கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய்;
பரிப்பெருமாள்: வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகைமையவாய்;
பரிப்பெருமாள் குறிப்புரை: கேட்டார் என்பதனைக் கேள்வியுடையார் எனினும் அமையும்; சொல்லக்கேட்டார் எனினும் அமையும்.கேளாமையும் அவ்வாறே கொள்ளப்படும்.
பரிதி: கேட்டவர் செவியும் மனமும் பிணிக்கவும்;
காலிங்கர்: பலவகைப்பட்ட நூல்களையும் பாடம் ஓதி அவற்றின் பொருட்பயன் தெளியக் குரவரை வழிப்பட்டுக் கேட்ட குற்றமற்ற சான்றோரையும் தம்மாட்டுப் பிணித்துக் கொள்ளும் தகுதி உடையனுமாய்;
பரிமேலழகர்: நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப் பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி;
பரிமேலழகர் குறிப்புரை: அக்குணங்களாவன: வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது: சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மேலும் நோக்குடைத்தாதல். 'அவாய்' என்னும் செய்தென்எச்சம் 'மொழிவது' என்னும் செயப்பாட்டு வினை கொண்டது.
'வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிப்பெருமாள் கேட்டார் என்பதற்குக் கூடுதலாக 'சொல்லக் கேட்டார்' எனவும் பொருள் கூறினார். 'கேட்டவர் செவியும் மனமும் பிணிக்கவும்' என்றார் பரிதி. 'தாம் கற்றதோடு குரவரை வழிபட்டுக் கேட்ட சான்றோரையும் பிணித்துக் கொள்ளும் தகுதி உடையனுமாய்' என்பது காலிங்கர் உரை. பரிமேலழகர் 'நண்பரைப் பிரிந்துவிடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி' என்றார். இவ்வாறு பல வேறுபட்ட பொருள்களைத் தந்தனர் தொல்லாசிரியர்கள்.
இன்றைய ஆசிரியர்கள் 'கேட்டாரைக் கவர்ந்து', 'பேசக் கேட்டவரைக் கவரும் வண்ணமும்', 'கேட்பவர்களை வசீகரிக்கக் கூடியதாகவும்', 'தாம் சொல்வதைக் கேட்டாரைத் தம் வயப்படுத்தும் இயல்பினைப் பெற்று' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சொற்களைக் கேட்டவர்களைத் தம் வயப்படுத்தும் இயல்பினதாய் என்பது இப்பகுதியின் பொருள்.
கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்: .
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது.
மணக்குடவர் குறிப்புரை: இது மேம்படக் கூறல்வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, நயம்படக் கூறவேண்டும் என்றது.
பரிதி: கேளாதாரும் சத்துருக்களும் நாலு புலன்களும் விரும்பச் சொல்லுதல் சொல் என்றவாறு.
காலிங்கர்: பின்னும் அங்ஙனம் பொருந்தக் கேளாது புவியிடைத் திரியும் புல்லறிவாளரும், யாமும் இவ்வாறு கேட்டு ஒன்று அறிய வேண்டும் என்னும் விருப்பம் உளதாகச் சொல்லுமது அமைச்சரது சொல்வன்மை என்றவாறு.
பரிமேலழகர்: மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே அமைச்சர்க்குச் சொல்லாவது.
பரிமேலழகர் குறிப்புரை: இனிக் 'கேட்டார்' 'கேளார்' என்பதற்கு 'நூல் கேட்டார் கேளாதார்' எனவும், 'வினவியார் வினவாதார்' எனவும் உரைப்பாரும் உளர். 'தகையவாய்' என்பதற்கு, எல்லாரும், 'தகுதியையுடையவாய்' என்று உரைத்தார்; அவர் அப்பன்மை, மொழிவது என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது.
கேட்டார் என்பதற்குப் போலவே கேளாரும் என்றதற்கும், வினாவாதாரும்(மணக்குடவர், பரிப்பெருமாள்), பேச்சைக் கேளாதவர்களும் (பரிப்பெருமாள், பரிதி), பாடம் கேளாதவரும் (காலிங்கர்), பகையாய் ஏற்றுக் கொள்ளாதாரும் (பரிமேலழகர்) விரும்புமாறு சொல்வதே சொல் என்று வேறு வேறு பொருளில் பழம் ஆசிரியர்கள் உரை கூறினர். பிற்பகுதிக்கு 'விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது' என்று அனைவரும் பொருள் கூறுவர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கேளாதாரையும் கேட்கத் தூண்டுவதே சொல்வன்மை', 'கேளாதவரைக் கேட்க விரும்பும் வண்ணமும் பேசுவதே சொல்லாற்றலாகும்', 'பகைவர்களும் கேட்டு மகிழ்ச்சி கொள்ளக் கூடியதாகவும் பேசுவதுதான் சொல்வன்மை எனப்படுவது', 'கேட்காமலிருப்போரும் எப்பொழுது கேட்போம் என்று விரும்பும் வண்ணம் சொல்வதே சொல்வன்மை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
கேளாதவரையும் கேட்க வைக்கத் தூண்டுவதே சொல்வன்மை என்பது இப்பகுதியின் பொருள்.
|