சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து
(அதிகாரம்:சொல்வன்மை
குறள் எண்:645)
பொழிப்பு (மு வரதராசன்): வேறொரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருத்தலை அறிந்த பிறகே சொல்லக் கருதியதைச் சொல்லவேண்டும்.
|
மணக்குடவர் உரை:
சொல்லைச் சொல்லுக; தான் சொல்ல நினைத்த அச்சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்து.
பரிமேலழகர் உரை:
சொல்லைப் பிறிது ஓர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின் அச்சொல்லைச் சொல்லுக.
(பிறிதோர் சொல் - மாற்றாரது மறுதலைச்சொல். வெல்லுதல் - குணங்களான் மிகுதல், அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் 'பிறிதோர் சொல்', 'வெல்லும் சொல்' எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும் நிலை.)
இரா சாரங்கபாணி உரை:
வேறொரு சொல் அச்சொல்லைக் காட்டிலும் சிறந்தது இல்லை என்பதை அறிந்து சொல்லைச் சொல்லுக.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து சொல்லுக சொல்லை.
பதவுரை:
சொல்லுக-சொல்வாராக; சொல்லை-சொல்லை; பிறிது-வேறு; ஓர்-ஒரு; சொல்-மொழி; அச்சொல்லை-அந்தச் சொல்லை வெல்லும்-வெல்ல வல்ல; சொல்-மொழி; இன்மை-இல்லாதிருத்தல்; அறிந்து-தெரிந்து.
|
சொல்லுக சொல்லை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொல்லைச் சொல்லுக;
பரிப்பெருமாள்: சொல்லைச் சொல்லுக;
பரிதி: களரியிலே வார்த்தை சொல்லுவானாகில்; [களரியிலே -சபையிலே]
காலிங்கர்: அமைச்சர் ஒன்று சொல்லும் இடத்து;
பரிமேலழகர்: பின் அச்சொல்லைச் சொல்லுக.
'சொல்லைச் சொல்லுக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'முதலிலேயே பாரிக்கும் சொல்லைச் சொல்லுக', 'சொற்களைப் பொறுக்கிச் சொல்ல வேண்டும்', 'அதனைச் சொல்லல் வேண்டும்', 'சொல்லுதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சொல்லுதல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.
பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் சொல்ல நினைத்த அச்சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்து.
பரிப்பெருமாள்: தான் சொல்ல நினைத்த சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை அறிந்த பின்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: சொல்வன்மையாயின பலவற்றுள்ளும் தோலாவகை சொல்லுதல் சிறப்புடைத்தாகலின் இது முன் கூறப்பட்டது. [தோலா வகை - தோற்றுப்போகா வண்ணம்]
பரிதி: தான் சொல்லுகிற சொல்லை வேறே ஒருவன் சொல் வெல்லாமல் சொல்லுவான் என்றவாறு.
காலிங்கர்: மற்று அச்சொல்லினைப் பிறர் ஒருவர் சொல் வெல்லுதல் இன்மையைக் குறிக்கொண்டு சொல்லுக; அல்லாக்கால் சொல்லற்க என்றவாறு.
பரிமேலழகர்: தாம் சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து பின் அச்சொல்லைச் சொல்லுக.
பரிமேலழகர் குறிப்புரை: பிறிதோர் சொல் - மாற்றாரது மறுதலைச்சொல். வெல்லுதல் - குணங்களான் மிகுதல், அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் 'பிறிதோர் சொல்', 'வெல்லும் சொல்' எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும் நிலை. [செவ்வென- எண்ணிடைச் சொல் தொக்கு நிற்பது]
'தான் சொல்ல நினைத்த அச்சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்து' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'தன்னுடைய சொல்லை வேறே ஒருவன் சொல் வெல்லாமல் சொல்லுவான்' என்றார் பரிதி. 'சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து பின் அச்சொல்லைச் சொல்லுக' என்பது காலிங்கர் உரை. 'சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து பின் அச்சொல்லைச் சொல்லுக' என்றார் பரிமேலழகர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வேறு சொல்லும் சொல்லலாம் என இடமின்றி', 'சொல்லப் போகிற சொல்லைக் காட்டிலும் இன்னொரு சொல் சிறந்ததாக இல்லாதபடி', 'தான் சொல்லுஞ் சொல்லை மறுக்கும் மற்றொரு சொல் இல்லாததைத் தெரிந்து', 'தாம் சொல்லக் கருதிய சொல்லை, வேறொருவருடைய சொல் வெல்ல முடியாத தன்மையை அறிந்து' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தாம் சொல்லக் கருதிய சொல்லினும் வேறொரு சொல் சிறந்தது இல்லை என்பதை அறிந்து என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தாம் சொல்லக் கருதிய சொல்லினும் பிறிதோர்சொல் சிறந்தது இல்லை என்பதை அறிந்து சொல்லுதல் வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'பிறிதோர்சொல்' குறிப்பது என்ன?
|
ஒரு சொல்லைச் சொல்லும்போது அச்சொல்லினும் வல்லமை மிக்க சொல் இல்லை என்னும் வண்ணம் நன்கு சிந்தித்துப் பார்த்துச் சொல்லுதல் வேண்டும்.
ஒரு கருத்தை உரைக்கும்போது அதற்கான சொற்களைத் தேர்ந்து பயன்படுத்த வேண்டும். விரைந்து சொற்களைக் கொட்டிவிடக் கூடாது. செய்தி சென்று சேரவேண்டும் என்பது மட்டுமல்ல அது உரிய பயன்களைத் தர வேண்டும் என்பதுவே நோக்கம். கருத்துரைத்த பின்னர் இதற்குப் பதிலாக வேறு சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாமோ? இதை ஏன் பயன்படுத்தினோம்? என்றெல்லாம் திரும்ப எண்ணாதபடி, சிறந்த சொல்லைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுக என்கிறது பாடல். அது 'வெல்லுஞ்சொல்' எனச் சொல்லப்படுகிறது.
ஒர் சொல்கூறின், இன்னோர் சொல் அதை விஞ்சக் கூடாது. அந்தக் கருத்தைவிட வேறு உரை சிறந்ததாக இருத்தலாகாது என்ற அளவு கூறவேண்டும்.
சொல்வன்மை சிறப்பதற்கு அடிப்படையானது சொல்லாட்சி. ஒரு கருத்தினை விளக்குவதற்குப் பல சொற்கள் இருக்கலாம். அதில் எந்தச் சொல் மிகுந்த பொருத்தமுடையதாய் உள்ளதோ, வேறு எந்தச் சொல்லாலும், நிறைவு செய்ய முடியாத, பயனை அளிக்கும் வகையில் உள்ளதோ அதனைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்கிறது பாடல்.
இன்ன இடத்தில், இன்ன சொல் இன்ன முறையில் இன்ன பொருளில் அமையவேண்டும் என்ற வரையறை செய்துகொண்டால், செய்தியின் கருத்து வளம் சிறப்பாக அமையும்.
சொல்லும் சொற்களுக்கு மாற்றாக வேறு எந்தச் சொல்லையும் ஆள்முடியாத அளவுக்கு தேர்ந்த சொல் பொருட் செறிவுடனும், செயலாற்றல் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பது இக்குறள் சொல்லும் கருத்து. இதை விடச் சிறப்பாகச் சொல்ல முடியாது என்னுமளவிற்கு, அதை வெல்லும் சொல் இல்லாதபடி, ஆராய்ந்து, வெல்லும்படி சொல்லைச் சொல்லுக என்கிறது.
குறளில் எங்கும் வெல்லுஞ்சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன; ஒரு சொல்லை மாற்றினாலும் குறளின் குறித்த பொருள் மாறும் என்னும்படி நூல் யாக்கப்பட்டுள்ளது. அமைத்த சொற்களை எடுத்துவிட்டு வேறு எச்சொல்லையும் அங்கு இட்டு நிரப்ப முடியாது என்பது நினைக்கத்தக்கது.
சொற்பொருட் பின் வருநிலையணியாக இப்பாடல் வந்துள்ளது, சொற்பொருட்பின்வருநிலை அணி என்பது முன் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பலவிடத்தும் வருதல். இங்கு சொல்லை என்ற சொல் இருமுறை வந்துள்ளதை சொற்பின் வருநிலை என இலக்கண ஆசிரியர்கள் குறிப்பர்.
|
'பிறிதோர்சொல்' குறிப்பது என்ன?
'பிறிதோர்சொல்' என்றதற்குப் பிறிதொரு சொல்லாய், வேறே ஒருவன் சொல், பிறர் ஒருவர் சொல், பிறிதோர் சொல்லால், வேறொரு சொல், வேறு சொல்லும் சொல்லலாம் என இடமின்றி, மற்றொரு சொல், மறுக்கும் மற்றொரு சொல், வேறொருவருடைய சொல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பது இக்குறட்கருத்து. ஆனால் சில உரையாசிரியர்கள் மாற்றார் மறுதலைச் சொல் அதாவது பகைவர் கூறும் மறுப்புரை வராதபடி உரைக்க வேண்டும் எனப் பொருள் கூறினர். இன்னும் சிலர் மற்றவர்கள் கூறும் சொல் என உரைத்தனர்.
''பிறிதோர் சொல்' என்பதற்கு ஒத்த சொல் என்றும் 'வெல்லும் சொல்' என்பதற்கு மிக்க சொல் என்றும் பொருள் கூறி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உண்டாகாமல் சொல்லைச் சொல்லுக என்று பொருள் கூறுவாரும் உளர்' எனப் பரிமேலழகர் தனது உரையில் குறித்துள்ளார். இவர் யாரென்று தெரியவில்லை.
இவற்றுள் இதனை மிஞ்சுவதற்கு பிறிதோர் சொல் இல்லை எனப் பொருள் தரும் இன்னொரு சொல் என்ற நேர்பொருளே சிறந்தது.
'பிறிதோர்சொல்' என்பதற்கு இன்னோரு சொல் என்பது பொருள்.
|
தாம் சொல்லக் கருதிய சொல்லினும் வேறொரு சொல் சிறந்தது இல்லை என்பதை அறிந்து சொல்லுதல் வேண்டும் என்பது இக்குறட்கருத்து.
சொல்வன்மைசிறந்தோங்க சொல்தேர்வு முக்கியம்.
தான் கருதிய சொல்லைக் காட்டிலும் வேறொரு சொல் சிறந்தது இல்லை என்பதை அறிந்து சொல்லைச் சொல்லுக.
|