இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0654இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்

(அதிகாரம்:வினைத்தூய்மை குறள் எண்:654)

பொழிப்பு (மு வரதராசன்): அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்காகவும்) இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.

மணக்குடவர் உரை: துன்பம் வரினும் இழிவாகிய வினைகளைச் செய்யார் துளக்க மற்ற தெளிவுடையார்.
இது பிறரால் இகழப்படுவன செய்யற்க வென்றது. இதனையும் கடிய வேண்டு மென்பது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் - தாம் இடுக்கணிலே படவரினும், அது தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளிவந்த வினைகளைச் செய்யார்; நடுக்கு அற்ற காட்சியவர் - துளக்கம் அற்ற தெளிவினை உடையார்.
(சிறிதுபோழ்தில் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும் கழியாத இளிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும் வருவது வரும் என்பதூஉம் தெளிவர் ஆகலான் , 'செய்யார்' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: அதிராத அறிஞர் நெருக்கடிபட்டாலும் இழிந்த செயல்களைச் செய்யார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நடுக்கற்ற காட்சி யவர் இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்.

பதவுரை:
இடுக்கண்-துன்பம்; படினும்-படவரின்; இளிவந்த-இழிவான வினைகள்; செய்யார்-செய்யமாட்டார்கள்; நடுக்கற்ற-கலக்கம் நீங்கிய; காட்சியவர்-அறிவுடையவர்.


இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துன்பம் வரினும் இழிவாகிய வினைகளைச் செய்யார்;
பரிப்பெருமாள்: துன்பம் வரினும் இழிவாகிய வினைகளைச் செய்யார்;
பரிதி: தாம் இடுக்கண் உற்றாலும் இழிவான காரியம் செய்யார்;
காலிங்கர்: இதன் தன்மை இது ஆகலான் தாம் பெரிதும் அங்ஙனம் ஆகிய இடர் உரினும் அதனையுற்று அமைவது அன்றி மற்று அது ஒழித்தல் காரணமாகப் பெரிதும் இளிவந்தனவாகிய வினையைச் செய்யத் துணியார்; [அங்ஙனம் என்றது வறுமையை]
பரிமேலழகர்: தாம் இடுக்கணிலே படவரினும், அது தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளிவந்த வினைகளைச் செய்யார்;
பரிமேலழகர் குறிப்புரை: சிறிதுபோழ்தில் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும் கழியாத இளிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும் வருவது வரும் என்பதூஉம் தெளிவர் ஆகலான் , 'செய்யார்' என்றார்.

'துன்பம் படவரினும் இழிவாகிய வினைகளைச் செய்யார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தாம் துன்பத்திலே சிக்கிக் கொண்டாலும், அதனை நீக்குதற்கு இழிவு தரும் செயல்களைச் செய்ய மாட்டார்', 'தரித்திரமடைந்து துன்பப்படுகிற காலத்திலும் இழிவான காரியங்களைச் செய்துவிட மாட்டார்கள்', 'தாம் இடர்ப்பட்டாலும் அதனைத் தீர்த்தற்கு இழிவான செயலைச் செய்யமாட்டார்', 'துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்ய மாட்டர்கள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

துன்பத்திலே சிக்கிக் கொண்டாலும் இழிவானவற்றைச் செய்ய மாட்டர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நடுக்கற்ற காட்சி யவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துளக்க மற்ற தெளிவுடையார்.
மணக்குடவர் குறிப்புரை: இது பிறரால் இகழப்படுவன செய்யற்க வென்றது. இதனையும் கடிய வேண்டு மென்பது கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: துளக்க மற்ற தெளிவுடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அவர் வருமது வரும் என்று நினைப்பர். இது பிறரால் இகழப்படுவன செய்யற்க என்றவாறாயிற்று. இத்துணையும் கடிய வேண்டுவன கூறப்பட்டது.
பரிதி: திடபுத்தியுள்ளவர் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின் ஆக்கமும் கேடும் அனுபவித்தல் கடன் என்று கலக்கம் அற்று அமைந்த அறிவினை உடையவர் என்றவாறு.
பரிமேலழகர்: துளக்கம் அற்ற தெளிவினை உடையார்.

'துளக்கம் அற்ற தெளிவினை உடையார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கலக்கமற்ற தெளிந்த அறிவினையுடையவர்', 'உறுதியான அறிவுடையவர்கள்', 'கலங்காத அறிவினை உடையவர்கள்', 'நிலையான அறிவினையுடையவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதிராத தெளிவினை உடையார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நடுக்கற்ற காட்சியவர் துன்பத்திலே சிக்கிக் கொண்டாலும் இழிவானவற்றைச் செய்ய மாட்டர்கள் என்பது பாடலின் பொருள்.
'நடுக்கற்ற காட்சியவர்' யார்?

என்ன துன்பமுற்றாலும் பழிக்கத்தக்கவற்றை செய்யாமாட்டார்கள் கலக்கம் அடையாத தெளிவான சிந்தனையுடையவர்.

பதட்டம் இல்லாமல் சிந்திப்பவர் எத்தகைய துன்பத்தில் அகப்படும்படியாக நேரிடினும் அது தீர்த்தற் பொருட்டு இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
வினைத்தூய்மை உள்ளவர்கள் துன்பத்தில் உழலும்போதும் கலக்கம் இன்றி உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பார்கள் - அதிலிருந்து மீள்வதற்காக இழிவானவற்றைச் செய்ய அவர்கள் எண்ண மாட்டார்கள்.
செய்யும்வினையைக் காட்டிலும் நெறித்தூய்மையில் பற்றுடையவர் வள்ளுவர். என்ன இன்னல்கள் வந்துற்றபோதும் மாசு உண்டாக்கும் வினைகளைச் செய்யாது விட்டொழிக என்கிறார். எது வந்தாலும் கலங்காமல் காரியம் செய்யும் அறிவுள்ளவர்கள் தாம் எவ்வளவு பெரிய துன்பத்தில் மாட்டிக் கொண்டாலும் நிதானம் தவறமாட்டார்கள். துன்பத்தில் மாட்டிக் கொண்டோமே என்று அது தீர்தல் பொருட்டு நன்மக்கள் இழிவு தரும் செயல்களில் ஈடுபடுவதில்லை. ஏனெனில் இடுக்கண் களைவதற்காக இளிவந்த வினைகளைச் செய்து இளிவையடைந்தாலும் வருவதாகிய இடுக்கண் வாராது ஒழியாது என்னும் தெளிந்த அறிவுப்பார்வை உள்ளவர்கள் அவர்கள். இன்ன இழிசெயலுக்கு இன்ன பழி என்ற அறிவுத் தெளிவு கொண்டவர்களாதலால் அவற்றின்று விலகுவர். இது தெளிவான அறிவினால் வரும் உறுதியான நிலைப்பாடு.
இளிவந்த செயல் நாட்டுக்கு ஒவ்வாததாதலின் பொருளைப் பெருக்குவதற்காக அமைச்சரும் அதைச் செய்யார்.

இளிவந்த என்றதற்கு இழிவான வினைகள் என்றும் இளிவந்த செயல்கள் என்றும் இருவகையாக விளக்கம் கூறினர். இழிவாகிய செயல் காரணமாகப் பிறரிடம் விளையும் மெய்ப்பாடு இளிவரலாதலால் இழிவான செயல் காரணம், அதன் விளைவு இளிவரல் எனக் கூறினர். எனினும் 'இளிவந்த' எனலே சிறப்பு (தண்டபாணி தேசிகர்).

'நடுக்கற்ற காட்சியவர்' யார்?

'நடுக்கற்ற காட்சியவர்' என்றதற்குத் துளக்கமற்ற தெளிவுடையார், திடபுத்தியுள்ளவர், கலக்கம் அற்று அமைந்த அறிவினை உடையவர், துளக்கம் அற்ற தெளிவினை உடையார், அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், அசைவற்ற உறுதியான தெளிவினையுடையவர்கள், அச்சம் இல்லாத தெளிந்த அறிவினையுடையவர்கள், அதிராத அறிஞர், கலக்கமற்ற தெளிந்த அறிவினையுடையவர், தடுமாற்றமில்லாத அறிவுடையவர்கள், சிறுதும் அசைதல் இல்லாத அறிவினர், கலங்காத அறிவினை உடையவர்கள், நிலையான அறிவினையுடையவர், தடுமாற்றம் சிறுதும் இல்லாத அறிவினையுடையவர், அதிர்ச்சிகளைக் கண்டு அஞ்சாத தலைவர்கள், உறுதி உள்ளம் படைத்த பெரியோர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். எத்தகைய துன்பத்திலும் நிலைகலங்காத் தன்மையர், அசையாது உறுதிபெற்ற அறிவாளிகள், மெய்க்காட்சியாளர், எது வந்தாலும் கலங்காமல் காரியம் செய்யும் அறிவுள்ளவர்கள், நிலையான அறிவுடையவர் என்றும் இத்தொடர்க்கு உரை செய்தனர்

தண்டபாணி தேசிகர் 'நடுக்கு+காட்சி கணந்தோறும் தடுமாறும் அறிவு. நடுக்கற்ற அறிவு - துணிவான அறிவு' என நடுக்கற்ற என்பதை விளக்குவார். மேலும் 'நடுக்கற்ற காட்சி-துளக்கமில் காட்சி அதாவது மலர்தலும் கூம்பலுமில்லாத அறிவு' எனவும் அவர் கூறுவார்.
வ சுப மாணிக்கம் என்ன நெருக்கடிப்பட்டாலும் 'அதிராத அறிஞர்' என 'நடுக்கற்ற காட்சியவர்' என்ற தொடர்க்குப் பொருள் கூறுவார்.
நடுக்கற்ற காட்சியவர் ஏன் இளிவந்த செய்யார் என்பதற்குத் தேவநேயப் பாவாணர் 'இன்பமுந்துன்பமுங் கலந்ததே இவ்வுலகவாழ் வென்றும், வருவது வந்தே தீருமென்றும், இழிவினைகளைச் செய்வதால் இம்மையிற் பழியும் மறுமையில் துன்பமுமே உண்டாகு மென்றும், அறவழியாற் போக்க முடியாத துன்பத்தை அமைதியாக நுகர்ந்தேயாக வேண்டு மென்றும், தெள்ளத்தெளிவாக அறிந்தவராதலின் 'நடுக்கற்ற காட்சியவர்' என்றும், 'இளிவந்த செய்யார்' என்றும் கூறினார்' எனக் காரணம் கூறுவார்.
பரிமேலழகர் உரை 'சிறிதுபோழ்தில் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும் கழியாத இளிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும் வருவது வரும் (அதாவது இடுக்கண் தீர்தற் பொருட்டு இளிவந்த வினைகளைச் செய்து இழிவையடைந்தாலும் வருவதாகிய இடுக்கண் வாராது ஒழியாது) என்பதூஉம் தெளிவர் ஆகலான் , 'செய்யார்' என்றார்' என்று இதைத் தெளிவுபடுத்துகிறது.

நடுக்கற்ற காட்சியவர் என்பதற்கு அதிராத அறிவுடையவர் என்பது பொருள்.

அதிராத தெளிவினை உடையார் துன்பத்திலே சிக்கிக் கொண்டாலும் இழிவானவற்றைச் செய்ய மாட்டர்கள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வினைத்தூய்மை சிந்தனை உள்ளவர் துன்பம் கண்டு துவளார்.

பொழிப்பு

அதிரமாட்டாதார் துன்பத்திலே சிக்கிக் கொண்டாலும், இழிவானவற்றைச் செய்ய மாட்டார்