாயினும் மற்றுஅன்ன செய்யாதிருத்தல் நல்லது என்பது பாடலின் பொருள்.
'மற்றுஅன்ன செய்யாமை' என்ற தொடர் குறிப்பது என்ன?
|
'நான் எதற்காக இதைச் செய்தேன்' என்று பின் வருந்தும்படியான செயல்களைச் செய்யவேண்டாம்.
எத்தகைய செயலைச் செய்துவிட்டோம் என்று பின்னர் தம்மையே நொந்து கொள்ளும்படியான செயல்களைச் செய்யா தொழிக. செய்துவிட்டால் அத்தகைய தூய்மையற்றவற்றை மீண்டும் செய்யாமலிருத்தலே நல்லது.
தெரிந்தோ தெரியாமலோ ஒருவன் தூய்மைக் குறைவான செயலைப் புரிந்து விடுகிறான். தவறு செய்வது இயற்கை. ஆனால் அத்தவற்றை மீளநினைத்துப் பார்க்கும்பொழுது அவன் உள்ளமே நடுங்குகிறது. ஏன் தான் இதை செய்தோமோ என வருந்துகிறது. அங்ஙனம் பின்இரங்கத்தக்கச் செயல்களைச் செய்யக்கூடாது.
எந்தக் கருமத்தையும் எண்ணித் துணிய வேண்டும். ஒரு செயலின் பயன் அச்செயல் முடிந்தபின்தான் அறியப்படும் என்று சொல்லி எதையும் கருத்தில் கொள்ளாமல் குற்றமான செயல் ஒன்றைத் தொடங்கி தீய விளைவுகளைக் காண்கிறான் ஒருவன், பின் ஏன் செய்தோம் என்று தன்னிரக்கம் கொள்கிறான். மறுமுறையும் அத்தகைய தூய்மையற்ற இரங்கும் செயலைச் செய்ய வேண்டாம் என அறிவுரை கூறுகிறது இப்பாடல்.
இக்குறட்குத் தீமை பயக்கச் செய்த தன் செயலுக்குத் தானே இரங்குவதாகவும் தன் செயலுக்குப் பிறர் இரங்குவதாகவும், தன் தீய செயலால் பிறர் வருந்துவதாகவும் என மூவகையாகப் பொருள் கூறினர்.
ஒருவர் செய்யும் வினையை, பின்பு தானே 'என்ன செய்தோம்' என்று இரங்காத அளவுக்குத் தூய்மையோடு ஒருவர் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்த பாடல் இது. குற்றமான செய்கைக்கு செய்தவன் வருந்துவதால் ஒருமுறை மன்னிக்கலாம்; ஆனால் அதே தவற்றைத் திரும்பச் செய்வது நல்லதல்ல என்ற கருத்தையும் தருவதாக அமைகிறது.
அமைச்சியலில் இவ்வதிகாரம் பகுக்கப்பட்டுள்ளதால், இக்குறளும் அமைச்சர்க்குச் சிறப்பு வகையில் கூறியதாகக் கொள்வர்.
நாமக்கல் இராமலிங்கம் 'எற்றென்று இரங்குதல் செய்யற்க' என்பதற்கு 'அய்யோ' அப்பா' 'ஆ' 'அம்மா' என்பன போன்ற தீனக்குரல் -பரிதாபக் குரல்- கிளம்பும்படியானவற்றைச் செய்யாதிருக்க வேண்டும் என்று சுவைபட ஓர் பொருள் கூறினார்.
|
'மற்றுஅன்ன செய்யாமை' என்ற தொடர் குறிப்பது என்ன?
இப்பாடலிலுள்ள மற்று என்ற சொல் ஆனால் அல்லது பின் என்ற பொருள் தந்து 'செய்யற்க' என்ற வினையை மாற்றிச் செய்வானேல் என்பதைச் சிறப்பித்தது.
'அன்ன செய்யாமை' என்றதற்கு ஏனையோர் 'அத்தகைய இரங்கத்தக்க செயல்களைச் செய்யாமை' என்றும் பரிமேலழகர் 'அந்த இரங்கல் செய்யாமை' என்றும் பொருள் உரைத்தனர். பரிமேலழகர் ஏன் இரங்கக்கூடாது என்பதற்கு 'அது தீரும் வாயில் அறிந்திலன், திட்பமிலன், பயனல்லன செய்கின்றான், தன்பழியைத் தானே தூற்றுகின்றான் என எல்லாரும் இகழ்வர் என்பதால் பின் இரங்காமை நன்று' என்றார் என விளக்கம் கூறினார்.
காலிங்கர் உரை 'பிறர் எற்று என்று இரங்குவ செய்யற்க அதாவது செய்யவேண்டியதைச் செய்தாலும் பிறர் மனம் வருந்தும்படி செய்யற்க' என ‘இரங்குவ’ என்பதனைத் பிறர் மேலதாக வைத்துக் கூறுகிறது.
'கழிவிரக்கப்படுவனவற்றைச் செய்யற்க' என்று ஒரு சாராரும் 'செய்தவற்றிற்குக் கழிவிரக்கம் கொள்ளற்க' என இன்னொரு சாராரும் 'மற்றுஅன்ன செய்யாமை' என்ற தொடர்க்கு உரை கூறினர்.
தேவநேயப்பாவாணர் 'எற்றென்றிரங்குவ' என்பதே பின்னிரங்குவதை எதிர் நோக்கலால், இரங்காமை நன்றென்பது மூலத்தொடு முரண்படுவதென அறிக' எனக் கூறி பின்னதை மறுப்பார்.
தண்டபாணி தேசிகரும் 'குறள் கூறிய முன்விதியை மாற்றி 'செய்வானேல் இரங்கற்க' என்கிறது. இதனையே மேல்வரிச் சட்டமாகக் கொண்டு செய்து இரங்காமையும் செய்தல் கூடும் என்பதையும் எண்ணத் தோன்றுகிறது. ஆதலால் இரங்குவ செய்யற்க; செய்வானேல் அன்னசெய்யாமையே நன்று ஆதலால் துணிவதற்குமுன் எண்ணிச்செய்க என்பது வினைத்தூய்மைக்கு ஏற்புடையதாகுமா? என்பதையும் எண்ணுக' என்று கூறுவதால் இரக்கம் கொள்ளற்க என்ற பொருளை ஏற்கவில்லை.
‘மற்றன்ன’ என்பது முன்வந்த இரங்குவ என்பதை அதாவது இரங்குதற்குரிய செயல்களைக் குறிப்பதே இயல்பு. எனவே 'இரங்குவ செய்யற்க; மற்றுச் செய்வானேல் அன்ன செய்யாமை நன்று' என்பதே சிறந்த பொருள்.
'மற்றுஅன்ன செய்யாமை' என்ற தொடர்க்கு 'பின் இரங்கத்தக்கவற்றைச் செய்யாமை' என்பது பொருள்.
|
'என்செய்தேன்' என்று பின் தானே இரங்குதற்குரிய செயலைச் செய்யக்கூடாது; ஒருகால் செய்வானாயினும் மீண்டும் அத்தகைய செயல்களைச் செய்யாதிருத்தல் நல்லது என்பது இக்குறட்கருத்து.
செய்து இரங்கா வினை ஆற்றல் வினைத்தூய்மையாம்.
'என்செய்தேன் என்று பின் இரங்குதற்குரிய செயல்களைச் செய்யக்கூடாது; செய்தால் மீண்டும் அத்தகைய செயல்களைச் செய்யாதிருத்தல் நல்லது.
|