இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0647சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

(அதிகாரம்:சொல்வன்மை குறள் எண்:647)

பொழிப்பு (மு வரதராசன்): தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய், சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.

மணக்குடவர் உரை: ஒருவன் சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோர விடுதலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின், அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.

பரிமேலழகர் உரை: சொலல் வல்லன் - தான் எண்ணிய காரியங்களைப் பிறர்க்கு ஏற்பச் சொல்லுதல் வல்லனாய்; சோர்வு இலன் - அவை மிகப் பலவாயவழி ஒன்றினும் சோர்விலனாய்; அஞ்சான் - அவைக்கு அஞ்சானாயினான் யாவன்; அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது - அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.
(ஏற்பச் சொல்லுதல் - அவர்க்கு அவை காரியமல்லவாயினும், ஆம் எனத் துணியும் வகை சொல்லுதல், சோர்வு - சொல்ல வேண்டுவதனை மறப்பான் ஒழிதல்.இம்மூன்று குணமும் உடையானை மாற்றாராய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து வெல்வாரில்லை என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: பிறர் மனங்கொள்ளச் சொல்லுதலில் ஆற்றல் உடையவனாகவும் மறதியால் சொற்சோர்வுபடப் பேசாதவனாகவும் அவைக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

பதவுரை:
சொலல்- சொல்லுதல்; வல்லன்-வல்லவனாய்; சோர்விலன்-தளராதவன். மறந்துவிடாதவன் என்றும் கொள்வர்; அஞ்சான்-அஞ்சாதவன்; அவனை-அவனை; இகல்-மாறுபாடு அல்லது கருத்து வேறுபாடு; வெல்லல்-வெற்றி கொள்ளுதல்; யார்க்கும்-எவர்க்கும்; அரிது-அருமையானது.


சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோர விடுதலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின்;
பரிப்பெருமாள்: ஒருவன் சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோர விடுதலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின்;
பரிதி: வார்த்தை சொல்ல வல்லவன் திடவானாகில் [திடவானாகின் - உறுதியுடையனாயின்].
காலிங்கர்: இங்ஙனம் ஏற்றத் தாழ்வு என்னும் குற்றம் தங்காமல் சொல்லுதல் வல்லனுமாய் மற்று இங்ஙனம் சொல்லிச் சொல்லும் இடத்து மறந்தும் ஒரு சொற் சோர்வுபாடு இலனுமாய், அரசனைக் கழறவேண்டும் இடத்து கழற்றுரை கூறக் கண்ணஞ்சானுமாய் இருப்போன் யாவன்; [கழறல் - இடித்துரைத்தல்]
பரிமேலழகர்: தான் எண்ணிய காரியங்களைப் பிறர்க்கு ஏற்பச் சொல்லுதல் வல்லனாய், அவை மிகப் பலவாயவழி ஒன்றினும் சோர்விலனாய் அவைக்கு அஞ்சானாயினான் யாவன்;
பரிமேலழகர் குறிப்புரை: ஏற்பச் சொல்லுதல் - அவர்க்கு அவை காரியமல்லவாயினும், ஆம் எனத் துணியும் வகை சொல்லுதல், சோர்வு - சொல்ல வேண்டுவதனை மறப்பான் ஒழிதல். இம்மூன்று குணமும் உடையானை மாற்றாராய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து வெல்வாரில்லை என்பதாம்.

'சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோர விடுதலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சொல்வன்மை சோர்வின்மை அச்சமின்மை உடையவனை', 'பேசவல்லவனாகவும் சொல்ல வேண்டியதை மறந்து தடுமாறதவனாகவும் (எதிர்வாதம் பேசுகிறவன் எப்படிப் பேசினாலும்) அதற்கு அஞ்சாதவனாகவும்', 'ஒன்றைத் தக்க முறையாகச் சொல்லுந் திறமை உடையவாய்ச் சொல்தளர்ச்சி இல்லாதவனாய் அச்சம் இல்லாதவனாய்', 'சொல்வன்மை உடையவன் சோர்வு இல்லாதவன்; பிறர்க்கு அஞ்சமாட்டான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சொல்லுதலில் ஆற்றல் உடையவன், சொற்சோர்வுபடப் பேசாதவன், அஞ்சாதவன் என்பது இப்பகுதியின் பொருள்.

அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.
பரிப்பெருமாள்: அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இம்மூன்று பகுதியினும் என்பதனால் அவனைச் சொல்லில் வெல்லல் யார்க்கும் அரிது என்றவாறு.
பரிதி: அவனை மாறுபட்டு வெல்லல் யார்க்கும் அரிது என்றவாறு.
காலிங்கர்: மற்று அவ்வமைச்சனை மற்று ஒருவர்க்கு மாறுபடக் கூறி வெல்லுதல் அரிது என்றவாறு.
பரிமேலழகர்: அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.

'அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யாரும் வெல்ல முடியாது', 'இருக்கிற அவனை வாதத்தில் வெல்லுவது யாருக்கும் முடியாது', 'இருப்பவனை எதிர்ப்பதில் வெற்றி அடைதல், யாவர்க்கும் கடினமாகும்', 'அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் முடியாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவனை கருத்து வேறுபாடு காரணமாக யாரும் வெல்ல முடியாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சொல்லுதலில் ஆற்றல் உடையவன், சொற்சோர்வுபடப் பேசாதவன், அஞ்சாதவன்; அவனை கருத்து வேறுபாடு காரணமாக யாரும் வெல்ல முடியாது என்பது பாடலின் பொருள்.
'அஞ்சான்' எனும் சொல் குறிப்பதென்ன?

தெரிவிப்பியல் திறனில் தேர்ந்தவனாய், தன்கருத்தில் உறுதியுடையவனாய் இருக்கும், துணிவு நெஞ்சம் கொண்ட சொல்மறவனிடம் மாறுபாடு கொள்வது எளிதல்ல.

தன் கருத்தைப் பிறர் விரும்பி ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்ல வல்லவனாகவும், சொல்லவேண்டியதைத் தளர்வில்லாமல் சொல்கிறவனாகவும் தாம் சொல்லவந்ததை அஞ்சாமல் உரைக்கக்கூடியவனாகவுமாகவும் இருந்தால் சொற்போரில் அவனை வென்றுவிட எவராலும் இயலாது.

  • சொலல்வல்லன் என்ற தொடர் தொகுத்தும் எடுத்தும் சொல்லும் சொல்வன்மையுடையவன் என்ற பொருள் தரும். கேட்டவர்களைப் பிணித்து ஈர்க்கும் வண்ணம் சொல்லி, கேளாதவர்களும் கேட்கவேண்டும் என விருப்பக் கூடியதாகச் சொல்வதைக் குறிப்பது. அவரவர்க்கு ஏற்பச் சொல்லுந்திறமையையும் குறித்தது.
  • சோர்விலன் என்றது மறதி இல்லாதவனாய் நினைவாற்றல் மிகக் கொண்டு தன் கருத்துக்களில் நழுவாது திடமாக இருப்பவனைச் சொல்வது. மறைபிறரறியும் வகையில் சொற்சோர்வு படாதவன் அதாவது சொல்லக்கூடாததை வாய்நழுவிச் சொல்லிவிடாமல் இருப்பவன் என்றும் விளக்குவர். முன்னுக்குப்பின், முரணான கருத்து மொழிவதும் வாய்சோர்ந்து விடுவதால் நிகழும்.
  • அஞ்சான் என்பவன் தான் கருதிய செய்திகளை, எவருடைய விருப்புகளுக்கும் சினத்திற்கும், அச்சப்படாமல் தெரிவிக்க இயல்பவனாவான். தாம் சொல்லுதல் பொருந்தும் எனத் தெரியுமாறு துணியும் வகையில் அவன் சொல்லுவான்.
இந்த மூன்று குணங்களும் வாய்க்கப் பெற்றவனை சொற்போரில் வெல்வது மற்றவர்களுக்குக் கடினம்.
இகல் என்றசொல் பகைமை அல்லது கருத்து வேறுபாட்டைக் குறிக்கும்.

'அஞ்சான்' எனும் சொல் குறிப்பதென்ன?

'அஞ்சான்' என்ற சொல்லுக்கு அஞ்சாது சொல்லுதலும் உடையவன், திடவான், அரசனைக் கழற(இடித்துரைத்தல்) வேண்டும் இடத்து கழற்றுரை கூறக் கண்ணஞ்சானுமாய் இருப்போன், அவைக்கு அஞ்சான், அஞ்சாதவனாய் உள்ளவன், தன்கருத்தை அஞ்சாது எடுத்துரைக்க வல்லவன், அச்சமின்மை உடையவன், (எதிர்வாதம் பேசுகிறவன் எப்படிப் பேசினாலும்) அதற்கு அஞ்சாதவன், அச்சம் இல்லாதவனாய் இருப்பவன், பிறர்க்கு அஞ்சமாட்டான், தான் சொல்ல விரும்பும் ஒன்றைச் சொல்லுதற்கு வேண்டிய அஞ்சாமை உடையவன், தன்னுடைய கருத்தை அஞ்சாமல் சொல்லக்கூடியவன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தன் எண்ணங்களை அஞ்சாமற் சொல்லுவதும் சொல்வன்மையின் பாற்படும்.
ஒருவர் தன் கருத்துக்களை யாருக்குக் கூறக் கடமைப்பட்டுள்ளரோ அவரிடம் கூற அஞ்சக்கூடாது. காலிங்கர் அமைச்சன் அரசனை இடித்துரைக்கவேண்டும் இடத்து இடித்துரை கூறக் கண்ணஞ்சாதவனாய் இருப்பவன் என விளக்குவார். நாமக்கல் இராமலிங்கம் எதிர்வாதத்தின் உருட்டல் மருட்டல்களுக்கு அஞ்சாதவன் என உரைப்பார். அஞ்சாதவனே மறதியின்றித் தெளிவாகவும், அழுத்தமாகவும் பேசுவான் என்பார் ஜி வரதராஜன்.

'அஞ்சான்' எனும் சொல் தன்கருத்தை அஞ்சாது எடுத்துரைக்கக்கூடியவன் எனப் பொருள் தரும்.

சொல்லுதலில் ஆற்றல் உடையவன், சொற்சோர்வுபடப் பேசாதவன், அஞ்சாதவன்; அவனை கருத்து வேறுபாடு காரணமாக யாரும் வெல்ல முடியாது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

சொற்போரில் வெல்ல சொல்வன்மை உடையவனாயிருத்தல் வேண்டும்.

பொழிப்பு

சொல்லுதலில் ஆற்றல் உடையவனாய், சொற்சோர்வுபடப் பேசாதவனாய் அஞ்சாதவனாகவும் இருப்பவனை கருத்து வேறுபாட்டின்கண் வெல்லுதல் கடினம்.