இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0649



பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்

(அதிகாரம்:சொல்வன்மை குறள் எண்:649)

பொழிப்பு (மு வரதராசன்): குற்றமற்றவையாகிய சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர்.

மணக்குடவர் உரை: பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர், குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார்.
மன்ற - தெளிய. இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - குற்றமற்றனவாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றால் சொல்லுதலை அறியாதார்; பல சொல்லக் காமுறுவர் - பலவாய வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்ல விரும்புவர்.
(குற்றம் - மேல் சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று விரும்புவாரும் உளர், அவர் இவ்வாறு சொல்ல மாட்டாதாரே வல்லார் அது செய்யாரென யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: நல்லவற்றைச் சுருக்கமாகச் சொல்லத் தெரியாதவரே பலபடப் பேச ஆசைப்படுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மாசு அற்ற சிலசொல்லல் தேற்றாதவர் பலசொல்லக் காமுறுவர் மன்ற.

பதவுரை:
பல-பல; சொல்ல-சொல்லுதற்கு; காமுறுவர்-விரும்புவர்; மன்ற-திண்ணமாக, ஒருதலையாக; மாசு-குற்றம்; அற்ற-நீங்கிய; சில-கொஞ்சம்; சொல்லல்-சொல்லுதல்; தேற்றாதவர்-அறியாதவர்.


பலசொல்லக் காமுறுவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர்;
பரிப்பெருமாள்: பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர்;
பரிதி: பல வார்த்தை சொல்லி அந்தச் சொல்லெல்லாம் காமிப்பர்; [காமிப்பர்-விரும்புவர்]
காலிங்கர்: இவ்வாறு சொல்லுதலன்றி எவ்வாறு சொன்னால் பொருள் ஆம் என்னும் கருத்தினால், பலவற்றையும் சொல்ல ஆசைப்படுவார் யார் எனின்;
பரிமேலழகர்: பலவாய வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்ல விரும்புவர்.

'பல சொற்களைச் சொல்ல விரும்புவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பல சொற்களைத் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க விரும்புவர்', 'பல வார்த்தைகளை நெடுநேரம் பேச ஆசைப்படுகிறவர்கள்', 'பல சொற்களைத் தொடுத்து உரைக்க விரும்புவர்', 'பலவாய சொற்களைச் சொல்ல விரும்புவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பலவற்றையும் சொல்ல ஆசைப்படுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

மன்ற மாசு அற்ற சிலசொல்லல் தேற்றாதவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார்.
மணக்குடவர் குறிப்புரை :மன்ற - தெளிய. இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மன்ற - தெளிய. இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது.
பரிதி: சில சொல்லிலே பிரியப்பட வார்த்தை சொல்ல மாட்டாதார் என்றவாறு.
காலிங்கர் ('செலச் சொல்லி' பாடமாயிருக்கலாம்): குற்றமற்ற பொருளைச் செலச்சொல்லி அமைதலைத் தெள்ளிதின் அறியாத அமைச்சர் என்றவாறு. [செலச்சொல்லி - பிறர் மனத்திட் பதியுமாறு சொல்லி]
பரிமேலழகர்: குற்றமற்றனவாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றால் சொல்லுதலை அறியாதார்;
பரிமேலழகர் குறிப்புரை: குற்றம் - மேல் சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று விரும்புவாரும் உளர், அவர் இவ்வாறு சொல்ல மாட்டாதாரே வல்லார் அது செய்யாரென யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.

'குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குற்றமற்ற சில சொற்களைப் பேச அறியாதவர்', 'சபையில் குற்றமற்ற வார்த்தைகளில் சுருக்கமாகப் பேசத் தெரியாதவர்களே', 'குற்றமற்ற சில சொற்களால் சொல்ல வேண்டியதைச் சொல்ல அறியாதவர்கள்', 'குற்றமற்றனவாய் சிலவாய சொற்களைச் சொல்லுதலை முடியாதவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

குற்றமற்ற பொருளை சிலசொல்லி அமைதலை அறியாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குற்றமற்ற பொருளை சிலசொல்லி அமைதலைத் தேற்றாதவர் பலவற்றையும் சொல்லவே ஆசைப்படுவர் என்பது பாடலின் பொருள்.
'தேற்றாதவர்' என்ற சொல்லின் பொருள் என்ன?

சில சொற்களால் ஒரு கருத்தை விளக்கிச் சொல்ல அறியாதவரே பலப்பல சொற்களில் அதைச் சொல்ல விரும்புவர்.

தெளிவான சில சொற்களில் கூறுவதற்கு அறியாதவர்களே, பல சொற்களைப் பேசுவதற்கு விரும்புவார்கள்.
சொல்வன்மை என்பது நெடிய உரை செய்வது அல்ல. பெரும்பேச்சில் பயன் குறைவாகவே இருக்கும். தெளிவான சில சொற்களில் சொல்ல வந்த கருத்தைக் கூறவேண்டும். அவ்விதம் சில சொற்களில் மனத்திற் பதியும்படி சொல்லத் தெரியாதவர்களே தேவையில்லாத பலசொற்களில் மொழிவதைக் காதலிப்பர் என்கிறது பாடல்.
‘பலசொல்லல்’ என்பதற்குப் பல சொற்களால் கூறுதல், சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருத்தல், வளவளவெனப் பேசுதல் எனப் பலவாறு விளக்கங்கள் கூறினர். விரிவினால்தான் தெளிவு பிறக்கும் என்று கருதி நீட்டி அகட்டிப் பேசினால் அது கேட்போரை அயர்வுறவே செய்யும். ஒரு சொல்லில் சொல்லக்கூடியதை இரண்டு சொற்களால் சொல்லாமல் இருப்பது சொல்வன்மை ஆம். செய்தியைச் சில சொற்களில் வடித்தெடுக்கும் திறன் கொண்டோர்க்கே இது இயலும். பல சொல்லில் கூறுவதால் வழுவுடைத்தாதல், மிகைபடக்கூறல், விளங்கக் கூறாமை, கேட்டற்கு இனிது ஆகாமை, விழுப்பயன் தாராமை, மாறுகொளக்கூறல், வெற்றெனத் தொடுத்தல் முதலாய குற்றங்கள் உண்டாகி விடவும் கூடும்.

இப்பாடலிலுள்ள காமுறுதல் என்ற சொல்லுக்கு காதலித்தல் அல்லது விரும்புதல் என்பது பொருள்.
மன்ற என்ற சொல்லுக்கு உறுதியாக அல்லது தெளிய. விளக்கமாக எனப் பொருள் கொள்வர். சில உரையாசிரியர்கள் மன்ற என்ற சொல்லுக்குப் பொருள் கூறாமல் வாளாவிடுத்தனர். தண்டபாணி தேசிகர் 'ஆசிரியர் வள்ளுவர் எந்தச் சொல்லையும் வாளா பயன்படுத்தார்; ஆகையால் இது பொருள் குறித்தே யாதல் வேண்டும்' எனச் சொல்வார். 'மன்ற என் கிளவி தேற்றஞ் செய்யும்' என்பது தொல்காப்பியம், (சொல் 265). இக்குறளுக்கான உரையில் 'தெளிந்து', 'உண்மையாகவே' 'மிக' 'நிலைபெற' 'தேற்றமாக (நிச்சயமாக)', 'திருப்பித் திருப்பி' எனப் பொருள் கூறினர். ‘மன்ற’ என்பது உறுதிப் பொருள் தருவதோரிடைச் சொல். விளிந்தோரின் வேறல்லர் மன்ற (143), இரத்தலின் இன்னாது மன்ற (229), கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற (867) என்னும் குறள் ஆட்சிகள் ஒப்பு நோக்கத்தகும்.

'தேற்றாதவர்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'தேற்றாதவர்' என்ற சொல்லுக்கு அறியமாட்டாதார், மாட்டாதார், அறியாத அமைச்சர், அறியாதார், தெரியாதவர், வழியறியாதவர், தெளிவுண்டாக்க இயலாதவர்கள், தெளிவு இல்லாதவர், முடியாதவர், தெளிவுபடச் செய்யமுடியாதவர் என்றவாறு பொருள் கூறினர்.

தேற்றாதவர் என்ற சொல் தெளியாதவர் அல்லது அறியாதவர் எனப் பொருள்படும். தேறாதவர்-தன்வினை. தேற்றாதவர்-பிறவினை எனக் கொண்டு பிறரைத் தெளிவுபடத் செய்ய முடியாதவர் எனவும் உரை கூறுவர். ‘தேற்றாதார்’ என்பது நகச் சொல்லி நட்பாடல் தேற்றாதவர் (187), களவல்ல மற்றைய தேற்றாதவர், (289) பெற்றேமென்று ஓம்புதல் தேற்றாதவர் மாடு (1054) என்னும் குறள்களிற் போலத் தன்வினைப் பொருளில் வருவது கண்டு அறியாதார் எனப் பொருள் கண்ட பரிமேலழகர் உரை குறள் நடைக்கியைந்ததாகும். (இரா சாரங்கபாணி).

'தேற்றாதவர்' என்ற சொல்லுக்கு அறியாதார் என்பது பொருள்.

குற்றமற்ற பொருளை சிலசொல்லி அமைதலை அறியாதவர் பலவற்றையும் சொல்ல ஆசைப்படுவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சொல்வன்மை நிறையச் சொல்வதில் இல்லை.

பொழிப்பு

குற்றமற்றவற்றைச் சுருக்கமாகச் சொல்லத் தெரியாதவரே பலபடப் பேச ஆசைப்படுவர்.