துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்
(அதிகாரம்:
குறள் எண்:651)
பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுக்கு வாய்ந்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும்; செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
|
மணக்குடவர் உரை:
துணைநலம் ஆக்கத்தைக் கொடுக்கும்; வினைநலம் அவ்வளவேயன்றி வேண்டிய எல்லாவற்றையும் ஒருங்கு கொடுக்கும்.
துணைநலம் ஆக்கங் கொடுத்தல் எல்லாரானும் அறியப் படுதலின் ஈண்டு ஏதுவாக வந்தது.
பரிமேலழகர் உரை:
துணை நலம் ஆக்கம் தரூஉம் - ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினை நலம் வேண்டிய எல்லாம் தரும் - அவ்வளவன்றி வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையும் கொடுக்கும்.
(வேண்டிய எல்லாம் என்றது இம்மைக்கண் அறம், பொருள், இன்பம் முதலாயவற்றையும்,மறுமைக்கண் தான் விரும்பிய பதங்களையும். இதனான் காணப்படும் துணை நன்மையினும் கருதப்படும் வினை நன்மை சிறந்தது என வினைத்தூய்மையது சிறப்புக் கூறப்பட்டது.)
வ சுப மாணிக்கம் உரை:
நல்ல துணை முன்னேற்றத்தைத் தரும். நல்ல செயல் வேண்டியன எல்லாம் தரும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்.
பதவுரை:
துணை-துணை(நிற்பவர்); நலம்-நன்மை; ஆக்கம்-உயர்வு; தரூஉம்-கொடுக்கும்; வினை நலம்-செயல் தூய்மை; வேண்டிய-விரும்பிய; எல்லாம்-அனைத்தும்; தரும்-கொடுக்கும்.
|
துணைநலம் ஆக்கம் தரூஉம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துணைநலம் ஆக்கத்தைக் கொடுக்கும்;
மணக்குடவர் குறிப்புரை: துணைநலம் ஆக்கங் கொடுத்தல் எல்லாரானும் அறியப் படுதலின் ஈண்டு ஏதுவாக வந்தது.
பரிப்பெருமாள்: துணைநன்மை ஆக்கத்தைக் கொடுக்கும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: துணைநன்மை ஆக்கங் கொடுத்தல் எல்லாரானும் அறியப் படுதலின் ஈண்டு ஏதுவாக வந்தது.
பரிதி: நல்லோருறவு ஆக்கம் தரும்;
காலிங்கர்: ஒருவர்க்குத் துணைவலியாய் உள்ள நன்மையானது அத்துணை நலத்து ஆக்கமே தரும்;
பரிமேலழகர்: ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்;
'ஒருவனுக்குத் துணையது நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவனுக்குத் துணையின் நன்மை செல்வம் ஒன்றை மட்டும் கொடுக்கும்', 'துணைவர்கள் நல்லவர்களா என்பதைக் கவனித்து ஒரு காரியத்தைச் செய்தால் காரிய வெற்றியும் செல்வமும் அடைய முடியும்', 'துணைவரால் ஆகிய நன்மை செல்வமொன்றினைக் கொடுக்கும்', 'துணைவர் நல்லவரா யிருத்தல் உயர்வைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நல்ல துணை உயர்வைக் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினைநலம் அவ்வளவேயன்றி வேண்டிய எல்லாவற்றையும் ஒருங்கு கொடுக்கும்.
பரிப்பெருமாள்: வினைநன்மை அவ்வளவேயன்றி வேண்டியது எல்லாம் ஒருங்கு கொடுக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வினைத்தூய்மை வேண்டும் என்பதூஉம் அதனால் பயனும் கூறிற்று.
பரிதி: செய்யும் காரியமும் முன்பின் பார்த்து நன்மையே செய்வானாகில் வேண்டியதெல்லாம் தரும் என்றவாறு.
காலிங்கர்: அதனை வினைத்தூய்மையாகிய இது தாம் விரும்பிய பயன் எல்லாம் ஒருதன்மைப்படத் தரும் என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வளவன்றி வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையும் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: வேண்டிய எல்லாம் என்றது இம்மைக்கண் அறம், பொருள், இன்பம் முதலாயவற்றையும்,மறுமைக்கண் தான் விரும்பிய பதங்களையும். இதனான் காணப்படும் துணை நன்மையினும் கருதப்படும் வினை நன்மை சிறந்தது என வினைத்தூய்மையது சிறப்புக் கூறப்பட்டது.
'வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையும் கொடுக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தொழிலின் நன்மை அவன் வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும்', 'ஆனால் செய்யப் புகும் காரியம் குற்றமற்ற நல்ல காரியம் என்பதைக் கவனித்துச் செய்தால் காரிய வெற்றி மட்டுமல்ல, விரும்பத் தகுந்த எல்லாம் கிடைக்கும்', 'செய்யும் வேலையின் செம்மையோ விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்', 'வினைகள் நல்லனவா யிருத்தல் வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
செயல்தூய்மை விரும்பும் எல்லாவற்றையும் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நல்ல துணை உயர்வைக் கொடுக்கும்; வினைநலம் வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.
'வினைநலம்' என்ற தொடர் குறிப்பது என்ன?
|
துணை நிற்பவரால் ஏற்றம் கிடைக்கும்; அவரது செயல்தூய்மை விரும்புகின்ற அனைத்தையும் தரும்.
ஒருவரது துணையின் நன்மை உயர்வைக் கொடுக்கும். அவர் செயல் தூய்மையராய் இருந்தால் விரும்பும் எல்லாம் கிடைக்கப்பெறும்.
இங்கு துணை என்றது அரசுக்குத் துணையாய் இருப்பவரை அதாவது தலைமை (முதல்) அமைச்சரைக் குறிக்கும். ஓர் அரசுக்குத் துணையாக நல்ல முதல் அமைச்சர் ஒருவர் அமைந்துவிட்டால், அந்நாடு மேம்பட்ட வளர்ச்சி காணும். அவரே செயல் தூய்மையோடு விளங்கினால் அந்த ஆட்சிக்கு வளர்ச்சியுடன் விரும்பும் எல்லாம் கிடைக்கும் என இக்குறள் தெரிவிக்கிறது.
'துணைநலம் ஆக்கந் தரும்', 'வினை நலம் வேண்டிய எல்லாம் தரும்' என இரு தொடர்களைக் கொண்டது இப்பாடல். நல்ல துணையோடு வினைத் தூய்மையும் சேர்ந்திருப்பது வேண்டிய எல்லாம் தரும் என்பது செய்தி. 'வேண்டிய எல்லாம்' என்பதற்கு விரும்பிய பயன் எல்லாம் என்று பொருள் கூறுவர். வேண்டிய எல்லாம் என்பது அந்த ஆட்சி எல்லாவற்றிலும் உயர்ந்து சிறந்து நிற்கும் என்பதைச் சொல்வது. அனைத்திலும் உயர்வு வேண்டுமென்றால் அந்த ஆட்சி தூயதானதாக இருக்க வேண்டும். ஓர் அரசு எப்பொழுது தூய்மையில் குறைவுபடாது உள்ளது எனச் சொல்லப்படும்? இவ்வதிகாரத்து மற்றப் பாக்களில் தூய்மையில்லாத செயல்களைக் கூறியுள்ளார் வள்ளுவர். அவை: புகழும் நன்மையும் தராதன; மதிப்பைக் குறைப்பன; இழிவானவை; பின் வருந்துவதற்குக் காரணமானவை; பெரியோர் பழிப்பவை (கையூட்டுப் பெறுதல் போன்றவை); உலகோர் ஒதுக்கி விலக்கியன (கள், சூது); பிறர் அழ அழப் பிடுங்கிக் கொண்டன (உடைமைப் பறிப்பு); ஏமாற்றிப் பொருள் ஈட்டல். மாசுபடிந்த இச்செயல்களை நீக்கிவிட்டால் ஆட்சி தூய்மை பெற்று எல்லாவற்றிலும் மேன்மை அடையும்.
துணை நல்லதாக இருந்தால், உயர்வு உண்டு. துணையானவர் வினைத்தூய்மை கொண்டவராயிருந்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
|
'வினைநலம்' என்ற தொடர் குறிப்பது என்ன?
'வினைநலம்' என்ற தொடர்க்கு வினைநலம், வினைநன்மை, செய்யும் காரியத்தின் முன்பின் பார்த்த நன்மை, வினையது நன்மை, வினையின் நன்மை, செய்யும் செயலில் களங்கமற்ற தூய்மை, வினைத்தூய்மை, நல்ல செயல், தொழிலின் நன்மை, செய்யப் புகும் காரியம் நல்லதாக இருத்தல். செயலை நலமுறச் செய்யும் திறம், செய்யும் வேலையின் செம்மை, வினைகள் நல்லனவா யிருத்தல், செயல்நலம், வினையானது பழுதில்லாமல் முடிவுறல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
அதிகாரம் வினைத்தூய்மை - செய்யப்படும் வினை நற்பெயரும் நன்மையும் பெற்றுத்தருவதாக இருக்கவேண்டும்; வினைஆற்றும் அமைச்சரும் பழிக்குரியன செய்யாதவராக இருக்க வேண்டும் என்பனவற்றைச் சொல்வது. வினைநலம் என்றது வினையின் நன்மையையும் வினைசெய்வார் அதாவது அமைச்சர் மேற்கொள்ளும் செயலின்கண் தூய்மை தவறாது நடந்துகொள்வதையும் குறிப்பது. அமைச்சரானவர் அரசுக்கு நல்லதோர் துணையாய் இருப்பதோடு அரசின் வினைகளைச் செயல்படுத்தும் முறையில் தூய்மை காப்பவராக இருந்தால் நாட்டிற்கு எல்லா நலமும் கிடைக்கும் என்பது கருத்து.
வினைநலம் என்பதற்கு செயல்தூய்மை/ வினைசெய்வாரது தூய்மை என்பது பொருள்.
|
நல்ல துணை உயர்வைக் கொடுக்கும்; செயல்தூய்மை வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.
வினைத்தூய்மையர் துணையாய் அமைந்தால் கருதும் மேன்மைகள் வாய்க்கப்பெறும்.
நல்ல துணை உயர்ச்சி தரும்; செயல்தூய்மை வேண்டியன எல்லாவற்றையும் கொடுக்கும்.
|