விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தார் மேவி விரைந்து சென்று செய்யுந் தொழில் யாது என்று கேட்பர்;
பரிப்பெருமாள்: உலகத்தார் தாமே விரைந்து செய்யுந் தொழில் யாது என்று கேட்பர் என்றவாறு.
பரிதி: மண்டலம் சொல்வழி கேட்கும் என்றவாறு.
காலிங்கர்: அரசர் ஏவாமல், தானே விரைந்து தொழில்கேட்டு ஒழுகுவர் இவ்வையகத்து வாழ்வார் என்றவாறு.
பரிமேலழகர்: உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக்கொள்ளும்.
பரிமேலழகர் குறிப்புரை: தொழில் - சாதியொருமை.
'இவ்வையகத்து வாழ்வார் தானே விரைந்து தொழில்கேட்டு ஒழுகுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'அரசர் ஏவாமல்' என்பதைச் சேர்த்து உரைத்தார்,
இன்றைய ஆசிரியர்கள் 'நம் சொற்படி உலகம் விரைந்து நடக்கும்', 'இவ்வுலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்கும்', 'உலகத்தார் அவர்கள் வேலையை உடனே செய்வார்கள்', 'உலகம் அவர்கள் ஏவிய செய்கையைக் கேட்டு அதனை விரைவாக இயற்றும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உலகத்திலுள்ளோர் விரைந்து தாம் செய்ய வேண்டிய பணி யாதென்று கேட்பர் என்பது இப்பகுதியின் பொருள்.
நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது சொற்களைச் சொல்லின் இனிதாகச் சொல்லவேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: சொற்களைச் சேர்த்து இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராகில்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இனிதாகச் சொல்லவேண்டும் என்றது.
பரிதி: கேட்பார் செவியும் மனமும் புலப்பட வார்த்தை சொல்லும் மந்திரிக்கு.
காலிங்கர்: அரசர்க்கு ஆயினும் பிறர்க்கு ஆயினும் அவரவர்க்குப் பொருந்த உணர்ந்து செவிக்கு இனிதாகச் சொல்லுதல் வல்லராகிய அமைச்சரை அரசர் பெறுவாராயின்,
பரிமேலழகர்: சொல்லப்படும் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின்.
பரிமேலழகர் குறிப்புரை: நிரல்படக் கோத்தல் - முன் சொல்வனவும் பின் சொல்வனவும் அறிந்து அம்முறையே வைத்தல். இனிதாதல் - கேட்டார்க்கு இன்பம் பயத்தல். 'சொல்லுதல் வல்லான் நூறாயிரவருள் ஒருவன்', என்ற வடமொழி பற்றி, 'பெறின்' என்றார். ஈண்டும் 'கேட்டல்' ஏற்றுக் கோடல். இவை இரண்டு பாட்டானும் அவ்வாற்றால் சொல்லுதல் வல்லாரது சிறப்புக் கூறப்பட்டது.
'இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். நிரந்த என்பதற்கு மணக்குடவர் உரையில் ஒன்றும் இல்லை; பரிப்பெருமாள் 'சொற்களைச் சேர்த்து' என்றார்; பரிதி 'புலப்பட' என்றும் காலிங்கர் 'அவரவர்க்குப் பொருந்த உணர்ந்து' என்றும் பரிமேலழகர் 'காரியங்களை நிரல்படக் கோத்து' என்றும் உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'முறையாக இனிது சொல்லுவோமாயின்', 'சொல்லப்படும் செய்திகளை வரிசைப்படி இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால்', 'எப்போதும் (யாருடன் எதற்காகப் பேசினாலும்) இனிமையாகவே பேசக் கூடியவர்கள் இருந்தால்', 'சொல்லப்படுபவைகளை வரிசைப்படுத்தி இனிமையாகச் சொல்லவல்லவர்களைப் பெற்றால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
சொல்வதை ஒழுங்குபடுத்தி இனிதாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால் என்பது இப்பகுதியின் பொருள்.
|