ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு
(அதிகாரம்:சொல்வன்மை
குறள் எண்:642)
பொழிப்பு (மு வரதராசன்): ஆக்கமும் கேடும் சொல்கின்ற சொல்லால் வருதலால் ஒருவன் தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.
|
மணக்குடவர் உரை:
ஆக்கமும் கேடும் சொல்லினால் வருதலால் சொல்லின்கண் சோர்வைப் போற்றிக் காக்க வேண்டும்.
இது சோர்வுபடாமற் சொல்லல்வேண்டு மென்றது.
பரிமேலழகர் உரை:
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் - தம் அரசர்க்கும் அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும் ஆகலான்; சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல் - அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை அமைச்சர் தம்கண் நிகழாமல் போற்றிக் காக்க.
(ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும் கேட்டிற்கு ஏதுவாய தீச்சொல்லையும், சொல்லாதல் ஒப்புமைபற்றி 'அதனால்' என்றார். செய்யுள் ஆகலின் சுட்டுப் பெயர் முன் வந்தது. பிறர் சோர்வு போலாது உயிர்கட்கு எல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்து ஓம்பல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இஃது இவர்க்கு இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.)
தமிழண்ணல் உரை:
மேன்மேலும் உயரும் ஆக்கமும் அல்லது அழிவும் ஒருவனுக்கு அவனது வாய்ச் சொல்லினால் வருமாதலால், தன்னிடம் அத்தகையதாகிய சொல்லில் சோர்வு ஏற்பட்டுவிடாமல் கவனமாகப் போற்றிக் காத்துக்கொள்ள வேண்டும். சொல்லில் சோர்வுபடுதல்- மறதியாலோ அயர்ச்சியாலோ தவறுபடச் சொல்லிக் காரியக்கேட்டை உண்டாக்குதல்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.
பதவுரை:
ஆக்கமும்-மேன்மேல் உயர்தலும்; கேடும்-அழிவும்; அதனால்-அதன் காரணமாக; வருதலால்-உண்டாகும் ஆதலால்; காத்து-போற்றி; ஓம்பல்-காக்க அல்லது காக்க வேண்டும்; சொல்லின்கண்-சொல்லில்; சோர்வு-தளர்வு.
|
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆக்கமும் கேடும் சொல்லினால் வருதலால்;
பரிப்பெருமாள்: ஆக்கமும் கேடும் சொல்லினால் வருதலால்;
பரிதி: வாழ்வும் கேடும் அதனால் வருதலால்;
காலிங்கர்: அரசர் வாழ்க்கையாகிய ஆக்கமும் அது வீழ்த்தல் ஆகிய கேடும் அமைச்சரது சொல்லினானே வந்து விளையும் ஆகலான்;
பரிமேலழகர்: தம் அரசர்க்கும் அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும் ஆகலான்;
பரிமேலழகர் குறிப்புரை: ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும் கேட்டிற்கு ஏதுவாய தீச்சொல்லையும், சொல்லாதல் ஒப்புமைபற்றி 'அதனால்' என்றார். செய்யுள் ஆகலின் சுட்டுப் பெயர் முன் வந்தது.
'ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும் ஆகலான்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'வாழ்வும் கேடும் அதனால் வருதலால்' என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'சொல்லால் ஆக்கமும் வரும், கேடும் வரும்', 'நன்மையும் தீமையும் சொல்லால் வருதலினால்', 'நன்மையும் தீமையும் சொல்லினால் வருவதால்', 'மேன்மைகளும் அழிவுகளும் சொல்வன்மையால் உண்டாதலால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உயர்ச்சியும் அழிவும் சொல்லினால் வருமாதலால் என்பது இப்பகுதியின் பொருள்.
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொல்லின்கண் சோர்வைப் போற்றிக் காக்க வேண்டும்.
மணக்குடவர் குறிப்புரை: இது சோர்வுபடாமற் சொல்லல்வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: அச்சொல்லின்கண் சோர்வைப் போற்றிக் காக்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சோர்வுபடாமற் சொல்லவேண்டு மென்றது.
பரிதி: சொற்சோர்வு வாராமல் காத்துச் சொல்லுக என்றவாறு.
காலிங்கர்: மற்றைச் சொல்லின்கண் ஒரு சோர்வு படாமல் காத்துச் சொல்லத் தகுவதனைக் குறிக்கொண்டு சொல்லுக என்றவாறு.
பரிமேலழகர்: அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை அமைச்சர் தம்கண் நிகழாமல் போற்றிக் காக்க.
பரிமேலழகர் குறிப்புரை: பிறர் சோர்வு போலாது உயிர்கட்கு எல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்து ஓம்பல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இஃது இவர்க்கு இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.
'சொல்லின்கண் சோர்வைப் போற்றிக் காக்க வேண்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஆதலின் சொல்லை விழிப்போடு சொல்லுக', 'ஒருவன் தான் பேசும்பொழுது சொற்சோர்வு ஏற்படாமல் நன்கு காத்துக் கொள்ள வேண்டும்', 'பேசும்போது குற்றமான சொற்களைச் சொல்லிவிடாதபடி கவனத்தோடு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்', 'சொல்லின்கண் சோர்வு உண்டாதலைக் காத்து ஓம்புக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
சொல்லின்கண் தளர்வு உண்டாகாதவாறு போற்றிக் காத்துக் கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
உயர்ச்சியும் அழிவும் சொல்லினால் வருமாதலால் சொல்லின்கண் தளர்வு உண்டாகாதவாறு போற்றிக் காத்துக் கொள்க என்பது பாடலின் பொருள்.
'காத்தோம்பல்' என்றது குறிப்பது என்ன?
|
நல்ல சொல்லால் உயர்வும், குற்றமான சொல்லால் கேடும் வரும். ஆதலால் ஒருவர் தம் பேச்சில் தளர்வு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.
ஆவதற்கும் அழிவதற்கும் சொல் காரணமாகிறது. ஆதலால் ஒவ்வொருவரும் தம் சொல்லிலே தவறு உண்டாகாமல் - குற்றமில்லாமல் காத்துக் கொள்ளவேண்டும். கருத்துரைக்கும்போது நேரத்தக்க தவறு சோர்வு எனச் சொல்லப்பட்டது. நல்ல சொல்லால் நன்மை உண்டாகும்; தீய சொல்லால் அழிவு உண்டாகும். உயர்வும் தாழ்வும் சொல்லால் வருவனவாக இருப்பதால், சொல்லை ஆளும்போது தன்னிடத்தே மறதியில்லாமல், கேடு விளைவிக்கும் சொல் வராமல் விழிப்பாக இருக்க வேண்டும். இதைக் காத்தோம்பல் வேண்டும் என்று ‘நன்கு காக்க’ என்ற பொருளில் சொல்லப்பட்டது.
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (அடக்கமுடைமை 127 பொருள்: எவற்றை காக்காது போயினும் நாக்கை அடக்குக; அதனைக் காவார் சொல்குற்றத்தின்கண் பட்டுத் துன்புறுவர்) என்று முன்பு அடக்கமுடைமை அதிகாரத்தில் சொல்லப்பட்டது. அது அடக்கத்துடன் இருப்பதை வலியுறுத்துவது. இங்கு, எதையும் உரைக்கும்போது நழுவல் உண்டாகக் கூடாது எனச் சொல்லப்படுகிறது.
எதையும் விழிப்போடு சொல்லத் தெரியாதவன், செயலில் வெற்றியடையமாட்டான். அவனுக்குக் கிடைக்க வேண்டிய வெற்றி கூடத் தோல்வியாக முடிந்துவிடும்.
அச்சிட்டுக் குவிக்கப்படும் செய்தித்தாள்கள், ஓரிடத்திலிருந்து பேசுவதை பலவிடங்களிலிருந்து கேட்கக் கூடிய வானொலி, நேரடியாக ஒளி பரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், உலகெங்கும் ஒரே நேரத்தில் பார்க்கத்தக்க இணையதள காட்சிகள் இவற்றின் வாயிலாக சொல்லப்படும் சொற்களினால் தற்போது மிகையான ஆக்கத்தையும் அழிவையும் ஏற்படுத்த முடியும்.
சொல்வன்மையைத் தொடர்ந்து பேணிப் போற்ற வேண்டும். அதில் எந்தவிதத் தொய்வும் சோர்வும் ஏற்பட்டுவிடுதல் கூடாது. சொல்வன்மையை இழந்தால் இதுவரை பெற்ற நற்பெயரும், புகழும், செல்வமும் சேர்ந்து அழிந்துவிடும். அதனால் சொற்சோர்வு உண்டாகாதவாறு பேணிக் காக்க வேண்டும். சொல்வன்மைக்கு எதிர்ச்சொல் சொற்சோர்வு.
சோர்வு என்பது மறதியால் முன்னொடுபின் முரண்படப் பேசுதலும் மறைவெளிப்படப் பேசுதலும் ஆகும். இச்சொல்லுக்குக் குற்றம், தவறு என்றும் பொருள் கொள்வர். நல்ல சொற்களால் நன்மை வரும். தீய சொற்களால் கேடு சூழ்வது உறுதி. எனவே நல்ல சொற்களைச் சொல்ல முடியா விட்டாலும், கேடுண்டாக்கக்கூடிய சொற்களைச் சொல்லி விடாமல் காத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் சொல்லும்போது இது நல்ல சொல்லா? அல்லவா? எனத் தெரிந்து சொல்லை ஆளுதல் இயலாது. சொல்லின் நன்மை தீமைகளை அது பயக்கும் பயனைக்கொண்டும், கேட்போர் மன நிலையைக்கொண்டும் பின்னர் அறிய இயலுமேயன்றி அப்போதே அறிதல் இயலாது. நல்லன போன்றிருந்து தீமை பயப்பனவும் சிலவுண்டு. ஆதலால் எதைத் தெரிவிப்பதானாலும் நன்கு சிந்தித்துச் சோர்வுபடாமற் சொல்க என்கிறது இப்பாடல்.
'அதனால்' என்பது 'சொல்லால்' எனப் பொருள்படும். இது சொல் என்பதற்குப் பின்னால் வந்திருக்க வேண்டும். செய்யுளாகலின், சொல் என்பதற்கு முன் வந்தது. இயற்பெயர்க்குமுன் சுட்டுவருதல் முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே (சொல், 39) என்னும் தொல்காப்பியத்தால் அறியலாம்.
|
'காத்தோம்பல்' என்றது குறிப்பது என்ன?
ஒருவர்க்கு வளர்ச்சியும், வீழ்ச்சியும், அவர் சொல்லால் உண்டாகும். எனவே அதைக் காத்துஓம்பல் என்கிறார் வள்ளுவர். 'காத்தோம்பல்' என்ற தொடர்க்குக் 'காத்து ஓம்பல் வேண்டும்' என்றும் 'காத்து ஓம்புக' என்றும் இருதிறமாகப் பொருள் உரைப்பர்.
காக்க வேண்டியதன் இன்றியமையாமையைக் காட்டுவதற்காக - கருத்தழுத்தத்திற்காக, காத்து + ஓம்பல் என ஒரேபொருள் தரும் சொல் இருமுறை கூறப்பட்டது. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் .....(ஒழுக்கமுடைமை 132) எனப் பிறிதோரிடத்திலும் ஓம்பிக் காக்க என வந்தது.
சொற்காத்தல் என்பதை மேற்கொண்ட செயலுக்குத் தேவையான அளவு பேசுதலும் பகைவர் குற்றம் காணாத படிப் பேசுதலும் ஆம் எனவும் ஓம்பல் என்பதை சினம், மறதி அறியாமை இவற்றால் தவறுநேராதபடிப் பேசுதலும் குற்றம்படப் பேசாமையும் எனவும் விளக்குவர்.
ஆக்கம் தரக்கூடியதுதான் பேச்சு. ஆனால் சிந்திக்காமல், பின்விளைவுகளை நினைத்துப் பார்க்காமல் சொற்களை விட்டுவிட்டால் அதுவே அழிவுக்குக் காரணமாகவும் முடிந்து விடும். கேட்டார்ப் பிணிக்கும் வகையில் சொல்வதுடன் தவறாய்ப் புரிந்து கொள்ளாதவாறும் பேசுதல்வேண்டும்.
கருத்துக்களைச் சொல்ல விரும்புபவர் தவறில்லாமல் சரியாகச் சொல்வது அதாவது எந்த ஒரு கருத்தையும் நன்கு கற்றுத் தெரிந்து துல்லியமாகக் கூறுதல், சுருக்கமாகச் சொல்லல், தெளிவாகச் சொல்லல் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றில் குறைபாடு உண்டானால் கருத்துரைத்திறன் குறையும்; சொல்வன்மையில் சோர்வும், தொய்வும் ஏற்படும். 'ஒருசொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்பது பழமொழி.
'காத்தோம்பல்' என்றதற்குப் போற்றிக் காத்தல் என்பது பொருள்.
|
உயர்ச்சியும் அழிவும் சொல்லினால் வருமாதலால் சொல்லின்கண் தளர்வு உண்டாகாதவாறு போற்றிக் காத்துக் கொள்க என்பது இக்குறட்கருத்து.
சொல்வன்மை காக்காவிட்டால் துன்புற நேரும்.
வளர்ச்சியும் அழிவும் சொற்களால் வருமாதலால், சொற்சோர்வு உண்டாகாமல் நன்கு காத்துக் கொள்க.
|