திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்
(அதிகாரம்:சொல்வன்மை
குறள் எண்:644)
பொழிப்பு (மு வரதராசன்): சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும்; அத்தகைய சொல்வன்மையைவிடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.
|
மணக்குடவர் உரை:
சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அதனின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை.
தாமறியவே புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறாமையும் உளவாம்: ஆதலான் அறனாயிற்று; அரசன் மாட்டும் ஏனையோர்மட்டும் தகுதியறிந்து சொல்லுதலான் பொருளாயிற்று.
பரிமேலழகர் உரை:
சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக - அப்பெற்றித்தாய சொல்லை, அமைச்சர் தம்முடையவும், கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல் - அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும் பொருளும் இல்லையாகலான்.
(அத்திறங்களாவன: குடிப்பிறப்பு , கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதி வேறுபாடுகள். அவற்றை அறிந்து சொல்லுதலாவது, அவற்றால் தமக்கும் அவர்க்கும் உளவாய ஏற்றத்தாழ்வுகளை அறிந்து அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது உலகத்தோடு ஒட்ட ஒழுகலையும் இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று. தம் காரியம் முடித்தலின் பொருளாயிற்று. அறனும் பொருளும் எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.)
வ சுப மாணிக்கம் உரை:
சொற்களின் ஆற்றலை அறிந்து சொல்லுக; அதுவே அறமாம் பொருளாம்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
சொல்லைத் திறனறிந்து சொல்லுக அதனினூஉங்கு அறனும் பொருளும் இல்.
பதவுரை:
திறன் -தகுதி; அறிந்து-தெரிந்து; சொல்லுக-சொல்வாராக; சொல்லை-சொல்லை; அறனும்-அறமும்; பொருளும்-உடைமையும்; அதனின்-அதனைக் காட்டிலும்; ஊங்கு-மேற்பட்ட; இல்-இல்லை.
|
திறனறிந்து சொல்லுக சொல்லை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக;
பரிப்பெருமாள்: சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக;
பரிதி: மனம் பொருந்தக் காரியங்கட்கு உட்படச் சொல்வானாகில்;
காலிங்கர்: அரசர்க்கு அமைச்சரானோர் ஒன்று சொல்லுங் காலத்து அமைவு உடையராய்ச் சொல்லும் திறப்பாட்டினை அறிந்து;
பரிமேலழகர்: அப்பெற்றித்தாய சொல்லை, அமைச்சர் தம்முடையவும், கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக;
பரிமேலழகர் குறிப்புரை: அத்திறங்களாவன: குடிப்பிறப்பு , கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதி வேறுபாடுகள். அவற்றை அறிந்து சொல்லுதலாவது, அவற்றால் தமக்கும் அவர்க்கும் உளவாய ஏற்றத்தாழ்வுகளை அறிந்து அவ்வம் மரபாற் சொல்லுதல்.
'சொல்லுந் திறனறிந்து சொல்லுக' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் என்று இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'மனம் பொருந்தக் காரியங்கட்கு உட்படச் சொல்வானாகில்' என்கிறார். 'சொல்லும் திறப்பாட்டினை அறிந்து அமைவு உடையராய்ச் சொல்க' என்று காலிங்கரும் 'தம்முடையவும், கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக' என பரிமேலழகரும் உரை செய்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கேட்போர் திறம் அறிந்து சொல்லைச் சொல்லுக', 'எந்தச் சொல்லைச் சொன்னாலும் அந்தச் சொல்லின் அர்த்தத்தையும் அதனாலுண்டாகும் பயனையும் ஆலோசித்துச் சொல்ல வேண்டும்', 'கேட்பாரது மனநிலையை யறிந்து சொல்லக் கருதுவதைச் சொல்லவேண்டும்', 'கேட்போர் திறன் அறிந்து சொல்லைச் சொல்லுக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
திறன் அறிந்து சொல்லைச் சொல்லுக என்பது இப்பகுதியின் பொருள்.
அறனும் பொருளும் அதனினூஉங்கு இல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: தாமறியவே புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறாமையும் உளவாம்: ஆதலான் அறனாயிற்று; அரசன் மாட்டும் ஏனையோர்மட்டும் தகுதியறிந்து சொல்லுதலான் பொருளாயிற்று.
பரிப்பெருமாள்: அதனின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: தாமறியவே புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறாமையும் உளவாம்: ஆதலான் அறனாயிற்று; அரசன் மாட்டும் ஏனையோர்மட்டும் தகுதியறிந்து சொல்லுதலான் பொருளும் ஆயிற்று.
என்னை அதனானே ஆக்கமும் கேடும் ஆதலான் இஃது அறனும் பொருளும் பயக்கும் என்றது.
பரிதி: இதுபோலும் அறனும் பொருளும் இல்லை என்றவாறு.
காலிங்கர்: கீழ்ச் சொல்லிப் போந்த இல்லறம் முதலிய அறமும், மற்று இங்குச் சொல்லுகின்ற பொருள் நெறியும் மற்றும் உம்மையாம் மேல் சொல்லுவதாகிய இன்ப நெறியும் எல்லாம் அவரவர் மரபின் திறப்பாடு அறிந்து சொல்லுக; இத்துணை அல்லது இதனின் ஊங்குப் பயன் யாதும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும் பொருளும் இல்லையாகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: அஃது உலகத்தோடு ஒட்ட ஒழுகலையும் இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று. தம் காரியம் முடித்தலின் பொருளாயிற்று. அறனும் பொருளும் எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.
'அதனின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அங்ஙனம் சொல்லுதலினும் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை', 'அப்படிப் பேசுவதைக் காட்டிலும் நியாயமானதும் இலாபகரமானதும் வேறில்லை', 'அங்ஙனம் சொல்வதற்கு மேற்பட்ட அறமும் பொருளும் இல்லை', 'அதை விட அறனும் பொருளும் தருவன வேறொன்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அதை விட மேற்பட்ட அறமும் பொருளும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
திறன் அறிந்து சொல்லைச் சொல்லுக; அதை விட மேற்பட்ட அறமும் பொருளும் இல்லை என்பது பாடலின் பொருள்.
சொல்லால் அறனும் பொருளும் பயக்க முடியுமா?
|
சொல்லினாலே அறம் பழகுக; சொற்திறமையால் பொருள்படுமாறு எண்ணிய செயல் கைகூடச் செய்க.
ஆக்கமும் கேடும் சொல்லால் வரும் என்று முன்பு சொல்லப்பட்டது. கேடு தவிர்த்து ஆக்கமாவதற்குரியன சொன்னால் அது அறம் பயக்கும். சொல்லினால் தான்முற்படும் விளைவுகளை எட்டிவிட்டால் அதாவது எடுத்த செயலை சொல்வன்மையால் வெற்றியாக முடித்துதவி விட்டால் பொருளுள்ளதாகிவிடுகிறது.
சொல்வோர், கேட்போருக்கிடையே மொழி ஊடகமாக உள்ளது, அந்த ஊடகத்தை அதாவது சொல்லைத் திறம்படப் பயன்படுத்தச் சொல்கிறார் வள்ளுவர்.
சொல்லின் திறனறிதலை இன்ன சொல்லை இன்ன காலத்தில் சொன்னால் இன்ன பொருளுண்டாகி அதனால் இன்ன பயன் ஏற்படுமென்று கணிப்பது என விளக்குவர்.
திறன் என்றது எந்தச் சூழலில் எதை எதை எந்த எந்த வகையில் யார் யாரிடம் சொல்லவேண்டுமோ அந்த வகைகளை யெல்லாம் எண்ணிச் சொல்லும் திறமையைக் குறிக்கும். மேலும் செய்தியின் திறம், அதைச் சொல்வார் திறம், கேட்பார் திறம் ஆகியவற்றைப் பொறுத்துப் பயன்கள் உண்டாகும்.
திறனை அறிந்து சொல்லும் சொல்லின் வன்மைபோல் அறனும், உண்மைப் பொருளும் வேறில்லை என்கிறது பாடல்.
திறனறிந்து சொல்லுதலால் அறனும் பொருளும் உண்டாம் என்று கூறாது அதனையே அறனும் பொருளும் என்று கூறினார் வள்ளுவர் இங்கு.
|
சொல்லால் அறனும் பொருளும் பயக்க முடியுமா?
திறன் அறிந்து சொல்லும் சொல்லை விட மேற்பட்ட அறமும் பொருளும் இல்லை என்கிறது இக்குறள். சொல்வன்மை அறத்தையும் பொருளையும் தரமுடியுமா?
மணக்குடவர் இதற்கு 'தாமறியவே புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறாமையும் உளவாம்: ஆதலான் அறனாயிற்று; அரசன் மாட்டும் ஏனையோர்மட்டும் தகுதியறிந்து சொல்லுதலான் பொருளாயிற்று' என விளக்கம் கூறினார். சொல் தொடர்புடைய அறங்களாக புறங் கூறாமை, பயனில சொல்லாமை, பொய்யாதொழுகல் (வாய்மை) இவற்றை அதிகாரங்களாக வள்ளுவர் வகுத்துத் தந்துள்ளார். இவற்றைப் பின்பற்றினால் அறம் நிலைநாட்டப்படும். சொல்திறன், சொல்வார் திறன், கேட்பார் திறன் இவற்றை அறிந்து சொல்வன்மையைப் பயன்படுத்தினால் பொருள் கிட்டிவிடும் என்பதில் ஐயமில்லை.
இக்குறளுக்கான விரிவுரையில் பரிமேலழகர் 'சொல்லை, அமைச்சர் தம்முடையவும், கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக' எனச் சொல்லி 'அத்திறங்களாவன: குடிப்பிறப்பு , கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதி வேறுபாடுகள். அவற்றை அறிந்து சொல்லுதலாவது, அவற்றால் தமக்கும் அவர்க்கும் உளவாய ஏற்றத்தாழ்வுகளை அறிந்து அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது உலகத்தோடு ஒட்ட ஒழுகலையும் இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று. தம் காரியம் முடித்தலின் பொருளாயிற்று. அறனும் பொருளும் எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்' எனக் கூறுகிறார். இவர் கூற்றுப்படி 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் இனிமை பயத்தல்' ஆகிய அறங்கள் உண்டாயின; தன் செயல் முடிவுபெற்றதால் பொருளாயிற்று.
இவை இரண்டுமே ஏற்கத்தக்கனவாயினும் மணக்குடவர் உரை சிறப்பாக உள்ளது.
|
சொல்வார், கேட்போர் திறன் சொல்லின் திறம், அறிந்து சொல்லைச் சொல்லுக; அதை விட மேற்பட்ட அறமும் பொருளும் இல்லை என்பது இக்குறட்கருத்து.
சொல்வன்மையே அறமும் பொருளுமாம்.
திறன் அறிந்து சொல்லைச் சொல்லுக; அதைவிடச் சிறந்த அறமும் பொருளும் வேறில்லை.
|